அடக்கம்

முரசொலி · தொகுதி 42 · கடிதம் 3420

முரசொலி கடிதங்கள் · 3420

வளைந்த வாலை; நிமிர்த்திடவே முடியாது!

நாள் 16.10.2009சுமார் 4 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3420. வளைந்த வாலை; நிமிர்த்திடவே முடியாது!

உடன்பிறப்பே,

நான் பல முறை ஜெயலலிதாவின் அறியாமை குறித்தும், அவசரத்தனம் குறித்தும் எழுதி விட்டேன். இருந்தாலும் அவர் தன்னைத் திருத்திக்கொள்ளத் தயாராக இல்லை என்பதைத்தான் அவருடைய அறிக்கைகள் தொடர்ந்து தெரிவிக்கின்றன.

நேற்றைய அவருடைய அறிக்கையில்,

29-11-2006 அன்று அதாவது கருணாநிதி தலைமையில் தி.மு.க. அரசு நிர்வாகத்தை ஏற்றுக்கொண்ட பல மாதங்களுக்குப் பிறகு, டெல்லியில் மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர், முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக ஒரு கூட்டத்தைக் கூட்டினார் என்றும், அந்தக் கூட்டத்தில் கேரள முதல்வர் கலந்து கொண்டார் என்றும், நான் கலந்து கொள்ளவில்லை என்றும் என்மீது ஒரு மிகப் பெரிய குற்றச்சாட்டைத் தொடுத்துள்ளார்.

ஒரு முதலமைச்சர் மீது, ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை சுமத்தும்போது, அது உண்மைதானா என்பதைத் தெரிந்துகொண்டு குற்றச்சாட்டைச் சொல்ல வேண்டாமா? அவருடைய அறிக்கைகளுக்குப் பதில் சொல்ல எனக்கு விருப்பம் இல்லையென்றாலும். ஆனாலும் திரும்பத் திரும்ப பொய்களையே சொல்லி, அதை ஏடுகளும் வெளியிடுகின்ற காரணத்தால், பதில் சொல்லாமல் இருந்து விட்டால் அவர் சொன்னது உண்மையாகி விடாதா?

அறிக்கை விடுவதிலே கிண்டல் வேறு! மகனுக்கும், மகளுக்கும் பேரனுக்கும் மத்திய அமைச்சரவையில் வளம் கொழிக்கும் இலாகாக்களை கேட்க கருணாநிதிக்கு நேரம் இருக்கும், மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கூட்டிய கூட்டத்திற்கு ஏன் போகவில்லை என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு இதோ எனது பதில்:- ஜெயலலிதா அவர்களே, மத்திய நீர்வள ஆதார அமைச்சர் திரு. சைபுதீன் சோஸ் அவர்கள் முன்னிலையில் 29-11-2006 அன்று டெல்லியில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் முதலமைச்சர் என்ற முறையில் நானும், அன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் தம்பி துரைமுருகனும், மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியும், தலைமைச் செயலாளரும் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டோம் என்பது உண்மை.

அந்தக் கூட்டத்தில் நான் உரையாற்றி, ஏடுகளிலே அப்போதே வெளிவந்துள்ளது. கூட்டத்தில் நான் கலந்து கொண்ட புகைப்படமும் வெளிவந்தது. கூட்டத்திற்குப் பிறகு டெல்லியிலும், சென்னையிலும் இந்தப் பிரச்சினை குறித்து விரிவாக செய்தியாளர்களிடம் பேசி அதுவும் ஏடுகளிலே வெளிவந்துள்ளது.

அவசரக் குடுக்கைத்தனமாக அந்தத் தேசிய நாளேடுகளைக் கூடப் புரட்டிப் பார்க்காமல், ஜெயலலிதா என்னைக் குற்றஞ் சாட்டி அறிக்கை கொடுத்துள்ளார். நான் அந்தக் கூட்டத்தில் எனது தொடக்க உரையில், அணை வலுவாக உள்ளது என்றும், அணை பாதுகாப்பு குறித்துப் பீதியோ அல்லது குழப்பமோ அடைய எத்தகைய முகாந்திரமும் இல்லை என்றும், உச்ச நீதிமன்றம் 27-2-2006 அன்று அளித்த ஆணையை செயல்படுத்த கேரள அரசு முழு மனதுடன் ஒத்துழைக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தேன். எனவே நான் கலந்து கொள்ளவில்லை என்று ஜெயலலிதா கூறுவது கடைந்தெடுத்த பொய்.

அந்தக் கூட்டத்தில் கேரள அரசின் சார்பில் பேசிய முதலமைச்சர் முதன்முதலாக புதிய அணை கட்டுவதுதான் இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்றார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித் துறை அமைச்சர் பதில் அளிக்கையில் 1979 ஆம் ஆண்டே புதிய அணை கட்டுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு, பின்னர் சாத்தியமில்லை என்று கருதி கைவிடப்பட்டது என்பதைச் சுட்டிக் காட்டினார்.

இந்தக் கூட்டத்திற்கான நடவடிக்கை குறிப்பினை மத்திய அரசே தனது 8-12-2006ஆம் நாளிட்ட கடிதத்தில் இணைத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

“xxx. In so far as the proposal of constructing a new dam is concerned, this option was examined in 1979 and was ruled out at that time. xxx”

அதன் பிறகு கேரள அரசின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் புதிய அணை கட்டுவதுதான் இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்பதை மீண்டும் வலியுறுத்தியபோது, தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் பதில் அளித்தார்.

“xxx. The Chief Secretary, Tamil Nadu also responded by saying that the proposal of constructing a new dam has already been deliberated earlier and the same has not been found feasible. xxx”

மேலும் இதுபற்றிய விவரங்களைக் கூறுகிறேன். உச்சநீதிமன்றத்தின் 25-9-2006 நாளிட்ட ஆணையின்படி மத்திய நீர்வள ஆதார அமைச்சர் அவர்கள் தமிழக - கேரள அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதில் தமிழக அரசு கலந்துகொள்வது குறித்து -

23-10-2006 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்றை நான் கூட்டியிருந்தேன். அக்கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களும், திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்களும் கலந்து கொண்டார்கள். ஜெயலலிதாவிற்கு சந்தேகம் இருக்குமேயானால் அவர்களை அழைத்துக் கேட்டுத் தெரிந்துகொண்டு இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கலாமே!

அந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் ஒரு தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் வருமாறு :-

“முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து தமிழக அரசின் சார்பாக எடுத்துவைத்த நியாயங்களை ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை நிறைவேற்றுவதற்கு முன்வராத கேரள அரசின் போக்கைச் சுட்டிக்காட்டி, உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் நல்லெண்ண சமிக்ஞையாக மத்திய அரசு முன்னிலையில் தமிழக அரசு கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இக்கூட்டம் இணக்கம் தெரிவிக்கிறது, என்றாலும் அதிலும் உரிய பலன் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் உடனடியாக உச்ச நீதிமன்றத்தையே அணுகி, உச்சநீதிமன்றம் 27-2-2006இல் பிறப்பித்த உத்தரவான, அணையின் நீர் மட்டத்தை 136

அடியிலிருந்து 142 அடிக்கு உயர்த்திக்கொள்ளலாம் என்பதையும்;

அணையைப் பலப்படுத்தும் எஞ்சியுள்ள பணிகளை மேற்கொள்ளும் போது கேரள அரசு முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன், தமிழக அரசுக்கு கேரள அரசு அதிகாரிகள் எந்தவித இடையூறையும் ஏற்படுத்தக் கூடாது என்பதையும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று உத்தரவு அளிக்குமாறு முறையீடு செய்து கொள்வதென்றும்,

அத்தகைய உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது”

என்று தீர்மானமும் நிறைவேற்றியிருக்கிறோம்.

அடுத்து, ஜெயலலிதா அவருடைய அறிக்கையிலே 16-9-2009 அன்று மீண்டும் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற தேசிய உயிரினங்கள் வாரியத்தின் நிலைக்குழு கூட்டத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டதாகவும், அந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் சார்பிலே யாருமே கலந்து கொள்ளாதது வியப்பளிக்கிறது என்றும் கூறியிருக்கிறார். இதுவும் உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ளாமல் குற்றஞ்சாட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் எழுதியிருக்கிறார்.

தேசிய வன விலங்கு வாரியத்தின் நிலைக்குழு என்பது 1972ஆம் ஆண்டைய வன விலங்கு சட்டத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த நிலைக்குழுவின் தலைவராக மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வன அமைச்சர் அவர்களும், சுழற்சி முறையில் ஒரிசா மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களின் பிரதிநிதிகள் மட்டுமே உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நிலைக்குழு கூட்டத்தில் தமிழக அரசின் பிரதிநிதிகள் எவர் ஒருவரும் உறுப்பினராக இல்லை. ஏதாவது ஒரு மாநிலத்திலிருந்து வன நிலங்களை வனம் சாராத பிற பணிகளுக்கு பயன்படுத்த மாநில அரசின் பரிந்துரையுடன் கருத்துரு பெறப்பட்டால், சம்பந்தப்பட்ட மாநில தலைமை வன உயிரினக் காப்பாளரை மட்டுமே குழுவின் கூட்டத்திற்கு அழைத்து கலந்து முடிவெடுக்கப்படும். 16-9-2009 அன்று நடத்தப்பட்ட கூட்டமானது கேரள மாநிலம்

அனுப்பிய கருத்துரு குறித்தும், வேறு சில மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட கருத்துருக்கள் பற்றியும் விவாதிப்பதற்காக என்பதால், அந்தக் கூட்டத்திற்கு தமிழக அரசின் தலைமை வன உயிரினக் காப்பாளருக்கு அழைப்பிதழ் எதுவும் அனுப்பப்பட வில்லை. ஆகவே தமிழகத்தின் சார்பில் யாரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

ஆனால் அந்தக் கூட்டத்தில் கேரள அரசுக்கு ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக பத்திரிகைகளில் ஒரு செய்தி வந்தவுடன் 22-9-2009 அன்று நான் மத்திய இணை அமைச்சர் திரு. ஜெய்ராம் ரமேஷ் அவர்களுக்கு கடிதம் எழுதினேன். தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல் ஆய்வு நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டேன். அதையும் மீறி 6-10-2009 அன்று ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய இணை அமைச்சர் ஒப்புதல் வழங்கிவிட்டார் என்ற செய்தி கிடைத்தவுடன் இந்தியப் பிரதமருக்கு விரிவாக 8-10-2009 அன்று கடிதம் எழுதினேன். அதற்கு முன்பாகவே 7-10-2009 அன்றே உச்ச நீதிமன்றத்திலும் தடையாணை வழங்க தமிழக அரசின் சார்பில் மனு தாக்கல் செய்தோம். அந்த விசாரணை வரும் 20ஆம் தேதி உச்ச நீதிமன்றத்திலே வரவுள்ளது.

உண்மை இவ்வாறிருக்க ஜெயலலிதா பொய்களை மூட்டையாகி விற்க முனைந்துள்ளார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

உடன்பிறப்பே,

ஜெயலலிதா போன்றவர்களுக்காக நான் எழுதும் கடைசிக் கடிதம் இதுதான் - எத்தனை சொன்னாலும் எழுதினாலும் வளைந்த வாலை நிமிர்த்த முடியாது; ஆகவே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

அன்புள்ள, மு.க. 16-10-2009

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 360–364. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 42-இல் மேலும் கடிதங்கள்