முரசொலி கடிதங்கள் · 3412
வாழ்விலோர் திருநாள்; வாழ்க வள்ளுவம்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3412. வாழ்விலோர் திருநாள்; வாழ்க வள்ளுவம்!
உடன்பிறப்பே,
“இன்று வாழ்விலோர் திருநாள்” என்பார்களே, அப்படிப்பட்ட திருநாள்தான் இன்று! ஆம், பெங்களூரு நகரத்தில் அய்யன் திருவள்ளுவருக்கு சிலை திறக்கப்படுகிறது. அய்யன் வள்ளுவருக்கு இங்கே பெங்களூரில் சிலை திறக்கின்ற விஷயமாகட்டும் - தமிழகத்தில் கன்னியாகுமரியில் 133 அடி உயரத்தில் எழுப்பப்பட்டுள்ள சிலை திறப்பு நிகழ்ச்சியாகட்டும் - சென்னை மாநகரத்தில் திருவள்ளுவருக்காக நான் முயற்சியெடுத்து எழுப்பிய வள்ளுவர் கோட்டத் திறப்பு விழா நிகழ்ச்சியாகட்டும் - சென்னையில் சட்டப் பேரவை மண்டபத்தில் வள்ளுவரின் திருவுருவப் படத்தினைத் திறந்து வைக்கின்ற நிகழ்ச்சியாக இருக்கட்டும் - அனைத்திலும் என் வாழ்க்கையும் இணைக்கப்பட்ட ஒன்று என்று சொன்னால் அது தவறாகாது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், வாழ்க்கை நெறி வகுத்துக் காட்டி வள்ளுவரால் வழங்கப் பெற்ற அறிவுக் கருவூலமே திருக்குறள். திருக்குறளும், அதனை யாத்து இவ்வுலகிற்கு வழங்கிய வாலறிவன் வள்ளுவரும், இளமையிலேயே எனக்கு அறிமுகமாகி, என் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் எனக்கு உரத்தையும், தரத்தையும் தந்து வருகின்ற பாங்கினை என்னென்பேன்!
“திருவள்ளுவர் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல், வையகம் முழுமைக்கும் வாழ்க்கைக்கு உரிய நெறியைத் தந்திருக்கிறார். அதனை நாம் உலகத்தின் பொதுச் சொத்து என்று எண்ணத்தக்க விதத்தில் பொதுக்கருத்தைப் பரப்ப வேண்டும்” என்று பேரறிஞர் அண்ணா கூறியுள்ளார்.
1948இல் தந்தை பெரியாரோ திருக்குறள் மாநாடு ஒன்றினையே கூட்டினார்.
1953ஆம் ஆண்டு மொழியுரிமை காக்க; கல்லக்குடி போராட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் நான் இருந்தபோது, கைதிகளாக இருந்த தோழர்களின் மத்தியில் அன்றாடம் பேசும்போது, திருக்குறள் பற்றி உரையாற்றியதும் என் நினைவிலே உள்ளது.
1963ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் தி.மு. கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, பேரவையில் திருவள்ளுவர் திருவுருவப் படம் ஒன்றினை வைக்க வேண்டுமென்ற கருத்தை வெளியிட்டேன். அப்போது பேரவைத் தலைவராக இருந்த திரு. யு. கிருஷ்ணாராவ் அவர்கள், அந்தத் திருவள்ளுவர் படத்தினை நான் வாங்கித் தருவதாக இருந்தால், அதை மன்றத்திலே வைப்பதற்கு ஆட்சேபணை இல்லை என்று தெரிவித்தார். நான் அவ்வாறே வாங்கித் தர இசைவு தந்த பிறகு, அந்தப் படத்தினை தாழ்வாரத்தில் தான் வைக்க முடியும், மன்றத்திற்குள் வைத்தால் வேறு சிலர் கம்பர் படத்தினை வைக்க வேண்டுமென்றோ, காளமேகத்தின் படத்தினை வைக்க வேண்டுமென்றோ கோரிக்கை வைக்கக்கூடும் என்று சொல்லப்பட்டது.
அதற்குப் பதிலாக நான் கூறும்போது, மன்றத்திற்குள் காந்தி படம், ராஜாஜி படம் வைக்கப்பட்டுள்ளது, அதைப் போல படேல் அவர்களுக்கோ, வேறு ஒரு கட்சித் தலைவருக்கோ படம் வைக்கப்பட வேண்டும் என்று எந்தக் கோரிக்கையும் வைக்கப்படவில்லை, எனவே மன்றத்திற்குள் தான் திருவள்ளுவருக்கு படம் வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். ஆனாலும் அந்தக் கோரிக்கை உடனடியாக ஏற்கப்படா விட்டாலும், நான் அவையிலே எழுப்பிய அந்தக் கோரிக்கை 22-3-1964 அன்று பேரவை மன்றத்திற்குள் திருவள்ளுவரின் படத்தினை அன்றைய குடியரசுத் தலைவர் திரு.ஜாகீர் உசேன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
அதைப் போலவே சட்டப் பேரவையில் நான் பேசும்போது வேறொரு கருத்தையும் தெரிவித்தேன். அதாவது தமிழ்நாட்டில் உள்ள புலவர் பெருமக்கள் எல்லாம் கூடி, குறிப்பிட்டுச் சொல்லும் நாளை திருவள்ளுவர் தினம் என்ற பெயரால் ஆண்டு தோறும் கொண்டாட வேண்டுமென்றும் கூறினேன். அதன் பின்னர் 30-10-1969 அன்று எனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவினைத் தொடர்ந்து - ஆண்டு தோறும் பொங்கல் விழா கொண்டாடப்படும் நாளுக்கு
அடுத்த நாள் திருவள்ளுவர் நாள் என்றும், அன்று அரசு விடுமுறை என்றும் முடிவு செய்து அதற்கான அரசாணை 3-11-1969இல் என்னுடைய ஆட்சிக் காலத்தில்தான் வெளியிடப்பட்டது.
அது போலவே, 1973இல் திருமயிலை திருவள்ளுவர் நினைவாலயத் திருப்பணிக்கு அடிக்கல் நாட்டிய போது, திருவள்ளுவருக்கு தமிழகத் தலை நகரில் அழியாத நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்தேன். அது அறிவிப்பாகவே நின்று விடாமல், 18-9-1974 அன்று வள்ளுவர் கோட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நுங்கம்பாக்கத்தில் நடைபெற்று, பணிகள் தொடங்கப்பட்டு, திறப்பு விழாவுக்கான தேதியினைக் குறிக்கவும்; விழாவினை எவ்வாறு நடத்துவது என்பதற்கான திட்டங்களைத் தீட்டவும் - 8-1-1976 அன்று அரசின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. பிப்ரவரி திங்கள் 22, 23 ஆகிய நாட்களில் அந்தத் திறப்பு விழாவை கழக அரசு முன்னின்று நடத்துவதென்று நாளும் குறிக்கப்பட்டது. ஆனால் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவினை கழக அரசு நிறைவேற்றுவதற்கு முன்பாகவே ஜனவரி 31ஆம் தேதியன்று மாலையிலேயே கழக அரசு கலைக்கப்பட்டு விட்டது.
கழக அரசு கலைக்கப்பட்டு விட்டாலும், 1976ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 15ஆம் நாள் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது. அதற்கான அழைப்பிதழ் கூட, அப்போது எனக்கு அனுப்பப்படவில்லை. அந்தக் கோட்டம் திறக்கப்பட்ட நாளன்று, “கோட்டம் திறக்கப்படுகிறது, குறளோவியம் தீட்டப் படுகிறது” என்ற தலைப்பில் முரசொலியில் இரண்டரை பக்கத்திற்கு நான் உடன்பிறப்பு மடல் ஒன்றினைத் தீட்டியிருந்தேன். இன்று எப்படி “இன்று வாழ்விலோர் திருநாள்” என்று தொடங்கி கடிதத்தை எழுதுகிறேனோ, அது போலவே அன்றும் “இன்று சென்னையில் ஒரு விழா! திருவிழா! திருமிகு விழா! திருவள்ளுவர்க்கு எடுக்கும் விழா” என்று தொடங்கி எழுதியிருந்தேன். அந்தக் கடிதத்தின் ஒரு சில பத்திகளை மட்டும் இப்போதும் அது பொருந்தும் என்பதால் இங்கே சுட்டிக் காட்டுகிறேன்.
❖ கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப் பருளுங் களிப்பாய் - காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணாய் - வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமாய் - மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும்
மதியாய் - நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவாய் - எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற ஏற்றமிகு குறளுக்கு ஓவியம் தீட்டப்படுகிறது. அந்தக் குறளோவியக் கோட்டம் திறக்கப்படுகிறது.
❖ மாசறு பொன்னாக, வலம்புரி முத்தாக, காசறு விரையாக, கரும்பாக, தேனாகத் திகழ்கின்ற திருக்குறளுக்கு விழா என்றால், உலகப் பந்தின் மீது எந்த மூலையில் இருக்கிற தமிழனும் நெஞ்சு புடைத்து நிற்பான் - மகிழ்வான் - தகதகவெனக் குதிப்பான் - தன்மதி கண்ட ஆம்பலாகும் அவன் உள்ளம் - தாமரை, கதிர் கண்டது போன்ற துள்ளல் எழும் என்பதில் ஐயமுண்டோ?
❖ ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிக்கின்ற உலகத் தமிழ் மறைக்கன்றோ பெருமைசேர் விழா, தாயகத்து மண்ணில் திகழ்கின்றது.
❖ இந்த விழா நான் என்று வரும்? இன்றே வாராதா? என்று எத்தனை நாள் காத்திருந்தோம் நாம்! அந்த நாள் தானே இந்த நாள்!
❖ “கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” என்று இடைக்காடர் கூற, “அல்ல, அல்ல, அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” என்று ஒளவையார் திருத்தம் கூறியதாகப் புகழப்படும் பொய்யா மொழிக்கல்லவா இன்று விழா! புத்தொளி பாய்ச்சிய புலவனுக்கல்லவா விழா!
❖ சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம், சலுகையால் பெறக்கூடியது அல்ல! எது நேர்ந்தாலும், என்ன நேர்ந்தாலும் மறைக்க முடியாத இடம்! அந்த நம்பிக்கையுடன் தான் இன்று நடக்கும் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக் கண்ணால் காணுகிறேன்.
❖ உயிர் வளர் மாதம் ஒன்றதும் ஒன்றும் நிறைந்து பிறந்த குழந்தையைச் சுமந்ததையும் இன்பமாகக் கருதி, பேற்றுக் கால வேதனையையும், இனிய
வேதனையாகக் கொண்டு, பாலூட்டிச் சீராட்டிப் பழ முத்தம் சுவை சுவையாய்த் தந்து, பள்ளிக்கு அனுப்பி பின்னழகும் முன்னழகும் பார்த்துக் களித்து, பருவமடைந்த பின்னர் வாழ்க்கைத் துணை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அந்த ஆசைக் கிள்ளைக்கு இனிய திருமண விழா நடைபெறும்போது, தாலி கட்டும் காட்சியினைக் காண முடியாமல் மணப் பந்தலுக்கு வெளியே நிற்கின்ற தாயின் மனதில் ஒரு விதத் தவிப்பு இருந்தாலும், தன் அன்புச் செல்வத்துக்கு நடைபெறும் மண விழா குறித்த மகிழ்ச்சி பொங்கிடத்தானே செய்யும்!
❖ என் தங்க உடன்பிறப்பே! அந்தத் தாயின் மகிழ்ச்சியைத்தான் பெறுகிறேன் இன்று! ஆம் - என் வாழ்நாளின் குறிக்கோள்களில் ஒன்றான வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக் கண்ணால் காணு கிறேன், ஆனந்தப் பள்ளு பாடுகிறேன்.
உடன்பிறப்பே,
அன்றையதினம் நான் அடைந்த அதே மகிழ்ச்சியைத்தான் இன்றும் அடைகிறேன். அடுத்து, 31-12-1975 அன்று கூடிய கழக அமைச்சரவைக் கூட்டத்தில் குமரி முனையில் விவேகானந்தர் பாறைக்கு எதிரே உள்ள மற்றொரு பாறையில் 75 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த மாதமே கழக அரசு கலைக்கப்பட்டு விட்டது. அதன் பின்னர் 1989ஆம் ஆண்டு மீண்டும் கழக அரசு ஏற்பட்டவுடன் 25-3-1989 அன்று நான் படித்த நிதி நிலை அறிக்கையில் குமரி முனையில் வள்ளுவர் சிலை அமைப்பது பற்றி மீண்டும் அறிவித்தேன். 6-9-1990 அன்று நானே நேரில் சென்று குமரி முனையில் வள்ளுவர் சிலை அமைப்புப் பணியைத் தொடங்கி வைத்தேன். 1991இல் கழக அரசு மாறியது. வள்ளுவர் சிலை அமைப்பு பணியும் சுணங்கியது.
நான்காவது முறையாக முதலமைச்சராக நான் பொறுப்பேற்றதற்குப் பிறகு 25-6-1997 அன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் முடிவெடுக்கப்பட்டு, போதிய நிதி ஒதுக்கப்பட்டு - சுமார் ஒன்பது கோடி ரூபாய் செலவில் 133 அடி உயரமுள்ள வள்ளுவரின் சிலை நிர்மாணிக்கப்பட்டு 1-1-
2000 அன்று கழக ஆட்சியிலே திறந்து வைக்கப்பட்டது. உலக அதிசயங்களில் ஒன்றாக அது கருதப்பட்டு, உலகத்திலிருந்து வருபவர்கள் எல்லாம் அதனை அன்றாடம் கண்டு களித்து வருகிறார்கள். “சுனாமி” பேரலைக்கே ஈடு கொடுத்து அந்தச் சிலை தமிழனின் பெருமையை இன்று பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. அந்தச் சிலையை அங்கே அமைத்திட எனக்கு பெரிதும் உதவியாக இருந்த சிற்பி கணபதி ஸ்தபதி அவர்களுக்கு நான் பலமுறை நன்றி தெரிவித்திருந்தாலுங்கூட, இந்த மடலிலும் அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குமரி முனையில் நடைபெற்ற அந்த இரண்டு நாள் விழாவிலே நான் கலந்து கொண்டபோது - மறைந்த அருமை நண்பர் கோவை செழியன் அந்த விழாவில் பேசும்போது, பெங்களூரிலே பத்தாண்டு காலமாக திருவள்ளுவருடைய சிலை ஒன்று மூடிக் கிடக்கிறதே, அது என்னவாயிற்று என்று கேட்டார். அடுத்துப் பேசிய நண்பர் வாழப்பாடி ராமமூர்த்தி அவர்கள், அதற்காக, தான் கடிதம் எழுதியதாகவும், அதற்கு பதில் வரவில்லை என்றும் கூறினார். அதை ஏன் கவனிக்கக் கூடாது என்று என் பக்கத்திலே அமர்ந்திருந்த மக்கள் தலைவர் மூப்பனார் என்னைப் பார்த்துக் கேட்டார். இலக்கியச் செல்வர் குமரி அனந்தனோ, அதைப்பற்றி அந்த மேடையில் கோபாவேசமாகப் பேசினார். அதற்கெல்லாம் பிறகு நான் அந்த விழாவிலே முடிவுரை ஆற்றும்போது,
“நான் ஒரு உறுதி எடுத்திருக்கிறேன். மூன்று மாதங்களுக்கு முன்பு கர்நாடகத்திலிருந்து ஒரு அமைச்சர் சென்னை மாநகரில் வந்து பேசிய போது, “தமிழக முதலமைச்சர் கலைஞர் விரைவிலே எங்கள் ஊருக்கு வர வேண்டும், ஒரு விழாவிலே கலந்து கொள்ள வேண்டும்” என்று ஒரு கோரிக்கை வைத்தார். நான் அதற்கு பதிலளித்துப் பேசும்போது, “பெங்களூருக்கு ஒரு விழாவிற்காக நான் வருவதென்றால், நான் அங்கே வந்து இனி கலந்து கொள்கின்ற முதல் விழா, அந்தத் திருவள்ளுவருடைய சிலை திறப்பு விழாவாக இருந்தால்தான் வருவேனே தவிர, வேறு எந்த விழாவிற்காகவும் நான் அடியெடுத்து வைக்கமாட்டேன்” என்று சொல்லி விட்டேன்”
என்று கூறியிருந்தேன்.
உடன்பிறப்பே, பெங்களூரு தமிழ்ச் சங்கம், பெங்களூருவில் ஏறத்தாழ 18 ஆண்டுகளுக்கு முன்பு அய்யன் திருவள்ளுவருக்கு சிலை நிர்மாணித்து - 1-9-1991 அன்று அப்போது கர்நாடக மாநில முதலமைச்சராக இருந்த திரு. பங்காரப்பா அவர்கள் தலைமையில் - கர்நாடக மாநில அமைச்சராக இருந்த திரு. கே.ஜே. ஜார்ஜ் அவர்களைக் கொண்டு திறந்திட ஏற்பாடுகளைச் செய்தது. ஆனால் 30-8-1991 அன்று பெங்களூரு நீதிமன்றம் விதித்த தடை காரணமாக அப்போது அங்கே திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற முடியாத நிலை ஏற்பட்டது. சிலை அமைப்பதற்கு பெங்களூரு மாநகர் மன்றம் வழங்கியிருந்த அனுமதியை 21-9-1991 அன்று திரும்பப் பெற்றுக் கொண்டது. அதன் பிறகு பல முறை அந்தச் சிலையைத் திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அது நடைபெறவே இல்லை.
இதற்கெல்லாம் ஒரு முற்றுப் புள்ளி வைக்கும் வகையிலே தான் கர்நாடக அரசும், அதன் முதலமைச்சர், அருமை நண்பர், மாண்புமிகு எடியூரப்பா அவர்களும் பெரு முயற்சியெடுத்து அடுத்தடுத்துள்ள மாநிலங்கள் நல்லுறவுடன் இருக்க வேண்டுமென்ற நல்ல நோக்கத்தோடு இந்தச் சிலையினை இன்று நிறுவியிருக்கிறார்கள். மணவிழா அழைப்புகளில் எல்லாம் உறவினர்களும், நண்பர்களும் முன்கூட்டியே வந்திருந்து வாழ்த்த வேண்டுமென்று அச்சிடுவார்கள். அதற்கேற்ப நானும், இந்த விழாவிலே உள்ள மகிழ்ச்சி காரணமாக ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பெங்களூருக்கு வந்திருந்து திருவள்ளுவரின் சிலையினை திறந்து வைக்கவிருக்கிறேன். எனவே “இன்று வாழ்விலோர் திருநாள்” என்று நான் தொடக்கத்தில் எழுதியது பொருத்தம் தானே?
அன்புள்ள, மு.க. 9-8-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 311–317. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.