முரசொலி கடிதங்கள் · 3400
இரு முனை பாதுகாப்புக்காக; இன்றே எழுக!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3400. இரு முனை பாதுகாப்புக்காக; இன்றே எழுக!
உடன்பிறப்பே,
இந்தியத் திருநாட்டின் 15வது நாடாளு மன்றத்திற்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கான பணி முடிந்து விட்டது. இந்தத் தேர்தலில் தி.மு. கழகத் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு அணியில் - தி.மு. கழகம் 21 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் 2 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 இடத்திலும் போட்டியிடுகின்றன.
வேட்பாளர்கள் எல்லாம் வாக்குச் சேகரிக்கும் பணியிலே முனைப்பாக ஈடுபட்டுள்ள செய்தியினை அன்றாடம் ஏடுகளின் வாயிலாகப் படித்தும் - தொலைபேசி வாயிலாக ஒரு சிலர் கூறுவதிலிருந்தும் தெரிந்து கொண்டிருக்கிறேன். சில தொகுதிகளில் அந்தப் பணி வேகமாக நடைபெற்ற போதிலும், ஒரு சில இடங்களில் நான் எதிர்பார்க்கின்ற அளவிற்கு வாக்கு சேகரிக்கும் பணி நடைபெறவில்லை என்பதை குற்றச்சாட்டாக அல்ல - இன்னும் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் செய்திட வேண்டுமென்ற எண்ணத்தோடும் ஆர்வத்துடனும் எழுதிட விரும்புகிறேன். 1967ஆம் ஆண்டு வாக்கில் பெரியவர் பக்தவத்சலம் அவர்கள் கழகத் தோழர்களின் தேர்தல் பணிகளைப் பார்த்து விட்டு - “சிங்கிள் டீயைக் குடித்துவிட்டு மணிக்கணக்கில் பணியாற்றக் கூடியவர்கள் தி.மு.கழகத் தோழர்கள்” என்று பாராட்டியதை மறந்திருக்க மாட்டாய். அத்தகைய பாராட்டுக்குச் சொந்தக்காரர்களாகிய உங்களிடம் நான் மேலும் மேலும் அத்தகைய பணிகளை எதிர்பார்க்கின்றேன்.
நடைபெறும் தேர்தல் தமிழகச் சட்டமன்றத்திற்கான தேர்தல் அல்ல - மத்திய அரசிலே யார் அமரப் போகிறார்கள்
என்பதைப் பற்றி முடிவு எடுக்கக்கூடிய தேர்தல். நாம் தொடர்ந்து - கடந்த ஐந்தாண்டு காலமாக நாம் யாரோடு கூட்டணி அமைத்து 2004ஆம் ஆண்டிலே வெற்றி பெற்றோமோ - அவர்களுடன்தான் இப்போதும் இருக்கிறோம் என்ற பெருமையோடு இருக்கின்றோம். ஐந்தாண்டுகால மத்திய ஆட்சிக்கு நாம் எந்த நேரத்திலும் இடைஞ்சல் கொடுத்ததில்லை. நல்லவை நடைபெற உரிமைக்குரல் எழுப்பாமல் இருந்ததும் இல்லை. தோழமை என்றால் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு உதாரணமாக நாம் அங்கே பணியாற்றியிருக்கிறோம். மத்திய அரசின் முக்கிய பங்குதாரர்களான காங்கிரஸ் கட்சியும் நாம் கேட்டுக் கொண்ட கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றியிருப்பதை நீயும் அறிவாய், நம் தமிழ்நாடும் அறியும். குறிப்பாக நம்முடைய மொழியை செம்மொழியாக்கிய ஒரே காரியத்திற்காகவே நாம் மீண்டும் மீண்டும் அந்தக் கட்சியை ஆதரிக்கலாம். அதுபோலவே சேது சமுத்திரத் திட்டம் எத்தனை ஆண்டுகளாக நாம் கேட்ட கோரிக்கை? 2427 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்தத் திட்டத்தை நமக்கு அளிக்க முன் வந்த அரசல்லவா ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. பதவியேற்றவுடன் - நாம் கோரிக்கை வைத்தவுடன் நெசவாளர்களுக்கான சென்வாட் வரியை ரத்து செய்த அரசு அல்லவா? விவசாயிகளின் கடன்களை ரத்து செய்த அரசு அல்லவா? செம்மொழி மைய அலுவலகத்தை மைசூரிலிருந்து மாற்றிக் கொடுத்து - சென்னையிலே அமைத்திட்ட அரசல்லவா? கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்தை சென்னைக்கருகிலே அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று ஆயிரம் கோடி ரூபாய் வழங்க முன் வந்த அரசல்லவா? தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் மத்திய அமைச்சர்களாக இடம் பெற உதவிய அரசு அல்லவா தற்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. இப்படி எழுதிக் கொண்டே போகலாம். ஏட்டில்தான் இடமில்லை!
இந்தக் கடிதத்தை நீ படித்துக் கொண்டிருப்பது 26-4-2009. இன்னும் 17 நாட்கள்தான் எஞ்சி இருக்கின்றன. எதற்கு? நீ வாக்குச் சாவடிக்குள் சென்று உன் வாக்குகளை பதிவு செய்யவும் - உன் முயற்சியால் எத்தனை வாக்காளர்களை நம் அணிக்கு ஆதரவாக நீ திரட்டி வைத்திருக்கிறாயோ, அவர்கள் எல்லாம் - அவர்களின் வாய்மைநிறை வாக்குகளை நம் அணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பதிவு செய்திடவும்!
தி.மு. கழகம் என்றால் சொந்தக் கட்சி வேட்பாளர்களை விட அதிகமாகத் தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பணியாற்றும் என்ற பெருமை நமக்குண்டு. எனவே தோழமைக் கட்சிகளைச் சார்ந்தவர்கள் - வந்து நம்மை அழைக்க வேண்டும் - நமக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்த்துக் காத்திருக்காமல் - நிற்பது எந்தக் கட்சி என்பதல்ல - ஜனநாயக முற்போக்கு அணியின் சார்பில் போட்டியிடுவது யார் எவர் என்பது முக்கியமல்ல - இந்த அணியின் வெற்றிதான் குறிக்கோள் என்ற உணர்வோடு நீ பாடுபடுவாய் என்று எனக்குத் தெரியும் - இருந்தாலும் அண்ணன் எழுதினானா என்று நீ கேட்கக் கூடாதல்லவா? என் பணியிலே நான் தவறி விடக் கூடாது அல்லவா? அதற்காகவே நினைவூட்டுகின்றேன்.
அடுத்து - உன்னுடைய தொகுதியிலே தி.மு. கழகம் போட்டியிட வேண்டுமென்று விரும்பி, தொகுதிப் பகிர்வில் தொகுதி தோழமைக் கட்சியோடு பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் நீயே போட்டியிட கருதியிருந்து அந்த வாய்ப்பு பறிபோய் வேறொருவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கலாம். அதைப்பற்றியெல்லாம் நினைப்பதற்கான நேரம் முடிந்து விட்டது. களத்திற்குள்ளே இறங்கி விட்டோம். இனி வெற்றி ஒன்றுதான் நம் குறிக்கோளாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டுமென்று அண்ணன் நான் என் அருமைத் தம்பியை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கி விட்டன. கழகத்தின் சார்பில் பொதுச் செயலாளர் பேராசிரியர் இரு முறை சுற்றுப் பயணம் சென்று வந்துள்ளார். சென்ற இடங்களில் எல்லாம் நீ நன்றாகப் பணியாற்றுவதாக மன நிறைவோடு என்னிடம் கூறினார். பொருளாளர் தம்பி மு.க. ஸ்டாலின் முதற்கட்டமாக தென் மாவட்டங்களில் தன் சுற்றுப் பயணங்களை முடித்துக் கொண்டு திரும்பியுள்ளார். அவர் அன்றாடம் அந்தந்த தொகுதியின் நிலவரங்களைப் பற்றி என்னிடம் விவரித்துக் கொண்டிருக்கிறார். என்னிடம் சான்றிதழ் வாங்கினாலும் வாங்கலாம், அவரிடம் சான்றிதழ் பெறுவது கடினமான காரியம். இருந்தாலும் அவர் ஒரு சில இடங்களில் உங்களில் பலர் நன்றாகப் பணியாற்றுவதாகவும், ஒரு சிலர் மட்டும் அவ்வளவு தீவிரமாகப் பணியாற்றவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். அப்படி அடையாளமிடப்பட்ட
உடன்பிறப்புகள் என்னிடமிருந்து அழைப்பு வருமென்று எதிர்பாராமல் நீங்களாகவே இன்று முதல் தேர்தல் பிரச்சாரப் பணிகளிலே ஈடுபட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். தேர்தல் பிரச்சாரத்தில் கழகத்தின் முக்கிய பேச்சாளர்களும், கலைத் துறையைச் சேர்ந்த நம்முடைய நண்பர்களும் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்தத் தேர்தல் நேரத்தில் - ஆபத்தான அறுவை சிகிச்சை செய்து கொண்டு நான் நேரில் வர இயலாமல், வந்து வாக்கு கேட்க இயலாமல் இருக்கிறேனே என்ற குறை பெரும்பாலான தோழர்களுக்கு இருப்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஒவ்வொரு நாளும் மருத்துவர்களிடமும், என் வீட்டாரிடமும் நான் போராட்டமே நடத்திக் கொண்டிருக்கிறேன். தேர்தல் நேரங்களில் முதல் நாள் மாலை 2 மணி, 3 மணி என்ற அளவில் வேனில் ஏறினால், மறுநாள் பொழுது விடிந்து சூரியன் புறப்படுகிற வரை நூற்றுக்கணக்கான மைல்கள் அந்த வேனிலேயே சென்று நான் தேர்தல் பிரச்சாரம் செய்த நிகழ்ச்சிகளை எல்லாம் நீ நன்றாக அறிவாய். ஒரு முறை கிருஷ்ணகிரியிலும் - ஒரு முறை தூத்துக்குடியிலும் காலை 7 மணி அளவிலேதான் உதய சூரியன் எழுந்த பிறகு தான் என்னுடைய சுற்றுப்பயணம் நிறைவுற்ற நினைவுகள் எல்லாம் எனக்கு வருகின்றன.
காலையில் மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து அன்னை இந்திரா காந்தி அம்மையாரோடு தேர்தல் பிரச்சாரம் செய்யத் தொடங்கி - மறுநாள் விடிகின்ற நேரத்தில் கன்னியாகுமரியில் பிரச்சாரத்தை முடித்த நினைவும் வருகிறது. அதைப் போல தற்போது என்னால் பிரச்சாரம் செய்ய இயலா விட்டாலும் - ஒரு சில முக்கிய நகரங்களுக்கு வந்தாவது அந்தந்தப் பகுதிகளிலே உள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்யலாம் என்று கருதிக் கொண்டிருக்கிறேன்.
முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை என்பதால் நான் அன்றாடம் - அணு அணுவாக அவதியுற்று; அதனையும் தாங்கிக் கொண்டுதான்; இருப்பது ஓர் உயிர், அது இந்த நல்ல காரியத்துக்காகப் போகட்டுமே என்ற நினைவுடன்; இந்தப் பயணங்களை மேற்கொள்கிறேன். எனவே நான் ஒவ்வொரு தொகுதிக்கும் நேரில் வரவில்லை என்பதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தேர்தல் பணிகளைத் தொடர்ந்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். எந்தெந்த ஊர்களுக்கு
நான் வருகிறேன் என்பதைப் பற்றி தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
தேர்தல் பணிகளிலே நாம் இந்த அளவிற்கு ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் - நம்மோடு தொப்பூழ்க் கொடி உறவு கொண்ட ஈழத் தமிழர்கள் இலங்கையிலே அன்றாடம் செத்துக் கொண்டிருக்கும் செய்திகளை ஏடுகளின் மூலமாகவும், தொலைக்காட்சிகளின் வாயிலாகவும் கண்டும் கேட்டும் வேதனைத் தீயிலே வாடிக் கொண்டிருக்கிறோம். நம்மால் முடிந்த முயற்சிகளை எடுத்து வருகிறோம். நம்முடைய மத்திய அரசின் வாயிலாக எப்படியாவது தமிழ் இனத்தைக் காப்பாற்றுங்கள் - அதற்கான முயற்சிகளிலே ஈடுபடுங்கள் என்று பல்வேறு முனைகளிலிருந்தும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். இலங்கைத் தமிழர்பால் உண்மையான அக்கறை கொண்ட கலைத்துறையைச் சேர்ந்தவர்களும், மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே மிகுந்த அக்கறையோடு குரல் எழுப்பியிருக்கின்றார்கள்.
அதே நேரத்தில் இலங்கையிலே போர் நிறுத்தம் நிரந்தரமாக செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்திலே வெற்றிகரமாக வேலை நிறுத்தத்தை நாம் நடத்திக் கொண்டிருந்த வேளையில், இலங்கைத் தமிழர்களுக்கு செய்யும் துரோகத்தைப் போல - தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களையும், குறுக்குச்சால் ஓட்டியவர்களையும் வேலை நிறுத்தத்திற்கு எதிராக செயல்பட்டவர்களையும் அடையாளம் கண்டு கொண்டு, உண்மையிலே இலங்கைத் தமிழர்களுக்குக் குரல் எழுப்புபவர்கள் யார், போலியாக நடிப்பவர்கள் யார் என்பதை புரிந்து கொள்ள முடியாதவர்கள் அல்ல தமிழ் மக்கள்! நம்முடைய நிலைமைகளையும், இலங்கைத் தமிழர்களையும் நன்றாகவே உணர்ந்துள்ள மத்திய அரசு, திருமதி சோனியா காந்தி அவர்களும் எப்படியாவது இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட வேண்டுமென்ற எண்ணத்தோடுதான் அவர்களும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த உண்மையான உறவு கொண்ட உள்ளத்துடன்தான் அறிக்கைகள் மூலமாக வேண்டுகோள்களை விடுப்பதோடு நிறுத்தாமல் - இரண்டு நாட்களாக நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் அவசர ஆலோசனை கூட்டங்களை நடத்தியதோடு - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளி உறவுத் துறை செயலாளர் சிவசங்கர
மேனன் ஆகியோரும் இலங்கை சென்று ராஜபக்சேயை சந்தித்து - இந்திய அரசின் சார்பில் நிலைமைகளை எடுத்துக் கூறியிருக்கின்றார்கள். பிரதமர் என்னிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். உள்துறை அமைச்சர் அன்பு நண்பர் ப. சிதம்பரமும் சென்னை வந்து என்னைச் சந்தித்து விபரம் கூறிச் சென்றுள்ளார்.
எனவே ஒரே நேரத்தில் இரண்டு முக்கியமான பணிகளைச் சந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றியாக வேண்டும் - மற்றொன்று தேர்தல் களத்திலே எதிரிகளைச் சந்தித்து வெற்றி பெற்றாக வேண்டும். எனவே உதவாதினி ஒரு தாமதம் என்று உடன் எழுக; உடன்பிறப்பே! இலங்கையில் இனத்துக்குப் பாதுகாப்பு! இங்கே நமது தமிழகத்துக்கும் தாயகத்துக்கும் பாதுகாப்பு!
அன்புள்ள, மு.க. 26-4-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 252–257. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.