அடக்கம்

முரசொலி · தொகுதி 42 · கடிதம் 3390

முரசொலி கடிதங்கள் · 3390

கிளம்பட்டும்; தமிழச் சிங்கக் கூட்டம்!

நாள் 4.4.2009சுமார் 8 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3390. கிளம்பட்டும்; தமிழச் சிங்கக் கூட்டம்!

உடன்பிறப்பே,

இந்தியத் திருநாட்டின் பதினைந்தாவது நாடாளுமன்றத்திற்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை நேற்றைய தினம் காலையில் - கழக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆய்வு தொடங்குவதற்கு முன்பாக பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நான், பொதுச் செயலாளர் இனமான பேராசிரியர் அவர்கள் முன்னிலையில் வெளியிட்டேன். கழகப் பொருளாளர் தம்பி தளபதி மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, சற்குணப் பாண்டியன் மற்றும் கழக முன்னணியினர் வீரபாண்டி ஆறுமுகம், மத்திய அமைச்சர் ஆ. ராஜா, அமைச்சர் பொன்முடி, மத்திய முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் தம்பி தயாநிதி மாறன், தென் மண்டலச் செயலாளர் மு.க.அழகிரி, மாநிலங்களவை உறுப்பினர் மு.க. கனிமொழி, அமைப்புச் செயலாளர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், கல்யாணசுந்தரம், தலைமைத் தேர்தல் பணிக்குழு செயலாளர் எல். கணேசன் உடன் இருந்தனர்.

2009ஆம் ஆண்டிற்கான இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்க டாக்டர் நாதன் தலைமையில் மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, ஆ. ராஜா, சற்குணபாண்டியன், டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்தக் குழுவினர் குறுகிய காலத்தில் சிறந்ததோர் அறிக்கை ஒன்றைத் தயாரித்து - அந்த அறிக்கையை நானும், பொதுச் செயலாளர் பேராசிரியரும் ஆய்வு செய்து இறுதியாக அச்சியற்றப்பட்டு இன்றைய தினம், வெளியிடப்பட்டுள்ளது. உடன்பிறப்பே, இந்த அறிக்கையை உன் போன்றோர் முழுவதும் படித்துப் பார்ப்பதோடு - பொதுமக்களிடமும் இதிலே உள்ள நல்ல திட்டங்களையெல்லாம்

விளக்கிச் சொல்லி அவர்களின் ஆதரவைத் திரட்டிட மிகவும் துணையாக இருக்க வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன்.

தேர்தலில் நிற்கின்ற கட்சிகளின் சார்பில் தனித்தனியாக தேர்தல் அறிக்கைகள் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் வெளியிடப் பட்டபோதிலும் - தி.மு. கழகத்தைப் பொறுத்த வரையில் தேர்தல் அறிக்கை தயாரித்து வெளியிடுவதில் தனக்கென முக்கியமானதொரு இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் இயக்கமாகும். 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சராக இருந்த அருமை நண்பர்

ப. சிதம்பரம் அவர்கள் படித்துப் பாராட்டியதோடு - அந்தத் தேர்தல் அறிக்கைதான் அந்தத் தேர்தலுக்கான கதாநாயகன் என்றே தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார். அந்த அளவிற்கு அந்தத் தேர்தல் அறிக்கையிலே தி.மு. கழகம் தேர்தலில் வெற்றி பெற்றால் என்னென்ன திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தும் என்பதை யெல்லாம் முன்கூட்டியே எடுத்துவைத்திருந்தது. சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்ற வார்த்தைகளுக்கிணங்க அந்தத் தேர்தல் அறிக்கையிலே எடுத்து வைத்த வாக்குறுதிகளை யெல்லாம் முறையாக தமிழக அரசின் சார்பில் நிறைவேற்றிய பெருமையும் நமக்கு உண்டு. தேர்தல் அறிக்கையில் நாம் சொன்ன திட்டங்கள் எல்லாம், நிறைவேற்றப்பட முடியாத திட்டங்கள் என்றும் - மக்களை ஏமாற்றுவதற்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்றும் அப்போது அ.தி.மு.க.வினரும், அவரது தோழமைக் கட்சியினரும் தேர்தல் நேரத்தில் கடுமையான அளவில் பிரச்சாரம் செய்தனர். ஆனால் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று

13-5-2006 அன்று பதவியேற்ற அந்த மேடையிலேயே மூன்று கோப்புகளை வரவழைத்து - விவசாயிகளுக்கு 7000 கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் ரத்து - இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி - சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டைகள் என்ற அறிவிப்புகளுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டவன் நான் என்பதை நன்கறிவீர்கள். அதைத் தொடர்ந்து கழக அரசு தேர்தல் வாக்குறுதிகளையெல்லாம் முறையாக ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வருவதையும்,

அதன் பயன்களை தமிழ்நாட்டு மக்கள் முறையாக துய்த்து வருவதையும் அனுபவப்பூர்வமாக நாம் கண்டு வருகிறோம்.

அது போலவே மத்தியில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பில் நாம் 2004ஆம் ஆண்டு வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளை யெல்லாம் முறையாக மத்திய அரசு முழு மனதோடு நிறைவேற்றி வருகின்றது.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமேயானால் - 2004ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் - “அனைத்து தகுதிகளும் கொண்ட தமிழ் மொழியை உயர் தனிச் செம்மொழி என அறிவிக்க வேண்டும் என்று தி.மு. கழகம் மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தும்” என்று சொல்லியிருந்தோம். இன்றைய தினம் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவோம்.

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையிலே 18-8-2007 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நிறுவனத்தின் சார்பில் அய்யன் திருவள்ளுவர் பெயரில் உலக அளவில் சிறந்து விளங்கும் தமிழறிஞருக்கும், தொல்காப்பியர் பெயரில் தேசிய அளவில் சிறந்து விளங்கும் தமிழறிஞருக்கும் ஆண்டுதோறும் குடியரசு தலைவர் விருதுகள் முன்தேதியிட்டு வழங்கும் திட்டத்திற்கும் மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய அரசு செம்மொழிக்கு ஒப்புதல் வழங்கியதோடு நிற்காமல் - அந்த நேரத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வழிகாட்டும் தலைவர் திருமதி சோனியா காந்தி எனக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு எழுதியிருந்ததும் குறிப்பிடத் தக்கது.

November 8, 2005.

Dear Thiru Karunanidhiji,

I have received your letter of 28th October. I am glad that all the formalities for declaring Tamil as a Classical Language have now been completed. This is an achievement for all the constituents of the UPA Government, but particular credit goes to you and your Party.

With regards,

Yours sincerely, Sonia Gandhi.

நீண்ட காலமாக வாக்குறுதி அளவிலேயே இருந்து வருகிற சேது கால்வாய்த் திட்டப் பணியை விரைவில் தொடங்கி செயல்படுத்த உரிய நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று தேர்தல் அறிக்கையிலே தெரிவித்தோம். அவ்வாறே வலியுறுத்தி 2,427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அந்தத் திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு - நிதி ஒதுக்கப்பட்டு - 60 சதவிகிதப் பணிகள் முடிவுற்ற நிலையில் - மதவாதிகள் சிலராலும், நமது அரசுக்கு புகழ் வந்துவிடுமேயென்று பொறாமை கொண்ட சிலராலும் சேதுத் திட்டம் தற்போது நீதி மன்ற முடிவுக்காக காத்திருக்கின்றது.

அதுபோலவே “பொடா” சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற தி.மு.கழகம் வற்புறுத்தும் என்று தேர்தல் அறிக்கையிலே உறுதி கொடுத்தோம். அவ்வாறே வற்புறுத்தி பொடா சட்டம் தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் வருமான வரி விலக்கை ஐம்பதாயிரம் ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாக உயர்த்தி வரி விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று குறிப்பிட்டிருந்தோம். அவ்வாறே அது ஒரு இலட்சமாக உயர்த்தப்பட்டதோடு நிற்காமல் ஒன்றரை லட்சம் ரூபாய் என்ற அளவிற்கு தற்போது உயர்ந்துள்ளது.

நெசவாளர்களின் துயரத்தைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்வோம் என்று 2004ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்திருந்தோம். அதற்கேற்ப ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி அமைந்தவுடன் நெசவாளர்களுக்கான “சென்வாட் வரி” ரத்து செய்யப்பட்டது.

சென்னை குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்று தேர்தல் அறிக்கையிலே சொன்னோம். அதற்கேற்ப சென்னைக்கு அருகே நெம்மேலியில் 908 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து நிதியும் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது.

“சொன்னதைச் செய்வோம்” என்பதற்கு அடையாளமாக இவ்வளவு சாதனைகளையும் செய்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு - “சொல்வதற்கு மேலும் செய்வோம்” என்பதற்கேற்ப பின்வரும் சாதனைகளையும் செய்துள்ளது.

❖ சென்னைக்கு அருகில் ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் தேசிய மோட்டார் வாகன சோதனை மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட வளர்ச்சிக் கட்டமைப்பு மையம்.

❖ தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம்.

❖ சேலம் உருட்டாலையை சர்வதேச அளவுக்கு உயர்த்தி, புதிய குளிர் உருட்டாலை 1,553 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது.

❖ 120 கோடி ரூபாய் செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை “சூப்பர் ஸ்பெஷாலிட்டி” மருத்துவமனையாக மேம்படுத்தப்படுகிறது.

❖ கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் 56 ஆயிரத்து 664 கோடி ரூபாய் செலவில் 4,676 கி.மீ. நீள தேசிய நெடுஞ் சாலைகளில், 3,276 கி.மீ. சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக மேம்பாடு, போக்குவரத்து மேம்பாலங்கள், துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனையங்கள், நீர் வழிப் போக்குவரத்து வசதிகள்.

❖ தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தின்கீழ் 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி.

❖ 1,655 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே பறக்கும் சாலை அமைத்திட - 8-1-2009 அன்று பிரதமர் மன்மோகன் சிங் வருகை தந்து அடிக்கல் நாட்டினார்.

❖ மதம் மற்றும் சிறுபான்மை பிரிவினரின் பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக பின் தங்கியோர் நலன் காக்கும் தேசிய ஆணையம்.

❖ இந்தியாவிலேயே முதல் முறையாக வளர்ந்த நாடுகளுக்கு இணையான மூன்றாம் தலைமுறை தகவல் தொழில் நுட்பத் திட்டம்.

❖ அனைத்து கிராமங்களிலும் முழு கணினி நிர்வாகத்தை ஏற்படுத்தும் வகையில் தேசிய கணினி நிர்வாகத் திட்டம் அறிமுகம்.

❖ 50 காசு செலவில் இந்தியா முழுவதும் தொலைபேசியில் பேசும் வசதி.

❖ செல்போன் கட்டணங்கள் குறைப்பு

❖ தமிழகத்திலுள்ள மீட்டர்கேஜ் ரயில் பாதைகள், அகல ரயில் பாதைகளாக மாற்றிட அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

❖ தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் 10 புதிய ரயில்கள் இயக்கம்.

❖ 1,859 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 90 ரயில்வே மேம்பாலங்களைக் கட்ட மத்திய அரசு அனுமதித்து, இதுவரை 12 ரயில்வே மேம்பாலங்கள் 137 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

❖ 16 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மாநகரில் மெட்ரோ இரயில் திட்டம்.

❖ சேலத்தில் புதிய ரயில்வே மண்டலம்.

❖ திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம்.

❖ ஆசியாவிலேயே முதலாவதாக சென்னைக்கு அருகில் ஒன்றுக்கு மேற்பட்ட உடல் ஊனமுற்றோருக்கான தேசிய நிறுவனம்.

❖ சென்னையில் மத்திய அதிரடிப்படை மையம் (என். எஸ்.ஜி.)

❖ விவசாயிகளுக்கு 72 ஆயிரம் கோடி மதிப்பிலான கடனும் வட்டியும் தள்ளுபடி.

❖ மாணவர்களுக்கு கல்விக் கடன்

❖ 57 கோடி ரூபாய் செலவில் தூத்துக்குடி துறைமுகத்தில் 9வது தளம் அமைக்கப்பட்டு 14-7-2008 அன்று திறந்து வைக்கப்பட்டது.

❖ மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

❖ கோவையில் உலகத் தரத்திலான மத்திய பல்கலைக் கழகம்.

❖ திருச்சியில் மேலாண்மைக்கான இந்தியக் கல்வி நிறுவனம்.

❖ திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம்.

❖ 245 கோடி ரூபாய் முதலீட்டில் இந்திய கடல்சார் பல்கலைக் கழகம்; சென்னையில் 31-12-2008 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

உடன்பிறப்பே, இந்தப் பட்டியல் நீளமானது; இவ்வளவு சாதனைகளையும் மக்களுக்காக செய்து விட்டுத்தான் - அந்தச் சாதனைகளின் அடிப்படையில் திரும்பவும் மக்களிடம் வாக்குகளைக் கேட்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி முன் வந்துள்ளது. அந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு தேர்தல் அறிக்கையும் - நேற்றைய தினம் தி.மு. கழகத்தின் சார்பில் ஒரு தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளன.

தி.மு.கழகத்தின் சார்பில் நேற்றைய தினம் நான் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை ஏடுகளில் எல்லாம் வெளிவந்துள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில் மாநிலத்தில் கழக அரசும், மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் செய்த சாதனைகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. மேலும் நீங்கள் வாய்ப்பளித்தால் தொடர்ந்து என்னென்ன செய்வோம் என்பதும் எடுத்து விளக்கப்பட்டுள்ளது. இவற்றை கழக உடன்பிறப்புகளும், தோழமைக் கட்சிகளின் உடன்பிறப்புகளும் வாக்காளர் பெருமக்களிடம் எடுத்து விளக்கிட வேண்டும். கடந்த முறை வாக்களித்த மக்களின் மனம் நிறைவு பெறத்தக்க அளவிற்கு நாம் பணி யாற்றியிருக்கிறோம் என்பதை ஆதார பூர்வமாக எடுத்துக் கூற வேண்டும். மத்தியில் எவ்வாறு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சாதனைகளையும், திட்டங்களையும் நிறைவேற்றியிருக்கிறதோ அதைப்போலவே தமிழகத்தில் 2006ஆம் ஆண்டு ஏற்பட்ட ஜனநாயக முற்போக்குக் கூட்டணி

அரசின் சார்பில் என்னென்ன சாதனைகளை செய்திருக்கிறோம் என்பதையும் தொடர்ந்து எழுதுகிறேன்.

நீயும் தொடர்ந்து வாக்காளர்களைச் சந்திக்கும் பொறுப்பைத் கட்டிக் கழித்திடாமல், வாக்குகள் எண்ணி முடித்து, வெற்றி வாகை சூடிய பிறகுதான் - உணவு, உறக்கம், ஓய்வு என்று முடிவெடுத்துக் கொண்டு உழைத்திட இக்கணமே புறப்படு - நமது அணியின் வேட்பாளர்கள் எந்தத் தொகுதியில் யார் என்று பெயர்கள் மிக விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

அப்படி அறிவிக்கப்பட்ட பெயருக்குரிய வேட்பாளர்தான்; நமது வெற்றி வேட்பாளர் என்ற பற்று பாச உணர்வுடன்; வெற்றிக் கனிகள் பறித்துக் குவித்திடுக! குன்றேறி நின்று கொடி உயர்த்திடுக!

1950ஆம் ஆண்டுக்கு முன்பே திருவாரூர் நகராட்சித் தேர்தலில் இருந்து - கொடி பிடிக்கும் தொண்டனாக - கொள்கைப் பரப்பும் சிங்க இளைஞனாக - பணியாற்றிடப் பம்பரமெனச் சுழன்றவன் நான் - அப்போதெல்லாம் தேர்தல்களில் சின்னங்கள் இல்லை - பச்சைப்பெட்டி, சிகப்புப் பெட்டி, மஞ்சள் பெட்டி என்றுதான் மக்கள் வாக்களிப்பர் - திருவாரூரில் தேர்தல் பிரச்சார ஊர்வலங்கள்; முழக்கமிட்டு (அமைதியாக) மோதிக் கொள்வதுண்டு - எமக்கு எதிரணி ஊர்வலத்தில் “பெண்கள் முகத்திலிடுவது மஞ்சள் - அந்த மஞ்சள் பெட்டிக்கு ஓட்டுப் போடுக” என்பார்கள் எதிர் அணியினர். நான் உடனே என் அணியினரை ஆர்த்தெழச் செய்து “அந்த மஞ்சள் முகத்திலிடுவது சிகப்பு; ஆகவே எங்கள் சிகப்புப் பெட்டிக்கு ஓட்டுப் போடுக” என முழங்குவேன் - இப்படி ஆரவாரம் மிகுந்த போட்டிகளே தவிர, அனைத்தும் அப்போது அமைதியான அறவழிப் போட்டிகளே ஆகும்.

பின்னர் சென்னை மாநகராட்சி மன்றத் தேர்தல் - நமது மேயராக அ.பொ. அரசு வர அரும்பாடுபட்டு; அண்ணாவின் கரத்தினால் “கணையாழி” அணிவிக்கப் பெற்றேன். அதற்கடுத்து அண்ணாவின் ஆணையேற்று 1957இல் “குளித்தலை” சட்டமன்றத் தொகுதியில் நின்று வென்றேன்.

ஆம்; சட்டமன்றப் பொன்விழா காணும் அளவுக்கு; அப்பப்பா; எத்தனை தேர்தல்கள் - என்னே உழைப்பு - என்னே! என்னே!

- தோல்வியிலும் வெற்றியிலும் முறையே துவளாமலும் - துள்ளிக் குதிக்காமலும் அண்ணா வழியில் ஆற்றிய தொண்டு - அதுதானே இன்றைக்கு ஐந்தாம் முறையாக உடன்பிறப்பே; நமது கழகத்தை - இந்த உன் அண்ணனை ஆட்சிப் பொறுப்பில் அமர வைத்திருக்கிறது.

இந்தப் பயணத்தில் நான் கண்டெடுத்த அனுபவக் கனிகளை - உனக்கும் உண்டிடத் தந்துள்ளேன் அவ்வப்போது!

அதனால் பெற்ற வலிவும் பொலிவும் உனக்கும் எனக்குமல்ல; உயிரனைய நமது கழகத்திற்கே என்பதை இந்த உலகறியும்.

அதில் உனக்கும் எனக்கும் உவகை! உவகை! இந்த உவகைதான், சில எரிச்சல்காரர்களின் உள்ளங்களை உறுத்துகிறது, உளறுகிறார்கள் ஏதேதோ! அதைப் “பாய்ச்சல்” என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்; புலி பாய்ந்தால் “கிலி” அடைவோம்; பூனை பாய்ந்தால் பானைதானே உருளும்!

எனவே அவற்றை உதறித் தள்ளிவிட்டு; என் உயிரினும் மேலான உடன்பிறப்பே; உடனே ஆர்த்தெழுந்து புறப்படு!

மே திங்கள் 16ஆம் நாள் - வாக்குகள் எண்ணப்படுகின்றன -

அவற்றில் நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வெற்றி வாக்கும்; உன் நெற்றி வியர்வை நிலத்தில் விழ நீ உழைத்துப் பெற்ற வாக்காக அமையட்டும்! எங்கே; புரட்சிக் கவிஞரின் “கிளம்பிற்றுக் காண தமிழச் சிங்கக் கூட்டம்” என்ற பாடலுடன்; இளைஞர் படை; இலட்சியவாதிகளின் படை; புறப்படட்டும்!

அன்புள்ள, மு.க. 4-4-2009

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 194–202. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 42-இல் மேலும் கடிதங்கள்