அடக்கம்

முரசொலி · தொகுதி 42 · கடிதம் 3404

முரசொலி கடிதங்கள் · 3404

இந்தப் பேனா வேண்டுகிறது!

நாள் 13.5.2009சுமார் 3 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3404. இந்தப் பேனா வேண்டுகிறது!

உடன்பிறப்பே,

பழமை வழக்கமாக நம் வீடுகளில் குழந்தை தவழும் பருவத்தில் “பல் கொழுக்கட்டை விழா” நிகழ்ச்சி ஒன்று நடத்துவார்கள். கூடத்தில் விளக்கேற்றி வைத்து - கோலமிட்டு - தரையில் ஒரு பெரிய தாம்பாளத்தில் கொழுக்கட்டை, வடை, நகை நட்டுகள், எழுதுகின்ற பேனா, சிறிய கத்தி முதலியவற்றை வைத்து அங்கே தவழ்ந்து செல்கின்ற குழந்தை அந்தப் பொருள்களில் எதை எடுக்கிறது என்று கவனிப்பார்கள்.

எனக்கு இப்படி குழந்தை பருவத்தில் பல் கொழுக்கட்டை நிகழ்ச்சியை என் வீட்டார் நடத்தியபோது - நான் ஊர்ந்து, நகர்ந்து, தவழ்ந்து குறிப்பிட்ட தாம்பாளத்தை அடைந்து - அதிலேயிருந்த பேனாவை எடுத்தேனாம்.

“அன்னையர் தினம்” கொண்டாடி அடுத்தடுத்த நாட்களில் அந்த நினைவு எனக்கு வருவது ஒரு சுவையான அனுபவம்!

அந்த நிகழ்ச்சியை என் வாயிலாக ஒரு முறை கேள்விப்பட்ட இளம் ஓவியர் ராஜபாணி என்பார், என்னை எழுதுகோலாகச் சித்திரித்து, அன்னை அஞ்சுகம் அம்மையார் ஆட்டுகின்ற தொட்டிலையும் ஓவியமாகத் தீட்டி ஒரு அற்புதக் கற்பனையைச் செய்து தந்தார். அந்த ஓவியம் இன்னமும் என் வீட்டில் இருக்கிறது. அது தான் இந்த ஓவியம்.

ஆனால், தொட்டிலில் ஆடும் பேனா தூங்கவே இல்லை. இன்னமும்;

ஏழை எளியவர்களுக்காக -

எதுமறியா பாமரர்களுக்காக -

உடல் ஓடிய உழைக்கின்ற தொழிலாளர்களுக்காக -

உத்தம நெஞ்சம் கொண்ட உழவர் பெருமக்களுக்காக -

அடித்தட்டு, அடித்தட்டு என்று அடுக்கிக் கொண்டே போகக் கூடிய அடித்தட்டு மக்களுக்காக -

என் மூச்சாக விளங்கும் தமிழ் மொழிக்காக -

என் இதயத் துடிப்பாம் இன உணர்வுக்காக -

எங்கெங்கே தமிழர்கள் வாழ்கின்றார்களோ, அங்கெல்லாம் அவர்களின் உரிமைக்குப் போராடுவதற்காக -

அன்னையார் முன்னிலையில் நான் எடுத்த பேனா இன்னமும் தன் அலுவலை முடித்துக் கொள்ளவில்லை.

கண்ணொளி இழந்தோர்க்கு கையெழுத்திட்டதும் - இந்தப் பேனா தான்!

கையில் ஓடேந்தி பிச்சையெடுத்தோர்க்கு மறு வாழ்வளிக்க திட்டம் தீட்டியதும் - இந்தப் பேனா தான்!

மனிதனை வைத்து மனிதன் இழுக்கின்ற கை ரிக்ஷா கொடுமை இன்னமும் கம்யூனிஸ்ட் மாநிலத் தலைநகரான கொல்கத்தாவில் இருந்தும் - அதனை தமிழகத்தில் அறவே ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கிட கையெழுத்திட்டதும் - இந்தப் பேனா தான்!

குடிசை மாற்று வாரியம் கண்டதும் - இந்தப் பேனா தான்!

குடிநீர் வாரியம் கண்டதும் - இந்தப் பேனா தான்!

ஊனமுற்றோர்க்கு திட்டம் தந்ததும் - இந்தப் பேனா தான்!

குடியிருப்பு மனைச் சட்டம் கொணர்ந்ததும் - இந்தப் பேனா தான்!

உச்ச வரம்புச் சட்டம் உருவாக்கியதும் - இந்தப் பேனா தான்!

உழவர்களுக்கும், நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கியதும் - இந்தப் பேனா தான்!

அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தீட்டியதும் - இந்தப் பேனா தான்!

பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைத்ததும் - இந்தப் பேனா தான்!

காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக சட்டம் ஆக்கியதும் - இந்தப் பேனா தான்!

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு நாள் என்று சட்டம் ஆக்கியதும் - இந்தப் பேனா தான்!

அய்யன் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் குமரி முனையில் அழகிய சிலையெடுக்க உத்தர விட்டதும் - இந்தப் பேனா தான்!

இந்தியாவில் எங்குமில்லாத அளவிற்கு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு தர ஆணையிட்டதும் - இந்தப் பேனா தான்!

மகளிர் வாழ்வில் மகிழ்ச்சியைப் பெருக்கிட அனைத்து குடும்பங்களுக்கும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இலவசமாக வழங்கிடச் செய்ததும் - இந்தப் பேனா தான்!

பதவிப் பொறுப்பேற்ற அன்றையதினமே விவசாயிகளின் கூட்டுறவு கடன் 7000 கோடி ரூபாயை அறவே ரத்து செய்து ஆணையிட்டதும் - இந்தப் பேனா தான்!

ஏழை மகளிர் திருமணம் செய்ய எதுவாக இலவசமாக இருபதாயிரம் கொடுக்கும் திட்டத்திற்கு வித்திட்டதும் - இந்தப் பேனா தான்!

காப்பிணிப் பெண்களுக்கு தலா ஆறாயிரம் ரூபாய் வழங்கிட வழி செய்ததும் - இந்தப் பேனா தான்!

ஒரு கோடி ஏழை மக்கள் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததும் - இந்தப் பேனா தான்!

சிறுபான்மையோர் உரிமைக்கும்; சீர் பெறவே அருந்ததியர்க்கும்; செம்மொழியாம் தமிழுக்கும்; சேது சமுத்திரத் திட்டத்திற்கும் கையெழுத்திட்டதும் - இந்தப் பேனா தான்!

தேசத் தியாகிகளை மறவாமல் அவர்கள் செய்த தியாகத்தை மதித்து நினைவுச் சின்னங்களும், மணி மண்டபங்களும், சிலைகளும் எழுப்பிட ஏற்பாடு செய்ததும் - இந்தப் பேனா தான்!

இவ்வாறு,

பல்லாயிரம் கோடி திட்டங்களை தீட்டுதற்கும் - பல கோடி மக்களின் பசிப்பிணி தீர்ப்பதற்கும் -

என் அன்னையின் தாலாட்டை பெரும் பாராட்டாகக் கருதி பாடுபடுகிறவன் தான் இந்தப் பிள்ளை - ஆம், உங்கள் வீட்டுப் பிள்ளை.

அன்னையர் தினம் கொண்டாடி அகம் மகிழ்ந்துள்ள அருமைத் தாய்மார்களே! அவர்தம் குடும்பத்துப் பெரியோர்களே!

பேனா முனையால் பெரும் பெரும் சாதனைகளை - திட்டங்களை -

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் மகிழ்ந்திட

உற்ற உடன்பிறப்புகளின் துணையோடு - நிறைவேற்றி வரும் என் வேண்டுகோளை ஒரு கணம் சிந்தித்துப் பார்த்து “குழந்தை பருவத்தில் பேனாவை எடுத்தான்; அதனால் வீணாகப் போகவில்லை நாடும் நாமும்” -

என்ற நன்றியினைத் தெரிவித்திட வாய்த்திடும் நாள் தான், மே 13ஆம் நாள்!

இவ்வளவும் செய்து இனியும் செய்யவிருக்கின்ற இந்தப் பேனா தான் -

உதய சூரியன் - கை - நட்சத்திரம் சின்னங்களில் உங்களின் பொன்னான வாக்குகளை அளித்திட வேண்டுகிறது.

அன்புள்ள, மு.க. 13-5-2009

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 268–271. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 42-இல் மேலும் கடிதங்கள்