அடக்கம்

முரசொலி · தொகுதி 42 · கடிதம் 3424

முரசொலி கடிதங்கள் · 3424

அடித்தட்டல்ல; அடித்தளமானவர்கள்!

நாள் 26.10.2009சுமார் 4 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3424. அடித்தட்டல்ல; அடித்தளமானவர்கள்!

உடன்பிறப்பே,

மனித மலத்தைக் கைகளால் அள்ளி, தலையால் சுமந்தும்; கழிவு நீர்க்குள் மூச்சடக்கி மூழ்கியும்; குப்பை கூளங்களை அகற்றி, சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்தியும்; தாழ்த்தப்பட்டோருள் மிகவும் தாழ்த்தப்பட்டோராய் - கடைசிப் பிரிவினருள் கடைக் கோடிப் பிரிவினராய் வாழ்ந்துவரும் அருந்ததியர் வகுப்பினரின், “முன்னேற்றத்திற்குச் சிறப்புச் சலுகைகள் அளிப்பது அவசியம் எனக் கருதி, தற்போது ஆதிதிராவிடருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டில், இவர்களுக்குத் தனி உள்ஒதுக்கீடு வழங்குவது பற்றி, அனைத்துக் கட்சிகளையும் கலந்தாலோசித்து முடிவு செய்ய இந்த அரசு கருதியுள்ளது” என்று 23.1.2008 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் அறிவிப்பு செய்யப்பட்டது.

அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக, 12.3.2008 அன்று சென்னை-தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தில், “சமூக, கல்வி, பொருளாதார நிலைகளில் அடித்தளத்திலே உள்ள ஆதிதிராவிட மக்களுக்குள்ளேயே அருந்ததியர் எனப்படுவோர் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால், அவர்களைக் கைதூக்கி விடும் முயற்சிகளில் ஒன்றாக, தற்போது ஆதிதிராவிடருக்கு வழங்கப்பட்டுவரும் இடஒதுக்கீட்டில், இவர்களுக்குத் தனி உள்ஒதுக்கீடு வழங்கிட, அரசுக்குப் பரிந்துரை செய்ய ஓய்வுபெற்ற நீதியரசரைக் கொண்ட ஒரு நபர் குழு அமைப்பதென்றும்; அந்தக் குழுவின் அறிக்கையை ஆறு மாத காலத்திற்குள் பெற்று, அதை நடைமுறைப்படுத்துவது பற்றி அரசு முடிவெடுப்பதென்றும்;” தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், அருந்ததியர் சமூகத்தினருக்குத் தனி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை வழங்கிட, சென்னை

உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் திரு.எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களைக் கொண்ட ஒரு நபர் குழு 25.3.2008 அன்று அமைக்கப்பட்டது.

நீதியரசர் திரு. எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்கள், அருந்ததியருக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அனைத்துப் பரிமாணங்களையும் விரிவான முறையில் ஆய்வு செய்து; அருந்ததியர் எனப்படுவோர், அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, ஆதிஆந்திரர், பகடை, மடிகா, தோட்டி ஆகிய பிரிவினரையும் உள்ளடக்கி; அவர்களின் மொத்த மக்கள் தொகை அடிப்படையில்; ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்டுவரும் 18 சதவீத இடஒதுக்கீட்டில் - 3 சதவீத உள்ஒதுக்கீட்டினை வழங்கலாம் என்று பரிந்துரை செய்து; அறிக்கை ஒன்றினை 22.11.2008 அன்று என்னிடம் அளித்தார்.

பின்னர், 27.11.2008 அன்று எனது தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவையின் 33ஆவது கூட்டத்திற்கு நீதியரசர் ஜனார்த்தனம் அவர்களும் அழைக்கப்பட்டு, அவர் அருந்ததியருக்கான சிறப்பு இடஒதுக்கீடு குறித்து விரிவாக விளக்கினார். தமிழகத்தில் ஆதிதிராவிடர்கள் அனைவருக்கும் சேர்த்து கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்பட்டுவரும் 18 சதவீத இடஒதுக்கீட்டில்; ஆதிதிராவிடர்களுள் கடைநிலையில் உள்ள அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்களது விரிவான அறிக்கையினை பரிசீலனை செய்த அமைச்சரவை - ஆதிதிராவிடர்கள் அனைவருக்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் 18 சதவீத இடஒதுக்கீட்டில்; அருந்ததியர் என்கின்ற சமூகத் தொகுப்பின்கீழ் இடம் பெற்றுள்ள அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, ஆதிஆந்திரர், பகடை, மடிகா மற்றும் தோட்டி ஆகிய பிரிவினரை உள்ளடக்கி 3 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை கொள்கை அடிப்படையில் ஏற்றுக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்கள் தமது அறிக்கையில், “அருந்ததியர்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்கிட எவ்விதத் தயக்கமுமின்றிச் சட்டம் இயற்றலாம். அப்படிச் சட்டம்

இயற்றுவதற்கு முன்னர், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 338(9)ஆவது பிரிவின்படி, தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்துடன் கலந்தாலோசனை செய்திட வேண்டும்” என்று அறிவுறுத்தியபடி; தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் திரு.பூட்டாசிங் அவர்களுக்கு - அருந்ததியருக்குத் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற தமிழ்நாடு அரசின் கருத்துருவினைப் பற்றிய அறிக்கை அனுப்பப்பட்டது. சட்டப்படியான வழிமுறைகளைப் பின்பற்றி, அருந்ததியருக்கு உள்இடஒதுக்கீட்டிற்கான சட்டமுன்வடிவு 26.2.2009 அன்று சட்டப்பேரவையில் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டு, அன்றே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இப்படி நிறைவேற்றப்பட்டது எப்படிப்பட்ட சூழ்நிலையில் தெரியுமா? நான் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு, படுத்த படுக்கையில் இருந்த நிலையில் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீட்டுக்கான மசோதாவை முன்மொழிந்து பின்னவருமாறு முன்னுரை எழுதி அனுப்பி வைத்திருந்தேன்:-

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

அவை முன்னவர் அருமைப் பேராசிரியர் அவர்களே,

சட்டப்பேரவை அனைத்துக் கட்சி அன்பு உடன்பிறப்புகளே,

இன்று வந்து உங்களை சந்திப்பதாக இருந்தும்கூட டெல்லி மருத்துவரும் சென்னை மருத்துவ நண்பர்கள் குழுவும் அளித்த அறிவுரையாலும், அச்சுறுத்தலாலும் வர இயலவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன்.

நிமிர முடியாமலும், திரும்ப முடியாமலும் “நங்கூரம்” போட்டது போல நாற்பிணைந்து முதுகுத் தண்டில் வலி! வலி!

ஒன்று உடல் வலி - பிறிதொன்று நீங்கள் வழங்கியுள்ள மன வலி! கருத்து மாறுபாடுகளுக்கிடையிலேயும் நீங்கள் காட்டும் கனிவு - அரசியல் மாச்சரியங்களை மீறி நீங்கள் காட்டும் அன்பு - இன்று நம்மை மீண்டும் இணைக்கிறது - தமிழ்த்தாயின் கரம் நம்மை ஒரு சேர அணைக்கிறது. அறிவியக்கம் - ஆன்மிகம் -

நாத்திகம் ஆத்திகம் - இந்த வேறுபாடுகள் மாறுபாடுகள் கடந்த நன்றியுணர்வும் நன்மனித நேயமும் வளர்த்திடுவோம்.

ஆரம்பகால பொதுவுடைமைவாதி என்ற முறையிலும், பெரியார், அண்ணா, காமராஜர், அண்ணன் ஜீவா போன்றோரின் அருமைத் தொண்டர்களில் ஒருவன் என்ற முறையிலும் - அடிமட்டத்துக்கெல்லாம் அடிமட்டமாகக் கிடந்து அவதியுறும் “மனித ஜீவன்கள்.”

“அருந்ததி” மக்கள், புதிய உலகம் - புரட்சியுகம் - காண்பதற்காக; இன்று அவையில் நான் முன்வைக்கும் சட்டமுன்வடிவை; உங்கள் ஆதரவு வழங்கி; நிறைவேற்றித்தர வேண்டுகிறேன்.

இங்ஙனம்

உங்கள் அன்பு நதியில் - என்றும் நனைந்திடவே விரும்பி வாழும்; உடன்பிறப்பு - உங்களில் ஒருவன்,

அன்பு மறவாத ( மு.கருணாநிதி ) 26.2.2009 ராமச்சந்திரா மருத்துவமனை

இந்தச் சட்டம் அறிவிக்கை செய்யப்பட்டு, 12.3.2009 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் காரணமாக சமூகத்தின் அடித்தளத்திலே இருக்கின்ற அந்த அருந்ததிய மக்கள் முன்னேறி வாழ்க்கையிலே வளம் பெறுவார்களேயானால், அன்றுதான் என்னுடைய உள்ளவேட்கை முழுவதுமாக நிறைவேறிய திருப்தி எனக்கு ஏற்படும் - என்று நான் எண்ணியதற்கு ஏற்ப, அருந்ததியர்களுக்கு பயன்கள் விளைந்திடத் தொடங்கியிருக்கின்றன.

எடுத்துக்காட்டாக, 2006-2007ஆம் ஆண்டில் அருந்ததியருக்கு மருத்துவக் கல்லூரிகளில் கிடைத்த இடங்கள் மொத்தம் 13; 2007-2008ஆம் ஆண்டில் கிடைத்த இடங்கள் மொத்தம் 17; 2008-2009ஆம் ஆண்டில் கிடைத்த இடங்கள் மொத்தம் 29; ஆனால், அவர்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான சட்டம் நிறைவேற்றியதற்குப் பிறகு, 2009-2010ஆம்

ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளில் கிடைத்த மொத்த இடங்கள் 56. அதைப்போல, பொறியியல் பட்டப்படிப்பைப் பொறுத்தவரை, அண்ணா பல்கலைக்கழகம் - அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் - சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் ஆகிய அனைத்திலும் சேர்த்து, 2007-2008ஆம் ஆண்டில், (அதாவது, அவர்களுக்கு உள்ஒதுக்கீட்டிற்கான சட்டம் நிறைவேற்றுவதற்கு முன்பு) அருந்ததியருக்குக் கிடைத்த மொத்த இடங்கள் 744; ஆனால், உள்ஒதுக்கீட்டிற்கான சட்டம் நிறைவேறியதற்குப் பிறகு, 2009-2010ஆம் ஆண்டில் பொறியியல் பட்டப்படிப்பில் அருந்ததியர் பெற்ற மொத்த இடங்கள் 1165.

இவ்வாறு உள் இட ஒதுக்கீடு வழங்கியதன் காரணமாக, மருத்துவக் கல்லூரிகளைப் பொறுத்தவரை அருந்ததியர் பெற்றுள்ள இடங்கள் 93 சதவீதம் அதிகரித்துள்ளன; அதைப் போல, பொறியியல் கல்லூரிகளைப் பொறுத்த வரை அவர்கள் பெற்றுள்ள இடங்கள் 57 சதவீதம் அதிகரித்துள்ளன.

அருந்ததியர்களுக்கு அவர்தம் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் நிதி உதவி வழங்குவதற்கென தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தலைமையில் 8.6.2007 அன்று தொடங்கப்பட்டு, இதுவரை 22 ஆயிரத்து 811 பேர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு, அவர்களுள் 1,133 உறுப்பினர் குடும்பங்களுக்கு 17 இலட்சத்து 86 ஆயிரத்து 440 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மனிதக் கழிவை அகற்றித் தூய்மைப்படுத்தும் பணிகளில் முன்னர் ஈடுபட்டிருந்தோருக்கு மாற்றுத் தொழிலில் ஈடுபட உதவுவதற்காக 22 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மறுவாழ்வுத் திட்டம் ஒன்றும் கழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணியாளர்கள் கழிவுநீர்க் குழாய்களில் இறங்கிப் பணிபுரிவதைத் தவிர்க்க, மாநகராட்சிகள் அனைத்திலும் அடைப்புகளை அகற்றும் இயந்திரங்கள் வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகரைப் பொறுத்த வரை 3 கோடியே 97 இலட்சம் ரூபாய்ச் செலவில், 47 தூர்வாரும் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன; அடைப்புகளைச் சுத்தம் செய்யும் 11 இயந்திரங்கள் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மற்ற 9 மாநகராட்சிகளுக்கும் தேவையான

அடைப்பு நீக்கும் இயந்திரங்கள் தற்போது கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் மாநகராட்சிகள் அனைத்திலும் சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்குவதற்காக மனிதர்களை ஈடுபடுத்தும் அவலநிலை அகற்றப்பட்டு, இயந்திரங்கள் மூலம் தூய்மை செய்யும் பணி விரைவில் தொடங்கும். நாட்டில் - சமூகத்தில் - நலிவடைந்துள்ள மக்களை அடித்தட்டு மக்கள் எனக் குறிப்பிடுகிறோம்; இனி அவர்கள் தான் - நாட்டுக்கு, சமூகத்துக்கு வலிவுதரும் அடித்தள மக்கள் எனப் போற்றப்படும் நிலையை இந்த ஆட்சியில் உருவாக்கிடுவோம்.

அன்புள்ள, மு.க. 26-10-2009

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 380–385. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 42-இல் மேலும் கடிதங்கள்