அடக்கம்

முரசொலி · தொகுதி 42 · கடிதம் 3384

முரசொலி கடிதங்கள் · 3384

நலிவும் நானும் - நாட்குறிப்பு (6)

நாள் 15.3.2009சுமார் 9 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3384. நலிவும் நானும் - நாட்குறிப்பு (6)

(ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் அறுவை சிகிச்சை, அதைத் தொடர்ந்து தொடர் சிகிச்சைகள் இவற்றினூடே பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்கிறேன், இந்த தொடர் கட்டுரை மூலம்)

★★

உடன்பிறப்பே,

21-2-2009

சட்டமன்றப் பேரவை விதி 110இன் கீழ் சட்ட அமைச்சர் துரைமுருகன் அறிக்கை படித்த பிறகு, அதன் மீது விவாதம் நடத்த வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் எல்லாம் கூச்சல் எழுப்பி, அதன் காரணமாக அவையிலிருந்து வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து 21ஆம் தேதி காலையில் எழுந்ததும் உடன்பிறப்பு மடல் எழுத உட்கார்ந்தேன். அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 2002ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எல்லாம் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுத்திருந்த நிலையில், அதனை ஏற்காமல் அரசின் சார்பில் 110வது விதியின் கீழ் அறிக்கை மட்டுமே படிக்கப்பட்டது என்பதையும், அதன் மீது கேள்வி கேட்கவோ, பேசிடவோ யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பதையும் உதாரணத்தோடு எடுத்து அந்தக் கடிதத்தில் எழுதினேன்.

விளக்கத்தை எழுதி விட்டு, அதே கடிதத்தில் எப்படியோ நடந்தது நடந்துவிட்டது, இனியாவது அவை அமைதியாக, முறையாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். நீதிமன்றச் சம்பவங்கள் பற்றி அந்த மடலில் எழுதும்போது, சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. முறைப்படி விசாரணை நடைபெறும். தவறு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இதிலே வழக்கறிஞர்களா, காவல் துறையினரா என்ற வேறுபாடு கருதாமல் இருவரும் நம்மவர்கள் என்ற எண்ணத்தோடு செயல்படுவோம். ஒருவர் காக்கி உடையிலும், ஒருவர் கறுப்பு உடையிலும் இருந்தாலும் இருவரும் நம்முடையவர்களே! என்றும் எழுதியிருந்தேன்.

இன்று மாலையில் இளைஞர் அணி சார்பில் இலங்கைத் தமிழர்களுக்காக நடத்தப்பட்ட “இளைஞர் சங்கிலி”யில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டதாக தொலைபேசியில் செய்திகள் வந்து கொண்டே இருந்தன. இளைஞர் அணியில் பங்குபெற வந்த 154 வது வட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பகுதிக் கழகப் பிரதிநிதி, சிவப்பிரகாசம் என்பவர் தீக்குளித்து விட்டதாகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் தகவல் வந்ததைத் தொடர்ந்து அவர் உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடும்படி ஸ்டாலினிடம் கூறினேன். ஆனால் எவ்வளவோ முயற்சித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

கழகத்தின் சார்பில் அவரது குடும்பத்தாருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கக் கூறி, அதனை பொதுச் செயலாளர் பேராசிரியர், பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, அமைப்புச் செயலாளர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், பெ.வீ. கல்யாணசுந்தரம், தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் கொண்டு சென்று நேரில் அளித்தனர்.

மத்திய உள்துறை அமைச்சர், நண்பர் ப.சிதம்பரம் அவர்கள் கேட்டுக் கொண்டபடி, மாலையில் மருத்துவமனையில் இருந்தவாறே சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவிலே தொலை ஒளிபரப்பு (வீடியோ கான்பரன்ஸ்) மூலமாக கலந்து கொண்டேன். அந்த விழாவில் சென்னையில் என்னுடன் தம்பி துரைமுருகனும், சிவகங்கையில் நடைபெறும் விழாவில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், தமிழக அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோரும் மற்றும் சுதர்சன நாச்சியப்பன், எம்.பி., ராமசாமி, எம்.எல்.ஏ., சுந்தரம் எம்.எல்.ஏ., ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த விழா முடிந்ததும், பொதுப்பணித் துறை அமைச்சர் தம்பி துரைமுருகன் கேட்டுக் கொண்டவாறு, தொலை ஒளிபரப்பு முறை மூலமாகவே - தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டத் தொடக்க விழாவிலே கலந்து கொண்டேன். நெல்லையில் நடைபெற்ற விழாவில் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன், அமைச்சர்கள் டி.பி.எம். மைதீன்கான், பி. கீதாஜீவன், ராதிகா செல்வி, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அப்பாவு, வேல்துரை, வசந்தகுமார், ராணி வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்று இரவு டெல்லி டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வால் சென்னை வந்து மருத்துவ மனையில் என்னைப் பரிசோதித்தார். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் கூறினார். மேலும் நான்கு வார காலம் ஓய்வு தேவை என்றும், படிப்படியாக உட்கார்ந்து, நின்று, நடக்கலாம் என்றும் அறிவித்தார்.

22-2-2009

இன்றைய தினம் காலை ஏடுகளில் மத்திய வெளி உறவுத் துறை அமைச்சர், பிரணாப் முகர்ஜி அவர்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பேசிய பேட்டி ஒன்று வெளி வந்திருந்தது. அந்தப் பேட்டியில் “விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. இது கவலை அளிக்கும் விஷயமாகும். விடுதலைப் புலிகளின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாகத்தான் தீர்வு காண வேண்டும். ராணுவ நடவடிக்கையால் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது.

இலங்கைப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றே வழியாகும். இரு தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டும். முதலில், பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஏற்ற சுமூகமான அமைதிச் சூழல் அங்கே உருவாக்கப்பட வேண்டும். அப்படியொரு சூழல் உருவாகாத வரை எதிர் காலத்தில் தாக்குதல், பதில் தாக்குதல் என்ற நிலை அங்கு தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்த மட்டில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானது. போர்முனைப் பகுதியில் சிக்கியுள்ள தமிழ் மக்களின் நிலை குறித்து நாங்கள் மிகவும் கவலை கொண்டிருக்கிறோம். அவர்கள் தொல்லைப்படுகிறார்கள். அவர்களது இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இலங்கையில் சிறுபான்மையாக உள்ள தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இலங்கை அரசிடம் இந்தியா கேட்டுக் கொண்டிருக்கிறது. மறைந்த பிரதமர் ராஜீவ் காந்திக்கும் மறைந்த இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுக்கும் இடையே 1987-ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தம் அமல்படுத்தப்பட வேண்டும். அந்த ஒப்பந்தத்தின்படி அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். மாகாண கவுன்சிலுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு சட்ட ரீதியிலான உரிமைகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கையின் பிராந்திய ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் பாதகம் இல்லாத வகையில் அந்த நாட்டின் அரசியல் அமைப்பிற்கு உட்பட்டு இவை நிறைவேற்றப்பட வேண்டும். அதிகாரப் பகிர்வின் மூலம்தான் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று இந்தியா கருதுகிறது. பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டால்தான் இலங்கையில் இயல்பு நிலை திரும்பும்” என்று கூறியிருந்தார்.

இலங்கைத் தமிழர்களுக்காக மத்திய அமைச்சர் கூறிய வாசகங்கள் மகிழ்ச்சியை அளித்தபோதிலும், போரினால் தற்காலிகமாக இடம் பெயர்ந்துள்ள 36 ஆயிரம் பேரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உடல் நலம் குன்றியுள்ளனர் என்றும், பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் சிக்கித் தவிக்கிறார்கள் என்றும் தொடர்ந்து செய்தி வந்ததையொட்டி, 22ஆம் தேதியன்றே பிரதமருக்கும், சோனியா காந்தி அம்மையாருக்கும் விவரமாக ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசு மருத்துவக் குழுவையும் மருந்துகளையும் அனுப்புவதற்கு தயாராக இருக்கிறது என்றும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிட மருந்து மற்றும் மருத்துவக் குழுக்களை உடனடியாக அனுப்ப விரைந்த நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.

வழக்கறிஞர்கள், காவல் துறையினர் பிரச்சினை இன்னும் தீரவில்லை என்றும், வழக்கறிஞர்கள் பணிக்குத் திரும்ப மறுக்கிறார்கள் என்றும் செய்தி வந்தது. அவர்களுக்கிடையே ஆன மோதுதல் தீர்ந்து விடக் கூடாது என்பதில் சிலர் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டார்கள். வழக்கறிஞர்கள்பால் அவர்களுக்கு

உண்மையில் அக்கறை உண்டோ, இல்லையோ இந்த அரசுக்குக் கெட்ட பெயர் வர வேண்டுமென்ற அக்கறையோடு அவர்கள்தான் வழக்கறிஞர்களின் தீவிர ஆதரவாளர்கள் என்பதைப் போலச் சொல்லிக் கொண்டு காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு, காவல் துறையினருக்காக இந்த அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்றெல்லாம் அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கொண்டிருந்தனர்.

எனவே உண்மை நிலவரங்களை விவரங்களாக ஒரு நீண்ட அறிக்கை விடுத்தேன். அதன் முடிவில் இரு தரப்பினரும் ஒன்றுபடுகிறோம் என்று இணக்கம் தெரிவிக்கின்ற வரையில் - மருத்துவ மனையிலே இருக்கிற நான் உண்ணா நோன்பு இருப்பதாக முடிவு செய்திருக்கிறேன் என்று அறிவித்தேன்.

இந்த அறிக்கை வெளிவிட்டதுதான் தாமதம், இரு தரப்பினரும் ஒன்றுபட்டார்களோ இல்லையோ, தோழமைக் கட்சிகளின் தலைவர்களும், நமக்கு வேண்டியவர்களும் மருத்துவமனையில் இந்த நிலையிலே இருக்கும்போது எப்படி உண்ணாவிரதம் இருக்கலாம் என்று கடுமையாகக் கோபித்துக் கொண்டார்கள். அரசியல் ரீதியாக ஒத்த கருத்து இல்லாத பெரியவர் ராம கோபாலன் அவர்கள் கூட மருத்துவமனைக்கே வந்திருந்து நீண்ட நேரம் காத்திருந்து என்னிடம் உண்ணாவிரதம் கூடவே கூடாது என்றார்.

மருத்துவர்கள் குழுவினர் அனைவரும் இன்று என்னைச் சோதித்தனர். ஊசி மருந்துகளை குறைத்துக் கொண்டு அதற்குப் பதிலாக மாத்திரைகள் வழங்கப்பட்டன. மருத்துவமனையில் சேர்ந்தது முதல் 100 ஊசிகள் போட்டு என் உடலில் “சதம்” அடித்து விட்டனர் மருத்துவர்கள் என்றால் மிகையாகாது.

அன்று பிற்பகலில், மருத்துவமனையிலிருந்த வாறே, தொலை ஒளிபரப்பு மூலமாக பி.எஸ்.என்.எல்., 3 ஜி மூன்றாம் தலைமுறைக்கான தொலைபேசி சேவையைத் தொடங்கி வைத்தேன். அதற்கான முதல் தொலைபேசி அழைப்பினை நிகழ்ச்சி நடைபெற்ற சென்னை அண்ணா சாலை தொலைபேசி நிலையத்தில் மத்திய அமைச்சர் ராஜா இருந்தவாறு பெற்றுக் கொண்டார்.

23-2-2009

இன்று காலை முதல் ஏராளமான தொலைபேசிகள். உண்ணாவிரதம் பற்றி பல கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கெல்லாம்

பதில் அளிக்கும் வகையில் முரசொலிக்கு “உடன்பிறப்பு” மடல் எழுதினேன். இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு இரண்டு ஆஸ்கா விருதுகள் கிடைத்த செய்தியினை தொலைக்காட்சியில் அறிந்து உடனடியாக வாழ்த்துச் செய்தி கிடைத்து, அவர் இருக்குமிடத்திற்கே அனுப்பி வைக்கச் செய்தேன்.

முதுகில் உள்ள அறுவை சிகிச்சை புண் மீண்டும் பரிசோதிக்கப்பட்டது. ஐந்தில் மூன்று தையல்களை டாக்டர் மார்த்தாண்டம் இன்று பிரித்தார்.

24-2-2009

இன்று காலையில் மருத்துவமனைக்கு கவிப்பேரரசு தம்பி வைரமுத்து வந்தார். ஆஸ்கா விருதுக்காக அனைவரையும் முந்திக் கொண்டு ரகுமானுக்கு வாழ்த்து அனுப்பியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார். “சூரியனுக்கு சுகமில்லை” என்ற தலைப்பில் அவர் எழுதி வந்த கவிதையை அவரே எனக்குப் படித்துக் காட்டினார். அருமையான கவிதை. அதைப் படித்தவுடன் அவருக்கு நான் ஒரு அன்பு முத்தம் கொடுத்தேன்; அவர் கையில்தான்! ரகுமானுக்குக் கிடைத்த ஆஸ்கரை விட உயர்ந்த விருது எனக்குக் கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சி பெருகிடக் கூறிக் கொண்டே திரும்பினார்.

உண்ணா விரதம் இருப்பதற்கான முயற்சியில் நான் தீவிரமாக ஈடுபட்டு வருவதை அறிந்த மருத்துவக் குழுவினர் என்னிடம் வந்து சமாதானமாகப் பேசத் தொடங்கி, நான் கோபமாக மறுத்ததைக் கேட்டுக் கொண்டு போனதோடு, அவர்கள் எல்லாம் இணைந்து நான் உண்ணாவிரதம் இருந்தால், அது செய்து கொண்ட அறுவை சிகிச்சையிலிருந்து தேறி வருகின்ற நிலையின் பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்றும், உடல் நலம் முழுவதுமாக தேறிய பிறகு உண்ணாவிரதம் பற்றி முடிவு செய்வதுதான் உசிதமாக இருக்குமென்றும் அறிக்கை ஒன்றை ஏடுகளில் கொடுத்து விட்டனர்.

அன்று இரத்த அளவும், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்திறனை கண்டறிவதற்கான இரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்தும் சரியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

25-2-2009

அறுவை சிகிச்சை முடிந்து 14வது நாள். டெல்லி டாக்டர் ஜெய்ஸ்வால் அன்று என்னை மீண்டும் சந்தித்தார். பிரிக்கப்படாமல் இருந்த இரண்டு தையல்களும் இன்று பிரிக்கப்பட்டன. அறுவை சிகிச்சை புண் நன்றாக ஆறி உள்ளதாகத் தெரிவித்தார்கள். என்னை படுக்கையில் இருந்து எழுந்து நிற்க வைத்தார்கள். இருக்கையிலே அமரவும் வைத்தார்கள். மருத்துவர்கள் அன்று விடுத்த அறிக்கையில் நான் மேலும் நான்கு வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என்றும், மார்ச் 1-ந் தேதியன்று இல்லம் திரும்பலாம் என்றும் அறிக்கை விடுத்தார்கள்.

வேளாண்மைத் துறை அமைச்சர் தம்பி வீரபாண்டி ஆறுமுகம் - நான் எனது உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தால், அவர் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று ஏடுகளிலேயே அறிக்கை வெளியிட்டு விட்டார்.

தமிழர் தலைவர், இளவல் வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கையில் என்னுடைய உண்ணா நோன்பு மிகுந்த மனவேதனை அளிக்கிறது என்றும், வழக்கறிஞர்களும், காவல் துறையினரும் நல்ல தீர்வுக்கு ஒத்துழைத்து மனித நேயக் கடமையாற்றிட முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதோடு, மருத்துவமனைக்கே வந்து எனக்கு வேண்டுகோளும் விடுத்தார்.

காயமடைந்த வழக்கறிஞர்கள் மற்றும் காவல் துறையினருக்கு இடைக்கால உடனடி நிவாரணமாக தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று பேரவையில் அறிக்கை கொடுக்கச் செய்தேன். வழக்கறிஞர்களின் முக்கிய கோரிக்கையான - குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் மத்திய அரசு செய்துள்ள திருத்தத்தை தமிழக அரசு ஏற்காது என்றும், அதுபற்றி மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் என்று பேரவையில் அறிவிக்கக் கூறினேன். விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் மருத்துவமனையிலே என்னைச் சந்தித்து உடல் நலம் கேட்டதோடு, கடலூரைச் சேர்ந்த அவர்களுடைய கட்சிக்காரர் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்து விட்டார் என்றும், அவரது குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். அந்தத் தொகுதியின் கழகச் சட்டமன்ற உறுப்பினர் தம்பி அய்யப்பனும் அதற்காக கோரிக்கை மனு கொடுத்

திருந்ததை ஏற்று, கழகத்தின் சார்பில் ஐம்பதாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கிடக் கூறினேன்.

நிதி நிலை அறிக்கை மீதான பொது விவாதத்திற்கு இன்று பேராசிரியர் நீண்ட, விளக்கமான பதிலுரை அளித்தார். நகைச்சுவையும் - நாகரிகமும் கலந்த, நாட்டோர்க்குப் பயன்படும் நல்லதோர் பதிலாகும் அது!

26-2-2009

இன்றையதினம் சட்டப் பேரவைக்கு செல்ல வேண்டுமென்று பிடிவாதத்தோடு இருந்தேன். ஆனால் கண்டிப்பாக செல்லக் கூடாது என்று மருத்துவர்கள் தடுத்து விட்டார்கள். காரணம் அன்று சட்டமன்ற கூட்டத் தொடர் கடைசி நாள் என்பதால் அல்ல, நான் அன்று கடிதத்திலே “இன்று என் வாழ்விலோர் திருநாள்” என்று எழுதியிருந்ததைப் போல - அன்றையதினம் சட்டமன்றத்திலே அருந்ததியர் சமுதாய மக்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட நாள். அந்த மசோதாவை நானே முன்மொழிந்து நிறைவேற்றப்பட வேண்டுமென்று கருதித்தான் அன்று சட்டப் பேரவைக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தேன். மருத்துவர்கள் தடுத்து விட்ட காரணத்தால் - காலையிலே நானே எழுந்து - நான் அவையிலே இருந்தால் மசோதாவை முன்மொழிவதற்கு முன்பாகவே என்ன உரை ஆற்றுவேனோ அந்த உரையை என் கைப்பட எழுதினேன். அந்த உரையை பேரவைக்கு அனுப்பி தம்பி மு.க. ஸ்டாலினை விட்டு தீர்மானத்தை முன்மொழியும்படி கூறிவிட்டு, என்னுடைய உரையை அவையிலே படிக்கவும் கேட்டுக் கொண்டேன். அந்த என் உரை நகல்கள் எடுக்கப்பட்டு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கெல்லாம் வழங்கப்பட்டு, ஏடுகளுக்கும் தரப்பட்டது.

காலை ஏடுகளில் மத்திய அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டதாக செய்தி வந்திருந்தது. நிதித் துறை செயலாளருடன் தொடர்பு கொண்டு நம்முடைய மாநில அரசு அலுவலர்களின் நிலை என்ன என்று விசாரித்தேன். நம்முடைய அரசு அலுவலர்களுக்கும், அந்த அகவிலைப்படி உயர்வினை இரண்டு நாட்களில் அறிவிக்கலாம் என்று தொலைபேசியில் கூறினார். எதற்காக இரண்டு நாட்களுக்கு பிறகு அறிவிக்க வேண்டும், இன்றைக்கே அறிவித்தால் என்ன

என்று கேட்டேன். செய்யலாம் என்று உறுதி அளித்தார். உடனடியாக மருத்துவமனையில் இருந்தவாறே அறிவிக்கை தயார் செய்து ஏடுகளுக்கு அனுப்பினேன். அதன்படி மத்திய அரசு கொடுத்ததைப் போல அகவிலை உயர்வு மாநில அரசு அலுவலர்களுக்கும் முன் தேதியிட்டு வழங்கப்பட்டது. மறுநாளே அந்தச் செய்தியைப் பார்த்து விட்டு அரசின் பல்வேறு சங்கத்தினர் நன்றி அறிக்கைகளை ஏடுகளுக்கு கொடுத்ததோடு, ஒரு சிலர் மருத்துவ மனைக்கே வந்து நன்றி தெரிவித்தார்கள்.

புதிய பிரச்சினையாக வாயிலும், நாக்கிலும் சிறு சிறு புண்கள் ஏற்பட்டன. காது, மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர் இரவிக்குமாரும், வயிறு மற்றும் குடல் சார்ந்த மருத்துவ நிபுணர் டாக்டர் பழனிசாமி அவர்களும் என்னைப் பரிசோதித்து மேலும் சில பரிசோதனைகளை மேற்கொண்டு புதிய மருந்துகளை உட்கொள்ளச் செய்தனர்.

இன்றைய தினம் மாலையில் சக்கர நாற்காலியில் (இதனை கட்டிலாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம், சாய்வு நாற்காலியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்) அமர வைத்து தரைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். மருத்துவ மனைக்கு எதிரே உள்ள அழகான தோட்டத்தில் அரை மணி நேரத்திற்கு மேல் தங்கியிருந்து, மருத்துவர்களுடனும், அமைச்சர்களுடனும் தேநீர் அருந்தினேன்.

27-2-2009

வாயிலும், நாக்கிலும் உள்ள புண்ணின் காரணத்தினால் சரிவர உணவு அருந்த முடியவில்லை. எல்லாம் மருந்துகளின் வேகம்!

இன்று மாலையும் சக்கர நாற்காலியில் அமர்ந்து கீழ்த்தளத்திற்குச் சென்று தோட்டத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்தேன். என்னைப் பார்ப்பதற்காக வந்த முக்கியஸ்தர்களை அங்கிருந்தவாறே சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன்.

28-2-2009

ஒரு மாதத்திற்கு மேலான மருத்துவமனை வாசம் முடிந்து நாளை இல்லம் திரும்பலாம் என்று மருத்துவர்கள் கூறியிருந்ததால் இன்று மனம் மகிழ்ச்சியாக இருந்தது. ராமச்சந்திரா மருத்துவமனைக்கான இருதயப் பிரிவில், புதிதாக

அமைக்கப்பட்டுள்ள இதய மின் அலை பிரிவினை என் அறையில் இருந்தவாறே திறந்து வைக்க வேண்டும் என்றும் இதய சிகிச்சை நிபுணர், டாக்டர் தணிகாசலமும், உரிமையாளர் வெங்கடாசலமும் கேட்டுக் கொண்டதின் பேரில் அறையில் இருந்தவாறே அன்று மாலையில் அதனைத் திறந்து வைத்தேன்.

அதைத் தொடர்ந்து மறுநாள் மார்ச் 1 அன்று வீடு திரும்புவதையொட்டி மருத்துவமனை டாக்டர்கள், துணை மருத்துவர்கள், சிப்பந்திகள் அனைவரிடமும் அன்பினைப் பரிமாறிக் கொண்டு, பிரியா விடைபெற்ற நிகழ்ச்சி - அது மருத்துவமனையல்ல, நம் சொந்த இல்லம் என்பதையே என் மனத்தில் பதியச் செய்வதாக இருந்தது.

மறுநாள் 1ஆம் தேதி இல்லம் திரும்புகின்ற வழியில், கழகத்தின் பொருளாளரும், இளைஞர் அணிச் செயலாளருமான தம்பி ஸ்டாலின் பெரு முயற்சியெடுத்து கட்டியிருந்த “அன்பகம்” கட்டிடத்தை நான் திறந்து வைத்து விட்டுச் செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க அதற்கும் ஒத்துக் கொண்டேன்.

1-3-2009

அன்று காலையில் விரைவில் எழுந்து விட்டேன். 33 நாட்களுக்குப் பின் இல்லம் திரும்புகிறோம் என்ற நினைவு. அன்று இல்லம் திரும்புகின்ற செய்தி அறிந்து வழியெங்கும் வரவேற்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், வேனில் இருந்தவாறே அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்டச் செயலாளர்கள் கூறினர். அந்த வரவேற்புக் கூட்டம் ராமச்சந்திரா மருத்துவ மனை வரையிலும் சேர்ந்துவிட்டது.

அமைச்சர்களும், கழக முன்னணியினரும் என்னை வரவேற்று அழைத்துச் செல்ல மருத்துவ மனைக்கே வந்து விட்டனர். இல்லம் திரும்பும் வழியில் புதுப்பிக்கப்பட்ட “அன்பகம்” கட்டிடத்தை வேனில் இருந்தவாறே திறந்து வைத்தேன்.

இல்லத்தின் வாயிலில் என் அக்காள் மற்றொரு சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு என்னை வரவேற்க காத்திருந்தார். இன்று என்னைப் பெற்ற தாயும், தந்தையும் இல்லை. என் பெரிய அக்கா பெரிய நாயகமும் இல்லை. என் முகம் பிள்ளையைப் போல நானே வளர்த்த என் கண்மணி முரசொலி மாறன் இல்லை. மிச்சம்

இருப்பது என் சின்னக்கா ஒருவர்தான். குழந்தை பருவத்தில் என்னைத் தூக்கி, தூக்கி அவருடைய இடுப்பே வளைந்து விட்டது என்று ஊரார் அப்போதே பேசுவார்கள். அந்த என் சின்னக்கா, வாயில் எனக்காக காத்திருந்ததைக் கண்டதும் நாங்கள் இருவரும் பேச முடியாமல் உருகி விட்டோம்.

இல்லம் திரும்பி பத்து நாட்கள் ஓய்வுக்குப் பிறகு - 13.3.2009 அன்று தலைமைச் செயலகத்திற்கும் சென்றேன். செய்தியாளர்கள் குழுமியிருந்தனர். 2006ஆம் ஆண்டு மே திங்களில் நான் ஐந்தாவது முறையாக முதலமைச்சராக வந்து அமர்ந்து கையெழுத்திட்டதும் 13ஆம் தேதிதான். இன்றும் 13ஆம் தேதிதான் என்று கூறிவிட்டு உலமாக்கள் வாரியத்திற்கான கோப்பிலே கையெழுத்திட்டேன். செய்தியாளர்களைச் சந்தித்தேன், அதிகாரிகளுடன் பிரச்சினைகளை விவாதித்தேன். காங்கிரஸ் சார்பில் என்னை வாழ்த்த வந்த சுதர்சனம் அவர்களையும், பீட்டர் அல்போன்ஸ் அவர்களையும் சந்தித்தேன். தொடர்ந்து உழைக்கத் தயாராகி விட்டது “மறுபிறவி” எடுத்ததாகக் கூறப்பட்ட இந்த இயந்திரம்.

(முற்றும்)

அன்புள்ள, மு.க. 15-3-2009

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 150–160. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 42-இல் மேலும் கடிதங்கள்