அடக்கம்

முரசொலி · தொகுதி 42 · கடிதம் 3389

முரசொலி கடிதங்கள் · 3389

இலங்கைத் தமிழரின் இணையற்ற செல்வம் ஈழத்தந்தை செல்வாவின் 112-வது பிறந்தநாள்!

நாள் 1.4.2009சுமார் 2 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3389. இலங்கைத் தமிழரின் இணையற்ற செல்வம் ஈழத்தந்தை செல்வாவின் 112-வது பிறந்தநாள்!

ஈழத் தந்தை செல்வாவின் 112-வது பிறந்தநாள் நேற்று தந்தை செல்வா அவர்கள் 28.4.1977 அன்று மறைந்த போது, பெரும் துயருற்று, தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய உடன்பிறப்பு கடிதம் இங்கே வெளியிடப்பட்டுள்ளது.

உடன்பிறப்பே,

படுக்கையின் ஓரத்தில் இருந்த தொலைபேசி நள்ளிரவு பனிரெண்டு மணியளவில் ஒலித்தது. இலங்கையிலிருந்து வந்தது குரல். சுதந்திரன் பத்திரிகை நண்பர் மகேசன் தழுதழுத்த தொனியில் அந்த அதிர்ச்சிக்குரிய செய்தியைச் சொன்னார். செல்வா மறைந்துவிட்டார். இலங்கைத் தமிழர்களின் செல்வம் மறைந்து விட்டது. அந்தோ! இலங்கையில்தான் அடுக்கடுக்காக எத்தனை வேதனைகள்! தமிழர்களின் உணர்ச்சி விளக்காக ஒளிவிட்டுக்கொண்டிருந்த திருச்செல்வம் பிரிந்தார். தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய பொன்னம்பலமும் திடீரென மறைந்தார். இதோ அளக் குறையாத அரும்பெரும் செல்வமாம் ஈழத்துத் தந்தையையும் இழந்துவிட்டோம்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரோடு வாழ்வை நடத்திக் கொண்டிருந்த இலங்கைத் தமிழர்களுக்கு இவரன்றோ போர் வாளாய் - கேடயமாய்த் திகழ்ந்தார்.

அங்கு எத்தனை அடக்குமுறைகளைத் தமிழர்கள் ஏற்கவேண்டியிருந்தது. தூண்டி விடப்பட்ட கலவரங்கள் பலவற்றில் தூண்டில் மீன்களாய்த் தமிழ்க்குலத்தைச் சார்ந்த ஆடவரும் பெண்டிரும் அவதிப்பட்டுத் துடித்திட்ட போது

அவர்களுக்குத் துணைநின்ற “காவல் தெய்வம்” என்ற நிலையில் அல்லவா செல்வா அவர்களின் தொய்வில்லாத் தொண்டு அமைந்திருந்தது.

பசப்பு மொழி பேசி அவரைத் தம் பக்கம் இழுத்திட நினைத்தோர் - பதவி சுகம் காட்டி அவரது பகையைத் தவிர்த்திட முனைந்தோர் - அவர்கள் யாருக்கும் வணங்காத தலைவனாக - வைர நெஞ்ச வேங்கையாக - கொண்ட கொள்கையில் குன்றென நிமிர்ந்து நின்று இறுதி மூச்சு போகும் வரையில் இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வு ஒன்றையே எண்ணிக் கொண்டிருந்தார் அந்த ஈழத்துப் பெருந்தமிழர்.

மூன்று நான்கு ஆண்டுகட்கு முன்புத் தமிழகம் வந்திருந்தார். எங்களை யெல்லாம் சந்தித்தார். எலும்பினால் மட்டுமே உருவானதோ அந்த உடல் என வியக்கத்தக்க அளவுக்கு அவ்வளவு இளைத்திருந்தார். எனினும், இலங்கைத் தமிழர்களுக்காகப் போர் தொடுப்பதில் களைத்திருத்தாரா என்று எவரும் கூறிட இயலாது!

உலகெங்கும் பரந்து கிடக்கும் தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாக நமது திமுகழகம் இருப்பது கண்டும் அந்தத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகத் தேவைப்படும்பொழுதெல்லாம் குரல் கொடுப்பது கண்டும் - அவர் அடைந்திருந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இலங்கையில் தமிழர்கள் அவதிக்கு ஆளானபோது அறிஞர் அண்ணா அவர்களின் காலத்தில் தி.மு.க. நடத்திய இலங்கைத் தமிழர் ஆதரவுப் பேரணியும் அதன் பின்னர் இலங்கை வாழ் தமிழர்களின் துன்ப துயரங்களைப் போக்கத் தி.மு.கழகம் இந்தியப் பேரரசிடம் முறையிட்டு ஆவன செய்திடுமாறு கேட்டுக் கொண்டதையும் மறைந்துவிட்ட தமிழர்களின் மாணிக்கமாம் செல்வா அவர்கள் நன்றிப் பெருக்குடன் நினைவு கூர்ந்திடத் தவறியதே இல்லை.

இலங்கையே அழுதுகொண்டிருக்கும் இன்று! என் தமிழன் எங்கெங்கு வாழ்கிறானோ அங்கெல்லாம் அவனது இல்லம் இருள் சூழ்ந்துதான் கிடக்கும். உள்ளம் அழுதுகொண்டு தான் இருக்கும்.

இங்கே கடந்த 15-ஆம் தேதியன்று கழகம் பிரச்சினைக்கு உட்பட்டபோதுதான் செல்வாவின் உடல்நிலை பற்றிக்

கவலை தரும் செய்தி இலங்கையிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இலங்கைவாழ் தமிழர்களின் அன்புக்கட்டளையை ஏற்று நம்பிய மருத்துவமேதை இராமமூர்த்தி அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளைச் செய்தோம். அவரும் மிக்க ஆர்வமுடனும் அக்கறையுடனும் அந்தப் பணியினை ஏற்றுத் தன்னால் முடிந்த முயற்சிகளைச் செய்து விட்டுத் திரும்பினார். இலங்கையில் உள்ள மருத்துவ மேதைகளும் செல்வாவின் உயிரை மீட்க அரும்பாடுபட்டு அயராது உழைத்தனர். ஆனால் காலம் தன் முழு வல்லமையைக் காட்டிச் செல்வநாயகம் அவர்களை நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டு போய்விட்டது.

செல்வா மறைந்துவிட்டார் எனினும் அவரால் உருவாக்கப்பட்ட ஆற்றல்மிகு தலைவர்கள், தளபதிகள், வீரக் கவிஞர்கள், இலட்சியக் காளைகள் பலர் இருக்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்களுக்காக செல்வா ஆற்றிய பணியை அவர் வழியில் மற்றவர்கள் தொடர்வார்கள்,

அவர் காட்டிட்ட அமைதி - தமிழர் சிங்களவரிடையே பகை மூளாமல் தவிர்த்திடவும் - அதே நேரத்தில் தமிழர்களின் நல்வாழ்வுக்கு வழி அமைத்திடவும் அவர் ஓயாது வழங்கிய உழைப்பு -

இவை என்றென்றும் அந்தத் தியாகச் செல்வத்தை உலகத் தமிழர்களின் நெஞ்சத்தில் அணையாத தீபமாக ஆக்கி வைத்திருக்கும் என்பது மட்டும் உறுதி

அன்புள்ள, மு.க. 01-04-2009

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 191–193. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 42-இல் மேலும் கடிதங்கள்