முரசொலி கடிதங்கள் · 3421
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு; செம்மொழி எனும் சிறப்பும் சேர்ந்தது!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3421. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு; செம்மொழி எனும் சிறப்பும் சேர்ந்தது!
உடன்பிறப்பே,
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் பணிகள் தொடங்கிவிட்டன. இடம் எந்த நகரத்தில் என்பதும், எந்த இடத்தில் என்பதும் தேர்வு செய்யப்பட்டுவிட்டன. மாநாடு நடைபெறும் தேதிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. தீபாவளியை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில், ஏன் அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை மாலையிலே கூட இரவு எட்டு மணி வரையில் தலைமைச் செயலகத்தில் உலகத் தமிழ் மாநாட்டிற்கான பல்வேறு குழுக்களை அமைப்பது குறித்தும் கட்சி வேறுபாடின்றி இந்த மாநாட்டினை நடத்திட வேண்டுமென்ற நோக்கத்தோடு சட்டமன்றத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதங்கள் எழுதுவதிலும் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்தேன். என்னுடன் துணை முதலவர் தம்பி மு.க. ஸ்டாலின், உயர் கல்வி அமைச்சர் தம்பி பொன்முடி, தலைமைச் செயலாளர், செம்மொழி நிறுவனத்தின் எண்பேராயம் - ஐம்பெரும் குழுவின் துணைத் தலைவர் வா.செ. குழந்தைசாமி, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாடு குறித்து தொடர்ந்து நான் பல கடிதங்கள் எழுதவிருக்கிறேன் என்ற போதிலும், இப்போது இந்தக் கடிதம் எழுதுவதின் நோக்கம், 1968 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்து 1968 ஜனவரி திங்களில் நடத்திய இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டிற்கு முன்பு நான் ஆற்றிய வானொலி உரையை இந்தக் கடிதத்தின் மூலமாக உனக்கு நினைவூட்டிடலாம் என்பதுதான். இதோ அந்த உரை :-
பேரன்பு கொண்டோரே, பெரியோரே,
பெற்ற தாய்மாரே, நல் இளஞ் சிங்கங்களே,
நாம் பிறந்த மண்ணில் நடைபெறும் பெருமைமிகு உலகத் தமிழ் மாநாட்டுக்கு உம்மையெல்லாம் அழைக்கின்ற பெரும் பேறு பெற்றமைக்கு மகிழ்கின்றேன்.
கீழ்த்திசை மொழி வல்லுநர் கழகத்தின் 26வது கூட்டம் 1964ஆம் ஆண்டில் புதுடெல்லியில் நடைபெற்றதன் தொடர்ச்சியாக தமிழ் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள அறிஞர் பெருமக்கள் சிலர் பன்னாட்டறிஞர் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தை நிறுவினர். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் பில்லியோசா, அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் எமதா, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் பரோ, ஹாலந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் கூய்ப்பர், செக்கோஸ்லேவியா நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் காமில் சுவலெபில் ஆகியோர் அக்குழுவில் தலையாய உறுப்பினர் ஆவர்.
பன்னாட்டறிஞர் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில் முதல் உலகத் தமிழ்க் கருத்தரங்கு 1966ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் கோலாலம்பூரில் நடைபெற்றது. இரண்டாவது கருத்தரங்கு தமிழகத்தின் தலைநகரமான சென்னை மாநகரில் 1968 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 3ஆம் தேதியிலிருந்து 11ஆம் தேதி வரையில் நடைபெறவிருக்கிறது.
கருத்தரங்கு 3-ந் தேதி தொடங்குகிறதே யெனினும், ஜனவரி முதல் நாளிலேயே மாநாட்டில் தொடக்கத்திற்கான மணி மகுடம் தமிழ்த் தாய்க்குச் சூட்டப்படுகிறது. ஆம்! அன்றுதான் தமிழக முதல்வர், அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலையை, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கிட, பெருந்தகையாளர் திரு. ஏ. ராமசாமி முதலியார் அவர்கள் தலைமையில் திறந்து வைக்கிறார். ஜனவரி 2ஆம் நாள் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியக் குடியரசுத் தலைவர், மேன்மைமிகு டாக்டர் ஜாகீர் உசேன் வருகிறார். விமான நிலையத்தில் மாலை 6 மணிக்கு தமிழகம் வரவேற்கும். மாலை 6.30 மணிக்கு கடற்கரையில் தமிழை வளர்த்த சான்றோர்களுக்கும், ஆன்றோர்களுக்கும் சிலைகள் எடுக்கும் விழா சீர்மேவ சிறப்போங்க நடைபெறவிருக்கிறது. உலகப் பொதுமறை வகுத்த திருவள்ளுவர் சிலையை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் வழங்கிட, தமிழகக் கல்வி அமைச்சர்
நாவலர் திரு. நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில் முத்தமிழ்க் காவலர் திரு. கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் திறந்து வைக்கிறார்.
முடி மன்னர் பாராட்டிய மூதாட்டி அவ்வைப் பெருமாட்டியின் சிலையை மாநகராட்சி வழங்கிட செய்தி அமைச்சர் திருமதி சத்தியவாணி முத்து தலைமையில் திரு. எஸ்.எஸ். வாசன், எம்.பி., திறந்து வைக்கிறார். கவியரசர் கம்பர் சிலையை கோவை மாவட்ட மக்கள் வழங்கிட வேளாண்மைத் துறை அமைச்சர் திரு. ஏ. கோவிந்தசாமி அவர்கள் தலைமையில் முன்னாள் முதலவர் பெரியவர் பக்தவத்சலம் அவர்கள் திறந்து வைக்கிறார். அருந்தமிழ் வளர்த்த ஆங்கில நாட்டுப் பெரும் புலவர் ஜி.யு. போப்பின் சிலையை, தென்னிந்திய திருச்சபை வழங்கிட, அவைத் தலைவர் திரு. ஆதித்தனார் தலைமையேற்க,
பிஷப் திரு. நியூபிகின் திறந்து வைக்கிறார். திராவிட மொழியின் ஒப்பிலக்கணம் வகுத்த அயர்லாந்து நாட்டு ஆங்கிலப் புலவர் கால்டுவெல்லின் சிலையை தென்னிந்திய திருச்சபை வழங்கிட, மேல்சபைத் தலைவர் திரு. மாணிக்கவேலர் அவர்கள் தலைமையில் பன்மொழிப் புலவர் திரு. கா. அப்பாதுரையார் திறந்து வைக்கிறார். “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” எனச் சொன்ன பாரதியின் சிலையை, மாநகராட்சி வழங்கிட, சட்டத்துறை அமைச்சர் திரு. மாதவன் அவர்கள் தலைமையில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் திறந்து வைக்கிறார். “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ்” என்று சங்கம் முழங்கிய புரட்சிக் கவி பாரதிதாசனின் சிலையை மாநகராட்சி வழங்கிட, உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. முத்துசாமி தலைமையில், பேராசிரியப் பெருந்தகை திரு. மு. வரதராசனார் திறந்து வைக்கிறார். குறளுக்கு உரை தொடுத்து, விடுதலைக் குரலும் கொடுத்து, கப்பலோட்டிய தமிழன், வ.உ.சி.யின் சிலையை மாநகராட்சி மன்றம் வழங்கிட உணவு அமைச்சர் திரு. மதியழகன் தலைமையில் தமிழவேள்
திரு. பி.டி. ராஜன் அவர்கள் திறந்து வைக்கிறார். இன்பத் தமிழ் வளர்த்த இத்தாலிய நாட்டுச் செம்மல் வீரமா முனிவரின் சிலையை மயிலை ஆர்ச்பிஷப் அவர்கள் வழங்கிட, பொதுநல அமைச்சர் திரு. சாதிக்பாட்சா அவர்கள் தலைமையில், ஆர்ச்பிஷப் அருள்திரு. அருளப்பா அவர்கள் திறந்து வைக்கிறார்.
வழக்குரைத்து, வளைந்த பாண்டியன் செங்கோலை நிமிர்த்தி, வஞ்சி மூதூரில் அன்றொருநாள் சிலையான கற்புக்கரசி கண்ணகியின் சிலையை சிலம்புச் செல்வர் திரு. ம.பொ.சி. அவர்கள் திறந்துவைக்கிறார். நான்தான் தலைமை வகிக்கிறேன்.
இவ்விதம் ஜனவரி முதல் இரண்டு நாட்களில் தகைமையாளர்களின் சிலைகளை தலைநகரில் அமைப்பது கண்கொள்ளா காட்சி. இந்தக் காட்சிகளை வென்றிடும் விதத்தில் மறுநாள் “பார் சிறுத்ததால் படை பெருத்ததோ, படை பெருத்ததால் பார் சிறுத்ததோ” என பார்ப்போர் வியப்புறும் வண்ணம் பாண்டியர், சோழர், சேரர் ஆண்டிருந்த அந்நாளை நினைவுறுத்தும் வகையில் பவனி ஒன்று தலைநகரில் நடைபெறும். 26 அலங்கார வண்டிகள் கலந்து கொள்ளும் அந்தப் பவனியில் தமிழரின் மொழி, நாகரிகம், கலை, பண்பாடு, வாழ்க்கை முறை முதலியவற்றை சித்திரித்துக் காட்டும் காட்சிகள் இடம் பெறும்.
திருவள்ளுவர், இளங்கோ, திருப்பாவை பாடிய ஆண்டாள், நக்கீரர் இன்னோரன்ன இலக்கியத் தமிழ் ஏந்தல்களின் திருவுருவங்கள், சங்க இலக்கியக் காட்சிகளான கோட்டை முற்றுகை, அதியமானிடம் அருநெல்லிக்கனி பெற்ற அவ்வை, “மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனை கட்டிப் போரடித்த அழகான தென் மதுரை” முதலிய காட்சிகள் எல்லாம் இடம் பெறும். அதனைக் காணக்காண குறிஞ்சியும், முல்லையும், மருதமும், நெய்தலும் வளம் வழங்கிய அந்நாள் தமிழகத்தில் நாம் நடை போடுகிறோம் என்ற உணர்வே ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் ஏற்படும்.
அந்த அலங்காரப் பவனியை திரு. எஸ். எஸ்.வாசன் அவர்கள் தலைமையில் திரு. ஏ.வி.எம்.செட்டியார், திரு. ஏ.எல். சீனி வாசன், திரு. நாகிரெட்டி, திரு. ஏ.பி. நாகராஜன், திரு. வின்ஸ்கிருட்டிணமூர்த்தி, திரு. சுந்தர்லால் நகாதா முதலிய திரைப்படக் கலைத்துறையாளர்கள் கொண்ட குழு அமைத்து வருகிறது. இந்த அலங்கார வண்டிகளுக்கு இடைவெளிகளில் கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களும், மாணவிகளும் - ஆசிரியர்களும், ஆசிரியைகளும் - சீரணித் தொண்டர்களும் சீருடை அணிந்து மாநாட்டுக் கொடியேந்தி செல்வார்கள். அப்படிச் செல்பவர்களின் தொகை
ஏறத்தாழ ஏழாயிரம் ஆகும். இவ்வாறு முன்னேறிச் செல்கின்ற ஊர்வலத்தின் நீளம் சுற்றொப்ப முக்கால் மைல் இருக்கும். இதனைக் கண்டுகளிக்க வருகின்ற பொதுமக்கள் சாலையின் இரு மருங்கிலும் நின்று பார்க்கத்தக்க அளவிற்கு வசதியும், கட்டுக்கோப்பும், பாதுகாப்பும் காவல் துறையினரால் செய்யப்பட்டு வருகின்றன. குடியரசு தலைவர் அவர்களும், மாநாட்டில் கலந்து கொள்கின்ற வல்லுநர்களும் ஊர்வலத்தைக் கண்டுகளிப்பதற்கு அரசினர் கலைக் கல்லூரியின் முன் பெரியதோர் மேடை அமைக்கப்படுகிறது. ஊர்வலம் ஜனவரி 3ஆம் நாள் பிற்பகல் 2 மணிக்கு சென்னைத்தீவுத் திடலில் தொடங்கி - ஆம், ஐந்து மைதானத்தில் தொடங்கி - 5.30 மணி அளவில் கடற்கரையில் முடிவுறும்.
ஊர்வலக் காட்சியினை புறங்காணும் வகையில் நீலத்திரைக் கடல் ஓரத்தில் மாலை 6.30 மணிக்கு உலகத் தமிழ் மாநாட்டின் தொடக்கவிழா நடைபெறும். கடல் அலையா? காண வந்த மக்கள் தலையா? என ஐயுறும் வண்ணம் இலட்சோப இலட்சம் மக்கள் வெள்ளமென திரளுகிற கூட்டத்தில் குடியரசு தலைவர் டாக்டர் ஜாகீர் உசேன் அவர்கள் உலகத் தமிழ் மாநாட்டுத் தொடக்க விழா பேருரையை நிகழ்த்துவார். தமிழக ஆளுநர் திரு. உஜ்ஜல் சிங் அவர்கள் மாநாட்டு மலரினை வெளியிடுவார். மாநாட்டின் வரவேற்புக் குழுவின் துணைத் தலைவர், நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் “வாரீர், வண்டமிழ் உண்டுகளிக்க” என வந்திருக்கும் தமிழ் மக்களை வரவேற்பார்.
மலர்க் குழுவின் சார்பில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., தாய்க் குழுவின் சார்பில் அமைச்சர் திருமதி சத்தியவாணி முத்து, பன்னாட்டு அறிஞர் தமிழ் ஆராய்ச்சிக் குழுவின் சார்பில் பேராசிரியர் பில்லியோசா ஆகியோர் வரவேற்பு நல்லுரையை வழங்கிடுவர். குடியரசு தலைவர் அவர்களுக்கு சென்னை மாநகர மக்களின் சார்பில் மாநகராட்சி மன்றம் அளிக்கும் வரவேற்பினை மேயர் வழங்கிடுவார். திருக்குறள் ஆராய்ச்சியின் வாயிலாக பழந்தமிழ்க் கலை, பண்பாடு, ஆராய்ச்சிகளை பல்கலைக்கழகங்களில் நடத்திடும் பெருநோக்குடன் தமிழக அரசு வகுத்துள்ள பெருந்திட்டத்தின் அடிப்படையில் அண்ணாமலைக் கழகத்திற்கான நிதியை உணவு அமைச்சர் திரு. மதியழகன் அவர்களும், மதுரைப் பல்கலைக் கழகத்திற்கான
நிதியை உள்ளாட்சி அமைச்சர் திரு. முத்துசாமி அவர்களும் அளிக்கிறார்கள். சென்னைப் பல்கலைக் கழகத்திற்கான நிதியை அளிக்கும் பேற்றினை யான் பெற்றுள்ளேன். இசையரசு தண்டபாணி தேசிகர் அவர்களின் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கி தாகூரின் தேசிய கீதத்துடன் முடிவுறும் இந்தத் திருவிழாவிற்கு தலைமை ஏற்பவர் தமிழகத்தின் முதலவர் அறிஞர் அண்ணா அவர்களாவார். இவ்விதம் மூன்றாம் நாள் விழா வெற்றி முடி சூட்டிக்கொள்ளும்.
அதே நாள் ஆகிய ஜனவரி 3ஆம் நாள் காலையில் உலகத் தமிழ் மாநாட்டினையொட்டி கவின்மிகு கண்காட்சி ஒன்றினை டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார் அவர்கள் தலைமையில் மூதறிஞர் இராஜாஜி அவர்கள் திறந்து வைக்கிறார். அவ்வமயம் மாநாட்டிற்கென மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள அஞ்சல் தலை, ராஜா முத்தையா செட்டியார் முன்னிலையில் வெளியிடப்படும்.
ஜனவரி 4ஆம் நாள் காலை 9.30 மணிக்கு பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் கருத்தரங்கு தொடங்கும். மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து 28 பிரதிநிதிகளும் - இலங்கையிலிருந்து 12 பிரதிநிதிகளும் - தமிழ்நாட்டிலிருந்து 150 பிரதிநிதிகளும் - தமிழ்நாடு நீங்கிய ஏனைய இந்திய மாநிலங்களிலிருந்து 20 பிரதிநிதிகளும், அமெரிக்கா, இங்கிலாந்து, ஹாலந்து, ஜெர்மனி, பிரான்ஸ் முதலிய வெளிநாடுகளிலிருந்து சுமார் 100 பிரதிநிதிகளும் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேராசிரியர் பில்லியோசா தலைமையில் ஒவ்வொரு நாளும் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரையில் 11ஆம் தேதி முடிய தமிழ் ஆராய்ச்சி பற்றிய உரைகள் ஆற்றுவார், விவாதங்கள் நடத்துவர், விளக்கங்கள் வழங்குவர். கருத்தரங்க நிகழ்ச்சியையொட்டி மாலை நேரங்களில் நூற்றாண்டு விழா மண்டபத்திலும், அண்ணாமலை மன்றத்திலும் கருத்தரங்கப் பிரதிநிதிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். வெளிநாட்டுப் பிரதிநிதிகள் 11ஆம் தேதி இரவு புறப்பட்டு தமிழகத்தில் கலை மணக்கும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று 18ஆம் தேதி காலை சென்னைக்குத் திரும்புவர். இந்த உலகத் தமிழ் கருத்தரங்கினால் ஏற்படக் கூடிய பயன், தமிழ் ஆராய்ச்சியைப் பொறுத்தவரையில் இன்றைய தமிழகத்திற்கும், வருங்கால தமிழகத்திற்கும் மெத்தவும் பயன்தரக் கூடியதே!
ஆயினும் உலகத் தமிழ் மாநாட்டு நிகழ்ச்சிகளைக் காண்பதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகின்ற பொது மக்களைப் பொறுத்தவரையில் அவர்களது கவனத்தை ஈர்க்க வல்லதாக இக்கருத்தரங்கு அமைய இயலாது அல்லவா? இதனை உணர்ந்த மாநாட்டுக் குழுவினர், தமிழக முதலவரின் அறிவுரைக்கிணங்க கருத்தரங்கினையொட்டி ஏழு நாட்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளத் தக்க வகையில் பெரியதோர் தமிழ் விழாவினை சென்னையில் நடத்திட வேண்டுமென தீர்மானித்தார்கள். அதற்கொப்ப சென்னைத்தீவுத்திடலில் ஐந்து மைதானத்தில் எழிலும் எழுச்சியும் குலுங்கிடும் வண்ணம் ஏழு நாட்கள் இன்பத் தமிழ் மணக்க மணக்க, இலக்கியச்சுவை பெருகப் பெருக, கவி நயம் கனியக் கனிய - கலைக் காட்சி, இசை, இயல், கூத்து இன்னோரன்ன நிகழ்ச்சிகளுக்கு புறப்பணிக் குழுவினர் அமைப்பு வேலைகளைத் தொடங்கியுள்ளனர். சுருங்கச் சொன்னால், புறப்பணிக் குழுவினர் ஐந்து மைதானத்தில் பூம்புகார் நகரத்தையே நிர்மாணிக்கிறார்கள் எனலாம். திரு. நீலநாராயணன் தலைமையில், திரு. பரமசாமி, திரு. முத்துராமலிங்கம், திரு. கணேசன் முதலியோர் கொண்ட ஆர்வமிக்க குழு இந்த அரும்பணியை மேற்கொண்டுள்ளது.
இம்மாநாடு ஜனவரி 4ஆம் நாள் தொடங்குகிறது. பேராசிரியர் திரு. அன்பழகன் அவர்கள் தலைமை வகிக்கவும், திரு. கருத்திருமன் அவர்கள் தொடக்கவுரை ஆற்றிடவும், அடுத்து 5ஆம் நாள் மாநாட்டில் குன்றக்குடி அடிகளார் தொடக்கவுரை ஆற்றவும், புலவர் கோவிந்தன் அவர்கள் தலைமை ஏற்றிடவும், 6ஆம் நாள் சனிக்கிழமை, திரு. சா. கணேசன் அவர்கள் மாநாட்டைத் தொடங்கி வைக்கவும், தலைமை நீதிபதி திரு. அனந்த நாராயணன் அவர்கள் தலைமை வகிக்கவும் - 7ஆம் நாள் ஞாயிறு அன்று நாஞ்சில் மனோகரன் மாநாட்டிற்கு தலைமை வகிக்கவும், தொடக்கவுரையை திரு. என்.வி. நடராசன் ஆற்றிடவும் - 8ஆம் நாள் திங்கள் அன்று திருமதி ராதா தியாகராஜன் தொடக்கவுரை ஆற்றிடவும், திருமதி சவுந்தரம் கைலாசம் தலைமையேற்கவும் - 9ஆம் நாள் செவ்வாய் அன்று காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் தலைமையேற்கவும், திரு. இரா. செழியன் மாநாட்டைத் தொடங்கி வைக்கவும் - 10ஆம் நாள் புதன் கிழமை அன்று அவ்வை துரைசாமி பிள்ளை
தலைமையேற்கவும், பேராசிரியர் மா.கி. தசரதன் தொடக்கவுரை நிகழ்த்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இசையரசு தண்டபாணி தேசிகர், இசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன் இசை நிகழ்ச்சிகள் - “புகாரில் ஒரு நாள்” கவிதைப் போட்டி - அதற்கான பரிசளிப்பு - பரிசுப் பாடல் நூல் வெளியீடு - முதலிய நிகழ்ச்சிகள் கொண்ட உலகத் தமிழ் மாநாட்டிற்கு முத்தாய்ப்பு வைப்பது போல் விழா நிறைவு பேருரையை மாநாட்டின் இறுதிக் கட்டத்தில் தமிழக முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களே ஆற்றுகிறார்.
இங்ஙனம் சென்னை மாநகரில் சிறப்புடன் நடக்கவிருக்கும் செந்தமிழ் விழாவினையொட்டிய சீர்மிகு நிகழ்ச்சிகளையெல்லாம் கண்டும் கேட்டும் களிக்க விரும்பும் கல்லூரி, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வசதி செய்யும் வகையில் தமிழகக் கல்லூரிகளுக்கு ஜனவரி 5ஆம் நாள் வரையிலும் பள்ளிகளுக்கு ஜனவரி 10ஆம் நாள் வரையிலும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
தமிழின் சிறப்பும், செழிப்பும் மேலோங்கிட அனைத்துலகப் பெருமக்களும் அன்னைத் தமிழ் மொழியின் மாண்பு கண்டிட தமிழை அரியாசனத்தில் ஏற்றியிருக்கும் தாய்த் தமிழகத்தின் பெருமை விளங்கிட நடைபெறும் இந்த மாநாட்டிற்கு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர், திரு. மு.ரா. பெருமாள் முதலியார் அமைப்புச் செயலாளர், திரு. வே. கார்த்திகேயன், பொதுச் செயலாளர், திரு. வி.எஸ். தியாகராச முதலியார் பொருளாளர், திரு. அ. சுப்பையா, உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கின் அழைக்குநர், திரு. கி. வேங்கடசுப்பிரமணியம், தனி அலுவலர் - இவர்கள் தமிழ் வளம் பெற, வகை காண, வாரீர் வாரீர் எனத் தமிழக மக்களை அழைக்கிறார்கள். தமிழ் போற்றும் இந்நாள் தமிழக அரசம் இரு கை நீட்டி, தலை நகரை நோக்கி தமிழ்ச் சுவை பருக வருகின்ற தமிழக மக்களையும், வெளிநாட்டுப் பிரதிநிதிகளையும் இரு கை நீட்டி இதயமார வரவேற்கின்றது.
“பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்,
இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்,
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை,
திறமான புலமையெனில் வெளி நாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்”
என்ற பாரதியின் வாக்கினை நிறைவேற்ற -
“தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” -
என்று பாரதிதாசன் தந்த உணர்வைப் பெற
வாரீர் - வாரீர் - தலைநகர் நோக்கி! வாழ்க - வணக்கம்.”
உடன்பிறப்பே, இதுவரை உலகின் பல பகுதிகளில் நடந்த எட்டு மாநாடுகளும் உலகத் தமிழ் மாநாடுகள் - இப்போது கோவையில் நடக்க இருப்பதோ நம் மொழிக்குச் செம்மொழி எனும் சிறப்பும் கலந்த “உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு;” இந்த இனிய உணர்வுடன் தொடர்ந்து எழுதுகிறேன்.
அன்புள்ள, மு.க. 20-10-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 365–373. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.