முரசொலி கடிதங்கள் · 3381
நலிவும் நானும் - நாட்குறிப்பு (3)
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3381. நலிவும் நானும் - நாட்குறிப்பு (3)
(ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் அறுவை சிகிச்சை, அதைத் தொடர்ந்து தொடர் சிகிச்சைகள் இவற்றினூடே பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்கிறேன், இந்த தொடர் கட்டுரை மூலம்)
★★
உடன்பிறப்பே,
6-2-2009
மாயவரம் காந்தி என்று இளமைக் காலத்தில் எனக்கொரு நண்பர். கழகத் தோழர். அவர் இப்போது இல்லை. அந்தப் பகுதிகளுக்கு பெரியார் வரும்போதெல்லாம் அவர் வீட்டில் தான் தங்குவார். மாயவரம் காந்திக்கு இரண்டு புதல்வர்கள். ஒருவர் சம்பத், மற்றொருவருக்கு “கருணாநிதி” என்று என் பெயரைத்தான் வைத்திருந்தார். சம்பத் தற்போது பால் வளத் துறை அமைச்சரிடம் உதவியாளராகப் பணியாற்றுகிறார். அவர் மகளுக்கு என் இல்லத்து வாயிலிலேயே இன்று திருமணம் செய்து வைப்பதாக ஒப்புக் கொண்டிருந்தேன். ஆனால் மருத்துவமனையிலே நான் இருந்ததால், மணமக்களை அழைத்துக் கொண்டு மருத்துவ மனைக்கே வந்து திருமணத்தை நடத்தி வைக்கக் கேட்டுக் கொண்டார். நானும் படுத்த படுக்கையிலே இருந்தவாறே அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தேன்.
மருத்துவமனையிலே நான் இருந்தபோது, பொதுச் செயலாளர் பேராசிரியரும், கழக முன்னணியினரும், அமைச்சர்களும் அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து என் உடல் நிலையை கேட்டறிந்தும் அன்றாட அரசியல் நிலவரங்கள் குறித்து நிலைமைகளை விளக்கியும் சென்றனர். என் துணைவியர் தயாளு, ராஜாத்தி ஆகியோரும், என் மகள்கள் செல்வி, கனி ஆகியோரும் செவிலியர்களோடு செவிலியர்களாக என்னைக் கவனித்துக் கொண்டார்கள். செல்வி பெங்களூரையே மறந்து
விட்டு இரவு முழுவதும் தூங்காமல் மருத்துவ மனையிலேயே தங்கி என் கோபத்தையெல்லாம் தாங்கிக் கொண்டது. கனி பொது நிகழ்ச்சிகள், பாராளுமன்றம், மகன் ஆதி என்ற பொறுப்புகளுக்கிடையே நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் எனக்குத் துணையாக இருந்தது. என் மருமக்கள் பல நேரங்களில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் மருத்துவ மனைக்கு வந்து மாமியாருக்கு உதவியாய் இருந்தனர். தம்பிகள் பொன்முடி, எ.வ. வேலு, ஆ. ராஜா ஆகியோர் அன்றாடம் இரவில் மருத்துவ மனையிலேயே தங்கி, ஒத்துழைப்பாக இருந்தனர். வேறு சில நாட்களில் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், கே.என். நேரு ஆகியோரும் மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின், மு.க. தமிழரசு ஆகியோரும் மருத்துவ மனையிலே தங்கியிருந்தனர்.
முதுகுத் தண்டில் ஊசி போடுவதற்காக இடையில் நிறுத்தப்பட்டிருந்த Anti-Platelet மாத்திரையை மீண்டும் கொடுக்கத் தொடங்கினார்கள். இன்று மதியம் 2 மணி அளவில் தூங்க முயன்றபோது - வலி கடுமையான அளவிற்கு என்னைத் தாக்கியது. என்னால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. மருத்துவர்களுக்கும் என்ன செய்வதென்று தோன்ற வில்லை. மீண்டும் ஒரு முறை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து பார்க்கலாம் என்று டாக்டர் மார்த்தாண்டம் எண்ணியதன் பேரில் - எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டேன். அய்யோ; மீண்டும் ஒரு “எம்.ஆர்.ஐ” எடுப்பதா? குடும்பத்தாரும், நண்பர்களும் நடுங்கிச் சோர்ந்து போயினர்.
கடுமையான வலிக்கிடையிலே எம்.ஆர்.ஐ. மீண்டும் எடுக்கப்பட்டது. அப்போது எல்.2 - எல்.3 ஆகியவற்றிற்கிடையே விலகியிருந்த டிஸ்கின் நீளம் மேலும் அதிகமாகியிருப்பது கண்டறியப்பட்டது. அதுதான் வலி அதிகமானதற்குக் காரணம் என்றும் மருத்துவர்கள் விளக்கினார்கள். வலிக்கு காரணம் தெரிந்து என்ன பயன், அதனை குணம் ஆக்குவதற்கு என்ன வழி என்று கேட்டேன். “முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை ஒன்றுதான் அதற்கு வழி” என்றார் டாக்டர் மார்த்தாண்டம். மற்ற மருத்துவர்களும் அதனை ஆமோதித்தனர். டாக்டர் மோகன்தாஸ் அவர்களையும் அழைத்து அவருடைய கருத்தையும் கேட்ட போது, அவரும் அறுவை சிகிச்சைதான் நல்லது என்று அபிப்பிராயம் கூறினார்.
மருத்துவர்கள்; - குடும்பத்தார் அனைவரையும் அழைத்து - “என் வயதை எண்ணிடும் போது - இந்த அறுவை சிகிச்சை மிகவும் அபாயகரமானது என்றும் - ஆனால் வலியைப் போக்க வேறு வழியில்லை என்றும் - மிகுந்த துணிச்சலோடுதான் அறுவை சிகிச்சைக்கு முன்வர வேண்டும்” என்றும் கூறினார்கள். நான் வலியால் படுகின்ற துன்பத்தை பார்க்க சகிக்காமல், அதனைப் போக்குவதற்கு வேறு வழியும் இல்லை என்று மருத்துவர்கள் திட்டவட்டமாகக் கூறியதால் - குடும்பத்தார்; இந்த விஷயங்களை யெல்லாம் என்னிடம் சொல்வதற்கு முன்வராமல் - அறுவை சிகிச்சை மிகவும் சாதாரணமானது என்றும், பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும், செய்து கொள்ளலாம் என்றும் சமாதானப்படுத்தினார்கள். குறிப்பாக கலாநிதி மாறன் “தாத்தா, இதிலே பயப்படுவதற்கு ஒன்றுமில்லை தாத்தா, செய்து கொள்ளலாம்” என்று அவருடைய தந்தையைப் போலவே கூறினார். அவர்களின் வாய்கள்தான் எனக்கு சமாதானம் கூறின. ஒருவரின் முகத்தைப் பார்த்தவுடன் அவர்களைப் பற்றி எடை போடக் கூடிய திறமை எனக்கு உண்டு என்பதால், அத்தனை பேருடைய முகங்களையும் ஒரு முறை பார்த்தவுடனேயே உண்மையைப் புரிந்து கொண்டேன். நான் ஏதாவது விசாரித்தால் ஒவ்வொருவருடைய விழிகளிலிருந்தும் வெடித்துக் கொண்டு வர கண்ணீர் காத்திருந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நானே அவர்களுக்கெல்லாம் தைரியம் அளித்தாக வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாகி - “சாதாரண அறுவை சிகிச்சைதானே, ஏன் இப்படி முகத்தை வைத்துக் கொண்டு பயப்படுகிறீர்கள்” என்று ஆறுதல் கூறியதோடு, அறுவை சிகிச்சைக்குத் தயார் என்றும் எப்போது வைத்துக் கொள்ளலாம் என்றும் கேட்டேன்.
இரவு எட்டு மணி அளவில் மீண்டும் மருத்துவர்கள் எல்லாம் கூடி, அறுவை சிகிச்சையை எங்கே வைத்துக் கொள்ளலாம், வெளி நாட்டிற்கு அழைத்துச் செல்லலாமா, அல்லது டெல்லிக்குச் செல்லலாமா என்றெல்லாம் பேசப்பட்டது. நரம்பியல் டாக்டர் ஏ.வி. சீனிவாசன் அவர்கள் அங்கிருந்தவாறே “டெலி-மெடிசின்” மூலமாக அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனையுடன் தொடர்பு கொண்டு - இந்த அறுவை சிகிச்சை பற்றிய விவரங்களை யெல்லாம் அறிந்தார். இறுதியாக டெல்லியிலே உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் பணியாற்றும் டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வால் அவர்கள் இந்த அறுவை சிகிச்சையில்
மிகவும் திறமை வாய்ந்தவர் என்பதால், அவருடன் தொடர்பு கொண்டு அவரை வரவழைக்கலாம் என்று பேசி முடிவெடுக்கப்பட்டது.
தம்பி தயாநிதி மாறன் உடனடியாக டெல்லியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தம்பி அன்புமணியிடம் தொடர்பு கொண்டு - டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வால் அவர்களை சென்னைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். தம்பி அன்புமணி உடனடியாக அந்த நிறுவனத்தின் இயக்குநரிடம் பேசி அடுத்த நாளே டாக்டர் ஜெய்ஸ்வால் அவர்களை சென்னைக்கு அனுப்பி வைப்பதாக தகவல் அனுப்பினார்.
7-2-2009
அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றும் முதுகெலும்பு டாக்டர் சாஜன் ஹெக்டே அவர்களை அழைத்து என் உடல் நிலை குறித்து கருத்து கூறுமாறு கேட்கப்பட்டது. அவரும் என்னை சோதித்து விட்டு, நடைபெறும் சிகிச்சை முறைகள் சரியாக இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்வதுதான் சரியானது என்றும் கருத்து தெரிவித்தார்.
அன்றையதினம் மாலையில் டெல்லியிலிருந்து டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வால் ராமச்சந்திரா மருத்துவமனை வந்தடைந்தார். அவரும் டாக்டர் மார்த்தாண்டம் அவர்களும் என்னைப் பார்த்துக் கொண்டிருந்த போது, முதுகிலே தொடங்கும் வலி எதுவரை பரவியுள்ளது என்று கேட்டனர். இது “தை மாதம்” அல்லவா, எனவே என் “தை (Thigh) (தொடை) வரை நீடிக்கிறது என்று சிரித்துக் கொண்டே கூறினேன். டாக்டர் ஜெய்ஸ்வால் என்னை நேரடியாக பரிசோதித்ததோடு, அனைத்து எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே படங்களையும் பார்த்தார். அறுவை சிகிச்சை செய்வது என்று முடிவெடுத்த நிலையில், மருத்துவர்களைக் கொண்ட ஒரு குழு அமைப்பதுதான் சரியானதென்று தீர்மானிக்கப்பட்டது. டாக்டர் மார்த்தாண்டம் அவர்கள் தலைமையில் டாக்டர் தனிகாசலம் (இருதய நிபுணர்), டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வால் (முதுகெலும்பு நிபுணர்), டாக்டர் கோபால் (குடும்ப டாக்டர்), டாக்டர் கார்த்திக் கைலாஷ் (முதுகெலும்பு நிபுணர்), டாக்டர் ஏ.எஸ். நாயுடு (மயக்க மருந்து நிபுணர்), டாக்டர் மகேஷ் வகாமுடி (மயக்க மருந்து நிபுணர்), டாக்டர் ஏ.வி. சீனிவாசன் (நரம்பியல் நிபுணர்), டாக்டர் கே.ஆர்.
பழனிசாமி (குடல் மற்றும் இரைப்பை நோய் நிபுணர்), டாக்டர் ராஜ் பி. சிங் (நுரையீரல் நிபுணர்), டாக்டர் மயில்வாகனன் (எலும்பு சிகிச்சை நிபுணர்), டாக்டர் சண்முகம் (மயக்க மருந்து நிபுணர்), டாக்டர் பாஸ்கர் (மயக்க மருந்து நிபுணர்), டாக்டர் சவுந்தரராசன் (சிறுநீரகவியல் நிபுணர்) ஆகிய 14 பேரைக் கொண்ட மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு, அது அறிவிக்கப்பட்டது.
மருத்துவக் குழுவினர் அனைவரும் அமர்ந்து அறுவை சிகிச்சையை எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று நீண்ட நேரம் யோசனை செய்து - 11.2.2009 அன்று வைத்துக் கொள்வதென்றும், சென்னையில் ராமச்சந்திரா மருத்துவமனையிலே அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும், டெல்லி மருத்துவர் ஜெய்ஸ்வால் அவர்கள் 10ஆம் தேதியன்றே சென்னைக்கு வந்துவிட வேண்டுமென்றும் பேசி முடிவெடுக்கப்பட்டது.
மத்திய உள் துறை அமைச்சர், அருமை நண்பர் ப. சிதம்பரம் அவர்கள் மருத்துவ மனைக்கு இன்று வந்திருந்தார். சிவகங்கையில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டுமென்று அவர் வலியுறுத்தி - அரசின் சார்பில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அந்தக் கல்லூரிக்கு நானே நேரில் வந்து அடிக்கல் நாட்டு விழா நடத்த வேண்டுமென்று அவர் விருப்பப்பட்டு என்னிடம் தேதி பெற்றிருந்தார். மருத்துவ மனையிலே என்னை வந்து நேரிலே கண்ட பிறகு - மருத்துவமனையில் நான் இருந்தவாறே “வீடியோ கான்பரன்ஸ்” மூலமாக அடிக்கல் நாட்ட வேண்டுமென்றும், மாநில அமைச்சர்கள் இருவரை சிவகங்கைக்கு அதே நாளில் அனுப்பி வைத்தால் அங்கே விழாவினை நடத்திக் கொள்வதாகவும் கூறினார். நானும் அதற்கான ஒப்புதலை அளித்தேன்.
8-2-2009
மருத்துவமனையில் இருந்த போதிலும் - தாங்கொணா வலி உடலை வருத்திக் கொண்டிருந்த நிலையிலும் - ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும் ஏடுகளைப் படிக்க நான் தவறியதில்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சகோதர யுத்தம் இங்கும் கூடாது என்றும் குறிப்பாக தமிழகத்திலே உள்ள அனைவரும் இலங்கைப் பிரச்சினையிலே மட்டுமாவது ஒற்றுமையாக இருந்திட வேண்டுமென்றும் “ஒன்றுபட்டால்
உண்டு வாழ்வே” என்ற தலைப்பில் எழுதியிருந்தேன். என்னுடைய அந்த வேண்டு கோளை அலட்சியப்படுத்தியதோடு மட்டும் மல்லாமல், என்னை சிலர் மிகவும் இழிவுபடுத்தி பேசியும், எழுதியும் இருப்பதை காலை ஏடுகளில் காண நேர்ந்தது. அதனால் எனக்கு அணுவளவு வருத்தமும் இல்லை என்றும், அவர்கள் என்னைத் தாக்கியிருப்பது அவர்கள் மனச்சாட்சிக்கு சரியென்று பட்டால் அதில் எனக்கு மகிழ்ச்சிதான் என்றும் அவர்கள் தூற்றியிருப்பதை என் உடல் தாங்குகிறதோ இல்லையோ - இலங்கைத் தமிழர் வாழ்வில் பள்ளம் ஏற்படாமலிருக்க, என் உள்ளம் தாங்கித் தானே ஆக வேண்டுமென்று எழுதினேன்.
ஜெயலலிதா விடுத்த நீண்ட அறிக்கையில் விவசாயிகளுக்காக கழக ஆட்சியில் குறிப்பாக நான் எதுவும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டியிருந்தார். ஆளுநர் உரைக் காகவும், அதன் பதில் உரைக்காகவும் தயாரித்து வைத்திருந்த குறிப்புகளிலேயிருந்த ஜெயலலிதாவின் அறிக்கைக்கு விரிவாக பதில் எழுதி, ஏடுகளுக்கெல்லாம் அனுப்பச் செய்தேன்.
இதற்கிடையே Nerve Conduction Study and Electro Myography என்று சொல்லப்படும் ஒரு சோதனை - நரம்பின் செயல் திறனைக் கண்டறிவதற்கான சோதனை செய்யப்பட வேண்டுமென்று டெல்லி மருத்துவர் அரவிந்த் ஜெய்ஸ்வால் கூறிய அறிவுரைப்படி, நரம்பியல் நிபுணர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் இன்று அதனை மேற்கொண்டார். இந்தச் சோதனை நடைபெறவே இரண்டு மணி நேரத்திற்கு மேலானது.
இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை சார்பில் தென் சென்னை தி.மு.க. சார்பில் அன்றைய தினம் ஏற்பாடாகியிருந்த எழுச்சிப் பேரணி எவ்வாறு உள்ளது என்று தொலைபேசியிலே பேசி விவரம் கேட்டுச் சொன்னேன்.
தஞ்சை மாநகரத்தின் ஒவ்வொரு அங்குல எழிலுக்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்டு உழைத்த தஞ்சை சுல்தான் மறைந்து விட்டார் என்ற செய்தி வந்தது. மிகவும் வருந்தி நானே என் கைப்பட ஒரு இரங்கல் செய்தியினை எழுதிக் கொடுத்தேன்.
மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தம்பி டாக்டர் அன்புமணி ராமதாஸ் மருத்துவ மனைக்கு வந்து எனது உடல் நலம் விசாரித்தார்.
9-2-2009
மத்திய அமைச்சர் தம்பி டி.ஆர். பாலு இன்று காலையிலேயே என்னை மருத்துவமனையில் சந்தித்து டெல்லி அரசியல் நிலவரங்களை யெல்லாம் எடுத்துக் கூறி சில பிரச்சினைகள் பற்றி என் அறிவுரைகளைப் பெற்றுச் சென்றார்.
இதயத் துடிப்பு எவ்வாறு இருக்கிறது, அதுவும் தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு இதயத் துடிப்பு எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிவதற்காக - Holter E.C.G. என்று கூறப்படும் ஒரு இயந்திரத்தை என் உடலிலேயே பொருத்திவிட்டார்கள். அது மறுநாள் தான் என் உடம்பிலிருந்து அகற்றப்பட்டது. இதயத் துடிப்பு சீராக இருக்க வேண்டுமென்பதற்காக Tablet Betaloc மாத்திரை தரப்பட்டது.
நிதித் துறை செயலாளரையும், மற்றும் அந்தத் துறையின் அதிகாரிகளையும் மருத்துவ மனைக்கு அழைத்து நிதி நிலை அறிக்கை தயாரிப்பது குறித்து தனி அறையில் அன்று காலை முழுவதும் விவாதித்தேன். காலை 10.45 மணிக்கு தொடங்கிய அந்தக் கூட்டம், நண்பகலைத் தாண்டியும் நீண்டதால், டாக்டர்கள் வந்து பரிசோதனைகளைச் செய்யவும் மாத்திரைகள் சாப்பிடவும் நேரமாகி விட்டது என்பதை நினைவூட்டினர்.
இந்து நாளிதழின் செய்தியாளர் ராதா கிருஷ்ணன் காலையிலேயே மருத்துவ மனையிலே தங்கி என்னுடைய செயல்பாடுகளைப் பற்றி கவனித்து வருவதாகவும், என்னை ஐந்து நிமிடங்கள் சந்திக்க விரும்புவதாகவும் இந்து நாளிதழின் முன்னாள் செய்தியாளரும், என் மகளுமான கனிமொழி பரிந்துரைத்ததன் பேரில் வரச் சொன்னேன். ஐந்து நிமிடங்கள் என்று கூறி வந்தவர் ஐம்பது நிமிடங்களுக்கு மேல் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். மருத்துவ மனையிலே இருக்கும்போதே இவ்வளவு பணிகளை மேற்கொள்ள வேண்டுமா என்று இந்து ராதாகிருஷ்ணன் உரிமையோடு கேட்டார். செய்யத்தானே வேண்டுமென்று கூறினேன். மக்கள் எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை நம்பிக் கொடுத்திருக்கும்போது, படுக்கையிலே இருப்பதாலேயே நான் மக்களுக்காகப் பணியாற்றுவதை நிறுத்த முடியுமா என்று கூறினேன்.
என்னுடைய அறுவை சிகிச்சை பற்றி அவர் மிகுந்த கவலையோடு விசாரித்த போது, நீங்கள் எல்லாம் இருக்கீங்களே, அப்புறம் என்ன என்றபோது கண் கலங்கி விடைபெற்றார்.
அரசு செயலாளர்களுடன் நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் மாலையிலும் தொடர்ந்தது. என் கையெழுத்திற்காக காத்திருந்த முக்கிய கோப்புகளை மட்டும் மருத்துவ மனைக்கே வரவழைத்து கையெழுத்திட்டேன்.
10-2-2009
மிகப் பெரிய அறுவை சிகிச்சையை நாளையதினம் செய்து கொள்ளப் போகிறோம் என்ற நினைவுடன் காலை ஏடுகளை வரவழைத்தேன். ஏடுகளைப் படித்தவுடன் அறுவை சிகிச்சை மறந்து விட்டது. அந்த அளவிற்கு அன்றைய தினம் என் மீது தாக்குதல். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக நானும், பேராசிரியரும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளையே ஒரு காலத்திலே ராஜினாமா செய்தோம் என்று எழுதியதைப் பற்றிக் குறிப்பிட்டு, ஒரு கட்சியின் தலைவர் “அவ்வாறு பதவிவிலகியதால் என்ன பயன் ஏற்பட்டு விட்டது, ஓட்டு மொத்தமாக ஆட்சியை விட்டே விலகினால்தான் பயன் ஏற்படும்” என்று என்மீது மிகுந்த அக்கறையோடு வழக்கம்போல அறிக்கை விட்டிருந்தார்.
அதே தலைவர், தி.மு.கழகம் எதிர்க்கட்சியாக இருந்த போது தான் இலங்கைத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தியதே தவிர, ஆளுங் கட்சியாக இருந்த போது எதையும் செய்யவில்லை என்றும் எழுதியிருந்தார். ஆளுங்கட்சியாக இருந்த போது எவ்வெப்போது என்னென்ன போராட்டங்களை தி.மு. கழகம் செய்தது என்பது பற்றி விவரமான பட்டியலை எழுதினேன். அதற்கு “மறுப்பும் - விளக்கமும்” என்று தலைப்பிட்டுவிட்டு, அதன் கீழே “பின்வரும் மறுப்பும் விளக்கமும் மருத்துவமனையிலிருந்து எழுதப்பட்டது, பிழையிருப்பின் மன்னித்தருள்க!” என்று குறிப்பும் எழுதியதான் ஏடுகளுக்கே அனுப்பச் செய்தேன்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வழி காட்டும் தலைவருமான திருமதி சோனியா காந்தி அவர்கள் 10ஆம் தேதி மாலையில் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்ததோடு, அடுத்த நாள் நடைபெறவுள்ள அறுவை சிகிச்சை பற்றி யெல்லாம் விவரமாகப் பேசினார். அறுவை சிகிச்சை முடிந்து நலம் பெற்று விரைவில் பணிக்குத் திரும்ப வேண்டுமென்று வாழ்த்தினார்.
Echo-Cardiogram எடுக்க வேண்டுமென்று டாக்டர் தனிகாசலம் அறிவுறுத்தியதின் பேரில், என் அறையிலேயே அதை எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இதன் முடிவுகளைக் கணக்கிலே கொண்டும், 2007ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட 64 slice C.T. Angio gram முடிவுகளைக் கணக்கிலே கொண்டும், Holter E.C.G. முடிவுகளைக் கணக்கிலே கொண்டும் டாக்டர் தனிகாசலம் 11ஆம் தேதியன்று அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும், ஆனால் என்னுடைய வயதை உத்தேசித்துப் பார்க்கும் போது அது மிகவும் அபாயகரமானது (High Risk) என்றும் தெரிவித்தார்.
மாலையில் மயக்க மருந்து நிபுணர், டாக்டர் மகேஷ் வகாமுடி தலைமையில் மயக்கம் கொடுப்பதற்காக மட்டுமே நியமிக்கப்பட்டிருந்த மருத்துவ குழுவினர் என்னைப் பரிசோதனை செய்தனர். கிருமி தொற்று வராமல் இருப்பதற்காக அன்று மாலையிலிருந்தே நரம்பு மூலம் செலுத்தப்படும் ஊசி மருந்து ஆரம்பிக்கப்பட்டது. மறுநாள் அறுவை சிகிச்சை என்பதால் பார்வையாளர்கள் அனைவரையும் தவிர்க்க வேண்டுமென்று கூறியதோடு - என்னுடைய அறை, மற்றும் பக்கத்து அறைகள் எல்லாம் கூட கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டது. தவிர்க்க முடியாத பார்வையாளர்களும், வீட்டாரும், மருத்துவர்களும் கூட முகமூடி அணிந்த பிறகே என் அருகே வர அனுமதிக்கப்பட்டனர்.
சிறுநீரகத் துறை நிபுணர் டாக்டர் சவுந்தரராசன் வந்து தனது சோதனையை நடத்திவிட்டு எந்த அளவிற்கு நான் நீர் அருந்த வேண்டும் என்றெல்லாம் அறிவுரைகள் வழங்கினார். மருத்துவக் குழுவினர் 14 பேரும் என்னுடைய குடும்பத்தாரை அழைத்து, அறுவை சிகிச்சை பற்றியும், அதன் பின் விளைவுகள் பற்றியும் விவரமாக எடுத்துக் கூறி, அறுவை சிகிச்சைக்கான ஒப்புதலையும் கையெழுத்தையும் குடும்ப மருத்துவர் டாக்டர் கோபால் அவர்கள் மூலம் முறைப்படி பெற்றார்கள்.
“Ailing but active ‘Kalaignar’ turns Hospital into Chief Minister’s Office” என்ற தலைப்பில் “தி டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேடு 10ஆம் தேதி பின்வருமாறு எழுதியிருந்தது.
“ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஏழாவது மாடியில், வெள்ளைக் கோட்டுகளுக்கு
(மருத்துவர்களுக்கு) மத்தியில் முதல்வர் கலைஞர் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுக்குள் - உள்ளே செல்வதும், வெளியே வருவதுமாக மூத்த அரசு அதிகாரிகள் கோப்புகளை கையில் தாங்கியவாறு - திட்டங்களை முதல்வருடன் விவாதித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுவிதிக்கப்பட்டுள்ள அந்த இடம், தற்போது தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் அலுவலகம் போல் காட்சி அளிக்கிறது.
நிதித் துறையைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி, “இங்கு நாங்கள் விவாதம் நடத்துகிறோம். நிதி நிலை அறிக்கை மீது கலந்துரையாடி பல முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்றார். மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது, “முதலமைச்சருடன் முக்கியமான சந்திப்புகளுக்காக அமைச்சர்களும், தி.மு.க. முன்னணி உறுப்பினர்களும், அதிகாரிகளும் இங்கு வருகிறார்கள். அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், திரைப்பட பிரமுகர்கள், கட்சியின் தொண்டர்கள் என்று பார்வையாளர்களின் பட்டியல் மிக நீளமானது. முதலமைச்சர் யாரையும் சந்திக்காதபோது செய்தித்தாள்களை ஒரு வரிவிடாமல் படிக்கிறார். அல்லது கட்சியின் நாளேடான முரசொலிக்காக எழுதுகிறார். மொத்தத்தில் அவர் எங்களது மிகவும் செல்லத் துடிப்பான நோயாளிகளில் ஒருவர்” என்றார். தான் சுகவீனமாக உள்ளதால் எந்தக் கோப்பும் காத்திருக்கக் கூடாது என்று அதிகாரிகளிடம் அவர் கூறியிருக்கிறார்.”
என்று எழுதியிருந்தது.
விபந்தால் எனக்கு அறுவை சிகிச்சை என்பதால் - மதுரையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த நிலையிலும் என் மகன் அழகிரி சென்னை வந்து மருத்துவமனையிலேயே தங்கினார். மேலும் என் மகன் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் எல்லாம் அங்கேயே தங்கிவிட்டனர்.
இந்த நாட்குறிப்பை தொடர்ந்து நாளையும் எழுதுகிறேன்.
அன்புள்ள, மு.க. 12-3-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 121–130. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.