முரசொலி கடிதங்கள் · 3405
குழந்தையின் உயிரைக் குடித்து தாயின் குடலுக்குள் சென்ற குண்டு!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3405. குழந்தையின் உயிரைக் குடித்து தாயின் குடலுக்குள் சென்ற குண்டு!
உடன்பிறப்பே,
மக்களவைக்கான தேர்தல்கள் தமிழகத்தில் ஒன்றிரண்டு சிறு சிறு சம்பவங்களைத் தவிர அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளன என்று தேர்தல் ஆணையமே அறிவித்துள்ளது. தமிழகத்தில் 67 முதல் 68 சதவிகிதம் வரை வாக்குப் பதிவுகள் நடந்துள்ளதாக ஏடுகளில் செய்திகள் வந்துள்ளன. வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு என்று காலையில் ஒரு சில இடங்களிலிருந்து செய்திகள் வந்த போதிலும், அதுவும் சிறிது நேரத்திற்குள் சரி செய்யப்பட்டு விட்டது. அந்தச் சிறு சிறு கோளாறுகள் கூட தேர்தல் ஆணையத்தின் பொறுப்பே தவிர, அதற்கும் அரசுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.
ஆனால் ஒரு சில நாட்களாக சிலர் தேர்தல் நேரத்தில் ஆளுங் கட்சி வன்முறையில் ஈடுபடப் போகின்றது என்றும், பெரிய கலவரம் ஏற்படப் போகிறது என்றும் தமிழகமே ஸ்தம்பித்து விடப் போகிறது என்றும் எப்படி யெல்லாம் பிரச்சாரம் செய்தார்கள் என்பதையும் நாம் அறிவோம். தேர்தல் நேரத்தில் எப்போதும் நடைபெறும் ஒன்றிரண்டு அசம்பாவிதங்களைத் தவிர பெருமளவிற்கு எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களும் ஆளுங்கட்சியின் அத்துமீறல்கள் என்று சொல்லக் கூடிய அளவிற்கு எங்கும் நடைபெறவில்லை என்பதை நாட்டு மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகமே இந்தத் தேர்தலில் ரத்தக் களறியாகப் போகிறது என்று பிரச்சாரம் செய்தவர்களின் முகத்தில் கரிபூசக் கூடிய அளவிற்கு தேர்தல்கள் அமைதியாக நடைபெற்றுள்ளன.
ஆனாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏட்டில் “ஆளுங்கட்சியினர் வன்செயல் - தி.மு.க. வினர் கொலை வெறித் தாக்குதல்” என்றெல்லாம் தலைப்பிட்டு அறிக்கை அரசி ஜெயலலிதா கொடுத்த செய்திகளை கொட்டை எழுத்துக்களில் வெளியிட்டிருக்கிறார்கள்.
ஆனால் இந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் மேற்கு வங்கத்தில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிகள் பற்றி நான் அல்ல; கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கில நாளேடான “டெலிகிராப்”; 9-5-2009 அன்று தனது இதழின் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் வெளியிட்ட செய்தி என்ன தெரியுமா? அந்தச் செய்திக்கு அந்த ஏடு எழுதியுள்ள தலைப்பே, “Tragedy of Sania, 1 year 11 months : Bullet kills baby, then hits her mother!” என்பதாகும். அந்தச் செய்தியின் சில பகுதிகள் மட்டும் வருமாறு :-
Nandigram, May 8 : The “politically conscious” State that threw up the highest turnout yesterday also witnessed the death of probably the youngest victim of political violence this election. Sania Khatoun, a year and 11 months old, was in mother Aleya Bibi’s lap last night, being fed her dinner, when alleged CPM supporters entered their home and opened indiscriminate fire. One of the bullets went through Sania’s leg, and then lodged in the stomach of Aleya, 27.
No political party in Bengal could recall anyone as young as Sania being killed in poll violence in recent memory. During last year’s Panchayat elections, Mili Khatoon, 4, was killed by a bomb as she played on the verandah of her home in Murshidabad’s Talibpur village.
No one has been arrested for Sania’s murder because “No one has filed any complaint,” East Midnapore S.P. said.
(நந்திகிராம், மே 8 : அரசியல் தெளிவுள்ள மாநிலமான மேற்கு வங்கத்தில், நேற்று நடைபெற்ற தேர்தலில் மிக அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர் என்ற செய்தியோடு அங்கு ஏற்பட்ட அரசியல் வன்முறை காரணமாக தேர்தல் களத்தில் மிகக் குறைந்த வயதில் (சிறு குழந்தை) பலியான சம்பவமும் இணைந்து வந்ததைக் காண முடிந்தது. நேற்றிரவு தன் தாயின் மடியில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள் வீட்டிற்குள் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்ட போது ஒரு துப்பாக்கி குண்டு ஒரு வயது 11 மாதங்களே ஆன சானியா கட்டோன் என்ற குழந்தையின் கால் வழியாகச் சென்று; 27 வயதான அலியா என்ற தாயின் வயிற்றுக்குள்
சென்றது. அண்மைக் கால அரசியல் வரலாற்றில், மேற்கு வங்கத்தில் உள்ள எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தல் நேரத்தில் இது போன்ற அரசியல் வன்முறை நடைபெற்று குழந்தையைக் கொன்ற சம்பவத்தை நினைவுகூர இயலவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல்களின் போது, நான்கு வயதான மிலி கட்டோன் என்ற குழந்தை முர்ஷிதாபாத்தில் உள்ள தாலிப்பூர் கிராமத்தில் உள்ள தன்வீட்டு வராந்தாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது வெடி குண்டு வெடித்து மடிந்தது. தற்போது சானியா கொலையுண்டது பற்றி யாரும் கைது செய்யப்படவில்லை. ஏனெனில் இந்தச் சம்பவம் குறித்து யாரும் புகார் கொடுக்கவில்லை என்று கிழக்கு மிட்னாபூர் காவல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.”)
இவ்வாறு மேற்கு வங்கத்தில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற வன்முறைச் சம்பவம் குறித்து “டெலிகிராப்” செய்தி வெளியிட்டதோடு மட்டும் நிற்கவில்லை. 11-5-2009 அன்று, ஆம் மூன்று நாட்களுக்கு முன்பு “Violent State” - “வன்முறை மாநிலம்” என்றே தலைப்பிட்டு எழுதிய தலையங்கம் என்ன தெரியுமா?
“மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறையின் புதிய பரிமாணம், தாயின் கரங்களில் இருந்த ஒரு குழந்தை துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கும் காட்சி தான். (A baby shot dead in her mother’s arms is the new image of the horror of political violence in West Bengal.) அரசியலில் வன்முறையைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்தி 32 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த மார்க்சிஸ்ட்களின் நீண்ட கால ஆட்சியின் பாரம்பரியமிக்க வரலாற்றுத் தொடர்ச்சியாக இது உள்ளது. மேற்கு வங்கத்தில் அரசியலில் வன்முறையை அடிப்படையாக வைத்து அவர்கள் ஆட்சியில் நீடித்து வருகின்றனர். அதன் காரணமாக சட்டம் மற்றும் நிர்வாகம் உட்பட இதர துறைகள் அனைத்தும் வன்முறைப் போக்கிற்கு அடிபணிந்து போகும் வகையில் அடக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒரு தொழில் தாவாவிற்கு தீர்வு காண்பதாகட்டும், அல்லது தேர்தலில் போட்டியிடுவதாகட்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் கரங்களில் அச்சுறுத்தல், மிரட்டுதல்,
வன்முறை ஆகியவை பிரதான ஆயுதங்களாக உள்ளன. தற்போதைய தேர்தல் பிரச்சாரம் துவங்கியதிலிருந்து மாநிலத்தில் வெடித்துக் கிளம்பியுள்ள வன்முறை இத்தனை ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சி பேணி வருகின்ற அரசியல் கலாச்சாரத்தின் விளைவேயாகும். (The violence that has rocked the State since the current poll campaign started is thus a result of the political cult that the CPI(M) has nurtured all these years) அக்கட்சியின் தலைமையிலான அரசு வன்முறையைத் தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ தவறிவிட்டது என்றால், அது நிர்வாகத் திறமையின்மையினால் மட்டுமல்ல, அந்தத் தோல்விக்கு வன்முறையை ஒரு அரசியல் தந்திரமாகக் கருதும் அக்கட்சியின் கண்ணோட்டமே பெரும் காரணமாகும்.”
இவ்வாறு “டெலிகிராப்” ஏட்டில் தலையங்கம் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளது.
இத்தகைய பாராட்டுக்குரியவர்கள்(?) தான் தமிழகத்திலே ஆளுங் கட்சியினர் வன் செயல் என்றும், கொலை வெறி தாக்குதல் என்றும் செய்தி வெளியிட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் “டாட்டா” நிறுவனத்தின் சார்பில் கார் தொழிற்சாலை ஒன்றினை தொடங்குவதில் - விவசாய நிலத்தை தொழிற்சாலைக்குக் கொடுக்க மாட்டோம் என்று போராடிய அப்பாவி விவசாயிகள் மீது மார்க்சிஸ்ட் அரசு நடத்திய தடியடி, துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் பதினான்கு பேர் கொல்லப்பட்டார்கள் என்பதை மறக்க முடியுமா? அது மாத்திரமல்ல; தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு பேர் பலியான செய்தி ஏடுகளில் வெளி வந்ததை இல்லையென்று கூற முடியுமா?
ஆனால், தமிழகத்திலே உள்ள ஆளுங்கட்சியைப் பற்றி இந்த அளவிற்கு குறை கூறும் அருமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஒரு சில மாதங்களுக்கு முன்பு பேசியது என்ன தெரியுமா? அதிலும் கூட மதுரையிலே நடைபெற்ற இடைத் தேர்தல் ஒன்றின்போது தெரிவித்த கருத்து என்ன தெரியுமா? அதையும் ஞாபகமாக எடுத்துவைத்திருக்கிறேன். அது இதோ:-
“இந்தியாவின் பெரிய பதவியான ஜனாதிபதி தேர்தலுக்கு மாதர் குல பிரதிநிதியாக பிரதிபா பாட்டிலை அறிவித்தபோது நாடே
மகிழ்ச்சிக் கடலில் திளைத்தது. அதை எதிர்த்து தமிழ்நாட்டில் இருந்து ஒரு அவலக் குரல் - பிரதிபா பாட்டில் தேர்வு “அரசியல் ஜோக்” என ஜெயலலிதா கூறினார். ஜெயலலிதா கூட்டத்தின் இந்த அகம்பாவத்திற்கு மேற்குத் தொகுதி மக்கள் சரியான அடி கொடுக்க வேண்டும்.
தேச நலன் கருதி, எடுத்த சிறந்த முடிவை “அரசியல் ஜோக்” என்பது அகம்பாவம். உத்தரப்பிரதேச தேர்தலுக்கு பிரச்சாரம் செய்யச் சென்ற ஜெயலலிதா பா.ஜ.க. பற்றி வாயே திறக்கவில்லை. நாளை மதவெறி கூட்டத்தோடு இணைந்திட ஜெயலலிதா எடுக்கும் முயற்சி தான் இது. இதை வாக்காளப் பெருமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். போர்க் காலத்தில் வதந்திகளைப் பரப்புவது தேச துரோகம் என்று கூறப்பட்டது. தற்போது ஜெயலலிதா வதந்திகளைப் பரப்பி வருகிறார். தமிழகத்தில் குடிசைகளுக்கு பட்டா வழங்கப்படுவது குறித்து குறை சொல்ல ஜெயலலிதாவிற்கு அருகதை உள்ளதா? (மார்க்சிஸ்ட் ஏடு - தீக்கதிர் - 25-6-2007)
“தி.மு.க. அரசு தனது பட்ஜெட்டில் அறிவித்துள்ள மக்களுக்கான பல சிறந்த திட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. ஆனால் அவற்றையெல்லாம் தேவையின்றி எதிர்க்கிற கட்சியாக அ.தி.மு.க. இருக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கவும் லாயக்கற்றதாக அக்கட்சி மாறியிருக்கிறது. சிறுதாவூரில் அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா தங்குவதற்காக கட்டப்பட்ட பங்களா யாருக்குச் சொந்தமானது என்பதை கூட சொல்ல முடியாமல் தட்டுத் தடுமாறுகிறார். சட்ட மன்றத்தில் எவ்வளவு கடுமையாக வேண்டுமானாலும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தரம் தாழ்ந்து பேசுகிறார்கள். கம்யூனிஸ்டுகள் தி.மு.க. அரசுக்கு ஜால்ரா போடுவதாக கூசாமல் பேசுகிறார்கள். யார் ஜால்ரா போடுவது? உள்நாட்டு ஏகபோக முதலாளிகளுக்கும் பன்னாட்டு பகாசுர முதலாளிகளுக்கும் ஜால்ரா போட்டது அ.தி.மு.க. ஆட்சி தான் என்பதை மக்கள் அறிவார்கள். தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ரேஷன் கடைகளில் இருந்து நல்ல அரிசி கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளை பாராட்டுகிறோம். கல்விக் கொள்ளைக்குத்தான் கடந்த கால ஜெயலலிதா அரசு உடந்தையாக இருந்தது.” (மார்க்சிஸ்ட் ஏடு - தீக்கதிர் - 13-8-2006)
“வண்டலூர் பகுதியில் துணை நகரம் அமைப்பது குறித்து அரசின் அறிவிப்பைக் கண்டித்து ஜெயலலிதா ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அது மிகவும் ஆரோக்கியமற்ற முறையிலும், முதலமைச்சர் கருணாநிதி மீது தனி நபர் வெறுப்பைக் காட்டுகிற முறையிலும் வெளிவந்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. துணை நகரம் சம்பந்தமான விஷயங்களை விட்டு விட்டு, இன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களின் குடும்பத்தினையும், சொந்த பந்தங்களையும் குறிவைத்து வன்மத்துடன் செய்யப்பட்ட தனி நபர் தாக்குதல் நடவடிக்கையாகும். ஜெயலலிதாவின் இந்த அணுகுமுறை, காழ்ப்புணர்ச்சியாகவும், அருவருக்கத்தக்க வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தக் கூடிய விவாதமாகவும் மாறி சட்டமன்றம் முடக்கப்படுவதில் சென்று முடிவடைகிறது. அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டு அவை நடவடிக்கைகளை குழப்புவதிலும், மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதை திசை திருப்பும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள். இது சட்டமன்ற ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கி உள்ளது. 2006 மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா அவர்களின் அராஜக மக்கள் விரோத போக்கிற்கு மக்கள் தங்கள் தீர்ப்பின் மூலம் புகட்டிய பாடத்தை அவர்கள் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. (மார்க்சிஸ்ட் ஏடு - தீக்கதிர் 4-9-2006)
உடன்பிறப்பே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும், முன்னணியினரும் இப்படியெல்லாம் அவர்களே பேசியதை மறந்து விட்டுத் தான் - நமது அணியை விட்டுச் சென்றார்கள். அவர்கள் தான் இப்போதும் தங்கள் இதழ்களில் நம்மீது காழ்ப்பு வீசும் கருத்துக்களை எழுதி வருகிறார்கள்.
நம்மைப் பற்றி தாக்குகிறவர்களைப் பற்றி நண்பர்கள் கூறும்போது நான் ஒன்றைச் சொல்வதுண்டு. அவர்கள் நம்மைப் பாராட்டிய அளவிற்கு திட்டவில்லையே என்று கூறுவேன். எனவே தான் அந்த அருமை நண்பர்கள் நம்மைப் பற்றி தாக்குவதைப் படித்து விட்டு, அவர்கள் இதற்கு முன்பு எழுதிய பாராட்டுக்களை படித்துப் பார்த்து எனக்கு நானே சமாதானப்படுத்திக் கொள்கிறேன்.
அன்புள்ள, மு.க. 15-5-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 272–277. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.