முரசொலி கடிதங்கள் · 3403
பாதம் பணிகிறேன்; பணியாற்றப் புறப்படு!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3403. பாதம் பணிகிறேன்; பணியாற்றப் புறப்படு!
உடன்பிறப்பே,
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் எல்லா கட்சிகளின் சார்பிலும் நடைபெற்று - அந்தந்த கட்சிகளின் தரத்திற்கேற்ப விமர்சனங்கள், கருத்துரைகள், வேண்டுகோள்கள் அனைத்தும் வழங்கப்பட்டு - அந்த நிலை இன்றோடு (11.5.2009) நிறைவடைந்து, நாளை மறுநாள் (13.5.2009) - தகத்தகாய ஒளிபரப்பி உதய சூரியன் எழும் காட்சியையும் - அக்கதிரவனை “கை” கூப்பி வணங்கி இந்தியத் திருநாட்டு மக்கள் தொழும் மாட்சியையும் - பொருத்தமிலா முரண்பாட்டுக் கூட்டணியின் முகமூடியைக் கிழித்தெறிய - விடுதலை சிறுத்தைகளின் ‘திருமாப் படை’ வரிசை தொண்டர்களுடன் நமது பைந்தமிழ் நாட்டின், பட்டி தொட்டி முதல் பட்டினக் கரை வரையில் பவனி புறப்பட்டு -
பாருக்குள்ளே நல்ல நாடு - நமது இந்தியத் திருநாடு - அதில் தாகூரும், பாரதியும், பாரதிதாசனும் போற்றிய ஜனநாயக மாண்புக்கு, வேறெங்குமில்லை ஈடு - என்ற உரத்த குரலெழுப்பி, உணர்வு பொங்கி, நமது அணியினர் வாகை சூடி - வாக்கு திரட்டிட - கிளம்பியிருப்பாய் என எனக்குத் தெரியும். அல்லும் பகலும் அயர்வின்றி, கழக உடன் பிறப்பாம் நீயும் - காங்கிரஸ் நண்பர்களும் - விடுதலை சிறுத்தைகளின் செயல் வீரர்களும் ஆற்றி வந்துள்ள பணிக்கு - கரம் குவித்து நன்றி தெரிவிப்பதா?
எனக்கு உடல் நலம் இல்லா நேரத்திலும் என் பணியையும் சேர்த்து ஆற்றிட ஆங்காங்கு ஆடி ஓடிய அணியின் தொண்டர்களாம் உமது பாதங்களைப் பணிவதா?
கொளுத்தும் வெயிலில் உடலில் முத்து முத்தாக வடியும் வியர்வைத் துளிகளைக் கூடத் துடைத்திட நேரமின்றி, நீ தொண்டாற்றி வரும் தூய பாங்கு என் இதயத் துடிப்புகளுக்கு
இன்னும் இன்னும், மேலும் மேலும் வலிமை சேர்த்து என்னை ஊக்கப்படுத்தி வருகின்றன.
கடந்த 6 ஆம் தேதி இந்தியத் திருநாட்டின் தியாகத் திருவிளக்கு திருமதி சோனியா காந்தி வருவதாக இருந்து, என் உடல்நிலை காரணமாக அந்நாள், பத்தாம் தேதி அன்று ஒத்தி வைக்கப்பட்டு - பசு மரத்தாணி போல் கழகம், காங்கிரஸ் ஆகிய இரண்டின் ஒற்றுமை ஓங்கி வளர்ந்திருக்கின்றது - உரமாகப் பதிந்திருக்கின்றது என்ற உண்மையை எரிச்சல்காரர்களுக்கும் எடுத்துக் காட்டுகின்ற மாட்சியாகவன்றோ, அன்றைய தீவுத் திடல் காட்சி அமைந்தது.
அக்காட்சி என் உடல் நலிவைப் போக்கிற்று. அம்மையார் சோனியா காந்தியின் மன வலிவைப் பெருக்கிற்று.
நலிவும் குறைந்து - வலிவும் மிகுந்துள்ள இந்த நிலை நம்முடைய தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் தோழமைக்குரிய தலைவர்களும், தொண்டர்களும், முன்னோடிகளும், முற்போக்குவாதிகளும் மத நல்லிணக்க சமுதாய தேவை என்றும், மதச் சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்றும், அரும்பணிகளை ஆற்றுகின்ற நமக்கு - அய்யாவும், அண்ணாவும், அருமைக் காமராஜரும் வழங்குகின்ற வாழ்த்துகளாகக் குவியட்டும்.
அந்த வாழ்த்துகள் அனைத்தும் என்னுயிரே! உடன்பிறப்பே, உன் போன்றோர் உழைப்பால் வாக்குகளாக திரளட்டும்!
தீவுத் திடல் கூட்டத்தில் நான் சொன்னது போல் பகைவர்களின் பச்சைப் பொய்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு நம் பணியில் கவனம் செலுத்துவோம் நாம். யார் வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் பேசட்டும்.
நான் பத்தாம் தேதி கூட்டத்தில் குறிப்பிட்டதைப் போல, “பாம்பு நம்மைக் கடித்து விட்டது என்பதற்காக - அந்தப் பாம்பை திரும்பக் கடிப்பது பைத்தியக்காரத்தனம்” என்பதை மறவாமல் பணி தொடர்ந்திடு!
இந்தியத் தாயகத்தின் பாதுகாப்புக்கும் - தமிழ் நிலத்தின் வளத்திற்கும் -
வெற்றிபெற வேண்டியது நமது அணிதான் என்பதை மறவாதே!
நான் உன்னிடத்திலிருந்து தொலைவில் இல்லை - உன்னோடுதான் இருக்கிறேன்.
உன் உயிர் மூச்சாய் - உள்ளத்தின் துடிப்பாய் -
உன்னுயிரோடும் - உயிர் மூச்சோடும் கலந்து பணியாற்றிக் கொண்டுதான் இருக்கிறேன்.
மறந்தும் இந்நாளில் சிறிது ஓய்வு கொள்ள நேரிட்டால் - எந்நாளும் இந்நாட்டு மக்கள் - தாழ்வு மிஞ்சி; மதமாச்சரியங்களுக்கு பலியாகி விடுவார்கள் என்பதையும் - மத நல்லிணக்கத்தை மறந்து விடுவார்கள் என்பதையும் கவனத்தில் கொண்டு காரியம் ஆற்றிடு!
கவனம்! கவனம்! இதற்கு மேல் உனக்கு நான் சொல்ல வேண்டியது என்ன இருக்கிறது?
உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்களுக்காக -
இலங்கையில் வாழ்கின்ற ஈழத் தமிழ்ப் பெருங்குடி மக்கள் சம உரிமைக்காக -
ஐம்பதாண்டு காலத்திற்கு மேலாக என்னை அர்ப்பணித்துக் கொண்டவன், உன்னை வேண்டுகின்றேன்.
என் உயிரின் உயிரே! உதவாதினி ஒரு தாமதம்! உடனே புறப்படு! உழைத்திடு! ஓயாது உழைத்திடு! இமாலய வெற்றியைக் குவித்திடு!
அன்புள்ள, மு.க. 12-5-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 265–267. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.