அடக்கம்

முரசொலி · தொகுதி 42 · கடிதம் 3394

முரசொலி கடிதங்கள் · 3394

சுட்டெரிக்கும் நெருப்பில் சுடர் விடும் தங்கம்!

நாள் 10.4.2009சுமார் 2 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3394. சுட்டெரிக்கும் நெருப்பில் சுடர் விடும் தங்கம்!

உடன்பிறப்பே,

இன்று 9-4-2009 “தினமலர்” இதழில் ஒரு புகைப் படம் வெளி வந்துள்ளதே அதைப் பார்த்தாயா? வழக்கறிஞர்கள் ஆடவரும், பெண்டிருமாக கறுப்புக் கோட்டு அணிந்து - வழக்கு நடத்துவதற்கு, வாதாடுவதற்கு நீதிமன்றத்துக்குச் செல்வார்கள் என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அதற்கு மாறாக அந்தப் படத்திலே உள்ள சில வழக்கறிஞர்கள்; நீதி மன்றத்துக்கு வெளியே வீதி மன்றத்தில் “இடுகாடு - சுடுகாடு” அமைத்து - சுடலை காப்போர் வேலையைப் போல், திருமதி சோனியா காந்தி படத்தையும், டாக்டர் மன்மோகன் சிங் படத்தையும், என் உருவப் படத்தையும் கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு நாங்கள் என்ன தீங்கிழைத்தோம் - ஏன்; எங்களுக்குத் தீயிடுகிறார்கள் ?

எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு நீதி மன்றக் கட்டிடங்களை மாவட்டந்தோறும் கட்டி; திறப்பு விழா நடத்தியிருக்கிறோமே; அதற்காகவா தீ வைக்கிறார்கள் ?

இந்தியாவிலேயே முதன் முதலாக அண்ணல் அம்பேத்கார் பெயரால் சட்டப் பல்கலைக் கழகம் அமைத்து; எனக்காக (முதல் அமைச்சருக்காக) கட்டப்பட்ட மாளிகை போன்ற இல்லத்தை; அந்தப் பல்கலைக் கழக முதன்மை அலுவலகத்திற்காக அளித்தோமே; அதற்காகவா?

சென்னை உயர் நீதி மன்றத்துக்கு எந்த ஆண்டையும் விட; நமது ஆட்சியில் அதிக நிதியாக 300 கோடி ரூபாய் வழங்கியிருக்கிறோமே; அதைக் கண்டித்து அக்கினியில் என் படங்களையும், திருமதி சோனியா காந்தி படங்களையும் இரையாக்குகிறார்களா?

கொளுத்தட்டும் - நன்றாகக் கொளுத்தட்டும் - எனக்கு இப்போது வயது 85 ஆகி விட்டது - அறுவை சிகிச்சைக்குப் பிறகு இன்னமும் நலிவு தீரவில்லை. நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் வருகிறேன் - என்றைக்கோ, எப்போதோ; என் கதை முடிந்து விட்டால், என்னை எப்படிச் சுட்டெரிப்பார்களோ - அதை நான் பார்க்கவா முடியும்; அது எப்படி இருக்குமென்று இப்போதே முன் கூட்டியே வழக்கறிஞர்களாம் என் அருமைத் தம்பிமார்களும் - அன்புத் தங்கைகளும் - என் உருவப் படத்துக்குத் தீயிட்டுக் கொளுத்திக் காட்டுகிறார்களே; மகிழ்ச்சி! மகிழ்ச்சி! வாழ்க, வாழ்க, அவர்களின் வம்சாவழி; வளம் பலபெற்று!

தீயிட்டது மட்டுமல்லாமல்; இன்னும் அதன் தொடர்ச்சியாக செய்ய வேண்டிய இறுதிக் கடன்களையும் செய்வார்களேயானால் - எனக்கு இன்னும் பெரு மகிழ்ச்சி!

நம் வாழ்வு முடிந்த பிறகு என்ன செய்வார்கள் என்பதை முன் கூட்டியே காட்சியாக்கிக் காட்டுவதும், அதைப்பார்ப்பதும் சாதாரணமா? சரித்திர சாதனையல்லவா? சட்டம் படித்த சகலகலாவல்லவர்கள் - சகல கலாவல்லிகள் நீதித் துறையில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களின் “அருள்மிகு” அக்கினி சேட்டைக்கு ஆயிரம் நன்றிகள் அல்லவா சொல்ல வேண்டும்.

“எங்கள் உருவப் படங்களுக்கு தீயிட்டோர் - எல்லையில்லா வருடங்கள் இன்பமுடன் வாழ்க!”

“அக்கினியில் அடியேனையும், அம்மையார் சோனியாவையும் கொளுத்திச் சிரிக்கும் கோகிலங்களின் குடும்பம் செழித்து ஓங்குக!”

“சட்டம் படித்தோர்; தமது இட்டமுடன் என்னையும் எரித்துச் சிரித்தமைக்காக ஏழேழு தலைமுறையும் ஏற்றமுடன் வாழ்ந்திடுக!”

“நீதி காத்திடப் போவீர்கள் என்று மகிழ்ந்தோம்; நீவிர்; சுடலைக் காத்திடச் செல்லலாமா?”

“சுட்டெரிக்கும் நெருப்பில், “சுடர் விடும் தங்கம்” என்ற உண்மையறிந்து; உலவிடுவீர்;

இனியாகிலும் உத்தமர்களாய்!”

இல்லையேல் உலகின் பழிப்புக்கு ஆளாவீர்! ஆனால்; நான் மட்டும் உம்மை நாளும் வாழ்த்திக் கொண்டிருப்பேன்.

“எதையும் தாங்கும் இதயம்” - “வாழ்க வசவாளர்கள்” இவை என் அண்ணன் தந்த வாசகங்களன்றோ?

அன்புள்ள, மு.க. 10-4-2009

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 219–221. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 42-இல் மேலும் கடிதங்கள்