முரசொலி கடிதங்கள் · 3411
இடைத் தேர்தலில் இணையற்ற வெற்றியினை வழங்கிடுக!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3411. இடைத் தேர்தலில் இணையற்ற வெற்றியினை வழங்கிடுக!
உடன்பிறப்பே,
வருகின்ற ஆகஸ்ட் திங்கள் 18ஆம் நாள் பர்கூர், தொண்டாமுத்தூர், இளையான்குடி, திருவைகுண்டம், கம்பம் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கம்பம், தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகளில் கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, சட்டப் பேரவை உறுப்பினர்களாக இருந்த தம்பிகள் மு. கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் ம.தி.மு.க. விலிருந்து விலகி தி.மு. கழகத்திலே தற்போது இணைந்த காரணத்தால், அவர்கள் பதவி விலகியதின் பேரில் அங்கே இடைத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் தொண்டாமுத்தூர் தொகுதியில் கடந்த முறை ம.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து, நமது தோழமை அணியின் சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டதால், இந்த முறையும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென்று கேட்டதின் பேரில் அந்தத் தொகுதியும், ஏற்கெனவே காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்த திருவைகுண்டம் தொகுதியும் இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு பகிர்ந்து கொள்ளப்பட்டு, அவர்கள் அந்த இரண்டு தொகுதிகளிலும் ஏனைய மூன்று தொகுதிகளில் தி.மு.கழகமும் தற்போது போட்டியிடுகின்றன.
இதில் தொண்டாமுத்தூர் தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்று ம.தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராகவே பொறுப்பேற்றிருந்து இந்த முறை கூட்டணி தர்மத்தை கருத்திலே கொண்டு, தான் போட்டியிடா விட்டாலும், காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுக்க முன் வந்ததோடு முழு மூச்சோடு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வெற்றிபெற அரும்பாடுபட்டு வரும் தம்பி மு. கண்ணப்பனை இந்த நேரத்தில் நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் எப்போதும் போல கழகக் கண்மணிகள், முன்னணியினர், அமைச்சர்கள் எல்லாம் ஒவ்வொருவரும் தங்களுக்கு அருகேயுள்ள தொகுதிகளில் தாங்கள் பணியாற்ற விருப்பதாக அறிவித்து விட்டு, அந்தப் பணிகளிலே ஈடுபட்டு விட்டார்கள். குறிப்பாக துணை முதலமைச்சர் தம்பி மு.க. ஸ்டாலின் தன் மருத்துவ சோதனைக்காக லண்டன் செல்ல இருந்த பயணத்தையே ஒத்தி வைத்துவிட்டு, 4, 5 ஆகிய நாட்களில் திருவைகுண்டம் தொகுதியிலும் - 6, 7 ஆகிய நாட்களில் கம்பம் தொகுதியிலும் - 8, 9 ஆகிய நாட்களில் இளையான்குடி தொகுதியிலும் - 12, 13 ஆகிய நாட்களில் தொண்டாமுத்தூர் தொகுதியிலும் - 14, 15, 16 ஆகிய நாட்களில் பர்கூர் தொகுதியிலும் சுற்றுப் பயணத் திட்டங்களை வகுத்துக் கொண்டு தேர்தல் பணியாற்ற புறப்பட்டுவிட்டார்.
கழகப் பொதுச் செயலாளர், பேராசிரியர் அவர்கள் முதற்கட்டமாக 4-ந் தேதியன்று பர்கூர் தொகுதியிலும், 5ஆம் தேதியன்று தொண்டா முத்தூர் தொகுதியிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பணியாற்றியுள்ளார்.
அதுபோலவே மத்திய அமைச்சர் தம்பி மு.க. அழகிரி தென் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதோடு, ஓய்வின்றி கழக அணியின் வெற்றிக்காக உழைத்து வருகிறார். மேலும் கழக மகளிர் அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் சார்பில் பலரும் வாக்கு சேகரிப்பு பணியிலே தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள்.
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, 10ஆம் தேதியன்று தொண்டா முத்தூர் தொகுதியிலும், 11ஆம் தேதி பர்கூர் தொகுதியிலும், 13ஆம் தேதி திருவைகுண்டம் தொகுதியிலும், 14ஆம் தேதி இளையான்குடி தொகுதியிலும், 15ஆம் தேதி கம்பம் தொகுதியிலும் தேர்தல் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அதுபோலவே கழகத்தின் கலைத் துறையைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் தம்பி நெப்போலியன், இயக்குநர் பாக்கியராஜ், நடிகர் வாகை சந்திரசேகர், நகைச்சுவை நடிகர் குமரி முத்து ஆகியோரும் தொடர்ந்து இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
எல்லோரையும் சொல்லிவிட்டு, உன்னைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று விழியால் நீ கேட்பது எனக்குத் தெரியாமல் இல்லை. தொடர்ந்து சட்டப் பேரவைத் தொடரில் கடந்த ஒரு மாத காலமாக கலந்து கொண்ட காரணத்தினால் என்னுடைய உடல் நிலை கருதியும், கழகத்தின் முதன்மையினர் நான் சுற்றுப் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று கடுமையாக தடுத்த காரணத்தினாலும் எனக்குப் பிடிக்காமலே நான் இந்த கட்டாய ஓய்வினை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடிக்கு ஆளானேன்.
ஆனாலும் மனம் கேட்காத காரணத்தால், அண்ணன் இந்த முறை நம்மிடம் வாக்கு கேட்கவில்லையே என்ற மனவருத்தம் உன் மனதில் சிறிதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதாலும் நான் இந்தக் கடிதத்தின் மூலமாக எப்போதும்போல் உனக்கு வேண்டுகோள் விடுக்க கடமைப்பட்டுள்ளேன்.
இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனேயே - பிரதான எதிர்க் கட்சியின் தலைவியான திருமதி ஜெயலலிதா இந்த இடைத் தேர்தல்களையே புறக்கணிக்கப் போவதாக ஓர் அறிவிப்பினை என்ன காரணத்தினாலோ செய்தார். அது அவருடைய சொந்தக் கட்சியின் கருத்து என்ற முறையில் நாமும் அதைப் பற்றி பெரிதாக எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. இன்னும்கூடச் சொல்லப் போனால், ஜெயலலிதா மீண்டும் விடுத்த அறிக்கையில் -
நான்தான் தேர்தலைப் புறக்கணித்துவிட்டேனே, பிறகு ஏன் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த வேண்டும், தி.மு.க.வும், காங்கிரசும் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டியதுதானே என்றும் கேள்வியை எழுப்பினார். ஆனாலும் ஜெயலலிதாவின் கருத்துக்களை இதுவரை அவருடன் தோழமைக் கட்சிகளாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்க மறுத்து - அவருடைய தயவு இன்றியே இடைத் தேர்தலில் போட்டி போட்டுப் போவதாக அறிவித்து, தேர்தல் களத்திலும் குதித்து விட்டன.
இடைத் தேர்தல்களை புறக்கணிக்க ஜெயலலிதா பல்வேறு காரணங்களைத் தெரிவித்திருந்த போதிலும், அதிலே ஒன்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்றும், அவற்றில் மோசடிகளை நிகழ்த்த முடியும் என 2000ஆம் ஆண்டிலிருந்து திரும்பத் திரும்ப வலியுறுத்தி
வந்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். அவரது இந்தக் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்க வேண்டிய கடமை தேர்தலை நடத்துகின்ற தேர்தல் ஆணையத்திற்குத்தான் உண்டு.
2000ஆம் ஆண்டிலிருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு என்று கூறும் ஜெயலலிதாவைக் கேட்க விரும்புவதெல்லாம் - 2001ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததே, அது எப்படி? அதன் பிறகு நடைபெற்ற பல இடைத் தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதே, அது எப்படி? அப்போதெல்லாம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தானே பயன்படுத்தப்பட்டது.
தேர்தலை நடத்துகின்ற தேர்தல் ஆணையம் எந்தக் கட்சியையும் சாராத ஒரு அமைப்பு. அவர்களால் ஒரு குறிப்பிட்ட தொகுதியிலே உள்ள மின்னணு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்வதெல்லாம் நடத்தக் கூடிய காரியமா என்பதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல் வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற பாணியில் குற்றஞ்சாட்ட முயலுகிறார்கள்.
2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் ஜெயலலிதா இதே குற்றச் சாட்டைக் கூறி, அதற்கு தலைமைத் தேர்தல் ஆணையம் - ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தில் டெல்லிக்கு தேர்தல் ஆணையத்திற்கு வருமாறும், அங்கேயுள்ள எந்தவொரு இயந்திரத்தை வேண்டுமானாலும், எடுத்து அதிலே தில்லுமுல்லு செய்ய முடியும் என்பதை நிரூபிக்கத் தயாரா என்றும் கேட்டது. அப்போது ஜெயலலிதா அதற்கு பதிலும் சொல்லவில்லை, டெல்லிக்குச் செல்லவும் இல்லை.
கடந்த ஜூலை மாதம் மத்தியில் தேர்தல் கமிஷனர் திரு. எஸ்.ஒய். குரேஷி அவர்கள் சண்டிகார் வந்த போது, செய்தியாளர்களுக்கு அளித்த பதிலில், “ஒட்டுப் பதிவு இயந்திரங்கள் குறித்து அவ்வப்போது சிலர் புகார் கூறியும், சந்தேகம் எழுப்பியும் வருகிறார்கள். ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் உட்பட பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகளும் தொடரப்படுகின்றன. ஆனால் ஒட்டுப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என்பது தான் உண்மை. சுமார் 25 வருட கடின உழைப்புக்கு பிறகு, ஒட்டுப் பதிவு இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. அதன் செயல்பாடுகளில் தேர்தல் கமிஷனுக்கு முழு திருப்தி உள்ளது.
இந்த இயந்திரங்கள் 100 சதவீதம் முறைகேடு செய்ய முடியாதவை. இதை சுப்ரீம் கோர்ட்டே கூறியிருக்கிறது. இந்த இயந்திரங்கள், நாட்டுக்கே பெருமை என்று ஒரு ஐகோர்ட்டு கூறியிருக்கிறது. ஒரு பாராளுமன்ற கமிட்டி உட்பட, இரண்டு தொழில்நுட்ப குழுக்கள் ஒட்டுப் பதிவு இயந்திரங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளன. நமது ஒட்டுப் பதிவு இயந்திரங்கள் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் ஒட்டுப் பதிவு இயந்திரங்களை விடச்சிறந்தவை.
இவற்றை உடைக்கலாமே தவிர, முறைகேடுகளை நிகழ்த்த முடியாது. எனவே இயந்திர ஒட்டுப் பதிவு முறையை கைவிட்டு, ஒட்டுச் சீட்டு முறையை கொண்டு வரும் பேச்சுக்கே இடமில்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஆனால், இதற்குப் பிறகும் ஜெயலலிதா இந்தக் குற்றச்சாட்டைச் சொன்னதும், அவருடைய முக்கிய தோழமைக் கட்சித் தலைவர்களான டாக்டர் ராமதாஸ், வைகோவும், ஆமாம், ஆமாம் தேர்தல் வாக்குப் பதிவு இயந்திரத்திலே கோளாறு, நாங்களும் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று பஜனை பாடியிருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டிற்கு உடனடியாக தேர்தல் ஆணையம் பா.ம.க. தலைவருக்கு எழுதிய கடிதத்தில், “மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு என்று நீங்கள் கூறிவரும் குற்றச்சாட்டு மிகவும் கடுமையானது. எனவே, தாங்கள் டெல்லி வந்து தேர்தல் ஆணையம் பயன்படுத்துகிற இயந்திரங்களை பரிசோதிக்கலாம், தில்லுமுல்லு செய்ய முடியும் என்று நேரில் கண்டு நிரூபித்துக் காட்டலாம்” என்று தெரிவித்திருந்தது. தமிழகத்திலே உள்ள செய்தியாளர்களை அழைத்து தேர்தல் இயந்திரத்தில் தில்லுமுல்லு என்று பேட்டி கொடுக்கும், பா.ம.க. நிறுவனர் தேர்தல் ஆணையத்தின் அழைப்பினையேற்று டெல்லி சென்று நிரூபித்துக் காட்டியிருக்க வேண்டியதுதானே? ஏன் அவர் டெல்லி செல்லவில்லை? ஏன் வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு என்பதை நிரூபித்துக் காட்டவில்லை?
தேர்தல் ஆணையம் பா.ம.க. தலைவருக்கு மட்டும் அழைப்பு அனுப்பவில்லை. தேர்தல் வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு என்று கூறிய எல்லாக் கட்சியினரையும் டெல்லிக்கு அழைத்து, நிரூபித்துக் காட்டச் சொல்லியிருந்ததே, அந்தச் செய்தி 4-8-2009 தேதிய ஏடுகளில் எல்லாம் வந்ததே? ஏன்
எந்தத் தலைவர்களும் செல்லவில்லை. தங்கள் குற்றச்சாட்டை நிரூபித்துக் காட்டவில்லை?
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவதற்கு எதிராக பல உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதி மன்றங்களிலும் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, “இது தொடர்பாக தேர்தல் கமிஷனிடம் முறையிட வேண்டும்” என்பதுதான்.
ஜெயலலிதா போன்றவர்களின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து, தேர்தல் கமிஷன் செயலாளர், திரு. ஆர்.கே. ஸ்ரீவத்சவா அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்,
“மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகளில் சிறிதளவு கூட சந்தேகத்தின் நிழல் படிவதை அனுமதிக்கக் கூடாது என்ற கடுமையான பொறுப்பு தேர்தல் கமிஷனுக்கு உள்ளது. வாக்குப் பதிவு இயந்திரங்களில் தவறு ஏற்படலாம் என்ற குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் முற்றிலுமாக நிராகரிக்கிறது. எனினும், வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து சந்தேகம் எழுப்பும் அனைவரையும் அழைக்க தேர்தல் கமிஷன் தீர்மானித்திருக்கிறது. அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்திற்கு இந்த வாரம் வந்து, முறைகேடு குறித்து செயல் முறை விளக்கம் அளிக்கலாம். இயந்திரம் குறித்த அவர்களுடைய குற்றச்சாட்டுகளை சுட்டிக் காட்டலாம். அதற்காக தொழில் நுட்ப வல்லுநர் குழுவும், வாக்குப் பதிவு இயந்திரங்களை தயார்செய்து அளிக்கும் நிறுவனங்களின் பொறியாளர்களும் தேர்தல் கமிஷன் அலுவலகத்திற்கு வருகின்றனர். அவர்கள் முன்னிலையில் குறைபாடுகளை எடுத்துக் கூற வாய்ப்பு வழங்கப்படுகிறது. அப்போது வல்லுநர் குழுவினர் விளக்கம் அளிப்பார்கள். இதன் மூலமாக நாட்டின் தேர்தல் ஜனநாயகத்தின் மீது எழுந்துள்ள தவறான அபிப்பிராயங்கள் மாறக் கூடும் என்று நம்புகிறோம்” என்று கூறி, இது அனைத்து ஏடுகளிலும் வெளி வந்துள்ளது.
இதற்குப் பிறகு திருமதி ஜெயலலிதாவின் கம்பெனி டெல்லிக்குச் சென்றிருக்க வேண்டுமே தவிர, தேர்தல் ஆணையத்தின் இந்த அறிக்கைக்குப் பிறகும், வாக்குப் பதிவு இயந்திரத்திலே கோளாறு, எனவேதான் புறக்கணித்தோம்
என்று இன்று அறிக்கை விட்டிருக்கிறார் என்றால், அது ஊரை ஏமாற்றுகின்ற செயல்தானே? தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை ஜெயலலிதா படித்தாரா? இல்லையா?
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தேர்தல் ஆணையத்தின் அழைப்பையேற்று டெல்லிக்கு உடனடியாகச் செல்லாமல், தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதைப் போல அறிக்கை என்ற பெயரால் என்ன எழுதியிருக்கிறார் என்று யாருக்குமே புரியாத வகையில் ஓர் அறிக்கை விடுத்துள்ளார்.
“ஆடத்தெரியாதவள் மேடை கோணல்” என்று சொன்னதைப்போல - தேர்தல் புறக்கணிப்புக்கு வாக்குப் பதிவு இயந்திரத்திலே கோளாறு என்று கூறுவதும் இருக்கிறது என்பது தானே உண்மை! எது எப்படியே போகட்டும் - அதைப் பற்றியெல்லாம் உடன்பிறப்பே, நீ கவலைப்படாமல் - வெற்றிக் கோட்டினை எட்டிட உன் பணி தொடரட்டும்!
அன்புள்ள, மு.க. 7-8-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 304–310. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.