அடக்கம்

முரசொலி · தொகுதி 42 · கடிதம் 3417

முரசொலி கடிதங்கள் · 3417

சொன்னது; யாராம்? என்ன பேராம்?

நாள் 12.10.2009சுமார் 5 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3417. சொன்னது; யாராம்? என்ன பேராம்?

உடன்பிறப்பே,

கடந்த செப்டம்பர் திங்கள் 22 ஆம் நாள் புது டெல்லியில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை; தி.மு.கழக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து - இலங்கையில் நடைபெற்ற போரின்போது உள்நாட்டில் இடம் பெயர்ந்த இலட்சக் கணக்கான தமிழர்கள் மீண்டும் அவர்களது இல்லங்களுக்குத் திரும்பவும்; அவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்றும்; அப்பாவித் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை நிறுத்தும்படி எச்சரிக்கை செய்யவேண்டும் என்றும்; இலங்கையில் முள் கம்பி வேலிகளுக்குள் அல்லல்படும் தமிழர்களின் உண்மை நிலையை நேரில் சென்று பார்த்து அறிந்துவர, நமது கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றினை இலங்கைக்கு அனுப்பிட ஆவன செய்திட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டதை அறிவாய்! மனுவினைப் பெற்றுக்கொண்ட பிரதமர் அவர்கள் இந்தக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று பதில் அளித்தார்.

இதன் தொடர்ச்சியாகத்தான் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் ஆலோசனைப் படி மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் சென்னை வந்து என்னை நேரில் சந்தித்து உரையாடியதன் விளைவாக - கடந்த 22 ஆம் தேதி பிரதமரைச் சந்தித்து கோரிக்கை வைத்த கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றினை இலங்கைக்கு அனுப்பி, அங்கே அகதிகள் முகாம்களில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களின் நிலைமையை அறிந்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழுவினை மத்திய அரசோ, மாநில அரசோ அவர்கள் செலவிலே அனுப்பவில்லை. அந்தந்த கட்சிகளுக்கான

நாடாளுமன்ற உறுப்பினர்களின் விமானக் கட்டணம் உட்பட்ட செலவுகளை அந்தந்த கட்சிகள்தான் ஏற்றுக்கொண்டுள்ளன.

இந்தக் குழு இலங்கைக்குச் சென்று நிலைமைகளை அறிந்துவர இந்திய, இலங்கை அரசுகள் அனுமதி அளித்துள்ளன.

ஆனால் இலங்கை சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு பற்றி மூன்று மாத ஓய்வுக்குப் பின் தலைநகரம் திரும்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவியும் - அவரோடு இன்னமும் தோழமையிலே இருக்கிறோமா இல்லையா என்று தெரியாத நிலையில் உள்ள சில கட்சிகளும் தனித்தனியாக அவசர அவசரமாக அறிக்கைகளை தந்துள்ளனர்; பேட்டிகளை அளித்துள்ளனர். அவர்களுக்கு இலங்கையில் முகாம்களில் தமிழர்கள் அவதிப்படுவதைப் பற்றியோ அவர்களைச் சென்று பார்த்து நிலைமைகளை அறிந்து வர வேண்டும் என்பதைப் பற்றியோ கவலையில்லை.

இங்கேயுள்ள தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணியைப் பற்றி தாக்கி அறிக்கை விட வேண்டும் என்பதுதான் குறிக்கோள். அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஏன் அனுப்பவில்லை என்கிறார்கள். அந்தக் கட்சியிலே உள்ளவர்களுக்கு உண்மையிலேயே இலங்கை சென்று நிலைமைகளை அறிந்துவர வேண்டுமென்று அக்கறை இருக்குமேயானால், அவர்கள் பிரதமரைச் சந்தித்து கோரிக்கை வைத்து - இந்திய அரசு இலங்கை அரசோடு அதைப்பற்றி கலந்தாலோசித்து அனுமதி பெற்று சென்று பார்க்க வேண்டியதுதானே? அவர்கள் அதற்கான முயற்சியிலே ஈடுபடாமல், நாம் ஈடுபட்டாலும் அதற்கு குற்றம், குறை கூறி அறிக்கை விட்டுக் கொண்டிருந்தால், அது இலங்கைத் தமிழர்களைக் காப்பதாக ஆகிவிடுமா? இலங்கைப் பிரச்சினை பற்றி விவாதிக்க தி.மு.கழகச் சார்பில் நடத்தப்பட்ட - அவ்வளவு ஏன், அரசு சார்பிலேயே அழைப்பு அனுப்பப்பட்டு நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் கலந்து கொண்டும் - பின்னர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தும் - அரசு நடத்துகின்ற இந்த அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் “கபட நாடகம்” என்று ஒவ்வொரு முறையும் அறிக்கை வெளியிட்டவர்கள் இன்னமும் அத்தகைய அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருப்பவர்கள் யார் என்பது தமிழ்நாட்டிலே உள்ள மனச்சாட்சி கொண்ட அத்தனை மக்களுக்கும் மிக நன்றாகவே தெரியும்.

அறியாமைக்கும் அவசரத்துக்கும் பெயர் போன ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் - “இந்த நாடாளுமன்றக் குழுவிற்கு கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலின் தலைமை வகிக்கப் போவதாக அறிவிப்பு வருகிறது. நாடகத்தின் தன்மை அப்போதுதான் தெளிவாகப் புரிகிறது. இதில் எழுந்துள்ள முக்கியமான கேள்வி என்னவென்றால், ஒரு நாடாளுமன்றக் குழுவிற்கு சட்டமன்ற உறுப்பினரும், மாநில அமைச்சருமான மு.க. ஸ்டாலின் எப்படி தலைமை வகிக்க முடியும் என்பதுதான்” என்று கேட்டு எழுதியிருக்கிறார்.

தம்பி மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கப் போவதாக அறிவிப்பு அரசின் சார்பிலோ, கட்சியின் சார்பிலோ வந்ததா? அல்லது நான் விடுத்த அறிக்கையிலே அவர் தலைமை வகிக்கப் போவதாகக் கூறினேனா? பத்திரிகையில் வெளி வந்த ஏதோவொரு யூகச் செய்தியைப் படித்துவிட்டு, மு.க.ஸ்டாலின் எப்படி தலைமை வகிக்க முடியும் என்று அவரே அறிக்கை விட்டிருப்பதைப் பார்க்கும்போது - ஜெயலலிதா எப்படி அரசியலில் அவசரப் படுகிறார்; என்பது புரிகிறதா இல்லையா?

அடுத்து அந்தக் குழுவில் கருணாநிதியின் செல்ல மகள் கனிமொழி இடம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது என்று என் குடும்பத்தினர் மீது வயிறு எரிகிறார். இவர்களுக்கெல்லாம் - இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாமென்று நினைத்தாலும், வம்புக்கு இழுத்தால் என்ன செய்வது?

இந்தக் குழு இலங்கை சென்று திரும்பியதும், கருணாநிதியிடம் அறிக்கையை அளிக்குமா? அல்லது இந்திய நாடாளுமன்றத்திடம் அறிக்கையை அளிக்குமா? என்றும் ஜெயலலிதா கேட்டிருக்கிறார். நிச்சயமாக ஜெயலலிதாவிடம் அந்த அறிக்கையை அளிக்காது! எங்கள் தோழமை அணியின் சார்பில் சென்றுள்ள குழு அது. எங்கள் கட்சிகளின் செலவிலே அனுப்பி வைக்கப்பட்ட குழு அது. அறிக்கையை எங்களிடம்தான் அது அளிக்கும். குழு பற்றிய அறிவிப்பு நாடாளுமன்றத்திலே அறிவிக்கப்பட்டு, அரசின் சார்பில் - அரசின் செலவில் குழு சென்றிருக்குமேயானால், அப்போது குழு அரசிடமோ, நாடாளுமன்றத்திலோ அறிக்கையை அளிக்கும். இந்த எளிய நடைமுறை கூடத் தெரியாமல் கேள்வி கேட்டு அறிக்கை விடுத்திருக்கிறார் அம்மணி!

இலங்கையிலே முள் வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு, இலங்கைத் தமிழர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று அறிந்து அவர்களின் இன்னல்களைக் களைய எப்படியோ முயற்சி செய்து, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதற்கு வக்கணை பேசுவதோடு, அதனை ஜெயலலிதா கேலிக் கூத்தான நாடகம் என்று அறிக்கை விடுகிறார் என்றால், இலங்கைத் தமிழர்களிடம் அவருக்கு உள்ள அக்கறை நமக்குத் தெரிகிறதா இல்லையா? இலங்கையிலே தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஆதரித்து, இலங்கை அரசுக்கும் அதன் அதிபருக்கும் ஆதரவாக அறிக்கை விட்டவர்தானே ஜெயலலிதா. அவருக்கு இந்தச் செயல் கேலிக் கூத்தான நாடகமாகத்தான் தெரியும்.

மேலும் ஜெயலலிதா அறிக்கையிலே இறுதியாக ஆத்திரத்தின் உச்ச கட்டத்திற்குச் சென்று - “திருக்குவளை கோயிலில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு என்னதான் பிரார்த்தனை செய்தாலும், தமிழ் மக்களுக்கு எதிராக கருணாநிதி செய்த பாவச் செயல்களுக்கு விமோசனம் கிடைக்காது” என்று முடித்திருக்கிறார். நான் என்ன பாவச் செயல்களைச் செய்து விட்டேன்? அவரை ஒருமுறை கூட பார்த்தது கிடையாதே? பேசியதில்லையே? வேறு என்ன பாவம் செய்துவிட்டேன்? பிரார்த்தனை, யாகம், பூஜை, புனருத்தாரணம் எல்லாம் ஜெயலலிதாவுக்குத் தான் கை வந்த கலை என்பதும், தமிழ் மக்களுக்கு எதிராக நான் பாவச் செயல்களைச் செய்வேனா? அல்லது அவர் பாவச் செயல்களை செய்தாரா? என்பதை தமிழ் மக்கள் நன்கறிவார்கள் என்பதும் அவர் செய்த பாவச் செயல்களுக்குத்தான் தமிழ்நாட்டு மக்கள் ஏற்கெனவே பல முறை பாடம் புகட்டி மூலையிலே அவரை இப்போது உட்கார வைத்திருக்கிறார்கள் என்பதும் எழுதி தெரிந்து கொள்ள வேண்டியதல்ல. நேற்று நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலிலே கூட 100 இடங்களுக்கு 17 இடங்களில்தான் அந்தக் கட்சி வெற்றி பெற்றது என்ற ஓர் உதாரணம் போதுமல்லவா?

அயல்நாடு ஒன்றுக்கு, வேறொரு நாட்டிலிருந்து அதிகாரபூர்வமான குழு ஒன்றையோ, அதிகாரபூர்வமற்ற குழு ஒன்றையோ அனுப்ப வேண்டுமென்றால், அந்த அயல்நாட்டின் அனுமதியின்றி அனுப்ப முடியாது என்பது சிறுபிள்ளைகளுக்குக்கூடத் தெரிந்த விஷயம். அதனால்தான் இரண்டு அரசுகளின்

அனுமதிகளையும் பெற்று எங்கள் தோழமைக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்கள் நிலைமைகளை அறிந்து வர அங்கே சென்றுள்ளார்கள். தற்போதுகூட, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பிரச்சாரப் பயணம் நடத்தப் போவதாகவும், பொதுக்கூட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்கள் என்றால், அது அவர்களுடைய கட்சியின் சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கை. அதற்கு ஏன் எங்களை அழைக்கவில்லை என்றா கேட்க முடியும்? பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளடக்கிய குழுவை அனுப்பா விட்டால் உண்மைகளை கண்டறிய முடியாது என்றும் அந்த இயக்கத்தினர் பேட்டியில் கூறியுள்ளார்கள். அந்த இயக்கத்தின் சார்பில் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் அழைத்துக் கொண்டு போய், பிரதமரைச் சந்தித்து கோரிக்கை வைப்பதை யார் தடுத்தார்கள்? அதற்கான முயற்சியிலே ஈடுபடாமல், நாம் செய்கின்ற முயற்சிகளை கண்டுபிடிப்பு நாடகம் என்று விமர்சனம் செய்வது சரியா?

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ராஜபக்சேயின் விருந்தினராக எம்.பி.க்கள் குழு போயிருக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார். ராஜபக்சேயின் விருந்தினராக இந்தக் குழு செல்லவில்லை. அந்த நாட்டின் அதிபர் அவர் என்ற முறையிலே அவருடைய அனுமதியோடு இந்தக் குழு சென்றுள்ளது என்பதுதான் உண்மையாகும். எப்படியாவது இலங்கையிலே அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று நாங்கள் எங்களாலான முயற்சிகளிலே ஈடுபடுகிறோம். இலங்கைத் தமிழர்கள்பால் எல்லோருக்கும் அக்கறை உண்டு. அவர்களுக்கு எந்த வகையில் எல்லாம் உதவிட முடியுமென்று பார்க்க வேண்டுமே தவிர, இங்கே உள்ளவர்களே ஒருவருக்கொருவர் அறிக்கை விட்டுக்கொண்டிருந்தால், இலங்கைத் தமிழர்களின் இன்னல் களைந்துவிடுமா? எனவே இங்குள்ள எதிர்க்கட்சிகள் உண்மையிலேயே இலங்கைத் தமிழர்கள்பால் அவர்களுக்கு அக்கறை இருக்குமேயானால், எதற்கெடுத்தாலும் எங்கள் மீது காய்ந்து விழுவதை நிறுத்திக் கொண்டு - இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற என்ன வழி என்பதிலே கவனத்தைத் திருப்பிட வேண்டுமென்று

கேட்டுக்கொள்கிறேன். இப்படி தமிழ்நாட்டில் நமக்குள்ளே மோதிக் கொண்டு தானே - இலங்கைவாழ் தமிழர்களிடையேயும் சகோதர யுத்தத்திற்கும் வழிவகுத்து இன்றைக்கு இந்த அவலநிலைக்கு ஆளாகியிருக்கிறோம் என்பதை இனியாவது சிந்திக்க வேண்டாமா? தமிழகச் சட்டமன்றத்தில்; விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜெயலலிதா அம்மையார் முன்மொழிந்து நிறைவேற்றிய தீர்மானத்தை அதற்குள் மறந்துவிட இங்குள்ள தமிழ் மக்கள்; ஏமாளிகளா? அல்லது கோமாளிகளா? ஒரு யுத்தம் என்றால் அதில் அப்பாவி மக்கள் சாவது சகஜம்தான் என்று சொன்னது; யாராம்? அவருக்கு என்ன பேராம்?

அன்புள்ள, மு.க. 12-10-2009

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 338–343. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 42-இல் மேலும் கடிதங்கள்