முரசொலி கடிதங்கள் · 3406
தூங்கற்க தூங்காது செய்யும் வினை!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3406. தூங்கற்க தூங்காது செய்யும் வினை!
உடன்பிறப்பே,
2008ஆம் ஆண்டு சுதந்திரத் திருநாள் அன்று கோட்டையிலே கொடியேற்றி வைத்து விட்டு நான் உரையாற்றியபோது,
“அரசு நிறைவேற்றிடும் திட்டப் பணிகளிலும், வளர்ச்சிப் பணிகளிலும் அரசு அலுவலர்களின் ஒத்துழைப்பும் கணிசமான பங்காக இருப்பதால் அந்தப் பங்கின் விதத்தையே அவர்களுக்கு பகிர்ந்து தருகிறோம் என்ற கொள்கையுடைய இந்த அரசு - மத்திய அரசு அலுவலர்களுக்கான ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் மத்திய அரசு நேற்று அறிவித்துள்ள ஆணைகளையொட்டி, அந்த ஊதிய உயர்வினை, பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழக அரசு அலுவலர்களுக்கும் மன நிறைவு அளிக்கும் வகையில் நடைமுறைப்படுத்துவதற்கான ஆணைகளை விரைவில் வெளியிடும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்”
என்று கூறினேன்.
கூறியதோடு விட்டு விடாமல், 20-8-2008 அன்று மத்திய அரசு அறிவித்த ஆறாவது ஊதியக் குழுவின் திருத்திய ஊதிய விகிதங்களை தமிழகத்திலே நடைமுறைக்குக் கொண்டு வருவது பற்றி அரசுக்கு பரிந்துரை கூறிட, அரசு அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. உள்துறை முதன்மை செயலாளர் திருமதி எஸ். மாலதி, ஐ.ஏ.எஸ்., தலைமையில் அமைந்த அந்தக் குழுவில் நிதித் துறை முதன்மை செயலாளர், திரு. கு. ஞானதேசிகன், ஐ.ஏ.எஸ்., பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளர், திரு. கே.என். வெங்கட்ரமணன், ஐ.ஏ.எஸ்., பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் திரு. எம். குற்றாலலிங்கம், ஐ.ஏ.எஸ்., ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார்கள்.
இந்தக் குழுவினர் கடந்த ஒன்பது மாத காலமாக மிகுந்த சிரமம் எடுத்துக் கொண்டு, மத்திய அரசின் ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளையெல்லாம் நன்கு ஆய்வு செய்து, கடந்த 27ஆம் தேதியன்று என்னைச் சந்தித்து குழுவின் சார்பாக அறிக்கையினை தாக்கல் செய்தார்கள். இதற்கிடையே இந்தக் குழுவின் அறிக்கை வர தாமதமான நேரத்தில், அதனால் அரசு அலுவலர்கள் பாதிக்கப்பட்டு விடுவார்களோ என்று கருதிய இந்த அரசு - 2008ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் பரிசாக - அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இடைக்கால நிவுவைத் தொகையை வழங்கவும் ஆணையிட்டதை அரசு அலுவலர்களே நன்கறிவார்கள். அதன்படி 1-1-2009 அன்று இரண்டு ஆண்டுகள் பணி புரிந்துள்ளோருக்கு மூன்று மாத ஊதியமும், 1-1-2009 அன்று இரண்டு ஆண்டுகளுக்குக் குறைவாகப் பணிபுரிந்துள்ளோருக்கு ஒரு மாத ஊதியமும், 1-1-2009 அன்று ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு மூன்று மாத ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியமும் இடைக்கால நிவுவைத் தொகையாக ரொக்கமாக அளிக்கப்பட்டது.
ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்குவதற்கான குழந்தைகள் நல மையங்களிலும், பள்ளிகளில் பயிலும் சிறார்களுக்கு மதிய உணவு அளிப்பதற்கான சத்துணவு மையங்களிலும், மொத்தம் சுமார் இரண்டு இலட்சத்து 20 ஆயிரம் சத்துணவுப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களில், அங்கன்வாடி உதவியாளர்கள், சத்துணவு சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் உள்ளிட்ட சுமார் 1 இலட்சத்து 30 ஆயிரம் பணியாளர்கள் தொகுப்பூதியத்தின் கீழ் (Consolidated Pay) பல ஆண்டுக் காலமாக இருந்து வந்தார்கள். இவர்களுக்கான தொகுப்பூதியத்தை தி.மு.கழக அரசு 1.9.2006 முதல் உயர்த்தி வழங்கியது. எனினும், இவர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் (Time Scale of Pay) வழங்க வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தார்கள். இதை நிறைவேற்ற வேண்டுமென்ற அக்கறையும் ஆர்வமும் இருப்பினும்; உற்றார் உறவினர்போல் இருந்து தாய்மை உணர்வுடன் ஊட்டி வளர்க்கும் பணியில் இருக்கும் சத்துணவுப் பணியாளர்களுக்கு
அதேவிதமான பரிவுகாட்டி அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு நீண்ட காலமாக உண்டு. அதனால் அந்தக் கோரிக்கையை ஏற்று, இவர்கள் அனைவருக்கும் தகுந்த சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்தில் (Special Time Scale of Pay) ஊதியம் வழங்க இந்த அரசுதான் முடிவு செய்தது.
அஃதன்னியில், சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 90 ஆயிரம் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரையறுக்கப்படாத காலமுறை ஊதிய விகிதத்தையும் 1.9.2006 முதல் இந்த அரசுதான் உயர்த்தி வழங்கியது. இவர்களில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வருவோரும், தற்போது பணியில் சேர்ந்தோரும், ஒரே ஊதியம் பெறும் நிலை இருந்தது. இந்நிலையை மாற்றி, பணிமூப்பு அடிப்படையில் பணியில் மூத்தோருக்கு ஊதியம் உயர்த்தப்பட்டு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் கோரி வந்தார்கள். இக்கோரிக்கையை ஏற்று, பணியில் பத்தாண்டு காலத்திற்கு ஒரு ஊதிய உயர்வு வீதம் வழங்கி, பணி மூப்பு அடிப்படையில் ஊதியத்தை உயர்த்த இந்த அரசுதான் முடிவு செய்தது.
இதுமட்டுமன்றி, குழந்தைகளுக்கு அன்ன மிட்டு அரும்பணியாற்றிடும் இந்த சிறப்புப் பணியாளர்கள் ஓய்வுபெற்ற பின்னரும் அவர்களது வாழ்வாதாரத்திற்கு வழிசெய்யும் வகையில், இவர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் அளிக்கப்படவும் இந்த ஆட்சியிலேதான் வழி வகை செய்யப்பட்டது.
சுமார் 2 இலட்சத்து 20 ஆயிரம் பணியாளர்களுக்கு பயன் தரும் இந்த முடிவுகளால், அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் 200 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்றாலும், பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு கொண்டாடப்படுகின்ற 2008-2009ஆம் ஆண்டில் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் முதல் இந்த அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்தன.
இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதின் வாயிலாக; பல ஆண்டுகளாக சத்துணவுப் பணியாளர்களின் ஊதியம் குறித்த என்னுடைய ஏக்கம் ஓரளவு நீங்கியது என்பதையும் - புதிய ஊக்கம் பிறந்து இன்றைய மழலையர் - நாளைய நாட்டின் அறிவு மேதைகளாக வளர்ந்திட அவர்களை ஆளாக்கும் அரும்பணியில்
இந்த இரண்டு இலட்சத்து இருபதாயிரம் சத்துணவுப் பணியாளர்களும் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதையும் நான் நன்றாக அறிவேன்.
மத்திய அரசின் கீழ் பணியாற்றும் அலுவலர் என்றால், அதிக ஊதியம் என்பதும், மாநில அரசின் கீழ் பணியாற்றும் அலுவலர் என்றால் அதை விட குறைந்த ஊதியம் என்பதும் எத்தனையோ ஆண்டுகளாக இருந்து வரும் நடைமுறையாகும். அந்த நடைமுறையை அடியோடு மாற்றி மாநில அரசு அலுவலர் என்றாலும், மத்திய அரசு அலுவலருக்கு இணையான ஊதியம் என்பதை முதன் முதலாக தி.மு. கழக அரசுதான் 1989ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக பொறுப்புக்கு வந்த போது கொண்டு வந்தது என்பதை அரசு அலுவலர்கள் நன்றாக அறிவார்கள்.
மத்திய அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி அவ்வப்போது உயர்த்தப்படும்போது, அதே நாளில் மாநில அரசு அலுவலர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்துவது என்பதை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்ட கழக அரசு, அதிலே எவ்வித கால தாமதத்தையும் செய்யாமல் நடைமுறைப்படுத்தி வருவதையும் அரசு அலுவலர்கள் அறிவார்கள்.
மத்திய அரசின் ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு ஏற்பதால், ஆண்டு ஒன்றுக்கு 5,156 கோடி ரூபாய் கூடுதல் தொடர் செலவு ஏற்படும். இந்த ஊதிய உயர்வினை முன் தேதியிட்டு வழங்க ஒப்புக் கொண்டு நிலுவைத் தொகை வழங்கும் வகையில் தமிழக அரசுக்கு 11,093 கோடி ரூபாய் செலவாகும். உலகமெங்கும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அதன் காரணமாக அரசின் வருவாய் குறையக் கூடுமென்று எதிர்பார்த்திடும் நிலையில் அரசு தன் அலுவலர்களுக்காக இந்த ஊதிய உயர்வினைக் கொடுக்க முன்வரக் காரணம், அவர்களும் இந்த அரசின் ஓர் அங்கம் என்பதை நன்றாகப் புரிந்து கொண்டிருப்பதால் தான்!
மேலும் தற்போது மாநில அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படியினை இரட்டிப்பாக்கி திருத்திய ஊதிய விகித முறைக்கேற்ப வழங்கவும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறப்புக் காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப் பணியாளர் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களுக்கும் முதன் முறையாக வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி வழங்கவும் தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தொகுப்பூதியம், நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியம் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தற்போது பெற்று வரும் ஊதியத்தில் ஒரே சீராக 25 சதவிகிதம் உயர்வு அளிக்கவும் அரசு முன்வந்துள்ளது.
தற்போது அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தினப்படி இரண்டு மடங்காக இனி உயர்த்தி வழங்கப்படும்.
உடன்பிறப்பே, அரசு அலுவலர் அல்லாதோர் இந்த அரசு; அலுவலர்களுக்கும்; ஆசிரியர்களுக்கும் மட்டுமே உதவி செய்வதைப் போல மற்றவர்கள் நலனில் அக்கறை கொண்டிருக்க வில்லை என்பதாக நினைத்துவிடக் கூடாது என்பதற்காக ஏழையெளியவர்களின் நலன் கருதி இந்த அரசு எந்தெந்த பணிகளுக்காக எவ்வளவு செலவிடுகிறது என்பதையும் சுருக்கமாக தெரிவிக்க விரும்புகிறேன்.
1998-99ஆம் ஆண்டில் உணவு மானியமாக வெறும் 500 கோடி ரூபாய் மட்டுமே செலவழிக்கப்பட்டு வந்ததற்கு மாறாக, தற்போது கிலோ அரிசி ஒரு ரூபாய் என்று 20 கிலோ வரை வழங்கும் திட்டம், 50 ரூபாய்க்கு குறைந்த விலையில் மளிகைப் பொருட்களை வழங்கும் திட்டம் போன்றவற்றுக்காக ஆண்டு ஒன்றுக்கு 2800 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
நெல் கொள்முதல் விலை உயர்வுக்கான மானியமாக 200 கோடி ரூபாயும், கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடியாக 1034 கோடி ரூபாயும், விவசாயிகள் நல வாரிய உதவிக்காக 152 கோடி ரூபாயும், விவசாயிகளுக்கு வட்டி இல்லாமல் கடன் கொடுக்க 140 கோடி ரூபாயும், பயிர்க்காப்பீடு மற்றும் இழப்பீட்டிற்காக 240 கோடி ரூபாயும், இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டத்திற்காக 500 கோடி ரூபாயும், இலவச எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கும் திட்டத்திற்காக 140 கோடி ரூபாயும், உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்காக 250 கோடி ரூபாயும், மின்சார மானியமாக 1608 கோடி ரூபாயும், முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்
திட்டத்திற்காக 250 கோடி ரூபாயும், ஏழைப் பெண்களின் திருமண உதவித் திட்டத்திற்காக 150 கோடி ரூபாயும், சத்துணவில் வாரம் மூன்று முட்டை வழங்கும் திட்டத்திற்காக 176 கோடி ரூபாயும், முதியோர், ஆதரவற்றோர், விதவைகள் ஓய்வூதியத் திட்டத்திற்காக 958 கோடி ரூபாயும், மாணவர்களுக்கு இலவசமாக பேருந்து பாஸ் வழங்க 300 கோடி ரூபாயும், அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்திற்காக 509 கோடி ரூபாயும், சாலை மேம்பாடு மற்றும் பராமரிப்பு பணிக்காக 3967 கோடி ரூபாயும், பாசன மேம்பாட்டுப் பணிகளுக்காக 957 கோடி ரூபாயும், குடிநீர் திட்டப் பணிகளுக்காக 1013 கோடி ரூபாயும், புதிய பேருந்துகள் வாங்க 250 கோடி ரூபாயும், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 600 கோடி ரூபாயும், புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம் கட்டுவதற்காக 300 கோடி ரூபாயும் என்ற அளவில் இந்த ஓர் ஆண்டில் மட்டும் 16,494 கோடி ரூபாய் ஏழையெளிய மக்களின் நல்வாழ்விற்கான திட்டங்களுக்காகத்தான் செலவிடப்படுகிறது என்பதையும் அறியலாம்.
எனவே, தமிழக அரசு ஏழையெளிய மக்கள் நல்வாழ்வில் எந்த அளவிற்கு அக்கறையோடு செயல்படுகிறதோ, அதைப் போலவேதான் அரசு அலுவலர்களின் நலனிலும் ஆசிரியர் நலனிலும் அக்கறையோடு பணியாற்றுகின்றது என்பதை விளக்குவதற்காகத்தான் இதனை எழுதியுள்ளேன். ‘தூங்கற்க தூங்காது செய்யும் வினை’ என்பது அய்யன் வள்ளுவரின் வாய்மொழியன்றோ!
அன்புள்ள, மு.க. 2-6-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 278–283. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.