அடக்கம்

முரசொலி · தொகுதி 42 · கடிதம் 3409

முரசொலி கடிதங்கள் · 3409

பட்டினத்தார் அப்பொழுதே பாடியிருக்கிறாரே!

நாள் 27.7.2009சுமார் 4 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3409. பட்டினத்தார் அப்பொழுதே பாடியிருக்கிறாரே!

உடன்பிறப்பே,

“டாஸ்மாக்” நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் 36 ஆயிரம் பேரின் கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.மு.க. வின் தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் 27-7-2009 அன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் தொழிலாளர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் கொடைநாடு எஸ்டேட்டில் இருந்து விடுத்துள்ள அறிக்கையிலே தெரிவித்துள்ளார்.

மாநிலம் தழுவிய அளவிலே டாஸ்மாக் பணியாளர்கள் பணியாற்றும்போது - ஒரு மாவட்டத் தலைநகரிலே மட்டுமே ஜெயலலிதா போராட்டத்தை அறிவித்துள்ளதன் காரணம் தெரியவில்லை.

அந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதில் தி.மு.க. அரசு தொடர்ந்து பாரபட்சம் காட்டுவதாக ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். அந்தத் தொழிலாளர்களை ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோதே ஏன் பணி நிரந்தரம் செய்யவில்லை என்ற கேள்விக்கு அவருடைய பதில் என்ன?

ஜெயலலிதா ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படவில்லை என்கிறார் ஜெயலலிதா. முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றிலே மறைக்க முயலுகிறார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னால் 20-7-2009 அன்று தமிழகச் சட்டப் பேரவையிலே டாஸ்மாக் பணியாளர்களுக்கு அவர்களின் ஊதியத்தை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் மேற்பார்வையாளர்களாக 8,061 பேரும், விற்பனையாளர்களாக 17,362 பேரும், “பார்” உதவியாளர்களாக 4,050 பேரும் பணியாற்றுகிறார்கள். கழக அரசு 2006ஆம் ஆண்டு மே திங்களில் பதவியேற்ற பிறகு, 2007ஆம் ஆண்டில் மேற்பார்வையாளர்களின் தொகுப்பூதியத்தை 3000 ரூபாயிலிருந்து 3500 ரூபாயாகவும் - விற்பனையாளர்களின் தொகுப்பூதியத்தை 2000 ரூபாயிலிருந்து 2400 ரூபாயாகவும் - “பார்” உதவியாளர்களின் தொகுப்பூதியத்தை 1500 ரூபாயிலிருந்து 1800 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்பட்டது.

2007ஆம் ஆண்டு இந்த அளவிற்கு தொகுப்பூதியத்தை உயர்த்திய போதிலும், தற்போது இந்தத் தொகுப்பூதியத்தை மேலும் உயர்த்த வேண்டுமென்று டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையையும் ஏற்று கடந்த 20ஆம் தேதியன்று சட்டமன்றத்தில் அறிவிக்கும்போது - மேற்பார்வையாளர்களின் தொகுப்பூதியத்தை 4000 ரூபாய் என்றும் - விற்பனையாளர்களின் தொகுப்பூதியத்தை 2800 ரூபாய் என்றும் - “பார்” உதவியாளர்களின் தொகுப்பூதியத்தை 2100 ரூபாய் என்றும் உயர்த்தியதோடு - இந்த ஊதிய உயர்வு 1-8-2009 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தெரிந்து கொண்டோ அல்லது தெரியாமலோ ஜெயலலிதா அவர்கள் அவருடைய ஆட்சியிலே பணியிலே சேர்க்கப்பட்டார்கள் என்ற காரணத்தால் கழக அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாகக் கூறி ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறார். அது சரிதானா என்பதை அந்த டாஸ்மாக் பணியாளர்கள்தான் எண்ணிப் பார்க்க வேண்டும். அதுமாத்திரமல்ல, 2006ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த இந்த அரசு, 2007ஆம் ஆண்டு ஒரு முறை ஊதிய உயர்வும், 2009ஆம் ஆண்டு ஒரு முறை ஊதிய உயர்வும் அளித்திருக்கிறது என்பதை பொது மக்கள் எண்ணிப் பார்த்து, அந்தப் பணியாளர்கள் அவ்வாறு கோரிக்கை வைப்பது முறைதானா என்பதையும் சீர்தூக்கிப் பார்த்திட கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், டாஸ்மாக் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு 8.33 சதவிகிதம் போனசும், 1.67 சதவிகிதம் கருணைத் தொகையும் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு 17-10-2006 அன்று வழங்கப்பட்டன. இப்பணியாளர்கள் தங்களுக்கு கூடுதல் போனஸ்

வழங்க வேண்டுமென அரசிடம் கோரிக்கை வைத்ததை அடுத்து, அவர்களது கோரிக்கையை கழக அரசு மிகுந்த பரிவோடு பரிசீலித்து மேலும் 5 சதவிகிதம் கூடுதலாக கருணைத் தொகை வழங்கிடவும் 27-11-2006 அன்று ஆணை பிறப்பித்தது.

மீண்டும் 2007-2008ஆம் ஆண்டிலிருந்து போனஸ் மற்றும் கருணைத் தொகை இருபது சதவிகிதமாக உயர்த்தப்பட்டதும் கழக அரசிலேதான்.

மேலும் பணியிலே இருக்கும்போது இறக்கும் இந்தப் பணியாளர்களின் குடும்பத்திற்கு குடும்ப நலத்திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டு வந்த ஒரு இலட்சம் ரூபாய் என்பது ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாக 3-7-2007இல் உயர்த்தப்பட்டது.

தனியார்களால் எடுத்து நடத்தப்படாத மதுக் கூடங்களில், தின்பண்டம் மற்றும் காலி பாட்டில்கள் சேகரிப்பதற்கு, “டாஸ்மாக்” மேற்பார்வையாளர்கள் செலுத்தி வந்த மாதக் கட்டணம் கடையின் விற்பனையில் 2.5 சதவிகிதம் என்றிருந்ததை 1.5 சதவிகிதமாகக் குறைத்து - அதன் மூலமாக மாதம் ஒன்றுக்கு அந்த மேற்பார்வையாளர்கள் ஆயிரம் ரூபாய் அளவுக்கு பயனடைய வழி வகை செய்யப்பட்டதும் கழக ஆட்சியிலே தான்.

மேற்பார்வையாளர்களிடமிருந்து 50 ஆயிரம் ரூபாயும் - விற்பனையாளர்களிடமிருந்து 15 ஆயிரம் ரூபாயும் - மதுக்கூட உதவியாளர்களிடமிருந்து 10 ஆயிரம் ரூபாயும் காப்புத் தொகையாக பெறப்பட்டது. அந்தக் காப்புத் தொகைக்கு வட்டி தரவேண்டுமென்ற கோரிக்கையையும் ஏற்று - அதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு மேற்பார்வையாளர்களுக்கு 1750 ரூபாயும் - விற்பனையாளர்களுக்கு 525 ரூபாயும் - மதுக்கூட உதவியாளர்களுக்கு 350 ரூபாயும் கிடைக்க கழக அரசு ஒப்புக் கொண்டு வழங்கி வருகிறது.

டாஸ்மாக் பணியாளர்களின் வேலை நேரம் ஜெயலலிதா ஆட்சியிலே நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் என்றிருந்ததை தற்போது கழக ஆட்சியில் 4 மணி நேரம் குறைத்து நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஜெயலலிதா ஆட்சியில் நியமனம் பெற்றவர்கள் என்று கழக ஆட்சி நினைத்திருக்குமேயானால் - இத்தனை சலுகைகளையும் அளித்திருக்குமா என்பதை ஒருகணம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஜெயலலிதா தனது அறிக்கையிலே அவருடைய ஆட்சியிலே அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத் தொகையை நிறுத்திவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். அதுவும் விவரம் தெரியாமல் எழுதப்பட்ட உளறல் ஆகும். ஏற்கெனவே வழங்கப்பட்ட ஊக்கத் தொகையை விட அதிகமாக மேலும் பரவலாக தற்போது வழங்கப்பட்டு வருகிறது. எனவே எதையும் சீர்தூக்கிப் பார்க்காமல் - என்ன நடக்கிறது என்பதையே தெரிந்து கொள்ளாமல் - பொறுப்பற்ற தன்மையிலே ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்த ஜெயலலிதா முற்படுகிறார் என்பதுதான் உண்மையே தவிர வேறல்ல.

ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் நியமனம் செய்தவர்கள் என்பதற்காக அவர்களிடம் பாரபட்சம் காட்டுவதாக அறிக்கை விடுத்துள்ளார். ஆனால் ஒரு உதாரணம் கூற வேண்டுமேயானால், தி.மு. கழக ஆட்சியிலே பத்தாயிரம் பேர் சாலைப் பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் அத்தனை பேரையும் அவர்கள் தி.மு. கழக ஆட்சியிலே நியமனம் செய்யப்பட்டவர்கள் என்ற காரணத்திற்காகவே வீட்டிற்கு அனுப்பி வைத்த பெருமைக்குரிய பெருமாட்டிதான் ஜெயலலிதா.

அது போலவே மக்கள் நலப் பணியாளர்களாக தி.மு. கழக ஆட்சியிலே நியமனம் பெற்றிருந்த 13 ஆயிரம் பேரையும் - ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் பணியிலிருந்து வீட்டிற்கு அனுப்பினார். இவ்வாறு பாரபட்சம் என்பதற்கே அடையாளமாக ஆட்சி நடத்திய ஜெயலலிதா, தற்போது தி.மு. கழக ஆட்சி பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று அறிக்கை விடுவதைப் பார்த்து அந்த டாஸ்மாக் நிறுவனத்திலே பணிபுரியும் அலுவலர்களே சிரிப்பார்கள், எள்ளி நகையாடுவார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

ஒரு சந்தேகம்; ஒரு வேளை, இவரது கூட்டாளியான டாக்டர் ராமதாஸ் அவர்களின் கருத்தை ஏற்று; தமிழ்நாட்டில் “மதுவிலக்கு சட்டத்தை” மீண்டும் கொண்டு வந்து, எல்லா மதுக்கடைகளையும்

இந்த “மைனாரிட்டி அரசு” மூடி விட்டால் அப்போது வேலையிலிருந்த தொழிலாளருக்கு வேலை கொடுக்க “மதுக்கடைகளைத் திறந்திடுக!” என்று திருமதி ஜெயலலிதா அம்மையார் ஒரு போராட்டத்தை நடத்தக் கூடுமல்லவா? அப்போது தன்னால் நியமிக்கப்பட்ட டாஸ்மாக் தொழிலாளர்களை பழிவாங்குவதாக ஒரு குற்றச் சாட்டையும் கூறக்கூடும் அல்லவா?

என் செய்வது; ஆகாயக் கோட்டை கட்டி; இந்தியப் பிரதமராகும் வாய்ப்பே வருகிறது என்று ஆரூடக்காரர்கள் சொன்னதை நம்பி, டெல்லி மாநகரில் வீடெல்லாம் வாங்கி; தோழியை அனுப்பி அலங்காரமும் செய்து; கடைசியில் தோல்வியில் துவண்டு போனவருக்கு - அந்தத் தோல்வியினால் உள்ளத்தில் ஏற்பட்ட நமைச்சல் இப்படியெல்லாம் சொறிந்து கொள்ளச் செய்கிறது. சொறிந்து கொள்ள, சொறிந்து கொள்ள எரிச்சல்தான் அதிகமாகும் - ஆனால் உள்ளமெல்லாம் புண்பட்டு உதிரம் கொட்டும். பாவம்; “தன் வினை தன்னைச் சுடும்” என்று பட்டினத்தார் அப்பொழுதே பாடியிருக்கிறாரே!

அன்புள்ள, மு.க. 27-7-2009

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 295–299. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 42-இல் மேலும் கடிதங்கள்