அடக்கம்

முரசொலி · தொகுதி 42 · கடிதம் 3393

முரசொலி கடிதங்கள் · 3393

தமிழ் இன மீட்புக்காகக் குரல் கொடுத்திட வாரீர்!

நாள் 9.4.2009சுமார் 5 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3393. தமிழ் இன மீட்புக்காகக் குரல் கொடுத்திட வாரீர்!

உடன்பிறப்பே,

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை ஆண்டாண்டு காலமாக இருந்து வந்த போதிலும் அண்மைக் காலமாக மிகவும் மோசமான நிலைமை உருவாகியுள்ளது.

23-4-2008 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் திரு. ஜி.கே. மணி தலைமையில் பா.ம.க. உறுப்பினர்களும், ம.தி.மு.க. சார்பாக தம்பி திரு. மு. கண்ணப்பன், விடுதலை சிறுத்தைகள் சார்பாக திரு. கு. செல்வம், திரு. து. ரவிக்குமார் ஆகியோரும் விதி 36-ன் கீழ் ஒத்தி வைப்பு தீர்மானம் ஒன்றைக் கொடுத்து - அதனைத் தகவல் கோரல் என்ற முறையில் பேரவைத் தலைவர் அனுமதித்து - அவர்கள் எல்லாம் பேசிய பிறகு - அரசின் சார்பில் நானே அவர்களின் கருத்துகளை உள்ளடக்கி ஒரு தீர்மானத்தை அவையில் முன் மொழிந்தேன்.

அடுத்து 6-10-2008 அன்று சென்னை மயிலை மாங்கொல்லையில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து அனைத்துக் கட்சிகளின் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தமிழர்களுக்காக இயக்கம் நடத்துகிற அனைவரும், தமிழர்கள் அனைவரும் ஒரே உருவில் ஒரே வடிவில் ஒரே உணர்வில் நின்று இந்த ஆபத்துக்கு விடை காண்போம் என்று வேண்டுகோள் விடுத்தேன். அதற்கு முதல் நாள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் அனுப்பி வைத்ததின் அடிப்படையில் - பிரதமர் நம்முடைய கழக அமைச்சர் தம்பி டி.ஆர். பாலுவை 6ஆம் தேதி காலையில் அழைத்துப் பேசி விவரங்களையெல்லாம் கேட்டதோடு என்னிடமும் தொலைபேசியிலே தொடர்பு

கொண்டார். அவரிடம் நான் புது டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை மத்திய அரசு உடனடியாக அழைத்து, நிராயுதபாணியாக உள்ள இலங்கைத் தமிழர்களைக் கொல்வது குறித்து இந்தியாவின் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் - இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கையும் இனப் படுகொலையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் - இலங்கை அரசு அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிட வேண்டும் - இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் எத்தகைய துன்பங்களுக்கும் இனி ஆளாகவே கூடாது என்றெல்லாம் கேட்டுக் கொண்டேன். அவரும் அக்கறையுடனும் கவலையுடனும் என் பேச்சைக் கேட்டு, உடனடியாகக் கவனிக்கிறேன், என்னை நம்புங்கள் என்றார். கூறியது மாத்திரமல்ல, உடனடியாக இந்தியப் பாதுகாப்பு ஆலோசகரை அழைத்து அவர் மூலமாக டெல்லியில் உள்ள இலங்கை நாட்டுத் தூதரை வரச் சொல்லி, அவரை எச்சரித்து இப்படி தமிழகத்திலே இருந்து அபயக் குரல் வந்திருக்கிறது, நீங்கள் எங்களுடைய கருத்தை அறிந்து ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டுமென்ற எச்சரிக்கையை இந்திய அரசு அன்றைக்கே செய்தது.

இதனைத் தொடர்ந்து 14-10-2008 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை தலைமைச் செயலகத்திலே கூட்டி இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதித்தோம். அந்தக் கூட்டத்தை அ.தி.மு.க. வும், ம.தி.மு.க.வும் புறக்கணித்தன. தே.மு.தி.க.வும் கலந்து கொள்ளவில்லை. அதைத் தொடர்ந்து 16-10-2008 அன்று மத்திய வெளி உறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கையில் “இலங்கையில் நிலவும் சூழ்நிலை இந்தியாவில் உள்ள எங்களுக்கு பெரிதும் கவலை அளிக்கிறது. ராணுவ பலத்தைப் பயன்படுத்தியோ, போர்க்கள வெற்றிகளாலோ இயல்பு நிலையைத் திரும்பக் கொண்டுவர முடியாது என்று இந்தியா உறுதிபட தெரிவித்து வருகிறது. பேச்சுவார்த்தை மூலமாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்” என்று கூறினார். தொடர்ந்து 18-10-2008 அன்று நமது பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் தொலைபேசியில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து நேரடியாகவே பேசினார். அடுத்து 22-10-2008 அன்று மத்திய அமைச்சர் பிரணாப் அவர்கள் நாடாளுமன்றத்தில் “இலங்கையின் வடக்குப் பகுதியில் மனிதாபிமான சூழல்கள்

மிகவும் மோசமாகிக் கொண்டு வருகின்றன. எந்த நிலையிலும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்றும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் இலங்கை அரசை நாம் வலியுறுத்தியுள்ளோம். இனப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது என்ற நமது ஆழ்ந்த நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்” என்று கூறினார்.

24-10-2008 அன்று தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அதுவரை நடைபெறாத அளவிற்கு பிரமாண்டமான “மனிதச் சங்கிலி” ஒன்றினை நடத்தினோம். திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் சென்று பேரணியும், பொதுக் கூட்டமும் நடத்தியதோடு- 1-11-2008 அன்று சென்னையில் உண்ணா நோன்பும் இருந்தார்கள். அதே நவம்பர் திங்கள் 12ஆம் தேதி மீண்டும் ஒரு முறை இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகச் சட்டப் பேரவையில் தீர்மானம் ஒன்றினை நான் முன் மொழிந்து நிறைவேற்றப்பட்டது. 4-12-2008 அன்று தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து வேண்டுகோள் விடுத்ததுடன், மத்திய அமைச்சர் பிரணாப் அவர்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டோம். 27-12-2008 அன்று நடைபெற்ற கழகப் பொதுக் குழுவிலும் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தீர்மானம் நிறைவேற்றினோம். 12-1-2009 அன்று பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாசு, தமிழர் தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் என்னைச் சந்தித்து உடனடியாக பிரணாப் அவர்களை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். அவ்வாறே நான் மத்திய அமைச்சர் தம்பி பாலுவிடமும், என் மகள் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியிடமும் கூறி, அவர்களும் முறையே பிரதமரையும், சோனியா காந்தியையும் சந்தித்து நிலைமைகளை விளக்கினார்கள்.

இதற்கிடையே தமிழக அரசின் சார்பில் இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக நிதி ஒன்றும் திரட்டப்பட்டு அதிலே சுமார் ஐம்பது கோடி ரூபாய்க்கு மேல் சேர்ந்து - அந்தத் தொகையிலிருந்து உணவு பண்டங்கள், துணிகள், மருந்து பொருள்களை மத்திய அரசின் உதவியோடு செஞ்சிலுவை சங்கங்களின் மூலமாக

வழங்கியிருக்கிறோம். அந்த உதவிகள் முறையாகப் போய்ச் சேர்ந்ததாக நமக்கு தகவல்களும் கிடைத்தன.

ஆனால் 18-1-2009 தேதிய நாளிதழ்களில் வெளி வந்த ஜெயலலிதாவின் பேட்டியில், “இலங்கை வேறு நாடு, எனவே அந்த நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதற்கு ஒரு எல்லை உண்டு. இலங்கையில் ஈழம் என்ற ஒரு நாடு இன்னும் அமையவில்லை. இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று சிங்கள ராணுவம் எண்ணவில்லை. ஒரு போர் நடைபெறும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கு அல்ல” என்று கூறியிருந்தார்.

உடல் நலம் குன்றிய நிலையிலே இருந்தாலும் 3-2-2009 அன்று நடைபெற்ற கழகச் செயற்குழுவிலும் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து நீண்ட நேரம் நான் உரையாற்றினேன். மேலும் நான் மருத்துவ மனையிலே இருந்த போதே - “இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை” என்ற அமைப்பை பல்வேறு கட்சிகளின், அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகளைக் கொண்டும் - தம்பி துரைமுருகன் தலைமையில் நீதியரசர்கள் மோகன், கோகுலகிருஷ்ணன், ஜனார்த்தனம், ராஜன், பாஸ்கரன், சாமிதுரை, சண்முகம், பேராசிரியர் தனபாலன் மற்றும் தமிழர் தலைவர் கி. வீரமணி, மத்திய அமைச்சர் ஆ. ராஜா, கனிமொழி ஆகியோரைக் கொண்டும் துணைக்குழு நியமித்து அவர்கள் மூலமாக இலங்கைத் தமிழர் பிரச்சினை தீருவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம்.

உடன்பிறப்பே, தமிழகத்தின் சார்பிலும் - தமிழக அரசின் சார்பிலும் - மத்திய அரசின் சார்பிலும் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை இலங்கைத் தமிழர்களுக்காக எடுத்து வந்துள்ள நிலையிலும் அங்கே நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டுதான் போகின்றது. இலங்கை அரசு 48 மணி நேரத்திற்கு தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்ய முன் வந்ததே தவிர - நிரந்தர போர் நிறுத்தத்திற்கு வரவில்லை. அதுவும் இரண்டு நாட்களாக வந்துள்ள செய்திகள் நம்மை மிகவும் பாதித்துள்ளது. நேற்றைய தினம் பல முனைகளிலிருந்தும் எனக்கு வந்த செய்திகளைத் தொடர்ந்து - மத்திய உள்துறை அமைச்சர் அருமை நண்பர் ப.சிதம்பரம் அவர்களோடு நானும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் அடுத்தடுத்து தொலைபேசி

மூலம் தொடர்புகொண்டு நீண்ட நேரம் உரையாடிய பிறகு - அவரும் உடனடியாக பிரணாப் முகர்ஜி அவர்களைச் சந்தித்து இலங்கை நிலைமைகளை எல்லாம் விளக்கியிருக்கிறார். நானும் நேற்றையதினமே பிரதமருக்கும், சோனியா காந்தி அவர்களுக்கும், ப. சிதம்பரம் அவர்களுக்கும் தந்தி கொடுத்துள்ளேன். அதுபற்றிய செய்தி ஏடுகளிலும் வெளிவந்துள்ளது.

மேலும் ஏப்ரல் 9 ஆம் நாள் மாலை 4 மணிக்கு சென்னையில் மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் வரையில் என்னுடைய தலைமையில் இலங்கை அரசை போரை நிறுத்தும்படி கோரி மாபெரும் தமிழர் பேரணி ஒன்றினை கட்சி வேறுபாடின்றி நடத்திட முடிவு செய்து, அது பற்றிய விளம்பரங்கள் வெளி வந்துள்ளன. 1983ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் இது போன்றதொரு சூழ்நிலை இலங்கையிலே ஏற்பட்டு - தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது - ஜூலை 27ஆம் தேதி பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்காக சென்னையில் பேரணி நடைபெறும் என்று அறிவித்தேன். 24 மணி நேர அறிவிப்பில் பல இலட்சம் மக்கள் திரண்ட அந்த மகத்தான பேரணி நடைபெற்றது. தற்போது கடந்த ஓராண்டு காலமாக இலங்கைத் தமிழர்கள் மாண்டு மடிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காகத் தாய்த் தமிழகம் தொடர்ந்து மத்திய அரசின் உதவியோடு பல வகைகளிலும் குரல் கொடுத்து வருகிறது.

அனைத்துக் கட்சிக் கூட்டம்,

மனிதச் சங்கிலி,

உண்ணா விரதப் போராட்டம்,

ஆர்ப்பாட்டம்,

பேரவையிலே கண்டனத் தீர்மானங்கள்,

பிரதமரிடம் சந்திப்பு, முறையீடு

மனுக்கள், மகஜர்கள்

தற்போது பேரணி அறிவித்திருக்கிறோம். இலங்கைத் தமிழனுக்காக நமது நலனைத் துச்சமாக கருதி, நம்மையே

வருத்திக்கொண்டு - அறப்போரில் ஈடுபடுவதே நமக்கிருக்கும் ஒரே வழி!

அந்த வழி, அண்ணா வழி, அறவழி, அமைதி வழி.

அந்த வழியிலே இலங்கை அரசைச் சிந்திக்கவைத்திட நாம் நடத்தவுள்ள பேரணியிலே உன்னைச் சந்திக்கக் காத்திருப்பேன், புறப்பட்டிருப்பாய் இந்நேரம். மாலை 4 மணி - மன்றோ சிலை அருகில்! நீ கலை உலகத்திலே இருக்கிற தம்பியானாலும் - கல்வி கூடங்களில் இருக்கின்ற தம்பியானாலும் - ஆலைகளில், அலுவலகங்களில் பணியாற்றும் தம்பியானாலும் - வேறு யாரானாலும் தமிழன் என்றால் தன் தசையாடும் உணர்வோடு - தணலில் புழுப்போல் இலங்கைத் தீவில் துடித்துக் கொண்டிருக்கும் தமிழ் இனத்தைக் காப்பாற்ற இந்தப் பேரணியில் கலந்துகொள்! இது தமிழர் பேரணி!

தமிழ் இனத்திற்காக குரல் கொடுக்கின்ற பேரணி!

அன்புள்ள, மு.க. 9-4-2009

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 213–218. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 42-இல் மேலும் கடிதங்கள்