முரசொலி கடிதங்கள் · 3422
சுழன்று சுடர்விடும் எண்ண அலைகள்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3422. சுழன்று சுடர்விடும் எண்ண அலைகள்!
உடன்பிறப்பே,
2005ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளுக்கான தமிழ்ச் செம்மொழி விருதுகளுக்கான தமிழறிஞர்களின் பட்டியலுக்கு மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் நேற்றைய தினம் ஒப்புதல் அளித்து அறிவித்துள்ளார்கள். மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களே இந்த விருதுகளை நேரடியாக வழங்க இருக்கிறார்கள் என்பது தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் மட்டிலா மகிழ்ச்சியையும், பெருமையையும் அளித்திடக் கூடிய செய்தியாகும்.
இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களின் திருக்கரங்களால் தமிழ்ச் செம்மொழி விருதுகளைப் பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழறிஞர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பிலும், தமிழக மக்களின் சார்பிலும் எனது மனமார்ந்த பாராட்டுதலையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விருதுகளுக்கான பெயர்களைப் பரிசீலனை செய்து பரிந்துரை செய்வதற்கென மத்திய அரசு என்னை தலைவராகக் கொண்டும்; பேராசிரியர் வா.செ. குழந்தைசாமி, எழுத்தாளர் ஜெயகாந்தன், பேராசிரியர் நன்னன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டும் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு மத்திய அரசுக்குச் செய்திருந்த பரிந்துரைகளின் அடிப்படையில் தற்போது இந்தியக் குடியரசுத் தலைவர் தமிழ்ச் செம்மொழி விருதுகளுக்கான பெயர்களை அறிவித்துள்ளார்.
2005-2006 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது 99 வயது தமிழறிஞரான அடிகளாசிரியருக்கும்; 2006-2007 ஆம் ஆண்டுக்கான குறள்பீட விருது அமெரிக்க அறிஞர் டாக்டர் ஜார்ஜ் எல். ஹார்ட்டுக்கும் வழங்கப்பட உள்ளன.
மேலும், 2005-2006 ஆம் ஆண்டுக்கான இளம் அறிஞர்களுக்கான விருதுகள் டாக்டர் அறவேந்தன், டாக்டர்
மணிகண்டன், டாக்டர் கலைமகள், டாக்டர் வா.மு.சே. முத்துராமலிங்க ஆண்டவர், டாக்டர் பழனிவேலு ஆகியோருக்கும்; 2006-2007 ஆம் ஆண்டுக்கான இளம் அறிஞர் விருதுகள் டாக்டர் சந்திரா, டாக்டர் அரங்கபாரி, டாக்டர் மு. இளங்கோவன், டாக்டர் எம்.பவானி, டாக்டர் ஆர். கலைவாணி ஆகியோருக்கும்; 2007-2008 ஆம் ஆண்டுக்கான இளம் அறிஞர் விருதுகள் டாக்டர் எ. செல்லராசு, டாக்டர் பி.வேல்முருகன், டாக்டர் எ. மணவழகன், திரு.எஸ். சந்திரசேகரன், டாக்டர் சைமன் ஜான் ஆகியோருக்கும் வழங்கப்பட உள்ளன.
தொல்காப்பியர் விருதுக்கும், குறள்பீட விருதுக்கும் தலா 5 இலட்சம் ரூபாய் பொற்கிழியையும், இளம் அறிஞர்களுக்கான விருதுகளுக்கு தலா 1 இலட்சம் ரூபாய் பொற்கிழியையும் இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் வழங்கிட இருக்கிறார்கள்.
உலகத் தமிழாய்வுக் கழகப் பொறுப்பாளர்கள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஐம்பெருங்குழு-எண்பேராய உறுப்பினர்கள், தமிழறிஞர்கள், பல்துறை ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு பலமுறை கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தி; 2010 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 24 முதல் 27 வரை நான்கு நாட்களுக்கு கோவை மாநகரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவது என்று முடிவெடுத்து அறிவிக்கப்பட்டுள்ள இந்த நல்ல தருணத்தில் மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் தமிழ்ச் செம்மொழி விருது பெறுவோர் பட்டியலை வெளியிட்டிருப்பது மிகவும் பொருத்தமானதும், போற்றத்தக்க செயலும் ஆகும்.
தமிழ்ச் செம்மொழி விருது பெறுவோர் பட்டியல் வெளியிடப்பட்ட செய்தி அறிந்ததும், பல்வேறு நிகழ்வுகள் எனது எண்ண அலைகளில் சுழன்று சுடர்விடுகின்றன.
தமிழுக்குச் செம்மொழித் தகுதி வேண்டும் என்பது தமிழர்களின் நூறாண்டுகாலக் கனவாகும். தமிழறிஞர் சூரியநாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற் கலைஞர் அவர்கள் முதன் முதலாக தமிழுக்குச் செம்மொழித் தகுதி வழங்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார். அதுமுதல் தமிழ் ஆர்வலர்களும், தமிழ் அறிஞர்களும் செம்மொழித் தகுதிக்காகத் தொடர்ந்து போராடி வந்திருக்கிறார்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் செம்மொழித் தகுதி கேட்டுக் குரல் கொடுத்தார். எனினும், நிறைவேறாமல்
இருந்துவந்த இந்த நீண்டகாலக் கோரிக்கை - 2004 ஆம் ஆண்டு நிறைவேறியது. டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் தலைமையில், திருமதி சோனியா காந்தி அம்மையார் அவர்கள் வழிகாட்டுதலில் மத்தியில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பேற்றதும் நமது வேண்டுகோளை ஏற்று தமிழுக்குச் செம்மொழித் தகுதியை வழங்கிப் பிரகடனப்படுத்தியது. தமிழர்களின் நூறாண்டு காலக் கனவு நனவானது.
மத்திய அரசு, தமிழுக்குச் செம்மொழித் தகுதி வழங்கி அறிவிப்பு செய்ததும், காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் திருமதி. சோனியா காந்தி அம்மையார் அவர்கள் அதுகுறித்துப் பெரிதும் மகிழ்ந்து எனக்கு எழுதி அனுப்பிய கடிதத்தில், “தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைத்ததால் விளைந்துள்ள பெருமை அனைத்தும் உங்களையே சாரும்” என்று மிகுந்த பெருந்தன்மையோடு குறிப்பிட்டிருந்தார்.
இந்த நல்ல நேரத்தில் பரிதிமாற் கலைஞர் அவர்கள் வாழ்ந்த இல்லம் கழக அரசால் நினைவில்லமாக ஆக்கப்பட்ட நிகழ்ச்சிகளும் என் நெஞ்சத்தில் நிழலாடுகின்றன.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்திற்கு அருகில் விளாச்சேரி கிராமத்தில் கதவு எண். 4-219ல் 2508 சதுரஅடி பரப்பில் அமைந்துள்ள தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் வாழ்ந்த இல்லத்தை அரசுடைமையாக்கி நினைவில்லமாகப் பராமரிக்கிட 16.11.2006 அன்று கழக அரசால் ஆணையிடப்பட்டது. தனியார் பொறுப்பிலிருந்த அந்த இல்லத்தைக் கையகப்படுத்திட 1.12.2006-ல் 3 இலட்சத்து 84 ஆயிரத்து 534 ரூபாய் அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்தப் பழைய இல்லம் அரசால் கையகப்படுத்தப்பட்டு, 7 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு புதிய பொலிவுடன் நினைவில்லமாக்கப்பட்டு நினைவில்லத்தின் முகப்பில் பரிதிமாற் கலைஞர் அவர்களின் மார்பளவு சிலை ஒன்றும் நிறுவப்பட்டு 31.10.2007 அன்று என்னால் திறந்து வைக்கப்பட்டது.
பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட பரிதிமாற் கலைஞரின் நினைவில்லத்தைத் திறந்து வைத்ததும்; வீட்டின் முன்பு அமைக்கப்பட்டுள்ள பரிதிமாற் கலைஞரின் மார்பளவு வெண்கலச் சிலையைத் திறந்து வைத்ததும்; பின்னர் நினைவில்லத்தில்
பரிதிமாற் கலைஞர் வரலாற்றுக் குறிப்புகள், அரிய புகைப்படங்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டதும்; அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் புத்தகத்தில், “தமிழுக்குச் செம்மொழித் தகுதி கோர குரல்கொடுத்த முதல் தமிழன் பரிதிமாற் கலைஞர் புகழ் வாழ்க” என நான் எழுதிக் கையெழுத்திட்டதும், விழாவின்போது பரிதிமாற் கலைஞரின் வாரிசுதாரர்கள் எனக்குப் பொன்னாடை அணிவித்ததும் என் நினைவில் நிலைத்துவிட்ட நிகழ்ச்சிகளாகும்.
தமிழுக்குச் செம்மொழித் தகுதி கோரி முதல் குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞர் அவர்களுக்கு வேறுசில சிறப்புகளையும் கழக அரசு செய்திருக்கிறது. பரிதிமாற் கலைஞர் அவர்கள் படைத்துள்ள நூல்கள் அனைத்தையும் அரசுடைமை ஆக்கி, அவரது மரபுரிமையருக்கு 2.12.2006 அன்று 15 இலட்சம் ரூபாய் பரிவுத்தொகையாக வழங்கப்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழக அரசின் கோரிக்கை மத்திய அரசினால் ஏற்கப்பட்டு, 17.8.2007 அன்று பரிதிமாற் கலைஞர் நினைவு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
ஒல்லும் வகையெல்லாம் பரிதிமாற் கலைஞரின் புகழ்போற்றி, தமிழுக்குச் செம்மொழித் தகுதி பெற்று, மைசூரில் இயங்கிவந்த செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தைச் சென்னைக்கு மாற்றியமைத்து, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவதென முடிவெடுத்துள்ள நமக்கு மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் பொருத்தமான வேளையில் அறிவித்துள்ள தமிழ்ச் செம்மொழி விருதுகள் பெருமையும், இனிமையும் வழங்குவதாக அமைந்துள்ளன.
விருது பெறுவோர்க்கும், விருது வழங்கும் மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களுக்கும் உலகெங்கும் வாழ்கின்ற உணர்வு மிக்க தமிழர்களின் வாழ்த்துக்களை உவகை பொங்கிட வழங்கி; உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு இப்போதிருந்தே அழைப்பதற்கான, நான் எழுதும் இரண்டாம் கடிதம் இது! அடுத்தடுத்து மடல்கள் வரவேண்.
வாழ்க தமிழ்! செம்மொழியாம் நம் சீர்மிகு தமிழ்!
அன்புள்ள, மு.க. 22-10-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 374–377. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.