முரசொலி கடிதங்கள் · 3414
“தடுக்கும் சொல் பாராய் தம்பீ!”
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3414. “தடுக்கும் சொல் பாராய் தம்பீ!”
உடன்பிறப்பே,
நூறாண்டுகள் நிறைந்து; நிறைந்த இந்த நூறாண்டும் முழுமையாக வாழ்ந்திடாமல் - ஆனால் அப்படி வாழ்ந்தவர்களை விட பல மடங்கு அதிகமான தாக்கத்தை நம் நெஞ்சில் பதித்து விட்டு மறைந்த பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் எங்கணும் விழா எடுத்து - அவர் வாழ்ந்த நாட்களில் அவரால் விளைந்த அற்புதங்களை யெல்லாம் எண்ணிப் பார்க்கிறது.
அவற்றுக்கும் அப்பாலே; அவர் காலத்தில் நமக்கும் தொடர்புடைய நிகழ்வுகள் பலவற்றை மறக்க முடியாமல், நினைத்து நினைத்து மகிழ்கிறோம். ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன், கேள்! அந்த நிகழ்ச்சி; அவரைப் போல பேச வேண்டும்; அவரைப் போல எழுத வேண்டும்; அடுக்குச் சொற்கள் தவழ வேண்டும்; அழகு தமிழ் கொழிக்க வேண்டும்; எனும் அவா கொண்டு; நாடக மேடை ஏறிய ஒரு “நல்லதம்பி” நடத்திக் காட்டிய நாடக நிகழ்ச்சியாகும். ஒரு நாள்; அண்ணாவின் இல்லத்தில் அவரோடு உரையாடிக் கொண்டிருந்த போது, அந்த நல்லதம்பி - அவர் எழுதி நடிக்கும் “மரணப் படுக்கை” எனும் நாடகத்திற்கு அண்ணா தலைமை தாங்க வேண்டுமென்றும், நான் (கருணாநிதி) முன்னிலை ஏற்க வேண்டும் என்றும் எவ்வளவு வலியுறுத்த முடியுமோ அவ்வளவு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
அமெச்சூர் நாடகங்களையும், தெருக் கூத்துக்களையும் காண்பதில் தனித்ததோர் ஆர்வம் கொண்ட அந்த எளிய மனிதராம், கலையுலக ஏந்தல், காஞ்சி தந்த பொன்னாட்சி அண்ணா அவர்களும் - அந்த நாடகத்திற்கு தலைமையேற்க ஒப்புக் கொண்டு, “நீயும் வா முன்னிலை ஏற்க” எனப் பரிந்துரை மூலம் என்னைப் பணித்தார். இருவரும், அந்த நாடகத்திற்குச் சென்றோம்.
நாடகத்தை எழுதி நடித்த நல்லதம்பி தொடக்கம் முதல் அடுக்குச் சொற்களை கை வலிக்க, கழுத்து வலிக்க உரையாடல்களாக எழுதி தள்ளியிருக்கிறார் என்பதை நானும் உணர்ந்தேன். நமது தலைவர் அண்ணாவும் உணர்ந்து வாய் விட்டுச் சிரிக்க வேண்டிய காட்சிகளிலேகூட மெல்லப் புன்னகை புரிந்தார். அது அவருடைய பண்பு. மேடை நாகரிகம் கற்றவர் அல்லவா? எத்தனை மேடைகளில் கலகலவென சிரிக்க வேண்டிய கட்டங்களில் அவற்றை மறைத்து கமுக்கமாக தன்னுடைய ரசனையை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை அறியாதவனா நான்? இருப்பினும், அவராலேயே தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு அந்த நாடக வசனங்களைக் கேட்கக் கேட்க அவர் குலுங்கக் குலுங்க சிரித்த அந்தக் காட்சி இன்னமும் என் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கிறதே; இப்போது ஏன் அந்த நினைவு உனக்கு வந்தது என்று உடன்பிறப்பே, நீ கேட்கக் கூடும். ஏன் வந்தது என்பதைச் சொல்லுகிறேன்.
“பொசுங்கிய பொதுப்பணி துறை பொறுப்புகளை செய்யவும்! உலர்ந்த உள் துறை உயர்வாக விளங்கவும்! இருண்ட மின்சார துறையின் இருள் நீங்கிடவும்! சரிந்த சட்ட துறை சரித்திரம் காணவும்! கடன்படும் கல்வித்துறை கடமையை ஆற்றவும்! வறட்சி கண்ட வருவாய் துறை வரலாற்றில் இடம் காணவும்! விவசாயத் துறை வியப்பினை உருவாக்கவும்! அழிந்த அறநிலையத் துறையை அழிவிலிருந்து மீட்கவும்! சுருங்கிய சுகாதார துறையை சுற்றமும் போற்றிடவும்! தமிழக தலைமை செயலகத்தை தலை நிமிர செய்யவும்!
யாரோ ஒருவர் தலைமையில் தமிழக அரசு உருவாகிட வேண்டும் என்று சபதம் ஏற்பதாக” ஒரு பிறந்த நாள் விளம்பரம் ஏடுகளில் வெளி வந்திருக்கிறது.
இதைப் படித்த போது எனக்கு பழைய நாளில் நமது பகுத்தறிவுப் பகலவன் - சிங்க நடையும் - சிங்காரத் தென்றல் நடையும் - பொங்கு கடல் நடையும் - புரட்சித் தமிழ் நடையும் - தன் எழுத்தில் காட்டும் ஏந்தல்; பேரறிஞர் அண்ணாவின் நினைப்பும் - ஒழுங்கு முறை தவறாமல் ஒப்பற்று விளங்கும்
அவர் சொல்லாற்றலும் எழுத்தாற்றலும் என் நெஞ்சில் சுழன்றிடத் தொடங்கின.
❖ கோடு உயர்ந்தது; குன்றம் தாழ்ந்தது! என்ற அண்ணாவின் அரசியல் தலையங்கம் எங்கே?
❖ இப்படி தோற்கின் எப்படி ஜெயிக்கும்!
❖ தம்பி உடையான் படைக்கு அஞ்சான்!
❖ நாட்டு வாட்டம் போக்கிட சர்க்கார் நாட்டிடத்தால் போதாது!
❖ கையில் காசில்லாதவர்கள் - மனதிலே மாசில்லாதவர்கள்!
❖ சாலை ஓரத்திலே சில வேலையற்றதுகள்; வேலையற்றதுகள் உள்ளத்திலே விபரீத எண்ணங்கள்!
❖ இயற்கை கொஞ்சுகிறது, இல்லாமை கொட்டுகிறது!
❖ கிளிக்குப் பச்சை பூசுவதா?
❖ ஐந்து கால் பசு!
❖ அங்கே பவளம், இங்கே படம்!
❖ கண்ணீரும் பன்னீரும்!
❖ இடியோசையில் கிடைக்காது இன்ப நாதம்!
❖ தடைக்கற்கள் படிக்கட்டுகளாக ஆகட்டும்!
❖ கணக்குத் தீர்க்கும் காலம்!
❖ தன்னை வெல்வான், தரணியை வெல்வான்!
❖ வெந்த புண்ணிலே வேல்!
❖ குன்றின் மேலிட்ட விளக்கு!
❖ இன்ப நாளிது, இதயம் பாடுது!
என்ற அண்ணாவின் எழுத்துக்களின் வெளிப்பாடுகள் தான் என்னே?
வெல்லமாய் இனிக்கும் அந்த நல்ல தமிழ் புதுநடையைப் படித்து விட்டு - பூரித்துப் பொங்கியெழ நம்மை உலுக்கிய அந்தச் சொற்கள் - குலுக்கிய மாத்திரத்தில் உதிர்ந்திட்ட மணிமலர்கள் அல்லவா? அந்த மலர்களைக் கண்டு மகிழ்ந்த நமக்கு இன்று அடுக்குச் சொல் என்ற பெயரால் “ஆனாவுக்கு ஆனா” போட்டால் போதும் - அந்த அடுக்குச் சொல்லே அழகு தமிழ்ச் சொல் என்று எண்ணுகின்ற அப்பாவிகள் அல்லவா; அன்னைத் தமிழைக் காக்கவும், அதற்காகவே அரசியல் நடத்துகிறோம் என்று ஆர்த்திடவும் புறப்பட்டுள்ளனர்.
அண்ணாவும் நானும் கண்ட நாடகத்தில், ஆம், ‘மரணப் படுக்கை’ எனும் அந்த நாடகத்தில் வில்லனைப் பார்த்து கதாநாயகன் பேசுவான்.
“உன் விஷயத்தில் நான் சர்ப்பமாக இருப்பேன்” என்று!
அதற்கு எதிர் வசனம் வில்லன் பேசுவான்.
“அந்த சர்ப்பத்தையும் நான் சாம்பார் வைத்து சாப்பிடுவேன்” என்று!
உடன்பிறப்பே, இந்த வசனத்தைக் கேட்ட போதுதான் - இதுபோன்ற நெருக்கடியான நேரங்களில் அடக்கமாக இருக்கும் அண்ணா அவர்கள் குலுங்கக் குலுங்கச் சிரித்த காட்சியை நான் கண்டேன். இப்போதும் அந்தக் காட்சி என் முன்னால் தெரியத்தான் செய்கிறது. மீண்டும் அப்படியொரு காட்சியைக் காண நேரிடுமோ என்றிருந்த வேளையில்தான் இன்று இந்த விளம்பரத்தைக் கண்டேன்.
என் செய்வது? சிரிப்பதற்கு அண்ணாவும் இல்லை - இந்தக் கச்சபான அடுக்கு மொழியை எரிப்பதற்கு என் நெற்றியிலே கண்ணும் இல்லை.
குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டியன் இங்கில்லை; குறும்பி அளவாக் காதைக் குடைந்து தோண்டி எட்டின மட்டும் அறுப்பதற்கோ வில்லி யில்லை; இரண்டொன்றா முடிந்து தலை இறங்கப் போட்டு வெட்டுதற்கோ கவி ஒட்டக்கூத்தன் இல்லை;
விளையாட்டா கவிதை தனை விரைந்து பாடித் தெட்டுதற்கோ அறிவில்லா துரைகள் உண்டு; தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே!
என்ற பாடலைத்தான் மனதிற்குள் மந்திரம் போல் ஜபித்துக் கொண்டேன்.
இதெல்லாம் அடுக்குச் சொல் அல்ல; “தடுக்குச் சொல் பாராய் தம்பீ” என்று ஒரு முறை அண்ணாவே ஒரு நீண்டக் கட்டுரை “திராவிட நாடு” இதழில் எழுதியிருக்கிறார். அதையும் நினைத்துக் கொண்டேன். தமிழுக்கு இப்படி ஒரு கேடு விளைவிக்க தகவிலார் சிலர் புறப்பட்டிருக்கிறார்களே என்பதையும் எண்ணி என் விழிகளை நனைத்துக் கொண்டேன்.
அன்புள்ள, மு.க. 25-8-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 325–329. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.