முரசொலி கடிதங்கள் · 3419
பேரறிஞர் புகழ்ந்த என்னைப் பெற்ற தாய்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3419. பேரறிஞர் புகழ்ந்த என்னைப் பெற்ற தாய்!
உடன்பிறப்பே,
தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, நேற்றைய தினம் விடுத்த அறிக்கையில் ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு “முத்துவேலர் - அஞ்சுகத்தம்மாள் பேருந்து நிலையம்” என்று பெயர் சூட்டவும், அதனை 13.10.2009 அன்று துணை முதல்வர் தம்பி மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவிருப்பதாகவும் தனக்கு செய்திகள் வந்திருப்பதாகவும், எழுதியிருக்கிறார்.
அவரது அவசரத் தனத்திற்கும் அறியாமைக்கும் எடுத்துக்காட்டாகத்தான் அந்த அறிக்கையும் எழுதப்பட்டுள்ளது. 13ஆம் தேதி துணை முதல்வர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியின் அழைப்பிதழை உடனடியாக எடுத்துவரச் செய்து பார்த்தேன். அந்த அழைப்பிதழில் எந்த இடத்திலும் முத்துவேலர் - அஞ்சுகத்தம்மாள் பேருந்து நிலையம் திறப்பு விழா என்று குறிப்பிடப்படவே இல்லை. இராதாபுரம் பேருந்து நிலையம் துவக்க விழா என்றுதான் அச்சிடப்பட்டுள்ளது.
இந்தப் பேருந்து நிலையம் பற்றிய விவரத்தை நான் உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக விசாரித்தேன். அவர் அனுப்பிய விவரம் வருமாறு :-
“ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் அவர்களின் நடவடிக்கையின்படி, இராதாபுரம் ஊராட்சி ஒன்றியம், இராதாபுரம் கிராம ஊராட்சியில் 2007-2008ஆம் ஆண்டு மாநில நிதிக் குழு மான்யம், உள்கட்டமைப்புப் பற்றாக்குறை நிரப்பும் நிதி (SFC-IGF) திட்டத்தின் கீழ் ரூ. 71.91 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்களின் செயல்முறைகளின்படி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, பணி முடிக்கப்பட்டு, தற்போது திறக்கப்பட்ட தயார் நிலையில் உள்ளது.
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சிப் பண்பாடு ஆணையரின் நடவடிக்கையின்படி இராதாபுரம் அருள்மிகு வரகுணபாண்டீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான 90 சென்ட் புஞ்சை நிலத்தை புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பொருட்டு, நிலமதிப்பு ரூ. 3,13,632/- உடன் 50 சதவிகிதம் கூடுதல் தொகை சேர்த்து மொத்தத் தொகை ரூ. 4,70,448/-க்கு விற்பனை செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் இராதாபுரம் ஊராட்சிக்காக இந்தத் தொகை ரூ.4,70,448/- இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. அப்பாவு அவர்களால் இராதாபுரம் அருள்மிகு வரகுணபாண்டீஸ்வரர் திருக்கோவிலுக்கு 5-5-2007 அன்று செலுத்தப்பட்டு, அந்தக் கோயிலால் முன் நுழைவு அனுமதி வழங்கப்பட்டு பணி துவக்கப்பட்டது.
இராதாபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கான 90 சென்ட் நிலத்தின் கிரயத் தொகையை இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. அப்பாவு, நன்கொடையாளர் என்ற நிலையில் இருந்து, தமது சொந்த நிதியை வழங்கிட முன்வந்த போது, - அந்தப் பேருந்து நிலையத்திற்கு முத்துவேலர் அஞ்சுகம் அம்மையார் நினைவு பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் தெரிவித்து - அதன் அடிப்படையில் இராதாபுரம் ஊராட்சி மன்றம் 7-5-2007 அன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அந்தப் பேருந்து நிலையத்தில், முத்துவேலர் அஞ்சுகம் அம்மையார் ஆகியோரின் சிலைகளை அமைக்கவும், அதனைப் பராமரிக்கவும் ஆகும் செலவினை சிலை அமைப்பாளரான திரு. மு. அப்பாவு அவர்களே ஏற்க வேண்டுமெனவும், போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் இன்றி சிலை அமைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அரசு அனுமதித்து ஆணையிட்டுள்ளது. அதன்படி சிலை நிறுவப்பட்டுள்ளது.”
மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த விவரங்களை யெல்லாம் அரசுக்குத் தெரிவித்ததோடு, இராதாபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு பெயர் சூட்டுவது தொடர்பாக அரசு முடிவு செய்து ஆணை வெளியிடக் கேட்டுக் கொண்டுள்ளார். அரசின் சார்பில் இதுவரை எந்தவிதமான ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை. நான்
மாவட்ட ஆட்சித் தலைவரை இன்று தொலை பேசியில் தொடர்பு கொண்டு என் பெற்றோர் பெயரை பேருந்து நிலையத்திற்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் சூட்ட வேண்டாமென்றும், அவர்களது சிலையைத் திறக்க வேண்டாமென்றும் உறுதியாகத் தெரிவித்து விட்டேன்.
ஆனால் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் முத்துவேலர் - அஞ்சுகத்தம்மாள் என்பவர்கள் யார்? அவர்கள் இந்த நாட்டிற்கு என்ன தியாகம் செய்தார்கள்? எந்தத் துறையில் சிறந்து விளங்கினார்கள்? என்பதை அறியும் பொருட்டு, வரலாற்றுப் புத்தகங்களை புரட்டிப் பார்த்தும் அவர்களைப் பற்றிய எந்தவிதமான தகவலையும் அறிந்துகொள்ள முடியவில்லை என்றும் எழுதியிருக்கிறார். எனது பெற்றோர்களான அவர்கள் இந்த நாட்டிற்காக, தமிழ் மக்களுக்காக அல்லும் பகலும் உழைக்க என்னை வழங்கியிருக்கிறார்களே, அதுவே அவர்கள் செய்த தியாகம்தான்! ஆனால் வரலாற்றுப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தால் அம்மையார் ஜெயலலிதா செய்த தியாகங்கள் பற்றியும், அவர் எந்தத் துறையிலே சிறந்து விளங்கினார் என்பதைப் பற்றியும் பக்கம் பக்கமாக காண முடியும்.
வரலாற்றுப் புத்தகங்கள் ஏன்? முதலில் சட்டமன்ற நடவடிக்கைக் குறிப்புகளை
புரட்டிப் பார்த்தாலே போதுமே; இதோ சில உதாரணங்கள்!
■ தமிழ்நாட்டில் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளைக் கொண்டு “புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா போக்குவரத்துக் கழகம்” என்ற பெயரால் புதிய போக்குவரத்துக் கழகம் ஆரம்பிக்கப்படும். (6.4.1993)
■ அம்பத்தூரில் சுமார் 29 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவிருக்கும் தொழில் நுட்பப் பூங்கத்திற்கு ஆறு கோடி மக்களால் ஆராதனை செய்யப்படும் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அவர்களின் பெயரினையே சூட்டிட வாரியம் முடிவெடுத்துள்ளது. (8.4.1994)
■ “ஜெ. ஜெ. ஹேண்ட்லூம் டவர்” (8.4.1994)
■ “புரட்சித் தலைவி சீர்மிகு உயர்பள்ளி” (19.4.1994)
■ மாண்புமிகு புரட்சித் தலைவி அவர்களின் திருப்பெயரால் மகளிருக்கான டாக்டர் புரட்சித் தலைவி பொற்கோப்பை கால்பந்துப் போட்டி நேரு விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்படவிருக்கிறது. (19.4.1994)
■ “முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அவர்கள் பெயரில் தமிழகத்தில் சிறந்த வெளிப் பல்கலைக்கழகம் (19.4.1994).
■ சிறந்த விளையாட்டு அணியினருக்கு மாண்புமிகு முதல் அமைச்சர் புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் பெயரில் சிறந்த வேலைப்பாடுகள் அடங்கிய சுழற்கோப்பை (10.4.1994).
■ அனைத்துச் சமுதாய நலக் கூடங்களுக்கு, புரட்சித் தலைவி அவர்களுடைய பெயர் சூட்டப்படும். (26.4.1994)
■ தமிழகத்திலே இருக்கிற அனைத்து நகராட்சிகளிலும், நவீன வசதிகள் கொண்ட திருமண மண்டபங்கள் இதய தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அவர்களுடைய பெயரிலே கட்டப்படும். (26.4.1994)
■ புரட்சித்தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா என்ற பெயரில் அழகு உலா ரதங்கள் இரண்டு இந்த ஆண்டு விடப்படும். (27.4.1994)
■ திராவிட இனத்தினுடைய தன்மானத் தலைவியாக இருக்கிற டாக்டர் புரட்சித் தலைவி அவர்களுடைய திருப்பெயர் வன உயிரின் உய்விடத்திற்கு சூட்டப்படும். அதுபோன்று அங்கே அமைந்திருக்கின்ற தேசியப் பூங்கா, “டாக்டர் ஜெ. ஜெயலலிதா தேசியப் பூங்கா, முதுமலை” என்று இன்று முதல் அழைக்கப்படுகிறது. (26.4.1994)
■ செங்கை - எம்.ஜி.ஆர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் புதிய கட்டிடத்திற்கு “புரட்சித் தலைவி
டாக்டர் ஜெ. ஜெயலலிதா” என்கிற திருப்பெயரை சூட்ட முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. (30.4.1994)
■ 60 லட்சம் ரூபாய் செலவில் கோவையில் எழுப்பப்பட்டு முடிக்கப்பட்டுள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு “டாக்டர் புரட்சித் தலைவி ஜெ.ஜெ. மாளிகை” என்னும் திருப்பெயர் சூட்டப்படுகிறது. (30.4.1994)
■ சென்னை திரைப்பட நகருக்கு திரை உலக வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவரான இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அவர்களின் பெயரால் ஜெயலலிதா திரைப்பட நகர் என பெயர் சூட்டப்படும்.
■ “ஜெ.ஜெ. 92” என்ற புதிய வகை வாசனை அரிசியை அறிமுகம் செய்திருக்கிறோம். விஞ்ஞான தொழில் நுட்பங்களை வழங்கும் விவசாய அலுவலர்களுக்கு “டாக்டர் புரட்சித் தலைவி விருது” உருவாக்கியுள்ளோம். மேலும் “டாக்டர் புரட்சித் தலைவி தென்னை வளர்ச்சித் திட்டம்” அமலாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டுள்ளது. (19.4.1995)
■ ஆடு, கோழி, முயல் போன்றவைகள் வளர்க்கப்படும் “டாக்டர் புரட்சித் தலைவி மகளிர் கால்நடை கூட்டுறவுச் சங்கம்”, துவக்குவதை இத்துறை பெரும் பேறாக நினைக்கிறது. (19.4.1995)
■ மாண்புமிகு முதல் அமைச்சர் இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆன்மிகக் கல்வித் திட்டம்.
■ புரட்சித் தலைவி நல்லாசிரியர் விருது வழங்கும் திட்டம்.
■ “புரட்சித் தலைவி ஆய்வுப் பெருந்தகையாளர் ஊக்குவிப்புத் திட்டம்.”
இப்படியெல்லாம் பெயர் சூட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்ற போது - அந்த விமர்சனங்களையெல்லாம் கேட்டு
புறங்காந்திமடைந்து அமர்ந்திருந்த ஜெயலலிதா; தற்போது எனது பெற்றோர்களின் பெயர்களை ஒரு கிராம ஊராட்சிப் பேருந்து நிலையத்திற்கு - அதுவும் அந்தத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர் தனது சொந்தப் பொறுப்பில் கையிலிருந்து பணம் கொடுத்து வாங்கிக் கொடுத்துள்ள இடத்தில் - அவரது விருப்பத்தின் பெயரில் - என்னுடைய பெற்றோர்கள் பெயரை வைக்க விரும்பி - அதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டு - அதுவும் வெற்றி பெறாத நிலையில் - யாருடைய பெயரையும் குறிப்படாமல் பேருந்து நிலையம் திறக்கப்படுகின்ற போது - என்னுடைய பெற்றோர்களைப் பற்றி வரலாற்றுப் புத்தகங்களிலே தேடிப் பார்த்ததாக கிண்டல் செய்து அறிக்கை விடுகிறார் என்றால், அவரைப் பற்றி தமிழ்நாட்டு மக்கள் தான் எடை போட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தலைவர்களின் பெயரால் திட்டங்களை அமைக்கலாம், அவர்களைப் பெற்றவர்களின் பெயரால் அமைக்கலாமா என்று கேட்கக் கூடும். தந்தை பெரியார் அவர்களின் துணைவியார் ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம் - பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அன்னையார் பெயரால் சிவகாமி அம்மையார் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் - பேரறிஞர் அண்ணா அவர்களின் அன்புத் தாயார் பெயரால் பங்காரு அம்மையார் மகளிர் குழுக்கள் திட்டம் - அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களின் அன்னையார் பெயரால் சத்தியா அம்மையார் குழந்தைகள் காப்பகங்கள் திட்டம் என்று நமது ஆட்சியில் பல திட்டங்களுக்குப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. ஏன் அம்மையார் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்திலே கூட, 25-4-1995 அன்று பேரவை நடவடிக்கை குறிப்பைப் பார்த்தால் - இதோ அ.தி.மு.க. அமைச்சர் ம. சின்னசாமி பேசியிருக்கிறார், பாருங்கள் -
“கள்ளக்குறிச்சி வட்டத்தில் இருக்கிற இரண்டாவது ஆலைக்கு கள்ளக்குறிச்சி யூனிட் நம்பர் 2 என்ற ஆலைக்கு ஒரு புதிய பெயரைச் சூட்ட வேண்டுமென்று முடிவெடுத்துள்ளேன். ஒரு நிறுவனத்திற்கு பெயர் சூடுகிற பொழுது நாட்டிற்கு உழைத்தவர்களுடைய பெயரைச் சூட்டி மரியாதை செய்ய வேண்டும். அதே போல, நாட்டிற்கு உழைப்பதற்கு உரிய தலைவர்களை இந்த நாட்டுக்கு அளிக்கப் பெற்றவர்களுக்கும் மரியாதை செய்ய
வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகத்தினுடைய ஆறரை கோடி மக்களுடைய தாயாக விளங்குகிற மாண்புமிகு முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி என்கிற தாயை தமிழ்நாட்டிற்கு தந்திட்ட தாய் அன்னை சந்தியாவினுடைய பெயர் சூட்டப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.”
நான் இதனை தவறு என்று கூறவில்லை. ஜெயலலிதாவின் அன்னையார் பெயர் சூட்டப்படலாம், கருணாநிதியின் அன்னை பெயர் என்றால் வரலாற்றுப் புத்தகங்களைப் புரட்டி யார் அவர்கள் என்று தேடிப் பார்த்தேன் என்று கிண்டல் செய்யும் ஜெயலலிதாவின் தகுதியைப் பற்றி இந்த நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் இவ்வளவு விவரங்களையும் இங்கே தந்துள்ளேன்.
ஜெயலலிதாவுக்கு என்னுடைய பெற்றோரை தெரிந்திருக்க நியாயமில்லைதான்! ஏனென்றால் அவர் இருந்த உலகம் வேறு. ஆனால் என் அன்னை மறைந்த நேரத்தில் பேரறிஞர் அண்ணா எழுதிய வாசகங்களில் ஒரு பகுதி இதோ :-
“குறுநகை காட்டும் கண்கள்! பொக்கை வாயிலே ஓர் புன்னகை! மூதாட்டி அஞ்சுகம் அவர்கள், சுருள், தளிர் ஆவது போலாகிவிடுவார்கள் - தமது மக்களின் மகிழ்ச்சி கண்டு அல்ல - மாடு மனை கண்டு அல்ல - உற்றார் உறவினர் கண்டு அல்ல - இயக்கச் செய்திகளை, வெற்றிகளைக் கேட்டதும்!
கண்டவுடன், மேயர் நம்ம கட்சி தானே வரும்? அதைவிடக் கூடாது! புதுசா சட்டம் வருதாமே? பேப்பர்லே இன்னக்கி நம்ம கட்சி விஷயம் என்னென்ன வந்திருக்கிறது? நம்ம கட்சியைக் கேலி பண்ணிப் படம் போட்டாங்களாமே பேப்பர்லே, பார்த்தீங்களா? என்ன செய்யப் போறீங்க? என்று இதுபோன்ற கேள்விகளைக் கேட்டு ஆர்வத்தைப் பொழிந்த ஒரு அன்னையை நான் கண்டதில்லை. தம்பி கருணாநிதிக்கு இப்படிப்பட்ட தாய்ச் செல்வம் பெற்றிருந்த காரணத்தால்தான் “நிதி” என்ற பெயரிட்டார்கள் போலும்!
இப்படிப்பட்ட மகனுக்கு வேறு விதத்திலே மனப்பான்மை கொண்ட தாய் அமைந்திருந்தால்? பொது வாழ்வு
புகைச்சல் நிரம்பியதாகிவிடும். கருணாநிதிக்கு வீட்டிலே கிடைத்த தாயின் புன்னகையும் அன்பும் பொது வாழ்க்கையில் புன்னகையுடன் ஈடுபட பெரிய வாய்ப்பினை அளித்தது என்பதை உணருகிறேன்.
குயில் பறந்துவிட்டது, நாதம் நிலைத்திருக்கிறது - மலர் உதிர்ந்து விட்டது, மணம் நிரம்பி இருக்கிறது - அஞ்சுகம் மறைந்து விட்டார்கள், அவர்கள் பற்றிய நினைவு நிலைத்திருக்கிறது.”
பேரறிஞர் அண்ணா மட்டுமல்ல, அந்த நாளில் எம்.ஜி.ஆர்., நாவலர், பேராசிரியர், நடிகர் திலகம் சிவாஜி, சி.பி. சிற்றரசு, என்.வி. நடராசன், ஏ. கோவிந்த சாமி, சத்திய வாணிமுத்து, எஸ்.எஸ். ஆர்., அலமேலு அப்பாதுரையார், பொற்செல்வி இளமுருகு மற்றும் பலர் என் அன்னையைப் பற்றி எழுதி அது ஒரு சிறு நூலாகவே வெளிவந்துள்ளது. ஆனால்; மைசூர் மகாராஜா வழங்கிய ஒட்டியானத்தை ஜெயலலிதா புரட்டிப் புரட்டி பார்த்திருப்பாரே தவிர; நான் குறிப்பிடும் நூலைப் பார்க்கவோ படிக்கவோ அவருக்கு நேரம் ஏது?
அன்புள்ள, மு.க. 14-10-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 352–359. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.