முரசொலி கடிதங்கள் · 3376
கேள்வி கேட்கக் கூடாதாம்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3376. கேள்வி கேட்கக் கூடாதாம்!
உடன்பிறப்பே,
இன்றையதினம் யாரையும் குற்றம் குறை சொல்ல வேண்டுமென்பதற்காக அல்ல; பரவலாக ஒரு சிந்தனை - அதுபற்றி ஒரு விவாதம் நடைபெற்றால் நல்லது என்பதற்காக சில கருத்துகளை எழுதியிருக்கிறேன். ஒரு நல்ல தெளிவு ஏற்பட்டால், அதற்கு இந்தக் கருத்துகள் உதவுமானால் ஜனநாயகத்தை விரும்பும் அனைவருக்கும் நல்லது என்பதற்கே எழுதுகின்றேன். நடுநிலை என்பது வார்த்தையாக இல்லாமல்; வாழ்வில் வாய்மையாக அமைய வேண்டுமென்பதற்காக!
“தேர்தல் ஆணையம்” என்பது தன்னாட்சி பெற்ற அமைப்பு. ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்வி கேட்க யாருக்கும் உரிமை கிடையாது. தேர்தல் நேரத்தில் அவர்கள் எந்த அலுவலரை வேண்டுமானாலும் மாற்றலாம். அதைப் பற்றி மாநில அரசோ, மத்திய அரசோ கேள்வி கேட்க முடியாது. ஏனென்றால் தேர்தல் ஆணையம் என்பது சர்வ வல்லமை பொருந்தியது. தேர்தல்களை எப்போது நடத்துவது என்பதைப் பற்றி தேர்தல் ஆணையம்தான் தேதியினை நிர்ணயிக்கும்.
அந்தத் தேர்தல் ஆணையத்தின் தலைவராக இருப்பவரும், உறுப்பினர்களாக உள்ளவர்களும் ஒருவருக்கொருவர் முரண்பட்டு, இரண்டாவதாக இருப்பவரை நீக்க வேண்டுமென்று, முதல் இடத்தில் இருப்பவர் புகார் கொடுப்பதும், அதைப்பற்றி ஒவ்வொரு ஏடுகளும் விமர்சனம் செய்வதும் “துரதிருஷ்ட வசமான நிகழ்ச்சிகளாகும்.
நாடாளுமன்றத்திற்கோ, சட்டமன்றத்திற்கோ காலி இடம் ஏற்பட்டு, அதற்கு இடைத் தேர்தல் அந்த இடம் காலியான ஆறு திங்களுக்குள் நடத்தப்பட வேண்டும். அப்படி இடைத் தேர்தல் தேதி நிர்ணயிக்கும் போது - பொதுத் தேர்தல் பாராளுமன்றத்திற்கோ சட்டமன்றத்திற்கோ ஒரு சில மாதங்களில்
வருகிறதென்றால் - அப்போது இடைத் தேர்தல்களையும் சேர்த்து அந்தப் பொதுத் தேர்தலோடு நடத்துவதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. காரணம்; தேவையில்லாமல் ஏற்படுகின்ற செலவைக் குறைப்பதற்காக - பொதுத் தேர்தல் வருகின்ற போதே இடைத் தேர்தலையும் சேர்த்து நடத்துவதுதான் வழக்கம்.
எப்படியோ மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியைப் பொறுத்தவரை அந்தத் தொகுதியின் உறுப்பினர் மறைந்து ஆறு மாதங்கள் முடிவடைவதற்குள்ளே அவசர அவசரமாக இடைத் தேர்தலை நடத்தினார்கள்.
அந்த இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா; அந்தத் தொகுதியின் மறைந்த உறுப்பினர், ம.தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்றபோதிலும், அந்தக் கட்சியின் தலைவரை நேரில் அழைத்து, அந்தத் தொகுதியை தனக்கு விட்டுக் கொடுக்க வேண்டுமென்று ஆணையிட்டு, அங்கே தோழமை உணர்வுகளுக்கே இடம் இல்லாமல் நடந்து கொண்டார். “வைப் பெருமாட்டி உப்பு கண்டத்தை பறி கொடுத்தது போல” ம.தி.மு.க. வின் தொண்டர்களும், முன்னணியினரும் கட்சிக் கட்டுப்பாட்டுக்கு அஞ்சி வாயை மூடிக் கொண்டார்கள்.
மத்திய தேர்தல் ஆணையம் போலவே, மாநிலத்திலே ஒரு தலைமைத் தேர்தல் அதிகாரி இருக்கிறார். அவரது அதிகாரம் குறித்தும் யாரும் கேட்கக் கூடாது. அவர் மத்திய தேர்தல் ஆணையத்திலிருந்து தமிழகத் தேர்தல் அதிகாரியாக வந்தவரா என்றால் கிடையாது. தமிழகத்திலே உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் அவரும் ஒருவர். அவர் இந்தப் பதவியில் இத்தனை ஆண்டுகளுக்கென நியமிக்கப்பட்டுள்ளார். அந்தக் காலக் கெடு முடிந்ததும் மீண்டும் மாநில அரசுப் பணியிலே இணைந்து பணியாற்ற வேண்டியவர்தான். அந்த அதிகாரிக்கு மாதந்தோறும் அளிக்கப்படும் ஊதியம் தமிழக அரசினால் தான் வழங்கப்படுகிறது. அவருக்குக் கீழே பணியாற்றும் அதிகாரிகளை மாற்றுவதாக இருந்தால் கூட அதனை தமிழக அரசின் ஒப்புதலோடுதான் செய்திட முடியும்.
ஆனால் தற்போது தமிழகத் தேர்தல் அதிகாரியாக இருக்கும் அதிகாரி நரேஷ் குப்தா - தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற 2006ஆம் ஆண்டு மே திங்களிலிருந்து இன்று வரை
முதலமைச்சரை ஒரு முறையேனும் “மரியாதைச் சந்திப்பு” என்ற பெயரிலேகூட சந்திக்கவில்லை. ஏனென்றால் அவர் தேர்தல் அதிகாரி. அவர் மரியாதைக்காக முதல் அமைச்சர் என்ற முறையில் என்னைச் சந்தித்தால் கூட, நேர்மை கெட்டு விடுமாம்.
ஆனால் மத்திய தேர்தல் ஆணையத் தலைவரோ, உறுப்பினர்களோ அவர்களை நியமிக்கும்போது பிரதமரையும் குடியரசுத் தலைவரையும் மரியாதை நிமித்தம் சந்திப்பதில்லையா என்று கேட்டால் அவர்கள் சந்திக்கத்தான் செய்கிறார்கள்.
அது மாத்திரமல்ல, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக இருந்த ஓசா, ஐ.ஏ.எஸ்., சந்திரசூடன் ஐ.ஏ.எஸ்., சாரங்கி, ஐ.ஏ.எஸ்., மாத்யூ, ஐ.ஏ.எஸ்., போன்றவர்கள் அவ்வப்போது ஆட்சிப் பொறுப்பிலே இருந்த முதல் அமைச்சர்களைச் சந்தித்ததே கிடையாதா என்றால், மரியாதைக்காக மட்டுமல்ல பல முறை சந்தித்திருக்கிறார்கள்.
பொதுவாக பொதுத் தேர்தல்களை விட இடைத் தேர்தல் என்றால் அதற்கு முக்கியத்துவம் உண்டாவதும் - போட்டி கடுமையாவதும், அங்கே ஒரு சில சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படுவதும் இயற்கையான ஒன்று என்பதும், ஆளுங்கட்சி அங்கே சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளிலே ஈடுபடுவதும் எந்தக் கட்சி ஆட்சியிலே இருந்தாலும் நடைபெறுகின்ற ஒரு நிலைமை தான். திருமங்கலம் தொகுதியிலும் அப்படிப்பட்ட ஒரு சில சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்று செய்திகள் வந்தன. அதற்கு முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க., அங்கே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்ற செயலில் ஈடுபட்ட காரணத்தால், அதனை கையும் களவுமாக பிடிக்கின்ற முயற்சி நடைபெற்று தடுக்கப்பட்ட காரணத்தால் வன்முறைக்கு வித்திட்டுள்ளது. அதைக் கண்டித்து அ.தி.மு.க.வினரே, அவர்களே வன்முறைக்கு வித்திட்டு விட்டு - பிக்பாக்கெட்காரன் தானே திருடி விட்டு, அவனே அதோ திருடன், திருடன் என்று கூறிக் கொண்டே ஓடுவதைப் போல அன்றாடம் ஆளுங்கட்சியையும், காவல் துறையையும் குறைகூறி அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார்கள்.
அந்த அறிக்கையில் ஒன்றாக - 31-12-2008 அன்று எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், ஒரு
சில காவல் துறை அதிகாரிகளை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்று அறிவித்தார்.
அவர் அறிவித்த அதே நாளில் - தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி - ஏடுகளுக்கு அளித்த பேட்டியில் மிரட்டுதல், தாக்குதல் நடந்ததால் என்றும், விதியை மீறி ஏராளமான சம்பவங்கள் நடந்துள்ளன என்றும், தேர்தல் ஆணையத்திற்கு தான் துரோகம் செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டார். அந்த அளவிற்கு திருமங்கலம் இடைத் தேர்தலின் போது ஏதாவது பெரிய கலவரமோ, தாக்குதலோ, வன்முறையோ, கொலைச் சம்பவங்களோ நடைபெற்றதா என்றால் கிடையாது, கிடையாது.
ஆனால், தேர்தலை பாரபட்சமின்றி - ஒரு தரப்புக்கு ஆதரவாக இல்லாமல் செயல்பட வேண்டிய ஒரு பெரிய அதிகாரி தான் அளித்த பேட்டியில், “தொகுதியில் வன்முறைகள், பல தவறுகள் நடந்துள்ளன, ஜம்மு - காஷ்மீரில் கூட சுமுகமாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. திருமங்கலம் கறை படிந்ததாகி விட்டது, திருமங்கலம் சம்பவம் துரதிருஷ்டவசமானது” என்றெல்லாம் சொன்னது என்பது தேர்தல் விதிப்படி ஒரு அதிகாரி வாக்காளர்களை ஒருதலைப்பட்சமாக ஊக்குவிப்பது ஆகாதா என்பதற்கு சட்டம் படித்தவர்களும், அரசியல் வாதிகளும் தான் பதில் கூற வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவரும், வேறு சில அவருடைய தோழமைக் கட்சியினரும் அதிகாரிகளை மாற்றுவது குறித்து அறிக்கை விடுத்த அதே நாளில் தமிழக முதலமைச்சர் என்ற முறையில் நான் விடுத்த அறிக்கையில் “திருமங்கலம் இடைத் தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்கு பெரிதும் விரும்பி, நடவடிக்கைகள் எடுத்து வருகிற இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு ஒத்துழைப்பு தருவதற்கு தமிழக அரசு தயாராக இருக்கிறது.
இதற்கு உதாரணமாக எந்த அதிகாரிகளை எங்கே மாற்றுவது என்பது போன்ற எதிர்க்கட்சியினர் கூறும் கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் ஏற்று, அவ்வாறு நடவடிக்கை எடுத்தால்; அதற்கும் உடன்பட்டுச் செயல்படவும் இந்த அரசு இதுவரை எவ்விதத் தயக்கமும் காட்டியதில்லை, இனியும் காட்டப் போவதுமில்லை, திருமங்கலத்தில் வெற்றி பெற வேண்டியது அமைதியும், ஜனநாயகமும்தான் என்பதில் இந்த அரசுக்கு இருவேறு கருத்துக்கள் இல்லை” என்று பட்டவர்த்தனமாக தெரிவித்திருந்தேன்.
ஆனால் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது நடந்ததைப் பற்றி “தினமலர்” நாளேடு குறிப்பிட்டிருந்தது என்ன தெரியுமா? 2006ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது, அன்றைய சென்னை மாநகர காவல் துறை கமிஷனர் நடராஜை மத்திய தேர்தல் ஆணையம் மாற்ற வேண்டுமென்று உத்தர விட்டபோது, அதை எதிர்த்து ஜெயலலிதா நீதி மன்றத்திற்கு செல்லவில்லையா என்று அந்த ஏடு கேள்வி கேட்டது. அதே ஜெயலலிதாதான் அதிகாரிகளை மாற்ற வேண்டுமென்றுகூட அல்ல, உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்றே அறிக்கை விட்டார். இந்தப் பிரச்சினையிலே மத்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு என்ன தெரியுமா? எதிர்க்கட்சித் தலைவர் மதுரையிலிருந்து மூன்று காவல் துறை அதிகாரிகளைப் பெயர் குறிப்பிட்டு அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று அறிக்கை விடுத்த அதே நாளில் மத்திய தேர்தல் ஆணையம் வெகு வேகமாகச் செயல்பட்டு, அன்று மாலையிலேயே தமிழக அரசுக்கு ஒரு அவசரச் செய்தி அனுப்பியது. என்ன அவசர செய்தி? தமிழகக் காவல் துறையைச் சேர்ந்த - மதுரையிலே திருமங்கலம் தொகுதியிலே பணியாற்றிக் கொண்டு வரும் மூன்று காவல் துறை அதிகாரிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என்பது தான் அந்தச் செய்தி. அத்தோடு செய்தி முடியவில்லை. அந்த மூன்று இடங்களிலே யார் யாரை நியமிக்கலாம் என்பது குறித்து ஒரு பட்டியலை தமிழக அரசு அனுப்ப வேண்டும் என்றும் - அந்தப் பட்டியலிலே தாங்கள் (மத்திய தேர்தல் ஆணையம்) குறிப்பிட்டுள்ள அதிகாரிகளின் பெயர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்றால் - தேர்தல் ஆணையம் எந்த அளவிற்கு நடுநிலையோடு (?) செயல்படுகிறது என்பதற்கு இதைவிட வேறு ஒரு எடுத்துக்காட்டினையா கூற முடியும்? மத்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழகத்திலே உள்ள காவல் துறை அதிகாரிகளைப் பற்றியும், அவர்களின் செயல்பாடுகள் பற்றியும் எப்படி தெரிந்து கொண்டு மூன்று அதிகாரிகளை அவர்களே குறிப்பிட்டு பட்டியலிலே சேர்க்க வேண்டுமென்று கடிதம் எழுதுகிறார்கள்? மத்திய தேர்தல் ஆணையத்திற்கு அங்கே நியமனம் செய்யப்பட வேண்டிய மூன்று அதிகாரிகளின் பெயர்களை இங்கிருந்து எழுதிக் கொடுத்தது யார்? அவர்களுக்கே வெளிச்சம்.
அப்படி மத்திய தேர்தல் ஆணையம் அவசர அவசரமாக மூன்று பெயர்களைக் குறிப்பிட்டு, அந்தப் பெயர்களை பட்டியலிலே சேர்த்து அனுப்பவேண்டுமென்று கோரிக்கை வைத்ததைப் பார்க்கும்போது - டி.ஐ.ஜி. பதவியில் ஒருவரை நியமிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்ட அதிகாரி ஐ.ஜி.யாக இருக்கிறார். ஒரு ஐ.ஜி.யை டி.ஐ.ஜி. யாக நியமிக்க இயலுமா? எனவே அதைப் பற்றி தேர்தல் ஆணையத்திற்கு விளக்கியதோடு டி.ஐ.ஜி. அதிகாரிகளின் பட்டியல் ஒன்றையும், மற்ற இரண்டு பதவிகளுக்கு சில அதிகாரிகளின் பெயர்களையும் குறிப்பிட்டு, மத்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்த பெயர்களையும் இணைத்து, தமிழக அரசு 1-1-2009 அன்று காலையில் கடிதம் அனுப்புகிறது. அதனைப் பெற்ற தேர்தல் ஆணையம், அன்றையதினம் விடுமுறை என்றபோதிலும், அதே நாளில் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று ஏற்கெனவே அவர்கள் பரிந்துரை செய்த அதிகாரிகளையே அங்கே நியமிக்க வேண்டுமென்று ஆணை பிறப்பித்து, அந்த அதிகாரிகள் எல்லாம் உடனடியாக அங்கே பணியில் சேர்ந்திட வேண்டுமென்றும் அவசர ஆணை பிறப்பித்தது.
திருமங்கலம் இடைத் தேர்தல் நடைபெற்ற நேரத்தில் மத்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையர் இங்கே தனிப்பட்ட வருகையாக சென்னைக்கு வந்தபோது, திருமங்கலம் இடைத் தேர்தலைப் பற்றி செய்தியாளர்களிடம் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறினார். தமிழகத் தேர்தல் அதிகாரியைப் பற்றி தமிழகத்திலே உள்ள எதிர்க் கட்சித் தலைவர் ஜெயலலிதா என்ன விமர்சனம் செய்தார்? “அவர் திறமையான அதிகாரி என்றும், நல்லவர் என்றும்” விமர்சனம் செய்து ஏடுகளில் வெளியாவில்லையா? அதனால்தான் தமிழக அரசை தமிழகத் தேர்தல் அதிகாரி விமர்சனம் செய்தாரா என்ற சந்தேகம் வருமா வராதா?
தற்போது 2.3.2009 அன்று மதியம் 3.30 மணி அளவில் தான் மத்திய தேர்தல் ஆணையர் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் தேதியை அறிவிக்கிறார். அதற்குப் பிறகுதான் தேர்தல் கட்டுப்பாடுகள் எல்லாம் நடைமுறைக்கு வருகின்றன. ஆனால் 2ஆம் தேதிக்கு முன்பு பிப்ரவரி 28ஆம் தேதியோ, மார்ச் முதல் தேதியோ ஏன் 2ஆம் தேதி காலையிலோ தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட சில திட்டங்கள் ஏடுகளில் வெளியே வரலாமா கூடாதா? உதாரணமாக வன்னியர் பொது சொத்து
நல வாரியம் என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அதற்கான அதிகாரி நியமனம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பு ஏடுகளுக்கு 2.3.2009 தரப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத் தலைமை தேர்தல் ஆணையம் சில பத்திரிகையாளர்களுடன் தொலைபேசியில் பேசி, அந்தச் செய்தியினை ஏடுகளிலே வெளியிடக் கூடாது என்று தடுத்திருக்கிறார் என்றால், அவருக்கு இதிலே ஏன் இப்படிப்பட்ட அக்கறை?
தேர்தல் ஆணையமும், தேர்தல் அதிகாரிகளும் செய்கின்ற செயல்கள் பற்றி யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்ற போதிலும் - இப்படியெல்லாம் செயல்கள் நடைபெறுகின்றன என்று மக்களுக்குத் தெரிவிக்கக் கூட கூடாதா என்ன?
அன்புள்ள, மு.க. 5-3-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 85–91. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.