முரசொலி கடிதங்கள் · 3374
பட்டியல் தரவா; பாடம் பெறவே!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3374. பட்டியல் தரவா; பாடம் பெறவே!
உடன்பிறப்பே,
அறிக்கை ராணி, ஜெயலலிதா இன்று விடுத்துள்ள அறிக்கையில் - “நீதிமன்றம் கொடுத்த நெற்றியடி” என்ற தலைப்பில் நான் எழுதியதற்கு பதில் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு எதையெதையோ எழுதியிருக்கிறார். அந்த அறிக்கையில் “சென்னை உயர் நீதி மன்றத்தில் காவல் துறையினரால் நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்திற்கு நிகரான சம்பவம் சுதந்திர இந்தியாவில் இதுவரை நடைபெற்றதில்லை என்பதுதான் தமிழக மக்களின் ஏகோபித்த கருத்து” என்று எழுதியிருக்கிறார். இதையே தான் மனுவாகத் தயாரித்து தன் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் மூலமாக உச்ச நீதி மன்றத்திலே வழக்கு தொடுத்து, அதற்காக தமிழக அரசை 356வது விதியைப் பயன்படுத்தி கலைக்கச் செய்வதற்கு உச்ச நீதி மன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து தீர்ப்பளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
அந்த வழக்கிலேதான் உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி அவர்களே, ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்றால், ஆளுநர் மாளிகைக்கு போக வேண்டும், ஜெயலலிதா தரப்பினர் தொடுத்துள்ள வழக்கு அரசியல் ரீதியானது என்று கருத்து தெரிவித்திருந்தார். அதைத்தான் நான் நீதிமன்றம் கொடுத்த நெற்றியடி என்ற தலைப்பிலே எழுதியிருந்தேன். மேலும் அப்போது ஜெயலலிதா ஆட்சியிலே நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களையெல்லாம் பட்டியலிட்டும் காட்டியிருந்தேன். அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாத ஜெயலலிதா அவைகளை யெல்லாம் உண்மைக்கு மாறானவை என்று தற்போது அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். நான் பட்டியல் இட்ட சம்பவங்கள் உண்மையா அல்லவா என்பதை தமிழ்நாட்டு மக்களும், தமிழ் நாட்டுப் பத்திரிகைகளும் நன்றாக அறிவார்கள்.
உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி அளித்த தீர்ப்புக்கு மாறாக - அவருடைய தீர்ப்பையே சரியானதல்ல என்று அர்த்தம் தெரிவிக்கத் தக்க வகையில் ஆட்சியைக் கலைக்க எங்கே செல்ல வேண்டும், யாரிடம் முறையிட வேண்டும் என்பதெல்லாம் அவருக்கு நன்றாகத் தெரியும் என்று பதில் அளித்திருப்பதைப் பற்றி உச்ச நீதி மன்றம்தான் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும் அவரது அறிக்கையில் ஆட்சியைக் கலைக்க முறைப்படி முறையிடுவது என்பது “திருடன் கையில் சாவியைக் கொடுப்பதற்கு சமம்” என்றும் எழுதியிருப்பது; எந்த உயர்ந்த அமைப்புகளைப் பற்றி ஜெயலலிதா விமர்சனம் செய்திருக்கிறார் என்பதை இந்திய நாட்டு அரசியல்வாதிகள் கருத்தில் கொள்வது நல்லது. இவ்வாறு உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்கு மாறாக - யாரிடம் முறையிட வேண்டுமென்பது தனக்குத் தெரியும் என்றும் - அவ்வாறு முறையிட்டால் “திருடன் கையில் சாவியைக் கொடுப்பது” என்றும் எழுதியிருப்பதற்கு என்ன பொருள் என்பதை அறிவார்ந்த மக்கள் தான் புரிந்து அறிவிக்க வேண்டும்.
சென்னை உயர் நீதி மன்றத்திற்குள் செல்ல காவல் துறையினருக்கு அறிவுறுத்தியது யார் என்று உச்ச நீதி மன்றம் எழுப்பிய கேள்விக்கு முறையாக எனது அரசின் சார்பில் பதில் தரப்பட்டுள்ளது. உச்ச நீதி மன்றத்தின் கேள்விக்கு என்ன பதில் என்று ஜெயலலிதா என்னைக் கேட்டிருக்கிறார். உச்ச நீதி மன்றம் ஜெயலலிதாவிற்கு என்னைப் பதிலளிக்கச் சொல்லவில்லை. உச்ச நீதி மன்றத்திற்கு காவல் துறை பதிலளிக்க வேண்டுமென்று சொன்னது, காவல் துறை அதற்கான பதிலையும் அளித்து விட்டது. அதைக் கூடத் தெரிந்து கொள்ளாமல், என்னிடம் ஜெயலலிதா பதில் கேட்டது அவரது அறியாமையைத்தான் வெளிப்படுத்துவதோடு, அவருக்காக வாதாடும் வழக்கறிஞர்களே சிரிக்கக்கூடிய அளவிற்கு செய்துள்ளது.
காவல் துறையினரை நீதி மன்றத்திற்குள் செல்ல நான் தான் அறிவுறுத்தியிருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். எந்த மக்கள் அப்படி நினைக்கிறார்கள்? ஜெயலலிதாவின் தோட்டத்திலே உள்ள அவரது மக்கள் அப்படி நினைக்கிறார்கள் போலும்!
19.2.2009 அன்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சம்பவத்தை நினைத்தால் மக்களுக்கு ஆங்கிலேயர்
காலத்தில் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் படுகொலை சம்பவம்தான் நினைவுக்கு வருமாம். ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி அவருக்குத் தெரியுமா? 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ந்தேதி அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் ஒரு பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து கொண்டிருந்தது. ஜெனரல் டயர் என்ற வெள்ளைக்காரத் தளபதி 100 வெள்ளைக்காரச் சிப்பாய்களும், 50 இந்திய ராணுவத்தினரும் பின் தொடர மைதானத்துக்குள் வந்தான். கூடவே பீரங்கி வண்டிகள் அணிவகுத்து வந்தன. கூடியிருந்தவர்களைக் கலைந்து செல்லும்படி எச்சரிக்கை எதுவும் கொடுக்காமல், அவர்களை நோக்கி பீரங்கியால் சுடும்படி ஜெனரல் டயர் உத்தரவிட்டான். ராணுவத்தினர் பீரங்கிகளால் சரமாரியாகச் சுட்டனர். சுமார் பத்து நிமிட நேரம் 1650 ரவுண்டுகள் சுட்ட பிறகே பீரங்கிகள் ஓய்ந்தன. “சுட்டேன், சுட்டேன், குண்டுகள் தீரும் வரை சுட்டேன்” என்று கொக்கரித்தான் ரத்த வெறி பிடித்த ஜெனரல் டயர். ஜாலியன் வாலாபாக் சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 379 பேர். அம்மையார் அந்தச் சம்பவத்துடன் 19ஆம் தேதி சென்னை உயர் நீதி மன்றத்தில் நடைபெற்ற சம்பவத்தை ஒப்பிட்டுச் சொல்வது போல் சொல்ல முடியாது.
ஜெயலலிதா எழுதியிருப்பது போல் ஜாலியன் வாலாபாக் சம்பவத்திற்கு ஒப்பிட்டு ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டுமென்றால், ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது, தன் உடன்பிறவா சகோதரியை அழைத்துக் கொண்டு கும்பகோணம் சென்று சங்கராச்சாரியார் சொன்னது போல - இவர் அவருக்கு அபிஷேகம் செய்ய, அவர் இவருக்கு அபிஷேகம் செய்ய - “வைரம்” படம் போன்ற அந்தக் கண் கொள்ளா காட்சியைக் காண நெருக்கியடித்தவாறு பக்தர்கள் திரண்டு அதில் 100க்கு மேற்பட்டவர்கள் மடிந்தார்களே; மகாமக மோட்சம் பெற்றார்களே, அதைத்தான் ஜாலியன் வாலாபாக் சம்பவத்திற்கு சமமாக மக்கள் நினைத்துக் கொள்வார்களே தவிர, 19ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்தை அல்ல. எனவே ஜெனரல் டயருடன் ஒப்பிடத்தக்க அளவிற்கு அனைத்துப் பொருத்தங்களும் நிறைந்தவர் ஜெகம் புகழும் ஜெயலலிதா தான்.
அவர் தனது அறிக்கையை முடிக்கும்போது ஜனநாயகத்தை நான் ஏதோ குழிதோண்டி புதைத்து விட்டதாகப் புலம்பியிருக்கிறார்.
கட்சி ஆரம்பித்த 1949ஆம் ஆண்டு முதல் இன்று வரை கட்சிக் கிளைக் கழகச் செயலாளர் முதல், தலைமைக் கழகம் வரை தேர்தல் நடத்தி வருகின்ற நாங்கள் எங்கே? கட்சி ஆரம்பித்த நாள் முதல் ஜனநாயக முறையிலே தேர்தல் நடத்தாமல் ஒவ்வொரு பொதுக் குழுவிற்கும் அழைப்பிதழ் யாருக்குக் கிடைக்கிறதோ அவர்கள் எல்லாம் பொதுக் குழு உறுப்பினர்கள் என்ற நிலையில் கட்சியை காட்சியாக நடத்திக் கொண்டிருக்கும் ஜெயலலிதா எங்கே? ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்தவர் அவரா? நானா? எந்தவொரு மாவட்டக் கழகச் செயலாளராவது அங்கே தேர்தல் நடைபெற்று வெற்றி பெற்றது உண்டா? ஜனநாயகத்தைப் பற்றி ஜெயலலிதாவா பேசுவது?
நீதி மன்றம் கொடுத்த நெற்றியடி பற்றி யெல்லாம் ஜெயலலிதா பேசலாமா? ஒரு வழக்கு போதாதா? அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை ஜெயலலிதா தன் பெயரிலே குறைந்த விலைக்கு அவர் ஆட்சியிலே இருந்த காலத்தில் வாங்கியது பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதி சொன்னது என்ன? இதோ, அந்தப் பொன்னான வார்த்தைகளில் சில....
“அரசின் நடத்தை விதிகளுக்கு சட்ட அங்கீகாரம் இல்லாத போதிலும் முதலமைச்சர் போன்ற உயர் பதவியில் இருப்போர், அந்த விதிகளை மதித்து நடக்க வேண்டியது அவசியம். சாதாரண அரசு ஊழியர் ஒருவர் எப்படி அரசு சொத்துக்களை வாங்க முடியாதோ, அதே போல, முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவரும் அரசு நிறுவனத்தின் சொத்துக்களை வாங்க முயற்சிப்பது தவறு. சட்டம் என்பது சாதாரண அரசு ஊழியருக்கும், உயர் பதவியில் இருப்பவருக்கும் ஒன்று தான். எனவே நடத்தை விதிகள் தன்னைக் கட்டுப்படுத்தாது என்றும், நடத்தை விதிகளின்படி அமைச்சர்கள் அரசு சொத்துக்களை வாங்கக் கூடாது என்றும் உள்ள போதிலும், தான் வாங்கியது தவறு இல்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. எனவே தனது தவறுக்கு வருந்தி, வாங்கிய நிலத்தை டான்சி நிறுவனத்துக்கே திரும்ப ஒப்படைக்க வேண்டும். முதல் குற்றவாளியான ஜெயலலிதா, தான் இந்த வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக டான்சி நிலப்
பத்திரத்திலே உள்ள அவருடைய ஆடிட்டரும், அரசு அதிகாரிகளும் ஏற்றுக் கொண்ட அவருடைய கையெழுத்தையே இல்லை என்று மறுக்கக் கூடிய அளவிற்குச் சென்றிருக்கிறார். நிபந்தனையில்லாமல் சொத்துக்களைத் திரும்ப ஒப்படைப்பதோடு, நாங்கள் என்ன கூறியிருக்கிறோம் என்பதன் அடிப்படையில் அவர் தன்னுடைய மனச் சாட்சிக்கே பதிலளிக்க முன்வர வேண்டும்.”
ஜெயலலிதா அவர்களே, நீதி மன்றம் 2003ஆம் ஆண்டு உங்களுக்கு கொடுத்த நெற்றியடி போதுமா? இதுபோல பல பல நெற்றியடிகள் இருக்கின்றன, அவைகளை யெல்லாம் பட்டியல் இட்டுக் காட்டட்டுமா?
எனக்கு முதுகுத் தண்டுவடத்தில் நடந்த அபாயகரமான அறுவை சிகிச்சைக்குப் பின்னும், அதில் நான் புத்துயிர் பெற்றுள்ளது பற்றியும் துளி இரக்கமும் இல்லாமல் ஜெயலலிதா கேலி செய்துள்ளதால் - பரவாயில்லை, அருமை நண்பர் எம்.ஜி.ஆர். நோயினால் வாடிய போதே, “அவரை நீக்கி விட்டு என்னை முதல்வராக்குக” என்று ராஜீவ் காந்திக்கு ஆங்கிலத்தில் கைப்பட கடிதம் எழுதி, உலகப் புகழ் பெற்ற உத்தமியல்லவா ஜெயலலிதா; எனவே என் உடல் நிலை பற்றிப் பேசுவதில் வியப்பு என்ன இருக்கிறது!
உடன்பிறப்பே, தனக்கு வரும் புகழ் கண்டு எம்.ஜி.ஆர். பொறாமைப்படுகிறார் என்று ஜெயலலிதா அந்நாள் பிரதமர் ராஜீவுக்கு கடிதம் எழுதிய கதையெல்லாம் ஒன்றா? இரண்டா?
“உம்” என்று சொன்னால் ஓர் நொடியில் அவை ஒவ்வொன்றும் வெளிவராதா?
அன்புள்ள, மு.க. 3-3-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 74–78. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.