முரசொலி கடிதங்கள் · 3426
“நீதிக்கட்சி” தொடங்கிய நெடிய பயணம்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3426. “நீதிக்கட்சி” தொடங்கிய நெடிய பயணம்!
உடன்பிறப்பே,
இஸ்லாமிய சமுதாயத்தினரோடு, நமது திராவிட இயக்கமும் நானும் கொண்டுள்ள தொய்வில்லாத தொடர்பும், உறவும் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. 70 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி செல்லும் மாணவனாக இருந்த போதே, திருவாரூரிலே நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டிலேயே - நான் கொடிபிடிக்கும் சிறுவனாக - பச்சைப் பிறைக் கொடியை கையிலே ஏந்துகின்ற சிறுவனாக - அந்த மாநாட்டிலே கலந்து கொண்டேன் என்பதை நான் பெருமையோடு நினைவு கூறுகிறேன்.
அந்த மாநாட்டிற்குப் புதுக்கோட்டையில் திவானாக இருந்த கான் பகதூர் கலிபுல்லா சாகேப் அவர்கள் தான் தலைமை ஏற்றார்கள். ஒரு கையிலே ‘குடியரசு’ ஏடு; இன்னொரு கையிலே ‘தாருல் இஸ்லாம்’ என்கிற முஸ்லிம் லீக்கிற்காகப் பிரச்சாரம் செய்கிற ஏடு - இவைகள்தாம் என்னுடைய கைகளை அந்த நாட்களில் அலங்கரிக்கும்.
மாணவப் பருவத்திலே என்னுள் முகிழ்த்த அந்த உறவும், உணர்வும் இன்றைக்குச் செழித்துப் பசுமையாகப் பரவியிருக்கின்றன. எனவே நான், இளமைப் பருவத்திலேயே இஸ்லாமிய சமுதாயத்தினரின் எண்ணற்ற நிகழ்ச்சிகளில், கூட்டங்களில், மாநாடுகளில் கலந்து கொண்டிருக்கிறேன். நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோதெல்லாம் அந்த சமுதாயத்தினருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைத் தவறாது ஆற்றி வந்திருக்கிறேன்.
நேற்றைக்கு நடந்ததைப்போல் இருக்கிறது அந்த நிகழ்ச்சி; என் நெஞ்சத்தை நெகிழ வைத்து, எனது நினைவிலிருந்து
நீங்காமல் என்றென்றும் நிலைத்துவிட்ட அந்த நிகழ்ச்சி. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவரும், பெரியாரின் அன்புக்கும், பேரறிஞர் அண்ணாவின் பாசத்திற்கும், எனது மட்டற்ற மதிப்புக்கும் உரியவரான பெருந்தகையாளர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள், 1972ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது - அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்ற செய்தி அறிந்தவுடன், எனது கோவை மாவட்டச் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு, உடனடியாகச் சென்னை திரும்பினேன்.
ஸ்டான்லி மருத்துவமனையில் அவரது நிலையைக் கண்டபோது, அந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ள எனக்குத் தெம்பில்லாமல் போயிற்று. கண்மூடி மயக்கநிலையில் படுத்திருந்த அவர் அருகே குனிந்து, மெல்லிய குரலில், “அய்யா, நான் கருணாநிதி வந்திருக்கிறேன்” என்று கூறினேன். அந்தக் குரல் கேட்டுக் காயிதேமில்லத் அவர்கள் கண் விழித்துப் பார்த்தார். அந்த நிகழ்ச்சி குறித்து, தென்காசி என்.கே. ரியாபி அவர்கள் தான் எழுதிய “கவின் காவலர்” என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் :
“அவர்கள் கண்விழித்துப் பார்த்தார்கள். வந்திருப்பது யார் என்பதைப் புரிந்து கொண்டார்கள். கலைஞர் கருணாநிதியைப் பார்த்ததும் தங்களது கரங்களை நீட்டினார்கள். அவரும் அக்கரங்களைப் பிடித்துக்கொண்டார். அச்சமயம் காயிதேமில்லத் அவர்கள் மிகவும் பலகீனமான குரலில், ‘முஸ்லிம் சமுதாயத்திற்குத் தாங்கள் செய்த உதவிகளுக்கெல்லாம் எனது நன்றி’ என்று கூறினார்கள். இதைக் கேட்டதும் அவர் அப்படியே மெய்மறந்துவிட்டார். அவரது கண்கள் கலங்கிவிட்டன. என்ன சொல்வதென்றே தெரியாது அவர் தத்தளித்துக்கொண்டிருந்தார். அதற்குள்ளாக காயிதேமில்லத் அவர்களின் கண்கள் மூடிக்கொண்டன. மீண்டும் மயக்கநிலை ஏற்பட்டுவிட்டது. அதற்குப் பிறகு தலைவர் அவர்கள் மீண்டும் சுயநினைவு பெறவேயில்லை.”
இளமைக் காலத்திலேயே இஸ்லாமிய சமுதாயத்தினர்மீது நான் கொண்டிருந்த மதிப்பின் தொடர்ச்சியாக; காயிதே மில்லத் அவர்கள்மீது நான் கொண்டிருந்த அன்புக்கும், பாசத்துக்கும் அடையாளமாக - இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு வாய்ப்பு கிடைத்திடும் போதெல்லாம் பல்வேறு நன்மைகளை வழங்கியிருக்கிறேன்.
1969-ல் மீலாது நபிக்கு முதன்முதல் அரசு விடுமுறை; முந்தைய அ.தி.மு.க. அரசு 2001-ல் ரத்து செய்த மீலாது நபி அரசு விடுமுறையை 15.11.2006 ஆணை மூலம் மீண்டும் விடுமுறை நாளாக அறிவித்தது; 1973-ல் உருதுபேசும் லப்பைகள், தெக்கனி முஸ்லிம்கள் ஆகியோரைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது; 1974-ல் சென்னை அண்ணாசாலை அரசினர் மகளிர் கல்லூரிக்கு “காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி” எனப் பெயர் சூட்டியது; 1989-ல் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் சமுதாய மக்கள் பெரும்பயன் எய்திடும் வகையில், “சிறுபான்மையினர் நல ஆணையம்” ஒன்றை 13.2.1989 அன்று உருவாக்கியது;
1999-ல் வக்ஃபு வாரியச் சொத்துக்களைப் பராமரிப்பதற்கென முதன்முறையாக 40 இலட்ச ரூபாய் வழங்கியது; 1999-ல் “தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம்” என ஒரு அமைப்பினை 1.7.1999 அன்று உருவாக்கியது; 2000-ல் உலமா ஓய்வூதியத் திட்டத்தை 19.7.2000 முதல் தர்காக்களில் பணிபுரியும் முஜாவர்களுக்கும் நீட்டிப்பு செய்தது; 2000-ல் இஸ்லாமியர்களின் நீண்டநாள் கோரிக்கை ஏற்கப்பட்டு, 21.7.2000 அன்று “உருது அகாடமி”யைத் தொடங்கியது; 2001-ல் “காயிதே மில்லத் மணிமண்டபம்” 58 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய்ச் செலவில் சென்னையில் அமைத்திட 25.2.2001 அன்று அடிக்கல் நாட்டி, திறக்கப்பட ஆவன செய்தது; சென்னைப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வு மையம் ஏற்படுத்தியது; சிறுபான்மையினரின் நலனுக்கென தனி இயக்குநரகம் ஒன்றை 6.4.2007 அன்று அமைத்தது; “உலமா மற்றும் பணியாளர்கள் நல வாரியம்” என ஒரு வாரியத்தை 2009, மார்ச் திங்களில் ஏற்படுத்தியது; என்று இஸ்லாமிய சமுதாயத்திற்கு கழக அரசு வழங்கியுள்ள சலுகைகளும், நன்மைகளும் கணக்கிலடங்காதவை.
1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு, 1947ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரையில், தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த யாரும் அமைச்சராக இல்லை. முஸ்லிம்களுக்கு அமைச்சரவையிலே இடம் தரவேண்டுமென்ற குரலை முதன் முதலாக எழுப்பியவர் நமது பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆவார்கள். அதற்குப் பிறகுதான் 1962-ல் கடையநல்லூர் மஜீத் அவர்கள் காங்கிரஸ் அமைச்சரவையிலே அமைச்சராக இடம்பெற்றார். திராவிட முன்னேற்றக் கழகம் தான் முதன்முதலாக தமிழகச் சட்டமன்ற மேலவைக்கு முஸ்லிம் உறுப்பினர் ஒருவரை, அதாவது திருச்சிஜானிபாய் அவர்களை நியமித்தது. ஜனாப் அப்துல் சமது அவர்களை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கியதும் தி.மு.க.தான். 1967ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெரியகுளம் மேத்தா, நெல்லை கதிரவன், சாதிக்பாட்சா ஆகிய மூவர் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர்களாக ஆனார்கள்.
2001 முதல் 2006 வரை அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, முதலில் ஒரு ஆறு மாதகாலம் முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதியாக திரு.அன்வர் ராஜா இடம்பெற்றிருந்தார்; ஆனால், அதற்குப்பிறகு முஸ்லிம் பிரதிநிதியே இல்லாமல்தான் அ.தி.மு.க. அமைச்சரவை நடைபெற்றது.
தற்பொழுது, 2006-ல் பொறுப்பேற்ற கழக ஆட்சியில் இரண்டு முஸ்லிம்கள், அதாவது, திரு.உபயதுல்லா, திரு.மைதீன்கான் ஆகியோர் அமைச்சர்களாக இருந்து வருகின்றனர். முஸ்லிம் சமுதாயத்தினருக்குப் பிரதிநிதித்துவம் இல்லாத தி.மு.க. அமைச்சரவையே இதுவரை இருந்ததில்லை - என்ற உண்மைகள் அனைத்தையும் அந்த சமுதாயத்தினர் நன்கறிவார்கள்.
சமூகநீதியின் தாயகமான தமிழகத்தில் 1920ஆம் ஆண்டு நீதிக் கட்சியின் ஆட்சி தோன்றியவுடன், 1921ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட “முதல் கம்யூனல் ஜி.ஓ” எனப்படும் முதலாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ ஆணையில் முகமதியரும், இந்தியக் கிறித்தவரும் இடம்பெற்றனர். அதனைத் தொடர்ந்து அரசு நியமனங்களில் மக்கள் தொகை விகிதாச்சாரப்படி பகிர்ந்துநியமிக்க வேண்டும் என்பதற்காக, 1927ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட
ஆணையிலும், முகமதியருக்கும், கிறித்தவருக்கும் தனியே இடஒதுக்கீடு வழங்கப்பட்டு, வகுப்புவாரி சுழற்சி விதியும் (Quota and Rota) பின்பற்றப்பட்டது. நீதிக்கட்சியின் பாரம்பரியத்தை ஒட்டியே கழக ஆட்சியில் 1973ஆம் ஆண்டில் உருதுபேசும் லப்பைகள், தெக்கனி முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கப்பட்டனர்.
சிறுபான்மை முஸ்லிம்களுக்கு கல்வி நிலையங்களிலும், அரசுப் பணிகளிலும் தனியே இடஒதுக்கீடு வேண்டுமென்ற கோரிக்கை நீண்டகாலமாகவே இருந்து வந்தது. அதனை ஏற்று, 2006 சட்டப் பேரவைத் தேர்தலின்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதற்கான அறிவிப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2006-2007ஆம் ஆண்டுக்கான கழக அரசின் நிதிநிலை அறிக்கையிலும், இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீட்டுக்கான உறுதி வழங்கப்பட்டது.
முதல்கட்டமாக, நீதியரசர் திரு.ஜனார்த்தனன் அவர்களைத் தலைவராகக் கொண்டுள்ள “தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய”த்திடம் இஸ்லாமியர் இடஒதுக்கீடு பற்றி விரிவாக விசாரணையும், ஆய்வும் செய்து, உரிய பரிந்துரையைத் தருமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அந்த ஆணையம் - திரு.ஜெ.அ.அம்பாசங்கர் அவர்களைத் தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்ட “தமிழ்நாடு இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு” அறிக்கையில் காணப்படும், இந்துக்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை; முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள்தொகை ஆகியவை பற்றிய புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கலாம் என்று பரிந்துரை செய்தது.
தமிழக அரசு இந்தப் பரிந்துரையை ஏற்று, பேரறிஞர் அண்ணா அவர்களின் 99ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக, பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து, தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கி, 15.9.2007 அன்று அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இப்படி இஸ்லாமியர்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்கியதன் காரணமாக, கல்வி நிலையங்களில் அவர்கள்
பெற்றுள்ள இடங்களின் எண்ணிக்கை பெருமளவுக்கு அதிகரித்துள்ளன. எம்.பி.பி.எஸ். எனப்படும் மருத்துவப் பட்டப்படிப்பைப் பொறுத்தவரை, இஸ்லாமியர்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு முன்; அதாவது, 2006-2007ஆம் ஆண்டில் அவர்கள் பெற்ற இடங்களின் எண்ணிக்கை 46; 2007-2008ஆம் ஆண்டில் அவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 57.
ஆனால், அவர்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்குப் பிறகு - 2008-2009ஆம் ஆண்டில் கிடைத்த இடங்கள் 78; 2009-2010ஆம் ஆண்டில் கிடைத்த இடங்கள் 80.
அதாவது, மருத்துவப் பட்டப்படிப்பைப் பொறுத்தவரை இஸ்லாமிய மாணவர்கள் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு முன்பு பெற்றதைவிட 74 சதவீத அதிகமான இடங்களை தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்குப் பின்பு பெற்றிருக்கிறார்கள்.
அதைப்போலவே, பி.இ., எனப்படும் பொறியியல் பட்டப்படிப்பைப் பொறுத்தவரை, இஸ்லாமியர்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு முன், அதாவது, 2007-2008ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகம் - அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் - சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் ஆகிய அனைத்திலும் சேர்த்து, அவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 2125. ஆனால், இஸ்லாமியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்குப் பிறகு -
2008-2009ஆம் ஆண்டில் அவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 3288; 2009-2010ஆம் ஆண்டில் அவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 3655.
அதாவது, பொறியியல் பட்டப்படிப்பைப் பொறுத்தவரை இஸ்லாமிய மாணவர்கள் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு முன்பு பெற்றதைவிட 72 சதவீத அதிகமான இடங்களை தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்குப் பின்பு பெற்றிருக்கிறார்கள்.
இஸ்லாமியர்களுக்குக் கழக அரசு வழங்கிய தனி இடஒதுக்கீட்டின் காரணமாக இப்பொழுது அவர்கள் பெற்றுள்ள வெற்றி, எதிர்காலத்தில் அவர்கள் பெறவேண்டிய பல வெற்றிகளுக்கு அடிப்படையாக அமைந்திட வேண்டுமென்பதே எனது ஆசை. சிறுபான்மையினர் என்பதால் இஸ்லாமியர்களிடம்
நாம் கொண்டிருக்கும் அக்கறையின் காரணமாக, அவர்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்திருந்தாலும்; இப்போதும் நான் சொல்லுகின்றேன் - எல்லாவற்றையும் நாம் செய்து முடித்துவிடவில்லை; அவர்களது மேம்பாட்டுக்கு நாம் ஆற்றிட வேண்டியது இன்னும் நிறைய இருக்கின்றது! நம்மைப் பொறுத்தவரையில், சமூக நீதிக்கான பயணம் என்பது; “நீதிக்கட்சி” காலத்திலேயே தொடங்கிய நெடிய பயணமல்லவா!
அன்புள்ள, மு.க. 28-10-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 389–395. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.