முரசொலி கடிதங்கள் · 3387
அடடா, அவர்தானா இவர்?
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3387. அடடா, அவர்தானா இவர்?
உடன்பிறப்பே,
“பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே” என்று ஒரு பாடல் வரி உண்டு. அதற்கு இன்று ஒட்டுமொத்தச் சான்றாக தமிழகத்திலே விளங்கி வருபவர் ஜெயலலிதாதான். அறிக்கைகள் என்ற பெயரால் தன்னால் முடிந்த அளவிற்கு மக்கள் நம்புகிறார்களோ, இல்லையோ - எதையாவது எழுதி மக்களை நம்ப வைக்கும் முயற்சியில் அன்றாடம் முயன்று வருகிறார்.
22-3-2009 தேதியிட்ட அறிக்கையில் ஜெயா “கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் கை கட்டி, வாய்ப் பொத்திக் கொண்டிருந்தவர் தான் தற்போது தமிழகத்தில் முதலமைச்சராக இருக்கிறார்” என்ற பச்சைப் பொய்யைச் சொல்லியிருக்கிறார். கச்சத் தீவை இந்தியா தாரை வார்த்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் நான் இருந்ததாகச் சொல்கிறாரே, நான் தெரிவித்த எதிர்ப்பை ஆதார பூர்வமாக எடுத்துச் சொன்னால் - எழுதியது தவறு என்று மன்னிப்பு கேட்க ஜெயலலிதா தயாராக இருக்கிறாரா?
15-8-1991 அன்று ஜெயலலிதா முதலமைச்சராக இருந்து கோட்டையிலே சுதந்திர தின விழாவினைக் கொண்டாடிய போது ஆற்றிய உரைக்கு அனைத்து ஏடுகளும் கொடுத்த தலைப்பே, “கச்சத் தீவை மீட்க ஜெயலலிதா சபதம்” என்பது தான். “கச்சத் தீவை திரும்பப் பெற மத்திய அரசுடன் வாதாடவும், தேவை ஏற்பட்டால் போராடவும் இந்த அரசு தயாராக உள்ளது. இது எங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட ஒரு வாக்குறுதியாகும். இந்த மண்ணின் ஒரு பகுதியை திரும்ப மீட்கும் சூளுரையாக இதனைத் தெரிவிக்க விரும்புகிறேன்” என்று 91ஆம் ஆண்டு முழங்கிய ஜெயலலிதா 1991 முதல் 1996 வரையிலும் - பிறகு 2001 முதல் 2006ஆம் ஆண்டு வரையிலும் பத்தாண்டு காலம்
முதலமைச்சராக இருந்த போது கச்சத் தீவை ஏன் மீட்கவில்லை. 91ஆம் ஆண்டு அவர் செய்த சபதம் என்னவாயிற்று? அதற்காக அவர் மத்திய அரசை எதிர்த்து நடத்திய போராட்டங்கள் என்ன? அவ்வப்போது மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதைத் தவிர வேறு என்ன கிழித்தார்? “கச்சத் தீவு” என்றால் கச்சேரிக்கு எடுத்துச் செல்லும் வீணை என்று நினைத்துக் கொண்டு; அதை “மீட்டுவேன்” என்று சபதம் செய்திருப்பார். பாவம்; அவர் கோட்டை கொத்தளத்தில் சபதம் செய்து ஆட்சியிலே இருந்த போது எதை மீட்டுக் கொண்டிருந்தார்? ஆனால் இன்று எழுதியுள்ள அறிக்கையிலே தனது ஆட்சிக் காலத்தில் கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன் என்று பொய்யாகத் தெரிவித்துள்ளார். தற்போது இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக கழகம் ஏன் ஆட்சிப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்யக் கூடாது என்று வக்கணையாக அறிக்கை விடும் ஜெயலலிதா அப்போது பத்தாண்டு காலம் ஆட்சியிலே இருந்த போது - கச்சத் தீவு மீட்கும் பிரச்சினையிலே தனது சபதத்தை நிறைவேற்ற அ.தி.மு.க. ஆட்சி ராஜினாமா செய்யும் என்று அறிவித்தது உண்டா? ராஜினாமா செய்ததுதான் உண்டா? விடுதலை நாள் விழாவிலே கோட்டை கொத்தளத்தில் இருந்து கொண்டு வாய்ச் சவடாலாக முழங்கி விட்டு - அந்தப் பேச்சு ஏடுகளில் எல்லாம் கொட்டை எழுத்துக்களில் வெளி வந்ததே தவிர - வேறு என்ன செய்தார்? இரண்டு மூன்று கடிதங்களை மத்திய அரசுக்கு எழுதிவிட்டு, ஒரு முறை பிரதமரிடம் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்ததோடு சரி. ஆனால் நான் ஏதோ ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் கை கட்டி, வாய்ப் பொத்திக் கொண்டிருந்ததாக அறிக்கையிலே வாய் நீளம் காட்டியிருக்கிறார்.
மத்திய அரசால் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்ட போது தி.மு.க. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது உண்மையா?
1974ஆம் ஆண்டிலேயே ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று தமிழகச் சட்டமன்றத்தில் “கச்சத் தீவு” பற்றி நான் முன் மொழிந்த தீர்மானம் இதோ:
“இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத் தீவுப் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு
பற்றி, இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு - மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து கச்சத் தீவின்மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.”
எனவே தி.மு.க. அப்போது வாயைப் பொத்திக் கொண்டு சும்மா இருக்கவில்லை. மேலும் அந்தத் தீர்மானத்தில் நான் பேசும்போது,
“கச்சத் தீவு இலங்கைக்கு அளிக்கப்படக் கூடாது, தமிழ் மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்பதைப் பற்றி பல நேரங்களில் மத்திய பேரரசுக்கு தமிழக அரசு எடுத்துச் சொல்லி இருக்கிறது. நடைபெற்ற ஒவ்வொரு பேச்சு வார்த்தையிலும் இந்தியா கச்சத் தீவை விட்டுத் தருவது கூடாது என்ற கருத்து தமிழக தி.மு.க. அரசின் சார்பாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது” ............
“கச்சத் தீவு பிரச்சினையை முடிந்து விட்ட பிரச்சினையாகக் கருதாமல் ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்கின்ற முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்வதில் தமிழ் நாட்டு மக்கள் யாருக்கும் அல்லது அந்த மக்களுக்குப் பிரதிநிதிகளாக இருக்கின்ற எந்தக் கட்சிகளுக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதற்கு எந்தவகையான நியாயமும் இல்லை என்பதை நான் கூற விரும்புகிறேன்.
தமிழக அரசு இது போன்ற பெரிய பிரச்சினைகளில் மத்திய அரசு தன்னுடைய ஒப்புதலைக் கேட்கவில்லை; ஆக்க பூர்வமான முறையில் பிரதமர் - முதல் அமைச்சர் இது பற்றி ஆலோசனை நடத்துவதற்கு வாய்ப்புக் கூறுகள் வழங்கப்படவில்லை என்று நாம் எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.
அனைத்துக் கட்சியினுடைய தலைவர்கள் அடங்கிய கூட்டத்திலே கூட - எத்தனை முறை இது பற்றி
பிரதமரிடத்தில் தமிழக அரசின் சார்பிலே ஒரு முறையீடாக இந்த அரசு கச்சத் தீவுப் பிரச்சினையில் விட்டுக் கொடுத்தக்கூடாது என்று வலியுறுத்தியது, பிரதமருக்கு தமிழக அரசின் சார்பில் எழுதப்பட்ட கடிதத்திலே எவ்வளவு ஏராளமான ஆதாரங்களை - கச்சத் தீவு தமிழ்நாட்டுக்கு, இந்தியாவுக்குத் தான் சொந்தம் என்பதை வலியுறுத்தும் வகையில் வழங்கியது, அதைப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டது என்பதையும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே எடுத்துக் காட்டியிருக்கிறேன்.
அனைத்துக் கட்சித் தலைவர்களும் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதியன்று கோட்டையிலே கூடி எடுத்த முடிவினை உடனடியாக நான் தலைமை அமைச்சருக்கு எழுதியிருக்கிறேன். அது, வருமாறு :-
Dear Prime Minister,
On behalf of the Government of Tamil Nadu and on behalf of the people of Tamil Nadu, I am constrained to express our deep sense of disappointment over the recent Indo-Srilanka agreement, according to which, Sri Lanka’s claim to Kachativu has been conceded by the Government of India.
May I express the hope that you will take into consideration the unanimous decision contained in the Resolution and take appropriate action?
(அன்புள்ள பிரதமர் அவர்களுக்கு,
கச்சத் தீவின் மீது இலங்கை கொண்டாடி வரும் உரிமையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு இரு நாடுகளுக்குமிடையே சமீபத்தில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம், மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக அமைந்துள்ளது என்று தமிழக அரசின் சார்பாகவும் தமிழக மக்களின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தை கருத்திலே எடுத்துக் கொண்டு உரிய நடவடிக்கையினை மேற்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.)
★★
மேலும் அப்போது நான் ஆற்றிய உரையில்,
“1974ஆம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி திடீரென்று அறிவிப்பு வந்தது. இப்போதும் சொல்கிறேன். இது பற்றி எந்தவிதமான சூசகமான தகவலையும் இந்த அரசுக்கு அறிவிக்கவில்லை. 27-ம்தேதி பத்திரிகையில் பார்த்தவுடன் பதறிப் போய் எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தேன். சில பேருக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்தேன். சில தலைவர்களுக்கு அதிகாரிகளையே அனுப்பினேன். அவ்வளவு அக்கறையோடு இந்தக் காரியத்தில் நாங்கள் செயல்பட்டிருக்கிறோமே அல்லாமல் இதில் தமிழக அரசு கச்சத் தீவை இலங்கைக்கு அளிப்பதில் எந்த விதத்திலும் உடந்தையாக இல்லை என்பதை நான் மனப்பூர்வமாகச் சொல்லிக் கொள்கிறேன்.”
★★
“சில மாதங்களுக்கு முன்பு கூட செய்தியாளர்கள் “கச்சத் தீவு” பற்றி கேட்ட போது கூட, கச்சத் தீவை விட்டுக் கொடுக்கும் போது, தமிழ்நாடு தி.மு.க. அரசு அதனை வன்மையாக மறுத்திருக்கிறது. அப்போது இந்திராகாந்தி அம்மையார் பிரதமராக இருந்தார். அவர்கள் சமாதானம் செய்து - கச்சத் தீவிலே நமக்குள்ள உரிமைகளுக்கெல்லாம் வழி வகுத்து விதிகள் செய்யப்பட்டன. அந்த உரிமைகள் - தேவாலயத்திற்கும், கிரித்தவ ஆலயத்திற்கும் சென்று வருவதற்கான உரிமை, மீன்களை காய வைப்பதற்கும், மீன் பிடிப்பதற்குமான உரிமை, நம்முடைய மீனவர்கள் அங்கே தங்கள் வலைகளை காய வைப்பதற்கான உரிமை என்று பல உரிமைகள் நமக்கு இருந்தன. ஆனால் நெருக்கடி நிலைக்குப் பிறகு 1976இல் நம்முடைய ஆட்சி இல்லை. ஆளுநர் ஆட்சிதான் இருந்தது. ஆளுநர் ஆட்சியில் அந்த விதிகள் எல்லாம் மாற்றப்பட்டு விட்டன. அது தொடர்ந்து இப்போதும் இருக்கிறது. அதை நாமும் பல முறை அந்த விதிமுறைகளை யெல்லாம் கொண்டு வர வேண்டுமென்று வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இப்போது அதற்குரிய நேரம் வந்து விட்டதாகவே கருதுகிறேன்” என்று கூறியிருக்கிறேன்.
அண்மையில் நான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் “கச்சத்தீவு” பிரச்சினை பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன்.
இப்போது மட்டுமல்ல, 25-7-1997 அன்று டெல்லி சென்று அப்போது பிரதமராக இருந்த குஜ்ரால் அவர்களைச் சந்தித்த போது தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவதைக் குறித்துத் தான் எடுத்துக் கூறி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.
அதன் பின்னர் பல முறை பிரதமர்களிடம் இந்தக் கோரிக்கை எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
17-8-1991 அன்றே “தினமணி” நாளேடு எழுதிய தலையங்கத்தில், 1974இல் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி திருமதி பண்டார நாயகாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில், இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட, கச்சத் தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகு முன்னர் இதைப்பற்றி தமிழக மக்களிடம் மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை” என்று அப்போதே எழுதியிருந்தது. அதே தலையங்கத்தில், “1976இல் இந்திய நாட்டில் அமலில் இருந்த நெருக்கடி காலத்தில், மக்களை கலந்தாலோசிக்காமல் இலங்கை அரசுடன் செய்து கொண்ட மற்றொரு ஒப்பந்தத்தின் மூலம், இந்திய மீனவர்களுக்கு கச்சத் தீவின் அருகில் மீன் பிடிக்கும் பாரம்பரை உரிமையும் விட்டுக் கொடுக்கப்பட்டது” என்று எழுதப் பட்டிருப்பதிலிருந்தே, தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த காலத்தில் மீன் பிடிக்கும் உரிமை விட்டுக் கொடுக்கப்பட்டதாக கூறுவது அசல் மோசடியும், பித்தலாட்டமும் ஆகும்.
ஜெயலலிதா மேலும் தனது அறிக்கையில் இலங்கை அமைச்சர் ஒருவர் கச்சத் தீவை புனிதப் பகுதியாக அறிவிக்கப் போவதாக இலங்கை பாராளுமன்றத்தில் கூறியிருக்கிறார் என்றும், அதற்கு மத்திய, மாநில அரசுகள் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும், கண்டனம் தெரிவிக்காததால், இலங்கை அரசின் அறிவிப்புக்கு இந்திய அரசும், தமிழக அரசும் உறுதுணையாக இருக்கின்றனவோ என்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகவும் ஜெயலலிதா எழுதியுள்ளார். இந்தப் பொருள் பற்றிய அறிக்கையை 22ஆம் தேதி காலையில் வைகோ விடுத்திருந்தார். அதே பொருள் பற்றி 22ஆம் தேதி மாலையில் ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார். பொதுவாக ஜெயலலிதா அறிக்கை விட்ட பிறகு, அடுத்த நாள் வைகோ அறிக்கை விடுவார்.
இது இலங்கை பிரச்சினை என்பதால், வைகோ அறிக்கை விடுத்து, அதனை ஜெயலலிதா பின்பற்றியிருக்கிறார் போலும்!
“கச்சத்தீவை முழுவதுமாக தனித்த புனித இடமாக இலங்கை அரசு அறிவிக்கப் போகிறதாம்” என்று தான் இவர்கள் அறிக்கை விட்டிருக்கிறார்கள் -
இது பற்றி விசாரித்த அளவில் - இலங்கை அரசு கச்சத் தீவை புனித பூமியாக அறிவிக்கவிருப்பதாக எந்த நோக்கமும் இல்லை என்றும், ஆனால் அமைச்சர் ஒருவர் பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது ஜெயலலிதா மொழியிலே சொல்வதென்றால் வாய்தவறி சொல்லியிருக்கலாம் என்ற ஒரு கருத்தும் சொல்லப்படுகிறது. எது எப்படியிருந்த போதிலும், அது உண்மையாக இருந்து அப்படி அறிவித்துச் செயல்படத் தொடங்கினால்; தமிழகக் கழக அரசு அதற்கான விளக்கம் கேட்டுப் பெற்று; அதை வன்மையாகக் கண்டிக்கவும் - மத்திய அரசுக்கு அறிவித்து - உரிய சட்ட பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளவும் தயங்கப் போவதில்லை.
உடன்பிறப்பே, இதில் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் - திடீரென்று ஜெயலலிதாவுக்கு இலங்கை மீது இவ்வளவு இன உணர்வு மிக்க அக்கறை எப்படி வந்தது? ஏன் வந்தது? என்பது தான்.
இலங்கைத் தமிழர் படுகொலையை, அப்பாவித் தமிழர்களைக் குண்டு போட்டு இலங்கை ராணுவம் வதைப்பதை - தமிழ் நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கண்டித்த போதும் - பேரணிகள் நடத்திய போதும் - டெல்லி சென்று பிரதமரிடம் முறையிட்ட போதும் - திருமதி சோனியா காந்தியிடம் கோரிக்கை வைத்த போதும் - இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் துணைக்குழுவாக; தமிழகத்துநீதியரசர்களின் குழு டெல்லி சென்று திருமதி சோனியா காந்தி அவர்களையும், குடியரசு தலைவர் திருமதி பிரதிபா பட்டீல் அவர்களையும் சந்தித்த போதும் - அந்த முயற்சிகளை “கபட நாடகம்” என்றும்; உண்மையில் சிங்கள ராணுவம்; விடுதலைப் புலிகளைத் தான் வேட்டையாடுகிறார்கள்; அப்பாவித் தமிழர்களை அல்ல என்றும் - யுத்தம் என்றால் அதில் அப்பாவி மக்கள் சாவது இயற்கை தான் என்றும் - சிங்களத்துக் காளிகாதேவியாக நின்று முழங்கிய ஜெயலலிதாவுக்கு இப்போது
திடீரென்று - இலங்கைத் தமிழர் மீதும் - கச்சத் தீவு மீதும் - இவ்வளவு அக்கறை வருவானேன்? எல்லாம் தேர்தல் தேதி நெருங்குகிறது என்பதால் தானே?
ஆமாம்; “பிரபாகரனை இலங்கையில் கைது செய்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வருக” என்று ஜெயலலிதா; முதலமைச்சராக இருந்த போது 16-4-2002 அன்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தாரே; அந்த ஜெயலலிதா தானா; இந்த ஜெயலலிதா? அப்போ பாவம்; அவர் தான் இவர் என்று தெளிவுடைய அவர் முகமூடியைத் திறந்து பாருங்கள் என்று தான் கூறவேண்டியுள்ளது!
அன்புள்ள, மு.க. 24-3-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 179–186. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.