முரசொலி கடிதங்கள் · 3397
நாதியற்ற ஈழத் தமிழரைக் காத்திட நடுவணரசுக்கு வேண்டுகோள்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3397. நாதியற்ற ஈழத் தமிழரைக் காத்திட நடுவணரசுக்கு வேண்டுகோள்!
உடன்பிறப்பே,
இலங்கையில் கொந்தளிப்பு - நிலைமை மிக மிக மோசம் - கெடு முடிந்தது - தமிழர்கள் பலி - ராணுவத் தாக்குதல் - இறுதிக் கட்டம் என்ற செய்திகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. தொலைக்காட்சிகளைக் காண முடியவில்லை. அங்கே நம் இனம் உயிரை விட்டுக் கொண்டிருக்கும் காட்சியை படம் பிடித்துக் காட்டுகிறார்கள். தமிழினத்தின் நரம்புகள் அங்கே அறுபடுகின்றன. அவல ஓசை கேட்டுக் கொண்டே உள்ளது. வருகின்ற செய்திகள், நம் உடம்பில் தீயை அள்ளிக் கொட்டுகின்றன.
எனக்கு வழி தெரியவில்லை - பொறுப்பான இடத்தில் இருக்கிறோமே - கையறு நிலையில் நம் இனத்தைக் காப்பாற்ற இயலாத வகையில் இருக்கிறோமே - என்ன செய்வதென்று புரியவில்லை. மூன்று நாட்களில் மத்திய அரசுக்கு - பிரதமருக்கு - காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களுக்கு - வெளி உறவுத் துறை அமைச்சருக்கு இரண்டு முறை தந்தி கொடுத்து விட்டேன். அங்குள்ள தமிழர் படும் வேதனைச் செய்திகளைக் கேட்டு துடித்துக் கொண்டிருக்கும் நம் உள்ளத்தை மேலும் துளைத்திடும் வண்ணம் இங்கேயுள்ள அரசியல் கட்சிகள் இதிலும் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக - நம்மால் தமிழர்களைக் காப்பாற்றிட முடியுமென்றும், ஆனாலும் நான் எதுவும் செய்யாமல் இருப்பதைப் போலவும் ஏசுகிறார்கள், பேசுகிறார்கள். அவர்களுக்கு இலங்கைத் தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதைவிட அதைக் காரணமாகக் கொண்டு தி.மு.க.வை ஒழித்திட முடியுமா என்றுதான் கனவு காண்கிறார்கள்!
இந்தியாவை விட பெரிய நாடுகள் எல்லாம் இலங்கையில் நடைபெறும் கொடுமைகளைக் கண்டிக்கின்றன, எச்சரிக்கை
செய்கின்றன; வேண்டுகோள் விடுக்கின்றன. ஆனால் சிங்கள அரசோ எதையும் காதில் போட்டுக் கொள்ளத் தயாராக இல்லாத நிலையில் உள்ளது. இந்திய அரசினர் நம் வேண்டுகோளுக்கிணங்க இலங்கைக்கு பல வழிகளிலும் முயற்சி மேற்கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீதும் பழி சொல்லப்படுகிறது. நம் இல்லத்தில் குழந்தைகள் நோயினால் துன்பப்படுவதைக் காண சகிக்காமல் கடவுளை நினைத்து கண்ணில்லையா உனக்கு என்று தூற்றுவதில்லையா? அதைப் போலத்தான் மத்திய அரசு மீது சாற்றப்படும் பழிச் சொற்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் மத்திய அரசு மீது வேண்டுமென்றே அரசியல் நோக்கத்தோடு பழி கூறுவதையும் நம்மால் காண முடிகிறது.
இலங்கையிலே பாதிக்கப்படும் தமிழர்களின் துன்பத்திற்கு முடிவு காண வேண்டுமென்பதில் நான் எவ்வளவு வேதனையோடு இருப்பேன், இருக்கிறேன் என்பதை என்னை அறிந்தவர்கள் நன்கறிவார்கள். ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும் - காங்கிரஸ் கட்சியோடு உறவு கொள்ளக் கூடாது - பதவிகளைத் துறக்க வேண்டும் என்றெல்லாம் சிலர் மனதிலே எதையோ எண்ணிக் கொண்டு சொல்கிறார்கள். இலவச ஆலோசனைகளை உள் நோக்கத்தோடு வெளியிடுகிறார்கள். ஆனால் நாம் பதவியிலிருந்து விலகி விடுவதாலோ - பதவிகளைத் துறந்து விடுவதாலோ இலங்கையிலே உள்ள பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு விடிவு காலம் வந்து விடுமா? அவர்களுக்கு தற்போது உள்ள சிறிய ஆதரவு கூட நாம் பதவி இழப்பதால் போய் விடும் என்று அவர்களைச் சார்ந்தவர்களே நம்மிடம் கூறுகிறார்கள். மத்திய அரசிடம் வலியுறுத்தி வேண்டுகோள் விடுவதற்குக் கூட அதிகாரப் பொறுப்பிலே ஆள் இல்லாத நிலை தமிழகத்திலே ஏற்பட்டு விடும் என்கிறார்கள்.
இலங்கையில் தமிழினத்துக்கு எதிராக இடைவிடாது போர்க்கோலம் கொண்டிருக்கிற சிங்களவர்களின் இன வெறியை அகற்றுவதற்கு ஏற்ற மனிதாபிமான நடவடிக்கைகள் இதுவரையில் தக்க வகையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதை வேதனையுடன் சுட்டிக்காட்ட வேண்டியவனாக இருக்கிறேன். மாடாக உழைத்து, இலங்கைத் தீவுக்கோர் மகிமையை ஏற்படுத்திய நம்மின் மக்கள் இன்று மண்ணில்
நெளியும் புழுவாக மிதிக்கப்படுகின்றார்கள். அங்கே தமிழ் மழலைகளை - அவர்களை பெற்றவர்களை - ஈழத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களை - ஈரத்தை இதயத்தில் காய வைத்துக் கொண்டோர், வாட்டி வதைக்கின்ற கொடுமைகளைத் தொலைக்காட்சி பெட்டிகளிலும், செய்தியேடுகளிலும் கண்டும் கேட்டும், நம் கண்களுக்கு பார்வைத்திறன் பட்டுப் போய் இருக்கக் கூடாதா? காதுகள் செவிடாகியிருக்கக் கூடாதா என்று அலறிடத் தான் தோன்றுகின்றது.
எத்தனை ஆண்டுகளாக இந்தக் கொடுமை? எத்தனையெத்தனை இன்னல்கள்? மத்திய அரசைப் பொறுத்தவரையில் இது இன்னொரு நாட்டுப் பிரச்சினை. மிகுந்த கவனத்தோடும், எச்சரிக்கையோடும் அணுகிட வேண்டிய பிரச்சினை. ஆனால் அவற்றுக்கெல்லாம் மேலாக இது மனிதாபிமான பிரச்சினை. ஆறு கோடி மக்கள் தமிழர்கள் இங்கே இந்தியாவில், தமிழ்நாட்டில்! அந்த தமிழ் இனத்தின் ஒரு பகுதி - சில லட்சம் பேர் - இலங்கையிலே வேட்டையாடப்படுவதை எப்படி சகித்துக் கொண்டிருக்க முடியும்? இந்த உண்மையை அறியாதவர்கள் அல்ல மத்தியிலே ஆட்சி புரிவோர்! நாம் கை பிசைந்து நிற்கிறோம். தாய்க் குலம் சில நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் செய்தியும் - அவர்களில் ஒருசிலரின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட செய்தியும் ஏடுகளில் வெளிவந்ததைப் பார்த்து விட்டு - அய்யோ, அவர்களுக்கு ஏதாவது ஆகி விடக் கூடாதே என்று துடித்துப் போய் என்ன செய்வதென்று புரியாமல், என் மகள் கனிமொழியை தொலைபேசியிலே அழைத்து - அந்தத் தாய்மார்கள் உண்ணாவிரதம் இருக்கும் இடம் எது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நீயே அங்கே சென்று அந்தப் பெண்களிடம் பேசம்மா, பெண்ணுக்குப் பெண் தான் ஆறுதல் கூறி சமாதானம் செய்திட முடியும், தந்தை மூலமாக சோனியா காந்தியிடம் முயற்சி செய்யச் சொல்கிறேன், உங்கள் உடல் நிலை முக்கியம், உண்ணா விரதத்தை கை விடுங்கள் என்று கேட்டுக் கொள்ளத்தான் என்னால் முடிந்தது? அதற்கு முன்பே அரசு தரப்பில் அவர்களைப் பேச்சுவார்த்தை நடத்த அழைத்த போது அவர்கள் வரவில்லை. ஆனாலும் இங்கேயுள்ள சில கட்சிகளின் தலைவர்கள், அந்த உண்ணாவிரதத்தைப் பற்றி அரசு இரக்கமின்றி இருப்பதாக - இரக்கமின்றி அறிக்கை விடுகிறார்கள். நம்மைப் பொறுத்த வரையில் மத்திய அரசின் மூலமாகத்தான்
நம்முடைய மனக் குறையை இலங்கை அரசுக்கு தெரிவித்திட முடியும். இலங்கை அரசோடு நேரடியாக சர்ச்சைக்குப் போக வேண்டுமென்று சொல்கிற அளவிற்கு அரசியல் தெரியாதவர்கள் அல்ல நாம். இதிலே ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் இடையே உள்ள பிரச்சினை என்பதை விட - இது ஒரு மனிதாபிமான பிரச்சினை என்பதை யாரும் மறந்து விட முடியாது.
அம்மையார் இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்தபோது - அயர்லாந்தில் ஏறத்தாழ நான்கு அல்லது ஐந்து இளைஞர்கள் சிறை சாலையிலே தங்களை அரசியல் கைதிகளாக நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை வைத்து அறுபது நாள், எழுபது நாள் உண்ணாநோன்பு மேற்கொண்டு துடிக்கத் துடிக்கச் செத்தார்கள். அப்போது அம்மையார் இந்திரா காந்தி அயர்லாந்திற்கும், இந்தியாவிற்கும் என்ன தொடர்பு என்று பார்க்கவில்லை. அதை ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாகத்தான் எடுத்துக் கொண்டு அப்போதிருந்த இங்கிலாந்து பிரதமர் தாட்சர் அவர்களுக்கு அந்த நிலைமையைக் கவனிக்க வேண்டும் என்று கண்டிப்பான வேண்டுகோள் விடுத்தார்கள். அந்த இந்திரா காந்தியின் மருமகளாம் சோனியா காந்தி இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே செத்துக் கொண்டிருக்கும் தமிழர்களைக் காப்பாற்ற மாமியாரின் வழியிலே குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய எதிர்பார்ப்பு.
இதற்கொரு வழியாகத்தான் இந்திய அரசு, இலங்கையிலே உள்ள தூதுவரக தொடர்புகளை அறுத்துக் கொள்ள உடனடியாக முன் வர வேண்டுமென்று இரண்டு நாட்களுக்கு முன்பு தந்தி கொடுத்தேன். அந்த வேண்டுகோள் மீதான முடிவு உடனடியாக எடுக்கப்பட்டு விட்டால், மிச்சம் இருக்கின்ற தமிழர்களும் அங்கே கொல்லப்பட்டு விடுவார்களோ என்ற அளவிற்கு நிலைமை போய்க் கொண்டிருக்கின்றது.
“தமிழ் ஈழம் வேண்டும்” - “அது ஒன்று தான் வழி” - “விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்” - “அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தீவிரவாதியா இல்லையா” - இதுவெல்லாம் தற்போது எங்களுக்குப் பிரச்சினை அல்ல. எங்களுக்கு இப்போது வேண்டியது, எல்லாம் எங்கள் தமிழனின் உயிர். நாளும் நாளும் இத்தனை பேர் பலி என்று வந்து கொண்டிருக்கும் செய்தி உடனடியாக நிறுத்தப்பட
வேண்டும். அதற்கு வழி நிரந்தரமான போர் நிறுத்தம்தான். உலகில் உள்ள மிகப் பெரிய நாடுகள் எல்லாம் சொல்லியும் - சிங்கள அரசு அந்த நிரந்தர போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்க மறுக்கிறது. அதற்கு என்ன வழி? இதுதான் எங்களின் கோரிக்கை! நானும் என் வாழ்நாளில் 1956ஆம் ஆண்டிலிருந்து இலங்கைத் தமிழர்களுக்காக எத்தனையோ போராட்டங்களில் பங்கெடுத்து விட்டேன். அதற்காகவே சிறைச் சாலை சென்றிருக்கிறேன். சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்திருக்கிறேன். என் ஆட்சியையே எங்கள் கட்சி இழந்திருக்கிறது. என்றாலும் தமிழர்கள் அல்ல - தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும் சிலரே, இலங்கைத் தமிழர்களுக்காக நான் குரல் கொடுப்பதை நாடகம் என்றும் மோசடி என்றும் விமர்சனம் செய்யும் போது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதை விட நான் என்ன செய்ய வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்கிறார்கள். மத்திய அரசை நான் வலியுறுத்தவில்லையா? கடிதம் எழுதவில்லையா? பிரதமரைச் சந்திக்க வில்லையா? சோனியாவை பார்க்க வில்லையா? பிரணாப் முகர்ஜியை சென்னைக்கே வரச் செய்து அவரிடம் பேசவில்லையா? ப.சிதம்பரம் அவர்களிடம் விவாதிக்க வில்லையா? தந்திகள் கொடுக்க வில்லையா? அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தவில்லையா? மனித சங்கிலி நடத்த வில்லையா? நீதியரசர்களைக் கொண்ட குழுவினை டெல்லிக்கு அனுப்பி குடியரசுத் தலைவரிடமும், சோனியா காந்தியிடமும் பேசச் செய்யவில்லையா? என்ன செய்யவில்லை? இவ்வளவும் செய்த பிறகும் - அரசியலுக்காக - நான் நாடகமாடுவதாக இவர்கள் கூறலாமா?
கூறுபவர்கள் கூறட்டும்.
கூர்த்த மதி படைத்தோர்க்கு
உண்மை புரியும்!
ஆனால் உலகத் தமிழர்களின்
உள்ளம்; சோக வெள்ளத்தில்
மிதக்கிறதே;
அந்த வேதனையைத் துடைத்திட
வழிவகை; இந்தியப் பேரரசிடம் தானே இருக்கிறது;
நாம் என்ன செய்வது?
அழுது, புலம்புவதைத் தவிர!
(குறிப்பு :- பொதுச் செயலாளர் பேராசிரியர் சுற்றுப்பயணத்தில் வெளியூரில் இருக்கிறார். அவர் வந்தவுடன் கலந்து பேசி கழகத்தின் உயர் நிலை செயல் திட்டக் குழுவினை கூட்டலாம் என்று கருதுகிறேன்.)
அன்புள்ள, மு.க. 22-04-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 232–237. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.