முரசொலி கடிதங்கள் · 3398
இதற்குமா எதிர்ப்பு! அந்தோ - தமிழகமே!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3398. இதற்குமா எதிர்ப்பு! அந்தோ - தமிழகமே!
உடன்பிறப்பே,
தமிழ் இனத்தைப் படுகொலை புரியும் இலங்கை அரசுக்கு நமது கண்டனத்தைத் தெரிவிக்கவும் -
ஈழத்தில் மாண்டு மடிந்து கொண்டிருக்கின்ற தமிழர்களைக் காப்பாற்றவும் -
மத்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் இலங்கையில் போர் நிறுத்தத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்வதற்காக -
கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் அமைதியான முறையில் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
எனது வேண்டுகோளை இணைத்து காங்கிரஸ் - அ.தி.மு.க. - பா.ம.க. - சி.பி.எம். - சி.பி.ஐ - திராவிடர் கழகம் - பா.ஜ.க. - ம.தி.மு.க., - தே.மு.தி.க. - விடுதலை சிறுத்தைகள் - புரட்சி பாரதம் - இ.யூ.மு.லீக் - மூ.மு.கழகம் - மனித நேய மக்கள் கட்சி - எம்.ஜி.ஆர். கழகம் - புதிய தமிழகம் - பார்வர்டு பிளாக் (சந்தானம்) - இலட்சிய தி.மு.க. - த.மா.தே.லீக் - தமிழர் தேசிய இயக்கம் - அ.இ.ச.ம.கட்சி - அ.இ.நா.ம.கட்சி - திராவிட இயக்க தமிழர் பேரவை - இந்திய சமூக நீதி இயக்கம் - பார்வர்டு பிளாக் (வல்லரசு) - உழவர் உழைப்பாளர் கட்சி - விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி - தேசிய லீக் ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கும், பல்வேறு அமைப்புகளுக்கும், பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சியினருக்கும் - இந்த வேலை நிறுத்தத்திற்கு அவர்களின் ஒத்துழைப்பைக் கோரி கடிதம் எழுதியுள்ளேன்.
இலங்கைத் தமிழர்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் - அதிலே நம்மிடையே உள்ள சகோதர யுத்தத்தைக் காட்டிக் கொள்ளக் கூடாது - நம்மிடையே ஒற்றுமை ஏற்பட்டு விட்டது
என்றாலே சிங்கள அரசு பயப்படும் என்றெல்லாம் எண்ணித்தான் அனைவரின் ஒத்துழைப்பையும் நாடினேன். என்னுடைய வேண்டுகோளை பெரும்பான்மையான கட்சிகள் ஏற்றுக் கொண்டு வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பதாக அறிக்கை விடுத்துள்ளார்கள், கடிதம் எழுதியுள்ளார்கள். ஆனால் இலங்கைத் தமிழர்களின் உயிரை விட, இந்தத் தேர்தல் தான் முக்கியம் என்றும், தி.மு.க. விற்கு எதிராக நடக்க வேண்டுமென்றும் கருதுகின்ற அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் மட்டும் - இலங்கையிலே தமிழர்கள் செத்துக் கொண்டிருப்பதை விட - அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதை விட - “தி.மு.க. இந்த வேலை நிறுத்தத்திற்காக குரல் கொடுத்துள்ளதே, அதற்கு நாம் ஒத்துழைப்பு கொடுப்பதா” என்று மீண்டும் மீண்டும் என்னைத் தாக்குவதையே பிறவிப்பயனாகக் கருதி அறிக்கை விடுத்துள்ளார்கள். வழக்கம் போல இந்த வேலை நிறுத்தத்தை “கபட நாடகம்” என்று தூற்றியிருக்கிறார்கள். இன்னும் இரண்டொரு நாளில் இலங்கையிலே தமிழ் இனமே பூண்டற்றுப் போய் விடுமோ என்று கதறிக் கொண்டிருக்கின்ற நேரத்திலேகூட - “இலங்கைத் தமிழர்களுக்காக ஒன்றுபட்டு குரல் கொடுப்போம், சிங்கள அரசை பணிய வைப்போம், அதற்கு இந்திய அரசையும் தொடர்ந்து குரல் கொடுக்க வைப்போம்” என்றெல்லாம் அவர்கள் கருதிடவில்லை.
கடந்த மூன்று நாட்களாக ராஜபக்ஷேயின் ராணுவம் முழுப் பகுதியையும் பிடித்து விட வேண்டுமென்ற வெறியோடு இதுவரை இல்லாத அளவிற்கு தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. உலக நாடுகள் எல்லாம் கொடுக்கும் குரலை சிங்கள அரசு செவி கொடுத்து கேட்க மறுக்கின்றது. ஐ.நா. சபையின் வேண்டுகோளையே உதாசீனப்படுத்துகின்றது. இங்கிலாந்து நாட்டின் பிரதமர்; ராஜபக்ஷேயை தொலைபேசியிலே தொடர்பு கொண்டு உடனடியாக போரை நிறுத்தும்படி கேட்டுக் கொண்ட போதிலும், ராஜபக்ஷே; போரை நிறுத்த முடியாது என்று கூறுகிறார். அமெரிக்க வெளி உறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் உட்; - “இலங்கையில் போரை நிறுத்தி மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி இலங்கை அதிபர் ராஜபக்ஷே மற்றும் விடுதலைப் புலிகளுக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தோம் - இதே போல சர்வதேச நாடுகளும் வேண்டுகோள் விடுத்தன - ஆனால் இருவருமே எங்களை மதிக்கவில்லை - பலமுறை வற்புறுத்திய
பிறகும் பல்வேறு வித முயற்சிகளை எடுத்த போதும் அதற்கு பலன் கிடைக்கவில்லை” என்று சொல்லியிருக்கிறார்.
“போர் நிறுத்தம் செய்யுங்கள்” என்று உலகமே கேட்கும் இந்த நேரத்தில் கூட “வேலை நிறுத்தம் செய்யுங்கள்” என்று இங்கே தி.மு.க. தலைவர் என்ற முறையில் நான் அறிவிப்பு வெளியிட்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருக்கிறது என்று அறிக்கை விடுத்துள்ளார் ஜெயா. இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம் வேண்டும் என்பதற்காகத்தானே நாம் வேலை நிறுத்தம் செய்து - “நம்முடைய குரலை ஒலிக்கலாம் வாருங்கள் - மத்திய அரசை மீண்டும் வலியுறுத்தி சிங்கள அரசை இணங்கச் செய்ய முயற்சிக்கலாம் வாருங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தேன்.
என்னுடைய வேண்டுகோளை ஏற்கக் கூடத் தேவையில்லை. நான் கூட்டிய அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கோ - மனித சங்கிலி நிகழ்ச்சிக்கோ - டெல்லியிலே பிரதமரைச் சந்திப்பதற்கோ ஜெயாவோ, வைகோவோ வரவில்லை தான், அப்போது புறக்கணித்ததைப் போல இப்போதும் புறக்கணித்திருக்கிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் இவர்களின் அறிக்கைகளைப் படிக்கும் - ராஜபக்ஷேயோ, மத்திய அரசோ என்ன நினைத்துக் கொள்ளும். “இலங்கையிலே தமிழன் செத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் இவர்களுக்குள் தான் எத்தனை பகை” என்று எண்ணிக் கொள்ளாதா? இலங்கையிலே போர் நிறுத்தம் நிரந்தரமாக ஏற்படுகின்ற வரையிலாவது இங்கேயுள்ள கட்சிகள் ஒற்றுமையாக இருப்பதாகவாவது காட்டிக் கொள்ளக் கூடாதா? தேர்தலில் இவர்களுக்கு இரண்டொரு இடங்கள் வேண்டும் என்பதற்காக இலங்கையிலே தமிழர்கள் சாகவேண்டுமா? இலங்கையிலே இந்த நிலை மேலும் தொடருமேயானால், அதற்கு எப்படி ராஜபக்ஷே மூலக் காரணமோ, அதைப் போல, இங்கேயுள்ள இப்படிப்பட்ட இந்தத் தமிழ் இன எதிர்ப்பாளர்களும் ஒரு காரணம் என்று உலகத் தமிழினம் கருதிக் கொள்ளாதா?
அவர்கள் ஒரு சிலரைத் தவிர தமிழகத்திலே உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் இந்த வேலை நிறுத்தத்திற்கு தங்களின் முழு ஒத்துழைப்பைத் தர முன் வந்தமைக்காக அவர்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வேலை நிறுத்தம்
காரணமாக பாதிக்கப்படும் பொது மக்களிடம் நம்மினம் இலங்கையிலே செத்து மடிந்து கொண்டிருக்கிறது; அவர்களுக்காக நாம் செய்யும் இந்தச் சிறிய தியாகத்தைப் பொறுத்துக் கொள்ள முன் வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும் - ஐம்பது ஆண்டுக் காலமாக நம் இலங்கைத் தமிழரைக் காத்திட நடத்தும் அறப் போராட்டங்களை இடைவிடாது நடத்திக் கொண்டே இருப்போம்.
நமது இந்த இடைவிடா முயற்சியின் விளைவாக இந்திய தேசிய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அவர்கள்; காங்கிரஸ் இயக்கத்தின் சார்பாக வெளியிட்டுள்ள - இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் அறிக்கை நமக்கு ஆறுதல் வழங்குகிறது. அதற்காக தமிழ் மக்களின் சார்பாக நன்றியைக் குவிக்கிறேன். இந்த அறிக்கைக்கு பிறகாவது சிங்கள அரசு உடனடியாக நிரந்தர போர் நிறுத்தத்தை அறிவிக்குமென்று எதிர்பார்க்கிறேன்.
அன்புள்ள, மு.க. 23-4-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 238–241. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.