முரசொலி கடிதங்கள் · 3425
வருந்தப் போகிறார்களா - இனியேனும் திருந்தப்போகிறார்களா?
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3425. வருந்தப் போகிறார்களா - இனியேனும் திருந்தப்போகிறார்களா?
உடன்பிறப்பே,
வெளிநாட்டிலே உள்ள தமிழறிஞர்கள் கோவையில் 2010, ஜூன் திங்களில் நடைபெற விருக்கின்ற, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு வருவது சந்தேகமே என்று ஒரு பத்திரிகையிலும்; வரப்போவதில்லை என்று திட்டவட்டமாக இன்னொரு பத்திரிகையிலும்; வர இயலாதென மாநாட்டு நிர்வாகிகளுக்கு அந்த அறிஞர்கள் தெரிவித்துவிட்டார்கள் என்று மற்றொரு பத்திரிகையிலும்; தமிழ்-ஆங்கிலம் என்று வேறுபாடின்றி ஒருமித்த உணர்வுடன், அவர்கள் வந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்துடன்(!) நாள்தோறும் தமிழகத்தில் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் தமிழ் உணர்வாளர்கள், மொழி-இன முன்னேற்றத்திற்காக, எந்தவொரு நற்செயலில் ஈடுபட்டாலும், அதனை நையாண்டி செய்கிற நச்சினியர், தமிழகத்தில் ஆண்டாண்டுக் காலமாக தங்களின் திருவிளையாடல்களை நடத்தி வந்திருக்கிறார்கள்! அந்த விளையாட்டுக்கள் விழிப்புணர்வு பெற்ற தமிழ் மக்களிடம் செல்லுபடியாகாமல் போய்விட்டக் கதைகளை காலங்காலமாகத் தமிழ் மக்கள் அறிந்தே இருக்கிறார்கள்!
சீரிய செயல்கள் எதுவாயினும், அது நமது செம்மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், அதைப் பேசும் மக்களின் முன்னேற்றத்திற்கும் பயன்பட்டுவிடாமல்; விழிப்போடு பார்த்துக் கொண்டிருக்கிற சிறுநரிக் கும்பலொன்றும், அந்தக் கும்பலின் காலடியில் கும்பிட்டுக் கிடக்கும் வீட்டணக் கூட்டமொன்றும், நமது செயல்பாடுகளின் வெற்றிமுகடு சிகரங்களைத் தொட்டுவிடாமல் தடுத்து நிறுத்துவதை, தங்கள் பிறவி எடுத்ததன் பயனாகக் கருதியிருக்கின்றார்கள்! அந்தச்
சந்ததியினர் முழுமையாகப் பட்டுப்போக வில்லை என்பதற்குச் சான்றாக, இப்போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக, தலை தூக்கித் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு அடையாளம்தான், நமது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு ஈழத்துச் சிவத்தம்பி போன்ற தமிழ்ப் பேரறிஞர்கள் வந்துவிடாமல் தடுக்க, இங்குள்ள “நெடுமாறன்கள்” சில பெருமுயற்சி மேற்கொண்டு, தடுப்பணைகளாகச் செயல்படத் துடிக்கின்றார்கள். அவையெல்லாம், மழை பொழியும்போது, மழைநீர் மணலைக் குவித்துக்கட்டும் அணைகளாகவே உடனடியாகக் கரைந்துவிடுகிற காட்சியைக் காணமுடியும்.
ஈழத்துத் தமிழறிஞர் சிவத்தம்பி அவர்கள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு வரப்போவதில்லை என்பதுபோன்ற ஒரு குச்சச் செய்தியை வெளியிடுகின்ற அந்தத் தமிழ் - ஆங்கில ஏடுகள், எவ்வளவு ஜீரணிக்க முடியாதப் பொய்யை விழுங்கிவிட்டு, அதனை மக்கள் மத்தியிலே வாந்தி எடுத்துள்ளன என்பதை, இதோ சில உதாரணங்கள் மூலமாகச் சுட்டிக்காட்டுகிறேன்!
எந்த தமிழறிஞர் சிவத்தம்பி அவர்கள் மாநாட்டிற்கு வரமாட்டார் என்று கூறுகிறார்களோ, அந்த சிவத்தம்பி அவர்கள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கப் பணிகளுக்காக முன்னதாகவே வருவதாகத் தெரிவித்திருப்பதோடு; Subject for Discussion என்ற தலைப்பில் ஐந்து பொருண்மைகள் விவாதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் வழங்கியிருக்கிறார்கள். அவையாவன :
1. The concept of Classical languages and the World Classical languages, other than Tamil (Chinese, Greek, Sanskrit, Latin and Hebrew)
2. Classical languages of India. The Constitutional position of Languages of India.
3. Introduction to Language families of India. Samerian Language and Tamil, Tamil and Japanese Indo-Aryan, Mundari, Indo Aryan and Dravidian, The relationship of Tamil with Tribal Languages of India.
4. Tamil as Classical Language (a) Literary Aspects
(b) Non-Literary aspects - Medicine, Astronomy and Astrology.
(c) Tamil as Official Language in Pre-Western Period, Inscriptional Tamil, Tamil as an Official Language, (i) Indian Experience, (ii) SriLankan Experience and (iii) Singaporean Experience. Use of Tamil in Malaysia, Use of Tamil in South Africa, Mauritius Tamil as a contemporary Language in Western countries.
5. Tamil Studies in Britain, U.S., Russia and Continental countries - France, Germany, Italy, Spain and Portugal.
தொடக்கத்தில், அவர் எழுதிய கடிதத்தில், மாநாட்டிற்குக் கால அவகாசம் குறைவாக இருப்பதாகவும், தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொள்வதற்கு வசதியாக இடைக்காலம் ஒரு ஆறு மாதமாவது அவசியமாகும் என்றும் எழுதியிருந்ததை ஏற்றுக்கொண்டுதான்; முதலில் 2010, ஜனவரி 21 முதல் என்று குறிப்பிடப்பட்டிருந்த தேதியை, 2010, ஜூன் 24 முதல் 27 வரை என்று மாற்றியமைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விளக்கத்தைப் படிக்கும் விஷமிகள், வேண்டுமென்றே அவர்கள் இட்டுக்கட்டிச் சொன்ன பொய்க்கு வருந்தப் போகிறார்களா; இனியேனும் திருந்தப் போகிறார்களா; அல்லது அடடா, பொய் கூறி அவமானப்பட்டுவிட்டோமே என்று எதையேனும் அருந்தப் போகிறார்களா?
அன்புள்ள, மு.க. 27-10-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 386–388. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.