முரசொலி கடிதங்கள் · 3413
காப்பீட்டுத் திட்டத்தினால் யாருக்கு ஆதாயம்?
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3413. காப்பீட்டுத் திட்டத்தினால் யாருக்கு ஆதாயம்?
உடன்பிறப்பே,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார பூர்வ ஏடான “தீக்கதிர்” இதழில் 20-8-2009 அன்று “கலைஞர் காப்பீட்டுத் திட்டம்; யாருக்கு ஆதாயம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அரசு செயல்படுத்திவரும் இரு மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களான அரசு அலுவலர்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் ஏழை எளியவர் பயன்பெறும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்து சரியாக புரிந்துகொள்ளாமையின் காரணமாக தவறான பல கருத்துக்கள் மற்றும் தகவல்களுடன் அந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. பொதுமக்களின் வரவேற்பையும், அரசு அலுவலர்களின் வரவேற்பையும் பெருமளவில் பெற்றுள்ள, இவ்விரு மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களில் முதலாவதாக செயல்படுத்தப்பட்ட அரசு அலுவலர்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து முதலில் விளக்கம் அளித்துவிட்டு, அதன் பின்னர் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பற்றிய விளக்கத்தை அளிக்கின்றேன்.
அரசு அலுவலர் காப்பீட்டுத் திட்டம்:
இத்திட்டம் இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழகத்தில்தான் அரசு அலுவலர்கள் அனைவரும் மருத்துவ காப்பீட்டு மூலமாக பயன்பெறும் வகையில் 2008-2009 ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் அரசு அலுவலர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் மாநாட்டில் நானே அறிவித்து அதன் பிறகு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட திட்டமாகும்.
இத்திட்டத்தின் கீழ் அனைத்து அரசு அலுவலர்கள், வாரியங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி
அமைப்புகள், சத்துணவுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகை பணியாளர்களும் பயன் பெறுகின்றனர். அவர்கள் எல்லாம் இந்தத் திட்டத்தை உளப்பூர்வமாக வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். இன்றைய தேதியில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் இத்திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்து பயன்பெற்று வருகின்றனர்.
இத்திட்டத்தின்கீழ் இதுவரை 47283 பணியாளர்கள் பல்வேறு விதமான உயர் சிகிச்சைகளை தனியார் மருத்துவமனைகளில் செய்து கொண்டு கட்டணம் எதுவும் செலுத்தாமல் பயன்பெற்றுள்ளனர். இவர்கள் பெற்ற சிகிச்சைகளுக்காக இதுவரை காப்பீட்டு நிறுவனம் ரூபாய் 154.22 கோடி செலவிட்டுள்ளது. ஆனால் இதுவரை காப்பீட்டு நிறுவனத்திற்கு அரசின் சார்பில் செலுத்தப்பட்ட காப்பீட்டுத் தொகை ரூ.121.7 கோடிதான். எனவே கட்டிய காப்பீட்டுத் தொகையை விட கூடுதலாக ரூபாய் 32.52 கோடி அளவிற்கு இத்திட்டத்தின் கீழ் அரசு அலுவலர்கள் பயன் பெற்றுள்ளனர் என்பது கண்கூடாகத் தெரிகிறது. எனவே இத்திட்டம் திருப்தியாக செயல்படவில்லை என்ற கூற்று உண்மைக்குப் புறம்பானது.
மேலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 3000 அரசு பணியாளர்களே ரூபாய் 11 கோடி மதிப்பீட்டில் மருத்துவ சிகிச்சைக்கான கட்டணங்களை அரசிடமிருந்து திரும்பப் பெற்று வந்தனர். அரசுப் பணியாளர் எதிர்பாராத விதமாக இருதய அறுவை சிகிச்சை போன்ற உயர் சிகிச்சைகளைப் பெற வேண்டிய நேரத்தில் அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சொந்த பணத்தை முன்பணமாக கட்டி சிகிச்சை பெற்று, சிகிச்சைக்கான செலவை அரசிடமிருந்து திரும்பப் பெறும் நிலை மாறி இன்று அரசு அலுவலர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் தனியார் மருத்துவமனைகளில் தமது திட்ட உறுப்பினர் அட்டையை மட்டுமே காண்பித்து உரிய நேரத்தில் உடனடியாக உயர் சிகிச்சை பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
## உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான ## கலைஞர் காப்பீட்டுத் திட்டம்:
தற்போது நடைபெற்று வரும் கழக அரசு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ துறைகளுக்கு தொடர்ந்து உரிய முன்னுரிமை அளித்து வருகிறது.
2005-2006 ஆம் ஆண்டில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு முந்தைய ஆட்சியில் ரூபாய் 1487.11 கோடி செலவிடப்பட்டது.
இதற்கு மாறாக இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 2006-2007ஆம் ஆண்டில் ரூபாய் 1662.17 கோடியும், 2007-2008ஆம் ஆண்டில் ரூபாய் 2047.45 கோடியும் செலவிட்டு 2008-2009ஆம் ஆண்டில் திருத்திய மதிப்பீட்டில் ரூபாய் 2762.33 கோடி ஒதுக்கீடு செய்தும் நடப்பு நிதியாண்டான 2009-2010 வரவு செலவுத் திட்டத்தில் மிக உயர்ந்த ஒதுக்கீடாக ரூபாய் 3391.23 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீடுகள் எந்த அளவிற்கு அரசு மருத்துவ மனைகளின் மேம்பாட்டிற்கும், செயல்பாட்டிற்கும் தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் சிறப்பாக செயல்பட்டு வருவதன் காரணமாக; தனியார் மருத்துவ மனைகளில் நடைபெறும் மகப்பேறுகள் குறைந்து; அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறும் மகப்பேறுகளின் எண்ணிக்கை மும்மடங்காக உயர்ந்துள்ளது.
2005-2006ஆம் ஆண்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்ற மகப்பேறுகளின் எண்ணிக்கை 81190 லிருந்து 2008-2009ஆம் ஆண்டில் 2,59,104 ஆக உயர்ந்துள்ளது. இந்த சாதனையை மத்திய அரசு தொடர்ந்து பாராட்டி வருகிறது.
மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து தாலுக்கா அரசு மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனைகள் ரூபாய் 607 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் அரசு மருத்துவ மனைகளுக்கு தேவையான புதிய கட்டடங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட்டு தேவையான கூடுதல் மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
இது மட்டுமல்லாது இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு விழுப்புரம், தருமபுரி, திருவாரூர், சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய மாவட்டத் தலைமையிடங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உருவாக்க ஆணையிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
எனவே பொது சுகாதாரத்தை பொது மருத்துவமனைகளின் மூலம் உறுதிப்படுத்தும் அடிப்படை கடமையை அரசு கை கழுவுகின்றது என்று தீக்கதிர் கட்டுரையில் எழுதியிருப்பது உண்மைக்கு மாறான கூற்றாகும். அரசு மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் தொடர்ந்து இவ்வாறு மேம்படுத்தப்பட்டாலும் இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை போன்ற உயர் சிகிச்சை தேவைப்படும் அனைவருக்கும் உடனடியாக செய்வதில் இடர்ப்பாடுகள் உள்ளன என்பதை நன்கு உணர்ந்த இந்த தமிழக அரசு, ஏழை எளிய மக்களின் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளையே நாடி காத்திருக்க வேண்டிய நிலையை மாற்றி வசதி படைத்தவர்களைப் போன்று சாமானிய மக்களும் உடனடியாக உயிர் காக்கும் உயர் சிகிச்சையை உரிய தனியார் மருத்துவமனையிலும் பெறக்கூடிய ஒரு அரிய வாய்ப்பை உருவாக்கிட புரட்சிகரமான இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை 2009ஆம் ஆண்டு ஆளுநர் உரையில் அறிவித்தது.
இதைப் போன்ற திட்டம் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் ராஜீவ் ஆரோக்கியஸ்ரீ திட்டம் என்ற பெயரில் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சாமானிய மக்களைப் பொறுத்தவரையில் பல்வேறு சாதாரண நோய்களுக்கு அவர்கள் அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளக்கூடிய அதே நேரத்தில் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ஒரு கூடுதல் வசதியை (supplementary facility) உருவாக்கித் தந்துள்ளது. எனவே அரசு மருத்துவமனைகளுக்கு இந்த அரசு அளித்துவரும் முன்னுரிமையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.
இத்திட்டத்தை செயல்படுத்தும் மருத்துவ காப்பீட்டு நிறுவனமான Star Health and Allied Insurance Company திறந்த ஒப்பந்தப்புள்ளி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்
நிறுவனத்துடன் United India Insurance Company, Oriental Insurance Company போன்ற பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் co insurers என்ற முறையில் பங்கேற்றுள்ளன.
இத்திட்டத்தை செயல்படுத்தும் Star Health நிறுவனம் மத்திய அரசின் காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம். மேலும் இந்நிறுவனம்தான் ஆந்திர மாநில அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அரசு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் இவ்வொப்பந்த புள்ளியில் கலந்து கொண்டு ஆண்டு காப்பீட்டுக் கட்டணமாக குடும்பம் ஒன்றுக்கு சுமார் ரூபாய் 1000 என்ற வீதத்தில் கேட்டிருந்தனர். இக்கட்டணத்தை அப்படியே ஏற்று அரசு அளித்திருந்தால் அரசுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய செலவு ஆண்டுக்கு ரூபாய் 1000 கோடி வீதம் நான்கு ஆண்டுகளுக்கு ரூபாய் 4000 கோடியாக இருந்திருக்கும்.
ஆனால் குறைந்த ஒப்பந்தப்புள்ளி அளித்த நிறுவனத்துடன் அரசின் சார்பில் அதிகாரிகள் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தி குறைந்த கட்டணமாக ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 517 கோடி மட்டுமே காப்பீட்டுத் தொகையாக செலுத்தக் கூடிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
“காப்பீட்டு நிறுவனம் 358 மருத்துவ மனைகளைக் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அரசு மருத்துவமனை ஒன்று கூட தகுதியான மருத்துவமனையாக காப்பீட்டு நிறுவனத்தின் பார்வையில் தென்படவில்லை” என்று தீக்கதிர் கட்டுரையாளர் எழுதியுள்ளார். ஏற்கெனவே இத்திட்டத்திற்கான அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இத்திட்டத்தின் கீழ் உயர் சிகிச்சை அளிக்கவல்ல அரசு மருத்துவமனைகளும் சேர்த்துக்கொள்ளப்படும். தேவையான அடிப்படை வசதிகளைக் கொண்ட அரசு மருத்துவமனைகளின் பட்டியல் 10.9.2009-க்குள் இறுதியாக்கப்பட்டு அறிவிக்கப்படும். எனவே இத்திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் மட்டுமல்லாது அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
‘மத்திய அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தமிழகம் முழுவதும் அமலாக்கப்பட்டால் தொழிலாளர்கள் மிகுந்த பயன்பெறுவர். இதை தவிர்ப்பதில் கலைஞரின் உள்நோக்கம் என்ன?’ என்று தீக்கதிர் ஒரு வினா எழுப்பியுள்ளது.
மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.30,000 வரை தான் சிகிச்சை பெற முடியும் என்று இக்கட்டுரையாளரே ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 1 இலட்சம் வரை உயர் சிகிச்சை பெற முடியும். எனவே மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தைவிட கலைஞர் காப்பீட்டுத் திட்டம் அதிக அளவில் பயன் அளிக்கும் திட்டம் என்பது வெள்ளிடைமலை.
இதற்கு மேலும் விளக்கம் தேவையில்லை. மேலும் மத்திய அரசு இத்திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் மட்டும்தான் பயன்பெற இயலும். அதிலும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயன்பெறும் குடும்பங்களின் எண்ணிக்கையும் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 78 இலட்சத்திற்கும் மேற்பட்ட வேளாண் தொழிலாளர்கள் மற்றும் சிறு, குறு விவசாயிகள் மற்றும் 35 இலட்சத்திற்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களின் குடும்பங்கள் எந்தவித வருமான வரம்பும் இன்றி பயன் பெறுகின்றனர். இதுமட்டுமல்லாது ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு குறைவாக வருவாய் உள்ள குடும்பங்கள் அனைவருக்கும் இத்திட்டத்தில் பயன் பெற வகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டம் செயல்படத் தொடங்கி மூன்று வாரங்களுக்குள் இதுவரை 298 பேருக்கு அறுவை சிகிச்சை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக இதுவரை ரூபாய் 1 கோடியே 72 லட்சம் காப்பீட்டுத் தொகையாக Star Health காப்பீட்டு நிறுவனம் வழங்கியுள்ளது.
மேலும் மத்திய அரசு திட்டத்தின் கீழ் பயனாளிகள் ரூ.30 கட்டவேண்டும். ஆனால் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகள் எவ்விதமான கட்டணமோ, பதிவுக் கட்டணமோ அல்லது அடையாள அட்டைக்கான கட்டணமோ செலுத்தவேண்டியதில்லை. இத்திட்டத்தின் பயன்கள்
பயனாளிகள் அனைவருக்கும் இலவசமாக கிடைக்கப் பெறுகிறது. ஆகமொத்தத்தில் “கலைஞர் காப்பீட்டுத் திட்டம்” பன்மடங்கு பயனளிக்கும் திட்டம் என்பது தெளிவு. எனவே மத்திய அரசின் திட்டத்தை தவிர்ப்பதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என்பது சுட்டிக் காட்டப்படுகிறது.
உண்மை விவரங்கள் இவ்வளவிருக்க - தீக்கதிர் நாளேடு - அரசுத் திட்டங்கள் அத்தனையையும் குறை கூற வேண்டுமென்ற எண்ணத்தோடு கட்டுரை தீட்டியுள்ளது. அரசின் திட்டங்களை உண்மையில் அரசு அலுவலர்களும், பொது மக்களும் பெரிதும் வரவேற்கிறார்கள். 23.7.2009 அன்று “உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்”, மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டபோது - “ஒவ்வொரு சாமானிய மனிதனின் வீட்டு வாசலுக்கும் சென்றடையத்தக்க வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று கூறியதோடு - “மருத்துவ சேவையை வழங்குவதில் தமிழ்நாடு இதர மாநிலங்களுக்கெல்லாம் முன் மாதிரியாகத் திகழ்கிறது” என்றும் பாராட்டினார். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடு மட்டும் இத்திட்டத்தினால் யாருக்கு ஆதாயம் என்று கட்டுரை தீட்டியுள்ளது. இந்தத் திட்டத்தினால் பொது மக்களுக்கு ஆதாயம் - அரசு அலுவலர்களுக்கு ஆதாயம் - ஏன் கட்டுரை தீட்டியவர்களுக்கும் ஆதாயம் என்பது தான் உண்மை! உண்மை!
அன்புள்ள, மு.க. 22-8-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 318–324. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.