அடக்கம்

முரசொலி · தொகுதி 42 · கடிதம் 3396

முரசொலி கடிதங்கள் · 3396

இவர்களும் அவர் பக்கமா?

நாள் 19.4.2009சுமார் 4 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3396. இவர்களும் அவர் பக்கமா?

உடன்பிறப்பே,

16-4-2009 அன்று அ.தி.மு.க. கூட்டணி சார்பில் சென்னைத் தீவுத் திடலில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் - அ.தி.மு.க. வின் சார்பில் தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை; அந்தக் கூட்டணியின் தலைவியான ஜெயலலிதாவினால் வெளியிடப்பட்டு, அதன் முதல் பிரதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் அவர்களால் பெற்றப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் அந்த அறிக்கை நாளேடுகளில் வெளியாகியிருக்கின்றது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 2009ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையினை கடந்த 2-4-2009 அன்று நான் வெளியிட்டு, முதல் பிரதியை கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் பெற்றுக் கொண்டார். அந்த அறிக்கையில் பக்கம் 37இல் ஒரு பத்தி - சேதுக் கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் - என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. அது இதோ :-

“தமிழர்களின் நீண்டகால கோரிக்கையான சேதுக் கால்வாய் திட்டம் தமிழக முதல்வர் கலைஞர் தொடர்ந்து வலியுறுத்தியதின் காரணமாக 2.7.2005 அன்று தொடங்கப்பட்டு பணிகள் நிறைவடையும் நேரத்தில் மத காரணங்களைக் காட்டி தடை செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை மத்திய அரசு விரைந்து முடித்து இத்திட்டத்தின் எஞ்சிய பணிகளை முடித்து தமிழ் நாட்டின் தென் மாவட்ட பொருளாதார வளர்ச்சிக்கும், இந்தியாவின் பாதுகாப்பிற்கும் வழிகோல வேண்டும் என்று தி.மு.கழகம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.”

சேது கால்வாய்த் திட்டம் குறித்து தி.மு. கழகத்தின் கருத்து இதுதான். அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது உள்ள பா.ம.க.வின் நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் சேது சமுத்திரத் திட்டம் குறித்து என்ன கருத்தினை கொண்டுள்ளார் என்பதை தெளிவாக்கும் வகையில் அவர் 2007ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 22ஆம் நாள் வெளியிட்ட ஓர் அறிக்கையினை உன் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். அது வருமாறு :-

“சேது கால்வாய்த் திட்டம் பொதுவாகத் தென் மாநிலங்களுக்கும் குறிப்பாக தமிழ் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கும் இன்றியமையாத திட்டமாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சேது கால்வாய்த் திட்டத்தை எப்படியும் முடக்கிப் போட்டுவிட வேண்டும் என்று பல வெளிநாட்டுச் சக்திகள் முயற்சி செய்து வருகின்றன. அந்த வெளிநாட்டுச் சக்திகளுக்கு துணை போகின்ற வகையில் இங்குள்ள சில மத உணர்வுகளைத் தூண்டி அதன் மூலம் தேவையற்ற சர்ச்சைகளைக் கிளப்பி இந்தத் திட்டத்தை முழுமையாக முடக்கிப் போட்டு விட வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் வளர்ச்சிக்கும், நாட்டின் பாதுகாப்புத் தேவைக்கும் நடுவமாக விளங்கப்போகிற சேது கால்வாய்த் திட்டத்தை முடக்கிப் போட்டுவிட எண்ணுகிறார்கள். எனவே, தேவையற்ற சர்ச்சைகளுக்கு இதுடன் முற்றுப் புள்ளி வைத்துவிட்டு சேது கால்வாய்த் திட்டத்தை தாமதமின்றி நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அதை நடைமுறைப் படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்கவேண்டும்.”

இதிலிருந்து சேது சமுத்திரத் திட்டத்தை எப்படியும் நிறைவேற்ற வேண்டுமென்பது தான் பா.ம.க.வின் எண்ணமாகவும் உள்ளதை அறியலாம். ஆனால் 16ஆம் தேதி சென்னைத் தீவுத் திடலில், அ.தி.மு.க. சார்பாக வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திரத் திட்டம் பற்றி கூறப்பட்டிருப்பது என்ன?

“சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மக்களின் கனவுத்

திட்டமாக இருந்த ஒன்று. ஆரம்பத்தில் இந்த திட்டம் குறித்து ஆலோசனை செய்த பிரிட்டிஷார் பின்பு இதைக் கை விட்டனர். பின்னர், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். போன்ற தலை சிறந்த தலைவர்களும் கூட, தமிழகத்தின் நீண்ட காலத் தேவையை இந்தத் திட்டம் பூர்த்தி செய்யும் எனக் கருதினர். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன்மூலம், பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட கனவை நனவாக்குவதாக தி.மு.க.வும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், அதிக வேகமும் மிக அதிக எடை கொண்ட சரக்குகளை ஏற்றிச் செல்லும் திறனும் கொண்ட கப்பல்கள் பயணிக்கும் இன்றைய நவீன யுகத்தில், இது தற்காலத்திற்கு ஒவ்வாதத் திட்டம் என்ற உண்மை வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதால், தமிழ் நாட்டின் கடற்கரை மாவட்டங்களில் வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பறி கொடுப்பார்கள். இந்தப் பகுதியில் உள்ள அரிய வகை கடல் தாவரங்களும், உயிரினங்களும் நிரந்தரமாக அழிந்துவிடும். மேலும், சுருக்கமாகச் சொல்வதென்றால், இப்போது திட்டமிட்டுள்ளபடி இந்தக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப் படுவதால், நாட்டிற்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு எந்தப் பொருளாதார ஆதாயமும் கிடைக்க வாய்ப்பே இல்லை. மேலும், இந்தத் திட்டம் சீர்படுத்த முடியாத அளவுக்கு சுற்றுச் சூழலுக்கு ஊறு விளைவிக்கும். லட்சக்கணக்கான மக்களின் வேலை வாய்ப்புகளுக்கு உலை வைக்கும். மேலும், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும். இந்தத் திட்டத்தால் பலனடைவார்கள் தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. டி.ஆர். பாலு மற்றும் கருணாநிதி குடும்பத்தினர்தான். ஏராளமான பொதுமக்களின் நலன்களைப் புறக்கணித்து, ஒரு தனி நபருக்கோ அல்லது தனி குடும்பத்திற்கோ பலன்

அளிக்கும் எந்தத் திட்டத்தையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்காது. இந்தத் திட்டத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ரத்து செய்யும்.”

உடன்பிறப்பே, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் - அவர்கள் பொறுப்புக்கு வந்தால் சேது சமுத்திரத் திட்டத்தையே ரத்து செய்வதாக சொல்லியிருக்கிறார்கள். அ.தி.மு.க.வும் இடம் பெறும் அரசு ஒன்று தப்பித் தவறி மத்தியிலே அமைந்து விட்டால் கூட, இந்தச் சேது சமுத்திரத் திட்டத்தை ரத்து செய்ய அ.தி.மு.க. வே குரல் கொடுக்கும் என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். நான் கேட்க விரும்புவதெல்லாம், ஜெயாவின் தேர்தல் அறிக்கையிலே கூறப்பட்டுள்ள இந்தக் கருத்து, அதே அணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு உடன்பாடான கருத்துதானா? சேது சமுத்திரத் திட்டத்தை கை விட வேண்டும் என்பதைப் பற்றி அவர்களின் கருத்து என்ன? தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அதைத் தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளார்கள்.

விடுதலைப் புலிகள் விஷயத்தில் அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியாவிற்கு அழைத்து வந்து தண்டனை தர வேண்டும் என்பது ஜெயாவின் எண்ணம். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையையே ரத்து செய்ய வேண்டும் என்பது வைகோவின் கருத்து. இருவரும் சேர்ந்து இன்றைக்கு ஒரே அணியில் இருக்கிறார்கள். அதைப் போலத்தான் சேது சமுத்திரத் திட்டப் பிரச்சினையிலும், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சேது சமுத்திரத் திட்டம் கூடாது என்பது எப்படி ஜெயாவினால் கூறப்படுகிறதோ, அதே எண்ணத்தை எதிரொலிப்பவர்களாகத்தான் பா.ஜ.க.வினரும் இருக்கிறார்கள். அவர்களின் கருத்தைத்தான் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இன்று பிரதிபலித்துள்ளது. அதற்கு உதாரணமாக சேது சமுத்திரத் திட்டத்தில் ஜெயாவிற்கு ஆதரவாக ஒரு குரல் நேற்று கூட ஓங்கி ஒலித்திருக்கிறது. எங்கேயிருந்து தெரியுமா? பா.ஜ.க.வின் தேசியத் தலைவரான ராஜ்நாத் சிங் அவர்கள் மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து கர்நாடக

மாநிலத்தில் பேசும்போது, சேது சமுத்திரத் திட்டம் பற்றிய ஜெயாவின் கருத்தைத்தான் அங்கே எதிரொலித்திருக்கிறார்.

இப்போது தெரிகிறதா? ஜெயா அணிந்திருக்கும் முகமூடி யாருடையது என்று? ஒத்தக் கொள்கை யார் யாரிடம் உள்ளது என்பதற்கு இதைவிட வேறு சான்றா வேண்டும்? தேர்தல் முடிவுக்குப் பிறகு ஜெயா எந்தப் பக்கம் சாய்வார் என்பதற்கு இது ஒரு உதாரணம் போதாதா? “சேது சமுத்திரத் திட்டத்தையே நான்தான் நாடு முழுதும் ஆதரித்துப் பேசினேன்” என்று முழங்கிய வைகோவும் - “சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டு”மென்று முழங்குகிற டாக்டர் ராமதாசும் ஜெயா தேர்தல் அறிக்கையிலே சேது சமுத்திரத் திட்டத்தை ரத்து செய்வேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? அருமை சகோதரி எடுக்கும் முடிவே எங்கள் முடிவென்று கூறிக்கொண்டு, சேதுத் திட்டத்தை ரத்து செய்யுங்கள் என்று முழங்கியவாறு பா.ஜ.க. பக்கம் இவர்களும் போய் விடுவார்களா?

அன்புள்ள, மு.க. 19-4-2009

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 227–231. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 42-இல் மேலும் கடிதங்கள்