அடக்கம்

முரசொலி · தொகுதி 42 · கடிதம் 3368

முரசொலி கடிதங்கள் · 3368

கையை நீட்டுகிறார்; காங்கிரசாரே எச்சரிக்கை!

நாள் 21.2.2009சுமார் 8 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3368. கையை நீட்டுகிறார்; காங்கிரசாரே எச்சரிக்கை!

உடன்பிறப்பே,

அபாயம் நிறைந்தது என்று எச்சரிக்கப்பட்டதும், இது எந்த முடிவில் கொண்டு போய் விடுமோ என்று பலர் ஆதங்கப்பட்டதுமான எனது முதுகு தண்டில் ஏற்பட்ட விபரீத நோயை குணப்படுத்த முடியுமா என்று பல மருத்துவர்கள் நம்பிக்கையுடன் கூற முடியாத நிலையில் அதற்கு அறைகூவல் விடுவது போல - தைரியமாக முன் வந்து ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர் மார்த்தாண்டம், டாக்டர் தனிகாசலம் ஆகியோரும் - அவர்களைச் சார்ந்த குழுவினரும் - டெல்லியிலே உள்ள பிரபல மருத்துவ மேதை, எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வால் அவர்களை அழைத்து - நடத்திய சிகிச்சையில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டு - நீயும், தமிழ் நாட்டு உடன்பிறப்புகளும், தோழமைக் கட்சிகளின் சகோதரர்களும் தொடர்ந்து வழங்கிடும் வாழ்த்துகள் மருந்தாகி இன்னும் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையிலே இருந்தாலும் - என் உள்ளம் உன்னையும், உன் போன்ற உடன்பிறப்புகளாம் தமிழ்ப் பெருங்குடி மக்களையும் சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

நேற்றைக்கு முன்தினம் டெல்லியிலிருந்து வந்த டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வால் என் உடல் நிலையைப் பரிசோதித்து, இன்னும் நான்கு வாரங்களாவது படுக்கையிலே ஓய்வெடுக்க வேண்டும் என்றும் கட்டிலிலிருந்து இறங்கக் கூடாது, எல்லாமே மருத்துவமனைப் படுக்கையிலேதான் என்கிற அளவிற்கும், இன்னும் கண்டிப்பாக ஓய்வெடுக்க வேண்டும் என்று வலியுறுத்திச் சென்றிருக்கிறார்.

அவர் வலியுறுத்தலை ஏற்றுக் கொண்டு, ஓய்வெடுப்பது என் உடலுக்கு நல்லது; ஆனால் உன்னைப் பார்க்காத என்

கண்களுக்கும், உன் உணர்வுகளை நேரில் அறிய இயலாத என் உள்ளத்திற்கும் எவ்வளவு வேதனை தீர்க்க முடியாது என்பதை, நீ - நானாக இருந்தால்தான் தெரிந்து கொள்ள முடியும்.

உடன்பிறப்பே,

கேட்டு விடாதே; அப்படியானால் நீயும் நானும் “ஈ.ரு - ஓர் உள்ளம்” என்பதை நீ இன்னும் அறியாமல் இருக்கிறாயா என்று!

நிம்மதியாக ஓய்வெடுக்கச் சொல்கிறார்கள் டாக்டர்கள்! அரசு அதிகாரிகளைச் சந்தித்து, அரசாங்க விஷயங்களை ஆணையாக்கப் பிறப்பிக்க எந்த அளவிற்கு எனக்கு மருத்துவத் துறை நண்பர்கள் இந்த மருத்துவமனையில் அவகாசம் தருகிறார்களோ - அந்த அவகாசத்தைக்கூட நாட்டு நிர்வாகத்திற்கும், தமிழகத்திலே காக்கப்பட வேண்டிய அமைதியான சூழலுக்கும்தான் செலவிட்டுக் கொண்டிருக்கிறேன். என் அருகேயிருந்து என்னைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவர்களில் ஒருவராகவே மாறி துணை நிற்கும் தம்பி சண்முகநாதன் மூலம் - “டிக்டேட்” செய்து - நான் நினைப்பதை - நான் கருதுவதை உனக்கும் நாட்டிற்கும் சொல்லிக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைதியை - ஓய்வை - உற்சாகத்தை தெரிந்து கொள்வதிலும், அது பற்றி தெளிவுரையை உன் போன்றவர்களிடம் கூறுவதிலும் - நான் அடைகிற நிம்மதியும், மகிழ்ச்சியும் நீடிக்கக் கூடாது - நீடிக்க வேண்டியது அவர் உடல் நலிவு ஒன்றுதான் என்று எண்ணுகிற சில பேர், உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவராய் உண்மைகளை மறைத்து, ஊர் அமைதியை கெடுப்பவராய் - நன்முறையில் நடைபெறும் நலிந்தோருக்கான இந்த ஆட்சியை வன்முறையில் கவிழ்த்து விடலாமா என்று திட்டமிடுபவர்களும் இல்லாமல் இல்லை. “அவர்கள் எல்லாம் தீர்க்காயுசு பெற்று வாழ்க” என்று தாய் உள்ளத்தோடு நான் வாழ்த்துவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

நானே கேட்டுக் கொண்டும் - என் சார்பில் பேராசிரியப் பெருமகன், அன்பழகார் கேட்டுக் கொண்டும், “இந்த நேரத்தில் அவருக்கு துன்பச் சுமையை தோளில் ஏற்றாதீர்கள்” என்ற வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு - இலங்கைத் தமிழர் பாதுகாப்பு என்ற உண்மையானதும், உணர்ச்சி மிக்கதும், உறுதியானதுமான கொள்கை அடிப்படையில் தமிழ் நாட்டு மக்களையெல்லாம் ஒன்று

சேர்த்து குரல் எழுப்ப ஆட்சியின் சார்பாகவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, இலங்கையிலே போர் நிறுத்தம் செய்ய வேண்டும், இல்லையேல் நாமனைவரும் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம். ஏகமனதாக அந்தக் கூட்டத்தில் அது ஒப்புக் கொள்ளப்பட்டது.

ஆனால் அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக, தி.மு. கழக எம்.பி.க்கள் - மாநிலங்களவை உறுப்பினர்கள் உட்பட - அத்தனை பேரும்தான் உடன்பட்டு பதவி விலகல் கடிதங்களை என்னிடம் கொடுத்தார்கள். மற்ற கடிதங்களும் வந்து சேரும் என்று காத்திருந்தேன். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த அகில இந்திய கட்சிகள் அனைத்தும் தங்கள் மேலிடத்து உத்தரவு இல்லாமல் ராஜினாமா கடிதங்களைக் கொடுக்க தயக்கமே காட்டினார்கள்.

அதன் பிறகு பிரமாண்டமான மனிதச் சங்கிலி - டெல்லிக்குச் சென்று பிரதமரை நேரில் சந்தித்து - பிரணாப் முகர்ஜி அவர்களை இலங்கைக்கு அனுப்ப ஒப்புக் கொள்ளப்பட்டது - அதில் கால தாமதம் ஏற்பட்டவே, நானே முன்மொழிந்து “இறுதித் தீர்மானம்” என்ற பெயரால் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது - அ.தி.மு.க., ம.தி.மு.க., போன்ற சில கட்சிகள் மனப்பூர்வமாக ஒத்துக் கொள்ள முடியாமல் வெளிநடப்பு செய்து - அதற்காக நான் சோர்ந்து போகாமல் அந்தத் தீர்மானத்தை மத்திய அரசிடம் வலியுறுத்திக் கொண்டே இருந்தேன்.

நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்தியிலே உள்ள அமைச்சர்களையும், பிரதமரையும், சோனியா காந்தியையும் சந்தித்து என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்தார்கள். அதன் பிறகு பிரணாப் முகர்ஜி அவர்கள் இலங்கைக்குச் சென்று வந்தார்கள். 48 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. முழுப் போர் நிறுத்தம் வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி டெல்லிக்கு பல கடிதங்கள் எழுதப்பட்டன.

இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை ஒன்றை அமைத்தேன். அதில் கட்சிச் சார்பற்ற முறையில் பலரை அங்கம் வகிக்கச் செய்தேன். அதனையொட்டி சட்டத் துறை அமைச்சர், தம்பி துரைமுருகன் தலைமையில் நீதியரசர்களைக் கொண்ட ஒரு துணைக் குழு அமைக்கப்பட்டது; ஒருவேளை இலங்கையில்

போர் நிறுத்த ஒப்பந்தம் நடைபெறுமானால், அதற்குப் பிறகு, அந்த நாட்டில் தமிழர்கள் வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய ஒப்பந்தம் நிறைவேறும்போது, அதற்கு உறுதுணையாக இருக்க, அந்த நீதிபதிகளைக் கொண்ட அந்தக் குழு பயன்படும் என்றே கருதினேன். அதற்காகவே அந்தக் குழுவையும் டெல்லிக்கு அனுப்பி அம்மையார் சோனியா காந்தியைச் சந்திக்கச் செய்தேன். குடியரசு தலைவரையும் சந்தித்து நிலைமைகளை அவர்கள் விளக்கினார்கள். ஐ.நா. மன்றத்திற்கு இதைப் பற்றி எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டேன்.

இதற்கிடையே பல நாடுகளிலேயிருந்து, இலங்கையிலே போரை நிறுத்த வேண்டும் என்று அனுப்பப்பட்ட செய்திகளுக்கு மூல காரணமாக நான் எடுத்த முயற்சிகளும் - இங்கு தமிழ்ச் சமுதாயம் பொங்கிய நிகழ்ச்சிகளும் விளங்கின. அவைதான் டெல்லியில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது என்பதும், அதன் காரணமாகத்தான் ஒரு வேளை, டெல்லியின் யோசனைப்படி சில அயல் நாடுகள் இலங்கைப் போர் நிறுத்தம் குறித்து கருத்துக்களைத் தெரிவித்திருப்பதுதானோ மூல காரணமாக அமைந்தது என்பதை நான் எண்ணி ஆறுதல் அடைவதை விளக்கமாகச் சொல்ல இயலாது. விளங்கிக் கொள்பவர்களுக்கு மட்டும் புரிந்தால் போதுமானது.

தமிழகத்தில் ஐம்பதாண்டு காலத்திற்கு மேலாக இலங்கைத் தமிழர்களுக்காக

குரல் கொடுத்து -

வாதாடி, போராடி -

சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை நானும் பேராசிரியரும் தூக்கி எறிந்து -

இரண்டு முறை இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகவே நமது ஆட்சி கலைக்கப்பட்டு -

இன்னும் ஒரு தாயாகவே - வயிற்றில் பிறந்த உடன்பிறப்புகளாகவே - இலங்கைத் தமிழர்களுக்காக என் பணியை அற்பணிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன்.

இந்த ஐம்பதாண்டு கால இலங்கைத் தமிழர் வரலாற்றில் படிந்த சோகங்கள் - அடைந்த வேதங்கள் - ஏதோ வானத்தில்

வட்டமிட்ட மேகங்களைப் போல கலைந்து விடவில்லை. என் அடி மனத்தில் ஆழப் பதிந்து சீதையின் வன வாச ஓவியங்களாகவே விளங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கு போராடுகின்ற புலிகளுக்கும் எனக்கும் தனிப்பட்ட எந்த விரோதமும் இல்லை. நான் அவர்களை அன்று முதல் இன்று வரை கேட்டுக் கொள்வதெல்லாம் சகோதர யுத்தங்களை கைவிட்டு விட்டு, ஒன்று கூடி, அங்கு தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்பதுதான். போர் நிறுத்தம் வேண்டும் என்பது அசைக்க முடியாத திட்டவட்டமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்து. அந்தக் கருத்தை வென்றெடுக்க இறுதி வரை என் தலைமையிலே உள்ள இந்த இயக்கம் குரல் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

இடைக்காலத்தில் ஏற்பட்ட சில கலங்கத் தக்க - கண்ணீர் விடத் தக்க - அதிர்ச்சி தரத் தக்க - ராஜீவ் காந்தி படுகொலை போன்ற கொடுமைகள் என்னைக் கலைப்படைய செய்து விட்டன என்பதே உண்மை. ஆனால் அந்த இளந் தலைவர் ராஜீவை இழந்த காங்கிரஸ் நண்பர்கள் உட்பட, என் அந்தக் குடும்பத்தார் உட்பட இன்றைக்கு இலங்கையில் நடைபெறுகிற தமிழ் இனப் படுகொலையை (ஜெனோசைட்) ஒத்துக் கொள்ளவில்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

சில பல நிலைமைகளை சரிப்படுத்தி விட்டு இலங்கையில் அறவே போர் நிறுத்தம் நடைபெறுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கக் கூடிய வாய்ப்புள்ள கட்சிதான் அகில இந்திய காங்கிரஸ் கட்சி. அதன் தலைவிதான் சோனியா காந்தி அம்மையார். அதனால்தான் அவர்களை அவமானப்படுத்துகிற விதத்திலும், அவர்களது உருவப் படங்களைக் கொளுத்தியும், அவதூறாகப் பேசியும் கடை பிடிக்கிற முறை தான் கண்ணியமான முறை என்றும், தமிழர்களுக்காக கொடுக்கிற உண்மையான குரல் என்றும் சில சமூக விரோதிகள் கட்சியின் பெயரால் நடத்துகிற செயல்களை அண்ணாவும் காந்தியாரும் ஆட்சியில் இருந்தாலும் அவர்களால்கூட ஓரளவுதான் பொறுத்துக் கொள்ள முடியும்.

அதையும் மீறி இந்தத் தமிழ்நாட்டில் கட்சிக் கண்ணோட்டத்தோடு சில காரியங்கள் நடைபெறுகின்றன. அதன் ஒரு கூறுதான் அகில இந்தியா உணர்ந்த அரசியல்வாதியும் - ஜனதா கட்சித் தலைவரும் (எனது நண்பராக இல்லாவிட்டாலும்கூட நல்ல சிந்தனையாளர் என்று சொல்லப்படக் கூடிய) நண்பர்

சுப்பிரமணியன் சுவாமி, அவர் நம்புகிற மத உணர்வின் அடிப்படையில் - சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு எடுத்துக் கொள்ளலாம் என்று அளிக்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து வாதாட உயர்நீதிமன்றத்திற்கே வந்திருக்கிறார். அங்கே கூடியிருந்த என் தம்பிமார்களைப் போல நான் கருதும் வழக்கறிஞர்கள் - அந்த நண்பர் சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் மீது முட்டைகளை வீசி அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.

கடந்த ஆட்சியில் இதைவிட மோசமாக சுப்பிரமணியன் சுவாமி அதே நீதிமன்ற வளாகத்திற்குள் அவமானப்படுத்தப்பட்டது உண்டு. ஆனால் அது வழக்கறிஞர்களால் அல்ல - அ.தி.மு.க.வின் மகளிர் அணியினரின் மகா மோசமான நடவடிக்கையால்! அந்தக் காட்சியைக் கண்டவர்கள் யாரும், மனம் புண்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர்கள் சிலர் சுப்பிரமணியன் சுவாமி மீது முட்டைகளை தற்போது வீசியதைப் பெரிதுபடுத்தி நீதிமன்றத்திற்குள் இப்படி நடக்கலாமா என்று அந்த வழக்கறிஞர்கள் மீது புகார் கொடுத்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கச் சொன்னார்கள்.

இவைகள் எல்லாம் நீதிமன்றத்திற்குள் நடந்தது. போலீசார் உயர் நீதி மன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்காக சுப்பிரமணியன் சுவாமி மீது முட்டை எறிந்த குற்றவாளிகளை கைது செய்ய கோர்ட்டுக்கு வந்தார்கள். அங்கே என்ன நடைபெற்றது? சுப்பிரமணியன் சுவாமி மீது என்ன புகார் கொடுக்கப்பட்டது என்பதில் இருந்து நீதிமன்றத்திற்குள் இருந்த காவல் நிலையம் கொளுத்தப்பட்டு சாம்பலான காட்சி வரை தொலைக்காட்சிகளிலே காண முடிந்தது. இந்த நிலையில் நான் மருத்துவமனையில் இன்னமும் முழுமையாகக் குணமடையாத நிலையில் அடுத்த வாரத்திற்கு மேல்தான் அறுவை சிகிச்சை நடந்த இடத்தில் கயல் பிரிக்கப்பட வேண்டும் என்று டாக்டர்கள் எச்சரித்திருந்த சூழலில் - தமிழக அரசின் தலைமைச் செயலாளரையும் உள்துறை செயலாளர் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளையும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) அவர்களிடம் அனுப்பினேன். கலவரம் முழுமையாக ஓயவில்லை. நீதிபதிகளோடு தலைமை நீதிபதி விவாதித்துக் கொண்டிருக்கிறார் என்பதை கேள்விப்பட்டதும் - மருத்துவமனையில் இருந்தே பின் வரும் கடிதத்தை அனுப்பினேன்.

Unprecedented violence has taken place. I have sent the Chief Secretary, Secretary Home and D.G.P. to appraise you of the situation. To find out who is at fault, whether the Advocates or the Police and to ascertain the basic causes for this situation, your co-operation is very essential for me and for this Government. I am expecting your valuable suggestions to contain this violence and to ensure justice is done and peace is restored. Though I am in the hospital, if you wish to see me, I will come and meet you even in an Ambulance.

Thanking you,

Yours sincerely, Sd. (M. Karunanidhi).

To Hon’ble Justice S.J. Mukhopadhaya, Acting Chief Justice. High Court of Madras, Chennai.

தலைமை நீதிபதி - மாண்புமிகு திரு முகோபாத்தியாய அவர்கள் சட்டம், ஒழுங்கு, அமைதி, நீதியை நிலைநாட்டுவதில் அக்கறை உள்ளவர் என்ற காரணத்தால், அந்தக் கடிதத்திலேயே நான் எழுதியிருந்தேன் - நானே உங்களிடம் நேரில் பேச வேண்டுமானால், மருத்துவ மனையிலிருந்து ஆம்புலன்ஸ் வண்டியில் ஏறி அங்கேயே வருகிறேன் என்று தெரிவித்திருந்தேன். அவர் அந்தக் கடிதத்தை கண்ட பிறகு நம்முடைய தலைமைச் செயலாளரிடமும், காவல் துறை அதிகாரிகளுடனும் கலந்து பேசி, நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட வேண்டிய முறைப்படி அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கருத்தை அனுப்பியுள்ளார். அதை ஏற்றுக் கொண்டு அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு விடுவதாகக் கூறி, மத்திய அரசுக்கு அது குறித்து வேண்டுகோள் விட்டுள்ளது.

அந்த சி.பி.ஐ. விசாரணையில் உண்மை எது, உண்மை அற்றது எது, திட்டமிட்டது எது, திட்டமிடாமல் நடந்தது எது, கலகத்திற்குக் காரணம் வழக்கறிஞர்களா? அல்லது காவல் துறையினரா? அல்லது இந்த விபரீத நிகழ்ச்சிக்குக் காரணமான

வீசப்பட்ட அழுகிய முட்டைகளா? என்ற விவரங்கள் எல்லாம் சி.பி.ஐ. விசாரணை மூலம் விரைவாகத் தெரிந்து விடும்.

அமைதியை உருவாக்க - அமளியை அடக்க -

இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும் போது நானும், தமிழ்நாட்டில் அமைதியோடு வாழ்கிற மக்களும் சி.பி.ஐ. விசாரணையின் முடிவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இதைத் தமிழ்நாட்டில் உள்ள எல்லாக் கட்சியினரும் - எல்லாக் கட்சித் தலைவர்களும் - இதை முடியாத தொடர்கதையாக ஆக்குவதற்கு இடம் தராமல் - முடிந்து போன சோக நிகழ்ச்சி என்ற அளவில் இப்போது நடந்து கொண்டிருக்கிற நல்லாட்சி தொடர்ந்திட உதவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

எனக்காகவும் அல்ல - தனிப்பட்ட யாருக்காகவும் அல்ல - தமிழ் நாட்டு மக்களுக்காக - நாம் கட்டிக் காத்திடும் ஜனநாயகத்தின் மேன்மைக்காக!

“ஆசு, ஊசு” என்றால் “கலைத்து விடு கருணாநிதி ஆட்சியை” என்று அலறித் துடிப்பதற்கு இரண்டு மூன்று தலைவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

ஆட்சிக்கு வந்ததற்காக அகம்பாவம் பிடித்து அலைபவனும் நானல்ல;

கவிழ்ப்பதற்காக கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கவலைப்படுபவனும் அல்ல - இந்தக் கருணாநிதி!

பிறகு எதற்காக அண்ணா அவர்களின் இதயத்தை நான் இரவலாகப் பெற்றிருக்கிறேன்.

நேற்று வரையில் காங்கிரசோடு தொடர்பு இல்லை, உறவு இல்லை என்று கூறிக் கொண்டிருந்து விட்டு - கம்யூனிஸ்ட் கட்சிகளையும் ஏமாற்றி விட்டு - நேற்றைய திருமண விழாவில் “நானும் காங்கிரசம் கூட்டுச் சேரப் போகிறோம்” என்று நாட்டை ஏமாற்றுகின்ற அரசியல் நாட்டியம் எனக்குத் தெரியாது.

“வெளி நாட்டுக்காரி, இந்தியாவிற்கு அரசியலா?” என்று கேட்டவர்கள் யார் என்று எனக்கும் தெரியும். நாட்டிற்கும் தெரியும்.

சோனியா காந்தி என்ற அந்தச் சொக்கத் தங்கத்தை “பதி பக்தி இல்லாதவர்” என்று சொன்னவர் யார் என்று எனக்கும் தெரியும். நாட்டிற்கும் தெரியும்.

பதி பக்தியைப் பற்றி அவ்வாறு பேசியவர் - எம்.ஜி.ஆரைப் பற்றி ராஜீவ் காந்திக்கு கைப்பட என்ன கடிதம் எழுதியினார் என்பதும் எனக்குத் தெரியும். அது பத்திரிகைகளிலேயே வந்திருக்கிறது.

இப்படிப்பட்டவரை காங்கிரஸ் கட்சி; கூட்டணி சேர்த்துக் கொள்ள வேண்டுமாம்!

இவர் பிறந்த கர்நாடக மாநிலத்தில் பிறந்தவராம் - கடமை தவறாத நண்பர் - வீரப்பு மொய்லி - இன்று இவருக்கு அளித்த மறுப்பு - தமிழ் நாட்டு காங்கிரஸ் நண்பர்களே, எண்ணிப் பார்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு!

அன்புள்ள, மு.க. 21-2-2009

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 41–49. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 42-இல் மேலும் கடிதங்கள்