முரசொலி கடிதங்கள் · 3388
அந்த நினைவுக்கு ஒரு நன்றி!!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
# 3388. அந்த நினைவுக்கு ஒரு நன்றி!! ## (கலைஞர் கவிதைக் கடிதம்)
(முன்னுரை :- கழகக் குடும்பத்தின் உடன்பிறப்புகள் - பாசமிகு தம்பிமார்கள் எல்.ஜி., செஞ்சி - அவர்களைத் தொடர்ந்து தம்பிகள் மு. கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன், டி.கே. சுப்பு ஆகியோர் ஆயிரக்கணக்கான கழக மாணிகளுடன் தாய்க் கழகத்திற்கு வந்து இணைந்தபோது அந்த ஐவருடனும் தனித்து உரையாடிய நேரத்தில் எழுந்த நினைவலைகளே இந்தக் கடிதம்)
உடன்பிறப்பே,
குமரி முனைக் கடற்கரை விருந்தினர் மாளிகையில்
குற்றடை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தேனாம்;
அந்த நள்ளிரவில் அப்போது நமது தம்பிமார்கள் -
ஆற்காட்டார் - துரைமுருகன் - இன்னொருவர் இப்போது நான்,
பெயர் சொல்ல விரும்பாதவர்; இவர்கள் மூவரும்
மாடித் தாழ்வாரத்தில் - தேடக் கிடைக்காத திராவிடமாய்த்
திராவிடர்க்குக் கிடைத்த தி.மு. கழகத்தின் வளர்ச்சி,
வலிமை, வற்றாத பாச உணர்வு - இவை பற்றியும் - அதன்
வருங்காலம் பற்றியும் வானம் வெளுக்கும் வரையில்
உரையாடினார்களாம்.
அப்போது, அந்தத் தம்பி - நான் பேர் சொல்லாப் பெருமகன்;
என் தம்பிகள் ஆற்காட்டாரையும், துரைமுருகனையும்
பார்த்து;
“சரி, கலைஞருக்கு அடுத்து கழகத்தின் தலைவர் -
ஸ்டாலின் தானா ?” என வெகுண்டெழுந்து கேட்டாராம் -
எப்படி அதைச் சொல்கிறாய் என அந்தத் தம்பியர்
கேட்டவுடன்;
“பேராசிரியர் அவர்கள், கூட்டங்கள் - மாநாடுகளில்
கூறுகின்ற புகழுரைகள் ஸ்டாலினைப் பற்றி
மழையாகப் பொழிகிறதே
என ஆயாசப்பட்டாராம்; அந்த அருமைத் தம்பி!
உடன்; ஆற்காட்டாரும், துரைமுருகனும்; “அன்பழகனார்
அப்படிப் பேசுவதில் என்ன தவறு? அந்தப்
பிள்ளையாண்டான்
செய்துள்ள தியாகம் - இளைஞர் அணியை வளர்க்கும்
இணையற்ற ஆற்றல் - இவற்றைப் பேராசிரியர்
பாராட்டுவதில்
என்ன குறை - யாரையும் எடை போட்டுத்தான் -
பேராசிரியர் ஏற்றுக் கொள்வார் -
கலைஞரையே உரைத்துப் பார்த்து உண்மைத்திறனை
உணர்ந்த
பிறகுதான் ஒப்புக் கொண்டார்; தனக்கே தலைவராக!
எனவே இப்போது கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின்தான்
என்ற பேச்சுக்கு என்ன அவசரம்? நீர் ஏன் நெருப்பைத்
தொட்டது போல் துடிக்க வேண்டும்? கலைஞரே இப்போது
உம்மைத் தானே “போர்வாள்” என்று புகழ்கிறார் -
போற்றுகிறார் -
மாநிலங்களவை உறுப்பினர் பதவியை உமக்கு வழங்கியது
போல
வேறு யாருக்கு இப்படித் தொடர்ந்து வழங்கியிருக்கிறார்;
கவலைப்படாமல் இருந்திடுக! கலைஞர் அவர்கள்;
தனக்குப் பிறகு
உம்மைத்தான் தலைவராக்குவார் இயக்கத்திற்கு” என்று
நம்பிக்கை
தெரிவித்து அந்த நள்ளிரவிலும் நமது பேர் சொல்ல
விரும்பாத
பெருமை மிகு தம்பியின் முகத்தில் ஒளி பிறக்கச்
செய்திருக்கிறார்கள்.
புன்னகை தவழ்ந்த அந்தத் தம்பியின் முகத்தில்
புதியதோர் சிந்தனை - அது ஒரு கேள்வியாகவும் மாறியது!
“ஏன் துரைமுருகன்; நான் கலைஞருக்குப் பிறகு
தலைவனாவேன் என்கிறீர்களே? ஒரு வேளை நமது
கலைஞர், பெரியார் போல - ராஜாஜி போல - தொண்ணூறு
வயதுக்கு மேல் வாழ்ந்து விட்டால்; நான் தலைவனாவதற்கு
எத்தனை வருடம் காத்திருப்பது?”
இதைக் கேள்வியாகக் கருதாமல்; மற்ற இரு தம்பியரும்
தேள் பிளிற்றும் விஷமாக எண்ணிக் கலங்கி -
இருவரும் இரகசியமாக சத்தியம் செய்து கொண்டார்களாம்
இந்தச் செய்தியை இருவரும் தலைவரிடம்
எப்போதும் சொல்லுவதில்லையென்று!
ஆனால் -
துரைமுருகன் ரகசியத்தைக் காப்பாற்றுவதில் இரும்புப் பெட்டி!
ஆற்காட்டாரோ - அசல்; கண்ணாடிப் பேழை -
எனினும்
ஆண்டுகள் சில பல கடந்த பிறகே;
அன்றைய குமரி முனையில் குழுமிய எரிமலையின்
குட்டை மனப் பேராசையின் வெளிப்பாட்டைக் கூறினார் எனக்கு
குறளின் அமுத மொழியாம்;
“செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி”
(செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித் தோற்றத்துக்கு மட்டுமே தெரியும். அவ்வாறே உட்பகை உள்ளவர்கள் உளமாறப் பொருந்தியிருக்கமாட்டார்கள்)
உடன்பிறப்பே,
குறளோவியம் நூல் தொகுப்பில் நான்
குறிப்பிடாமல் விட்டுப் போன இந்தக் குறட்பா;
இந்த நேரத்தில் நினைவுக்கு வந்ததே;
அந்த நினைவுக்கு ஒரு நன்றி!
அன்புள்ள, மு.க. 29-03-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 187–190. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.