அடக்கம்

முரசொலி · தொகுதி 42 · கடிதம் 3415

முரசொலி கடிதங்கள் · 3415

இரு நாள் நமக்குத் திருநாள்!

நாள் 13.9.2009சுமார் 4 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3415. இரு நாள் நமக்குத் திருநாள்!

உடன்பிறப்பே,

இரு நாள் நமக்குத் திருநாள்! பொங்கல் நாளை பூரிப்பு பொங்கிட தமிழர் திருநாள் என்று குறிப்பிடுகிறோம். தேனும் திராட்சையும் கலந்து தெவிட்டாமல் இனிக்கின்ற தெள்ளமுதை அள்ளி அருந்துகிறோம். புள்ளி வைத்துப் போடும் கோலங்களில் புதுப் பானையென்ன; புனல் பாயும் அருவிகளென்ன; புகையும் வத்திகள் பதித்த சித்திரங்கள் என்ன; என்ன என்னவென்று எத்தனையோ உற்சாகப் பெருக்கினை வெளிப்படுத்தி வீடெல்லாம் - வீடுகள் அமைந்த வீதியெல்லாம் ஒளியூட்டி மகிழ்கிறோம்.

ஒருநாள் பொங்கலுக்கு; அது தமிழர் திருநாள் என்பதற்காக இத்தனை மகிழ்ச்சி! அத்தனை பூரிப்பு!

இதோ; அந்தத் தமிழர் திருநாளை நம் நினைவில் பதித்து - நெஞ்சில் செதுக்கிய - நிகரில்லாத தமிழர் கோமான் யார் என்ற கேள்விக்கு - ஒரே விடையாக விளங்குகின்ற வித்தகர் - தன்மானக் குன்றம் - தரணி வாழ் தமிழர்க்கெல்லாம் பெருமன்றம் - தகைமைக்கு இலக்கணமாய் - பகைமைக்கும் பரிவு காட்டும் நற்குணச் செல்வமாய்த் திகழும் பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டினை அவர் பிறந்த நாள் முதல் இந்நாள் வரையில் தமிழ் கூறும் நல்லுலகில் நமது கழகத்தின் வேர் பதிந்துள்ள மண் - கிளைகளின் நிழல் படிந்துள்ள கூரைகள் அனைத்திலும் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் நமக்குரிய இரு வண்ணக் கொடிகளை ஊன்றியும் - ஊரெல்லாம் பறக்க விட்டும் - அவர் பிறந்த நாளின் சிறப்பையும் - அவர் பிறந்ததால் நாட்டுக்கும், நம் இனத்துக்கும், நம் தாய்த் தமிழுக்கும் ஏற்பட்ட உயர்வையும், அவற்றை விரிவாக எடுத்துரைத்து விழா முடித்திட நமக்குள்ள பொறுப்பையும் எடுத்தியம்பியும் தொடர்ந்து விளக்கியுள்ளோம்.

பிறந்த நாள் நூறாவது ஆண்டு நிறைவாக - காஞ்சிபுரத்தில் மாபெரும் விழா மட்டுமல்ல; அதனை மாநாடு போலவே நடத்துகிறோம்....

நாட்டு வாட்டம் போக்கிடவும், நலிவு தீரவும் எத்தனையோ மாநாடுகளை திட்டமிட்டு நடத்திக்காட்டிய நம் அண்ணனுக்கு நாம் நடத்துகின்ற மாநாடு இது. காஞ்சியம்பதி வாழ் கழகக் காவலர்களும் அமைச்சர் தம்பி தா.மோ. அன்பரசனும், சி.வி.எம்.அ. சேகரும் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகளும் - காஞ்சியத்தில் கண் கொள்ளாக் காட்சி காண நம்மை அழைத்திருக்கின்றனர்.

அதற்கு முன்பே சென்னை மாநகர், பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் செப்டம்பர் 15ஆம் நாள் மாலை 5 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் மாண்புமிகு பிரணாப் முகர்ஜி அவர்கள் அண்ணா அவர்களின் திரு உருவமும், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியமைத்த அவரது கையெழுத்தும் பொறித்த ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறார். தமிழக அரசின் சார்பில் நடைபெறும் அந்த விழாவில், அரசின் சார்பாக அரியதொரு கருத்துக் கருவூலமாக, பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா மலரும் வெளியிடப்படவுள்ளது. கழகப் பொதுச் செயலாளர், நிதியமைச்சர் இனமானப் பேராசிரியர் தலைமையில் மலர்க்குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் சார்பாக மலர் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த விழாவிற்கு நான் தலைமை தாங்குகிறேன். பேராசிரியர் முன்னிலை வகிக்கிறார். துணை முதல் அமைச்சர் தம்பி மு.க. ஸ்டாலின் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அண்ணாவைப் பற்றிய இன்னிசைப் பாடல்கள், அண்ணாவின் அழகிய ஆங்கில உரைகளும், தமிழ் உரைகளும் அடங்கிய இணைய தளம் ஆகியவற்றைத் தொடங்கி வைத்து, அண்ணாவின் பொன்மொழிகள் மற்றும் அகர முதலிநூல்களை வெளியிடுகிறார்.

மத்திய அமைச்சர்கள் தம்பிகள் தயாநிதி மாறன், பழனிமாணிக்கம் மற்றும் மலர்க்குழு உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி ஆகியோர் விழாவிலே கலந்து கொண்டு உரையாற்றவிருக்கிறார்கள்.

செய்தித் துறை அமைச்சர் தம்பி பரிதி இளம்வழுதி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். அரசு சார்பில்

அன்று தொடங்கும் அந்த விழாவின் எழுச்சி; கழகத்தின் சார்பில் செப்டம்பர் 26 அன்று காஞ்சியில் மாநாடு போல் நடைபெற இருக்கின்ற மகத்தான விழாவாக அமைய இருக்கிறது.

செப்டம்பர் திங்கள் 15 ஆம் நாள் காலை 9 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு எதிரே அமைந்துள்ள அண்ணாவின் திரு உருவச் சிலைக்கு நானும், பேராசிரியரும் மற்றும் கழக முன்னணியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த விருக்கிறோம்.

கழகத்தின் சார்பில் செப்டம்பர் 26-ந் தேதியன்று காஞ்சிபுரத்தில் நடத்தப்படும் விழாவில் - காலை 10 மணியளவில் - காஞ்சிபுரம் அண்ணா அரங்கத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தலைமையில் அண்ணாவைப் பற்றிய கவியரங்கம் நடைபெறவுள்ளது. அந்தக் கவியரங்கில், “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” என்ற தலைப்பில் கவியரசு வாலி அவர்களும், “நீதி தேவன் மயக்கம்” என்ற தலைப்பில் கவிப் பேரரசு தம்பி வைரமுத்து அவர்களும், “ஆரிய மாயை” என்ற தலைப்பில் கவிச்சுடர் தம்பி கவிதைப் பித்தன் அவர்களும், “அண்ணாவின் உயிர்” என்ற தலைப்பில் கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி அவர்களும், “சாமானியர்களின் சகாப்தம்” என்ற தலைப்பில் கவிஞர் விவேகா அவர்களும், “வெள்ளை மாளிகையில்” என்ற தலைப்பில் கவிஞர் யுகபாரதி அவர்களும் கவிதை பாடவுள்ளார்கள்.

காலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் - அண்ணா அவர்கள் தன் வாழ்வில் மாணவர்கள்பால் பெரிதும் அன்பும் அக்கறையும் கொண்டு, அவர்கள் முன்னேறப் பாடுபட்டார் என்பதற்கு அடையாளமாக - மேல்நிலைப் பள்ளித் தேர்வில் உயர் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தி.மு.கழக அறக்கட்டளை சார்பில் நிதியளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் போட்டியில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு முரசொலி அறக்கட்டளை சார்பில் நிதியளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதுமாத்திரமல்ல, தொழிலாளர்கள்பால் அண்ணா தூயநேசம் கொண்டவர் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும்

வழங்குவதைப் போலவே இந்த ஆண்டும் சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கான நற்சான்று, பண முடிப்பு, பதக்கம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

செப்டம்பர் 26ஆம் தேதி மாலையில் காஞ்சிபுரம், நசரத்பேட்டை அறிஞர் அண்ணா நகரில் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவும், முப்பெரும் விழா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியும் மாநாடு போலவே ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. அந்த விழாவிற்கு கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் தலைமை தாங்கி, விருதுகளை வழங்கிட உள்ளார்.

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா விருதுகள் என்பதால் இந்த ஆண்டு அண்ணா விருதினை எனக்கு வழங்குவ தென்று முடிவெடுத்து அறிவித்துள்ளார்கள். கழகத்தின் சார்பில் முப்பெரும் விழா விருதுகள் வழங்குவ தென்று தொடங்கி முதல் ஆண்டு அந்த விருதுகளை வழங்கியபோது முதல் அண்ணா விருதினை கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் தான் பெற்றார். முதல் ஆண்டில் அண்ணா விருதினை பேராசிரியர் பெற்று, அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா விருதினை நான் பெறவிருக்கிறேன் என்பதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு செய்தி அல்லவா? அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் பெரியார் விருது, தமிழர் தலைவர், இளவல் மானமிகு கி. வீரமணி அவர்களுக்கும், கலைஞர் விருது தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்களுக்கும் பேராசிரியர் அவர்களால் வழங்கப்படவுள்ளது.

அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவினை காலமெல்லாம் நினைவு கூர்ந்திடும் வகையில் - காஞ்சி மாநகரின் நுழைவாயிலில் - அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவுத் தூண் ஒன்று சிறப்பாக அமைப்பதற்கான பணிகளும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. 26ஆம் தேதியன்று காலை அந்த நினைவுத் தூணும் திறந்து வைக்கப்படவுள்ளது.

உடன்பிறப்பே,

இந்த விழாக்கள் பற்றிய செய்திகள் ஏற்கெனவே ஏடுகளில் வெளிவந்து அவற்றில் கலந்து கொள்ள புறப்பட வேண்டுமென்ற

எண்ணத்தோடு நீ இருக்கிறாய் என்பதை நான் அறிவேன். இருந்தாலும், அண்ணாவின் விழாவிற்கு, அண்ணன் நான் அழைக்க வில்லையே என்ற குறை உனக்குமிருக்க மல்லவா? அதற்காகவே இந்தக் கடிதம்! தலைமைக் கழகமும், அரசும் அண்ணாவிற்கு விழா எடுத்த போதும், உனது சொந்த ஊரில் உன்னால் முடிந்த அளவிற்கு அண்ணாவுக்கு விழா எடுப்பாய் என்பதை நான் அறிவேன். அதுதான் குன்றின் மேலிட்ட விளக்காக ஒளி வீசும். இருந்தாலும் தலைமைக் கழகம் எடுக்கும் இந்த விழாவிற்கு நீ உன் குடும்பத்தோடு புறப்படத் தயாராகிடு!

தம்பிகள் நாம் நடத்தும் இந்த விழாக்களுக்கு அண்ணா வந்திருந்து நம்மை வாழ்த்திட வேண்டாமா? அந்த வாழ்த்தினைப் பெற்றிட விரிப்புலி போல் வந்திடுக தம்பி - புறநானூற்றுத் தாய்களே புறப்படுவீர்; காஞ்சித் தலைவன் பிறந்த நகருக்கு!

அன்புள்ள, மு.க. 13-9-2009

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 330–334. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 42-இல் மேலும் கடிதங்கள்