முரசொலி கடிதங்கள் · 3371
இன்று என் வாழ்விலோர் திருநாள்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3371. இன்று என் வாழ்விலோர் திருநாள்!
உடன்பிறப்பே,
இன்று என் வாழ்வில் ஒரு முக்கியமான நாள். ஆம், அருந்ததியர் சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீடு மசோதா சட்ட மன்றத்திலே நிறைவேறுகின்ற நாள் இன்றுதான். இந்த நாளில் நான் பேரவையிலே இருந்து - இந்த மசோதாவை நானே பேரவையில் முன் மொழிந்து நிறைவேற்றித் தர வேண்டுமென்று உறுப்பினர்களையெல்லாம் கேட்டுக்கொள்ள வேண்டுமென்று எண்ணியிருந்தேன். இருந்தாலும், டெல்லியிலிருந்து வந்த மருத்துவ டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வால் அவர்களும், இங்குள்ள டாக்டர் மார்த்தாண்டம் தலைமையிலான மருத்துவக் குழுவினரும் நேற்றிரவு (25.2.2009) என் அறுவை சிகிச்சைக்கான தையல்களைப் பிரித்த பின்னர் என்னை உட்கார வைக்கவும், நிற்க வைக்கவும் முயற்சித்தனர். கடந்த ஜனவரி 26ஆம் தேதியிலிருந்து அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் படுத்தபடுக்கையிலேயே ஒரு மாதமாக இருந்த காரணத்தால் கால்களை ஊன்றி நிற்க சில நாட்கள் பயிற்சி மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்திய நிலையில் பேராசிரியர் அவையிலே ஆவலோடு நான் அவைக்கு நாளை வருவேன் என்று தெரிவித்ததைப் போல நேரடியாக வந்து அருந்ததியருக்கான மசோதாவை நானே முன் மொழிய இயலவில்லை.
எனினும் இன்று காலையில் நானே அருந்ததியர் மசோதாவினை அவையிலே முன்மொழிவதற்கான உரையை என் கைப்பட எழுதி அவையிலே அதனைப் படிக்குமாறு உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்து, எனக்குப் பதிலாக இந்த மசோதாவினை அவரை முன்மொழியுமாறு கேட்டுக் கொண்டேன்.
இந்த மசோதாவை முன்மொழிந்து நான் எழுதிய முன்னுரை வருமாறு :-
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அவை முன்னவர் அருமைப் பேராசிரியர் அவர்களே,
சட்டப் பேரவை அனைத்துக் கட்சி அன்பு உடன்பிறப்புகளே,
இன்று வந்து உங்களை சந்திப்பதாக இருந்தும் கூட டெல்லி மருத்துவரும் சென்னை மருத்துவ நண்பர்கள் குழுவும் அளித்த அறிவுரையாலும் அச்சுறுத்தலாலும் வர இயலவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன்.
நிமிர முடியாமலும், திரும்ப முடியாமலும் “நங்கூரம்” போட்டது போல நரம்பிணைந்து முதுகுத் தண்டில் வலி! வலி!
ஒன்று உடல் வலி - பிறிதொன்று நீங்கள் வழங்கியுள்ள மன வலி! கருத்து மாறுபாடுகளுக்கிடையிலும் நீங்கள் காட்டும் கனிவு - அரசியல் மாச்சரியங்களை மீறி நீங்கள் காட்டும் அன்பு - இன்று நம்மை மீண்டும் இணைக்கிறது - தமிழ்த் தாயின் கரம் நம்மை ஒரு சேர் அணைக்கிறது. அறிவியக்கம் - ஆன்மிகம் - நாத்திகம் ஆத்திகம் - இந்த வேறுபாடுகள் மாறுபாடுகள் கடந்த நன்றியுணர்வும் நன் மனித நேயமும் வளர்த்திடுவோம்.
ஆரம்ப கால பொதுவுடைமைவாதி என்ற முறையிலும் பெரியார், அண்ணா, காமராஜர், அண்ணல் ஜீவா போன்றோரின் அருமைத் தொண்டர்களில் ஒருவன் என்ற முறையிலும் - அடி மட்டத்துக்கெல்லாம் அடி மட்டமாகக் கிடந்து அவதியுறும் “மனித ஜீவன்கள்”
“அருந்ததி” மக்கள், புதிய உலகம் - புரட்சியுகம் - காண்பதற்காக; இன்று அவையில் நான் முன் வைக்கும் சட்ட முன் வடிவை; உங்கள் ஆதரவு வழங்கி; நிறைவேற்றித் தர வேண்டுகிறேன்.
இங்ஙனம் உங்கள் அன்பு நதியில் - என்றும் நனைந்திடவே விரும்பி வாழும்; உடன்பிறப்பு - உங்களில் ஒருவன்
அன்பு மறவாத (மு. கருணாநிதி) 26.2.2009 ராமச்சந்திரா மருத்துவமனை, போரூர்.
அருந்ததியருக்கான இந்த இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென்ற எனது உள்ளத்தின் அடித்தளத்தில் நீண்ட பல ஆண்டுகளாக இருந்து அதனை சட்டமாக நிறைவேற்றுகிற நேரம் இப்போதுதான் வந்துள்ளது. இந்தச் சட்டத்தின் காரணமாக சமூகத்தின் அடித்தளத்திலே இருக்கின்ற அந்த அருந்ததிய மக்கள் நாளை, நாளை மறுநாள் அவர்களும் முன்னேறி வாழ்க்கையிலே வளம் பெறுவார்களேயானால், அன்றுதான் என்னுடைய உள்ள வேட்கை முழுவதுமாக நிறைவேறிய திருப்தி எனக்கு ஏற்படும். ஆனால் இதனை சட்டமாக கொண்டு வருவதற்குள் நான் பட்ட பாட்டினை நான்தான் அறிவேன்.
இதற்காக நீதியரசர், எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்கள் தலைமையிலே ஒரு குழுவினை அமைத்து, அவர்களும் அல்லும் பகலும் பாடுபட்டு, இது சம்பந்தமான பல சட்டப் பிரிவுகளையும் படித்தாய்ந்து இதற்கான அறிக்கையினை அரசுக்கு அளித்தார்கள். அதன் பிறகு இதனை சட்டமாகக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு, அரசு உயர் அதிகாரிகள் சிலரிடம் இதுகுறித்து நான் பேசிக் கொண்டிருந்தபோது, அவர்கள் இந்தச் சட்டத்தினைக் கொண்டு வருவதற்கு மேலும் சில கால நீடிப்பு தேவை என்று கூறினார்கள். அப்போது நான் அவர்களிடம் கூறினேன். இது என்னுடைய சொந்தப் பிரச்சினை. இது எவ்வளவுக்கெவ்வளவு விரைவில் நிறைவேறுகிறதோ, அந்த அளவிற்கு நான் மகிழ்ச்சியடைவேன். எனவே இந்த மசோதா இந்தக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். அவ்வாறே இது நிறைவேறுகிறது.
நீதியரசர் ஜனார்த்தனம் அவர்கள் இது குறித்து பரிந்துரைகளை அரசிடம் தாக்கல் செய்து, அந்தச் செய்தி ஏடுகளில் வெளிவந்த நேரத்தில் - இந்த அருந்ததியச் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 50 பேர் என்னைத் தலைமைக் செயலகத்தில் வந்து சந்தித்தார்கள். அப்போது அவர்களிடம் நான் பேசிக் கொண்டிருந்தபோது, எங்கள் சமுதாயத்திற்காக இவ்வளவு உறுதியாக இதுவரை யாரும் செயல்பட்டதில்லை. ஆனால் நீங்கள் இந்த அளவிற்கு எங்களுக்காக எடுத்துக் கொள்ளும் முயற்சிகளுக்காக நாங்கள் என்ன கைமாறு செய்யப் போகிறோமோ? எது எப்படியிருந்தாலும் இந்தப் பரிந்துரைகளையெற்று இட ஒதுக்கீடு செய்து அது சட்டமாக வர நாங்கள் உங்களோடு துணை இருப்போம் என்று தெரிவித்தார்கள்.
அவர்களின் எண்ணப்படி இன்றைய தினம் அருந்ததிய சமுதாயத்தினருக்காக 3 சதவிகித உள் ஒதுக்கீடு நிறைவேறுகிறது. இந்த நாள் அவர்கள் வாழ்நாளில் எந்த அளவிற்கு முக்கியமான நாளாக விளங்குமோ, அது போலவே என்னுடைய வாழ்வில் இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு காரணமானவன் நான் என்ற முறையில் எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.
என் முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு, காயம் பரிபூரணமாக குணம் ஆனதில் எந்த அளவிற்கு நான் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றேனோ, அதை விட அதிக அளவிற்கு அருந்ததிய சமுதாயத்திற்காக நடைபெற்றுள்ள சமூக நீதி அறுவை சிகிச்சையில் இன்று முதல் அந்தச் சமுதாயமே பெரிதும் நலம் அடையப் போகின்றது என்ற எண்ணத்தோடு மகிழ்ச்சி அடைகின்றேன். அருந்ததியர்களுக்கான நல்வாழ்வை அளித்திடக் கூடிய இந்த மசோதாவை சட்டமாக ஆக்கிட உதவி செய்த அத்தனை சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும், இந்த சட்டம் வெளி வர பெரிதும் எனக்குத் துணையாக நின்ற நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புள்ள, மு.க. 27-2-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 62–65. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.