அடக்கம்

முரசொலி · தொகுதி 42 · கடிதம் 3379

முரசொலி கடிதங்கள் · 3379

நலிவும் நானும் - நாட்குறிப்பு

நாள் 10.3.2009சுமார் 7 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3379. நலிவும் நானும் - நாட்குறிப்பு

(ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் அறுவை சிகிச்சை, அதைத் தொடர்ந்து தொடர் சிகிச்சைகள் இவற்றினூடே பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்கிறேன், இந்த தொடர் கட்டுரை மூலம்)

★★

உடன்பிறப்பே,

கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக மருத்துவமனையிலும், வீட்டிலும் உடல் நலம் பாதிக்கப்பட்டு, அபாயகரமான அறுவை சிகிச்சை செய்து கொண்டு, சிகிச்சைக்கு இடையிலேயும் தவறாமல் பொதுப் பிரச்சினை குறித்தும், அரசுப் பிரச்சினை குறித்தும் அவ்வப்போது உடன்பிறப்பு மடல்கள் மூலமும், அறிக்கைகள் மூலமும் உன்னோடு தொடர்பு கொண்டு வருகிறேன் என்றபோதிலும், என்னுடைய உடல் நிலை என்ன, எனக்கு என்ன ஏற்பட்டது, என்ன செய்தார்கள், அதன் விளைவுகள் என்ன என்பதைப் பற்றி நான் உனக்கு எதுவுமே தெரிவிக்கவில்லை.

நான் செய்து கொண்ட சிகிச்சைகள் பற்றி என்னைச் சந்தித்த - பார்க்க வந்த முக்கியஸ்தர்களுக்கு எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் விளக்கினார்கள். ஆனால் உடன்பிறப்புகளாகிய உங்களுக்கு நான் தெரிவிக்கவில்லையே என்று குறைபாடு எனக்கு இருந்தது. அதன் காரணமாக தற்போது சற்று உடல் நிலை தேறி வருகின்ற நிலையில் எனக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பற்றி தேதி வாரியாக உனக்கு விளக்கிட விரும்புகிறேன்.

26-1-2009

கடந்த ஓரிரு மாதங்களாக என்னுடைய முதுகுப் புறத்தில் தாங்க முடியாத வலியிருந்த போதிலும், அதனைப் பொருத்துக் கொண்டு - அதைப் பெரிதுபடுத்தினால் மருத்துவர்கள் படுக்க வைத்து விடுவார்கள் என்று எண்ணிக் கொண்டே வெளியே யாரிடத்திலும் சொல்லாமல் - குடும்ப டாக்டர் கோபால்

அவர்களிடம் கூறி - அவர் எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் மயில்வாகனன் அவர்களை வீட்டிற்கு வரவழைத்து - வலிக்கின்ற இடத்தில் மின் ஒத்தடம் கொடுக்கச் செய்தும் - தற்காலிக வலி நீக்கத்திற்கான மாத்திரைகளைப் போட்டுக் கொண்டும் காலம் கடத்திப் பார்த்தேன்.

இதற்கிடையே தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததை யொட்டி இரண்டு ஆண்டுகளாக தம்பி துரைமுருகனும், தம்பி ஜெகத்ரட்சகனும் இணைந்து, ஒரு நாள் முழுவதும் வள்ளுவர் கோட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, ஆயிரக் கணக்கான மக்களைக் கூட்டி கவியரங்கம், பட்டி மன்றம், வாழ்த்தரங்கம் போன்றவைகளை நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பதால் இந்த ஆண்டும் அதற்கான நாளைக் கேட்டார்கள். நான் கூட அவர்களிடம் அப்போது சட்டமன்றம் நடந்து கொண்டிருப்பதால் பிறிதொரு நாளில் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிப் பார்த்தும் கேட்காமல், சட்டமன்றம் இல்லாத ஒரு நாளில் வைத்துக் கொள்வதாகக் கூறி ஒப்புதல் பெற்று விட்டார்கள்.

தமிழின் பெயரால் எடுக்கப்படும் அந்த விழாவின் பல நிகழ்ச்சிகளையும் நான் கண்டு மகிழ்வதில் அவர்களுக்கு “ஆத்ம திருப்தி.” அதனால் அந்த விழா நிகழ்ச்சியில் ஒரு நாள் முழுவதும் அங்கேயிருந்து - நம்மை மதித்து மற்றவர்கள் நம்முடைய உரையினைக் கேட்பதைப் போல - அவர்களைப் பெருமைப்படுத்த நாமும் அமர்ந்து அவர்களுடைய உரைகளைக் கேட்பதென்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியது என்பதை உணர்ந்த நான் - வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற அந்த விழா நிகழ்ச்சியில் பத்து மணி நேரம் என்னுடைய முதுகு வலியை மறந்து விட்டு அமர்ந்திருந்தேன். தமிழின் இனிமையில் முதுகு வலி தெரியவில்லை, ஆனால் விழா முடிந்து வீட்டிற்குத் திரும்பிய பிறகு தாங்கொணா வலி. நான் துடிதுடிப்பதைப் பார்க்க முடியாமல் வீட்டார் ஏன் அவ்வளவு மணி நேரம் விழா நிகழ்ச்சியில் உட்கார்ந்திருந்தீர்கள் என்று கடுமையாகக் கோபித்துக் கொண்டார்கள்.

25-1-2009

அன்று நள்ளிரவு நேரம் ஆக ஆக, வலி குறைவதற்கான அடையாளம் தெரியவில்லை. குடும்ப மருத்துவர் கோபாலும் என்ன செய்வதென்று தெரியாமல் டாக்டர் மயில்வாகனன்

அவர்களின் யோசனையையும் பெற்று, ராமச்சந்திரா மருத்துவமனையின் எலும்புச் சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.எஸ்.கே. மார்த்தாண்டம் அவர்களை வீட்டிற்கு வரவழைத்தார். டாக்டர் மார்த்தாண்டம் அவர்கள் என்னை வந்து பார்த்து விட்டு, நான் படும் வேதனையைக் கண்டு உடனடியாக ராமச்சந்திரா மருத்துவமனையில் உள் நோயாளியாகச் சேர்ந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தார். அப்போது இரவு மணி 1. எனவே உடனடியாகப் புறப்பட்டு, ராமச்சந்திரா மருத்துவமனைக்கு இரவு 2 மணிக்கு சென்றடைந்தோம்.

இரவு 2 மணி அளவில் மருத்துவமனையைச் சென்றடைந்த நான் - டாக்டர் தனிகாசலம் அவர்களாலும், தம்பி வெங்கடாசலத்தாலும் வரவேற்கப்பட்டேன். டாக்டர் தனிகாசலம் அவர்களை கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக நான் அறிவேன். அவர் சென்னை பொது மருத்துவமனையிலே பணியாற்றிக் கொண்டிருந்தபோதே, பதவி உயர்வு குறித்து அவருக்கு தீங்கிழைக்கப்பட்டதாக என்னிடம் முறையீடு செய்தபோது, அதனையேற்று உடனடியாக நியாயம் வழங்கியதன் பேரில் என்னிடம் அவருக்கு தனி மரியாதை உண்டு. அவர் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ராமச்சந்திரா மருத்துவமனையில் பணிபுரிந்த போதிலும் அடிக்கடி என்னைச் சந்திக்கக் கூடியவர். அந்த முறையில் நான் அங்கே உள் நோயாளியாக சேருவதற்காக வருகிறேன் என்ற செய்தி சென்றதுதான் தாமதம், வாசலிலேயே வந்து காத்திருந்தார்.

மருத்துவமனைக்குச் சென்றதும் நேராக அறைக்கு அழைத்துச் செல்லப்படாமல் - காரிலிருந்து இறங்கிய அளவிலேயே எக்ஸ்ரே எடுப்பதற்காகவும் - எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பதற்காகவும் அழைத்துச் செல்லப்பட்டேன். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பதைப் பற்றி அனுபவ பூர்வமாக உணர்ந்தவர்கள் நன்றாக அறிவார்கள். கூண்டு போன்ற ஒரு இயந்திரத்திற்குள் முழு உடம்பையும் தள்ளி, அங்கே கை கால்களையெல்லாம் அசைக்காமல் படுக்க வைத்து உடலின் பல்வேறு பாகங்களின் செயல்பாடுகள் குறித்து இயந்திரத்தின் மூலம் சோதனை செய்வார்கள். அந்த இயந்திரத்தின் சத்தமே மிகவும் பயமுறுத்துவதாக இருக்கும். யாரும் விரும்பி அந்தச் சோதனைக்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

அன்றையதினம் எம்.ஆர்.ஐ. சோதனை கூட எனக்குப் பெரிதாக அல்ல. தள்ளிக் கொண்டு போகும் நாற்காலியிலே

என்னை அமர வைத்து அழைத்துச் சென்றவர்கள் - எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பதற்காக படுக்க வைக்க முயன்ற போதே வலி தாங்க முடியாமல் “ஓ” வென அலறி விட்டேன். “எக்ஸ்ரே எல்.எஸ். ஸ்பைன்” மற்றும் “எம்.ஆர்.ஐ. ஆப் எல்.எஸ். ஸ்பைன்” எடுக்கப்பட்டதில் - முதுகுத் தண்டில் எல்.2 மற்றும் எல்.3 இடையே உள்ள ஜவ்வு (டிஸ்க்) ஒரு கணு விலகி, நரம்புப் பகுதியை அழுத்திக் கொண்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எழுவதற்காக நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கின்ற காரணத்தாலும் மற்றும் வயதான காரணத்தால் முதுகு தண்டு வடத்திலும் தேய்மானம் ஏற்பட்டிருப்பது நன்கு தெரிய வந்தது. (X Ray L-S Spine and M.R.I. of L.S. Spine was done which revealed Disc Prolapse at L2-L3, Spinal Canal Stenosis and degenerative Spondylosis). இந்தச் சோதனைகள் முடிந்து டி.7 வார்டில் இருந்த என் அறைக்கு விடியற்காலை 4.30 மணி அளவில் தான் அழைத்துச் செல்லப்பட்டு படுக்க வைக்கப்பட்டேன். வலி கொஞ்சம் கூட குறையாத அளவிற்கு என்னை துடிக்க வைத்துக் கொண்டே இருந்தது. எந்தப் பக்கமும் புரள முடியவில்லை. மருத்துவர்கள் வலி நிவாரணத்திற்கான மாத்திரைகளை அளித்தார்கள். அந்த மாத்திரைகள் ஓரளவிற்குத்தான் என் வலியைக் குறைத்தன.

4.30 மணி அளவிலேயே மருத்துவ மனையில் இருந்தபோதே - உதவியாளரை அழைத்து காலையில் குடியரசு நாளையொட்டி - ஆளுநருடன் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சிக்குச் செல்ல முடியாது. எனவே பேராசிரியரை தொடர்பு கொண்டு, அந்த நிகழ்ச்சிக்கு அவரை அனுப்புவதற்கும் ஏற்பாடு செய்யவேண்டும், அந்த தகவலை ஆளுநருக்கும், தலைமைச் செயலாளருக்கும் தெரிவித்து விடு என்று கூறினேன்.

காலை 7 மணி அளவில் டாக்டர் தனிகாசலம் அவர்கள் என் உடம்பின் பொதுவான நிலைமைகளையெல்லாம் பரிசோதித்தார். இரத்த சோதனைகள் செய்ததில் புரதச் சத்து குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நான் மருத்துவமனையிலே சேர்க்கப்பட்டது அதற்குள் பத்திரிகையாளர்கள் வாயிலாக வெளி உலகத்திற்கு தெரிந்து தொலைபேசிகள் வாயிலாகவும், பல பேர் நேரிலும் மருத்துவ மனைக்கு வரத் தொடங்கி விட்டனர்.

தமிழக அரசின் சார்பாக மருத்துவ மனையிலே நான் அனுமதிக்கப்பட்ட செய்தியினை தெரிவிக்கும் - ஒப்புக் கொண்ட

நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு சில நாட்களுக்கு தள்ளி வைக்கப்படும் என்று அறிவித்தும் ஒரு செய்திக் குறிப்பினைக் கொடுக்கச் செய்தேன்.

27-1-2009

மருத்துவமனையில் எனது இரண்டாவது நாள் வாழ்க்கை தொடங்கியது. வலியைக் குறைப்பதற்காக “பிசியோதெரபி” (டென்ஸ்) சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அன்றிலிருந்து நாள் ஒன்றுக்கு இரண்டு முறை கொடுத்தார்கள். அன்று காலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் வழிகாட்டித் தலைவருமான திருமதி சோனியா காந்தி அவர்கள் - மாநிலங்களவை உறுப்பினர், என் மகள் கனிமொழியை தொலைபேசியிலே தொடர்பு கொண்டு, என் உடல் நலம் குறித்து கேட்டறிந்ததோடு, நான் விரைவில் நலம் பெற்று பணி தொடர்ந்திட தன்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து டெல்லிக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் நான் சென்று பிரதமரைச் சந்தித்தபோது, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க - இலங்கைக்குச் செல்வதாக உறுதி அளித்திருந்த மத்திய வெளி உறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் 27ஆம் தேதி இலங்கை செல்வதற்கு முன்பு மருத்துவமனையிலே இருந்த என்னிடம் தொடர்பு கொண்டு என் உடல் நலம் விசாரித்தார். நான் உடல் நலம் குறித்து அவரிடம் தெரிவிப்பதற்கு முன்பாக, அவர் இலங்கைக்குச் செல்வதற்காக என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன். விரைவில் உடல் நலம் பெற வேண்டுமென்ற அவருடைய வாழ்த்தினை தெரிவித்தார். பிரணாப் முகர்ஜி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்ததையும், இலங்கைக்குப் புறப்பட்டுச் செல்வதாக கூறியதையும் பேரவையில் அவை முன்னவர் பேராசிரியர் அவர்கள் அறிவித்தார்.

28-1-2009

அன்றையதினம் என்னால் வலியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மருத்துவர்கள் உடனடியாக விரைந்து வந்து வலியைக் குறைப்பதற்காக ஊசி போடலாம் என்று முடிவு செய்து ஊசி போட்டார்கள். அன்று மாலையில் பிரபல எலும்பு சிகிச்சை

நிபுணரும் என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான டாக்டர் மோகன்தாஸ் அவர்கள் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வந்து என்னைப் பார்த்தார். அங்கிருந்த மருத்துவர்களோடும் கலந்துரையாடினார். அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை முறைகளை தொடருமாறும் விரைவில் உடல் நலம் பெறும் என்றும் கூறிவிட்டுச் சென்றார்.

29-1-2009

விடியற்காலையிலேயே வலி என்னால் தாங்க முடியவில்லை. மருத்துவர்கள் உடனடியாக அழைக்கப்பட்டு அன்று காலையிலும் மாலையிலும் வலியைக் குறைப்பதற்கான ஊசிகள் போடப்பட்டன.

30-1-2009

எனது கல்லீரல் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பதைப் பற்றி ஒரு சோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகளில், கல்லீரல் முறையாகவும் நன்றாகவும் செயல்படுவதாகவும் அங்கே எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

கடுமையான முதுகு வலி, விலாப்புற வலிகளால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையிலே நான் இருந்த நிலையில் கூட - என்னை இயக்க வைக்க வேண்டுமென்ற அக்கறையோடு - எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா பல்வேறு கேள்விகளைக் கேட்டு - என்னை மிகவும் கடுமையாகத் தாக்கி - தன் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க வேண்டும் என்று அறிக்கை விட்டிருந்தார். என் தாங்க முடியாத வலியைக் குறைப்பதற்கு - மருத்துவர்களின் மருந்துகளை விட சக்தி வாய்ந்தது எழுதுவதுதான் என்பதால் - ஜெயலலிதாவின் கேள்விகளுக்கு பதில் கூறி - மருத்துவமனையில் படுத்துக் கொண்டே எழுதினேன். முடியாத நிலையில் பதில்களை உதவியாளர் மூலமாக “டிக்டேட்” செய்தேன்.

இன்று என் மகன் மு.க. அழகிரியின் 58வது பிறந்த நாள் என்ற வகையில் காலையிலேயே என்னை தொலைபேசியிலே தொடர்பு கொண்டு என் வாழ்த்துகளைப் பெற்றார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக மத்திய வெளி உறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் இலங்கைக்குச் செல்வதாக என்னிடம் கூறி விட்டுச் சென்றதைத் தொடர்ந்து 30ஆம் தேதியன்று எனக்கு ஒரு கடிதமும் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில்

“தாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில மருத்துவச் சோதனைகளும் சிகிச்சைகளும் பெற்று வருவதை அறிந்து நான் மிகவும் வருந்துகிறேன். நீங்கள் விரைவில் முழுமையாக குணம் அடைவீர்கள் என்றும் நம்புகிறேன்.

கடந்த ஜனவரி 27 அன்று கொழும்பில் இலங்கை அதிபர் ராஜ பக்சேயுடன் எனது பேச்சு வார்த்தை குறித்து நான் முன்னர் தங்களுக்கு கடிதம் எழுதினேன். நேற்று மாலை, அதிபர் ராஜபக்சே, மோதல் பகுதியிலிருந்து தமிழர்கள் பாதுகாப்பையும், பத்திரத்தையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக சுதந்திரமாக வெளியேற 48 மணி நேர அவகாசம் அளித்து அழைப்பு விடுத்துள்ளார். மோதல் பகுதியில் சிக்கிக் கொண்டுள்ள பொது மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்வதை அனுமதிக்கத் தேவையான உத்தரவுகளை இலங்கை அரசு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நான் எழுப்பிய பிரச்சினைகளில் இதுவும் ஒன்று என்பதையும், அதன்படி பொது மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியே வகை செய்ய வேண்டும் என்று இந்திய அரசு குரல் எழுப்பியது என்பதையும் தாங்கள் அறிவீர்கள். அதிபர் ராஜபக்சே மற்றும் நமது வெளி உறவுத் துறை செயலாளர் ஆகியோரது அறிக்கைகள் தங்கள் தகவலுக்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் விரைவில் அமைதி திரும்புவதற்காகவும், அங்கு நல்ல அரசியல் தீர்வு ஏற்படுவதற்கும் இந்திய அரசு தொடர்ந்து பாடுபடும். போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி பொதுமக்கள் நலனுக்காகவும், அவர்களுடைய நிலை மேம்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்.”

என்று எழுதியிருந்தார். மருத்துவமனையில் இருந்தவாறே அந்தக் கடிதத்தை தலைமைச் செயலகத்திற்கு அனுப்பி பேரவையில் அவை முன்னவர் பேராசிரியரைக் கொண்டு அறிவிக்கச் செய்தேன்.

இந்த நாட்குறிப்பை தொடர்ந்து நாளை எழுதுகிறேன்.

அன்புள்ள, மு.க. 10-3-2009

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 106–112. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 42-இல் மேலும் கடிதங்கள்