அடக்கம்

முரசொலி · தொகுதி 42 · கடிதம் 3408

முரசொலி கடிதங்கள் · 3408

அதைப் படித்து ஆறுதல் கொள்க!

நாள் 22.6.2009சுமார் 6 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3408. அதைப் படித்து ஆறுதல் கொள்க!

உடன்பிறப்பே,

கோடைவாசஸ்தலமான, கொடை நாடு எஸ்டேட்டில் போய் மாதக் கணக்கில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அன்றாடம் அறிக்கை விட்டு, அதன் மூலமாக தன் கட்சியின் அரசியலை நடத்தி விடலாம் என்று எண்ணிக் கொண்டு நாள் தவறினாலும் தவறாமல் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா! தமிழ்நாட்டு மக்கள் அதைப்பற்றி யாரும் எந்தக் கவலையும் படுவதில்லை. அவர்கள் கவலைப்படுகிறார்களா என்று அறிக்கை விடுபவரும் கவலைப்படுவதில்லை. ஏதோ தன் பெயர் ஏட்டிலே வந்தாலே “ஜென்ம சாபல்யம்” அடைந்து விட்டதாகக் கருதிக் கொண்டு அறிக்கை விடுகிறார்.

அந்த அறிக்கைகள் குறித்து நாமும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லையென்ற போதிலும், ஜனநாயகத்தில் பிரதான எதிர்க் கட்சியின் தலைவர் சாற்றிய குற்றச்சாட்டிற்கு ஒரு முதலமைச்சர் பதில் கூற வேண்டாமா என்று ஒரு சிலராவது எண்ணக் கூடுமல்லவா? அதற்காகவே இந்தக் கடித வாயிலான விளக்கம்; உனக்கு!

“கச்சத் தீவுக்காக தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி பெரிய அளவில் ஏன் போராட்டம் நடத்தவில்லை? சட்ட மன்றப் பேரவையில் ஏன் தீர்மானம் கொண்டு வரவில்லை?”

என்பதுதான் இன்றையதினம் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையிலே முக்கியமான கேள்வி.

தி.மு.கழகம் ஏன் போராடவில்லை என்று கேட்கும் ஜெயலலிதாவை திரும்பக் கேட்கிறேன். 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு முதலவராக வந்ததும் 15-8-1991 அன்று சென்னை கோட்டையிலே கொடியேற்றி வைத்து விட்டு, கச்சத் தீவை மீட்டே தீருவேன் என்று முழங்கி அனைத்து ஏடுகளிலும்

கொட்டை எழுத்துக்களிலே அது வெளி வந்ததே, அதற்குப் பிறகு ஐந்தாண்டு காலமும், அதற்குப் பின்னர் 2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டு காலமுமாக பத்தாண்டு காலம் முதல் அமைச்சராக ஜெயலலிதா இருந்தாரே, அப்போது ஏன் அவர் கச்சை கட்டிக் கொண்டு கச்சத் தீவுக்காக போராட்டம் நடத்தவில்லை? அப்படி போராட்டம் எதுவும் அவர் நடத்தாத நிலையில் நம்மைப் பார்த்து ஏன் போராட்டம் நடத்தவில்லை என்று கேட்க அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?

கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்க்கப் போகிறது என்பது கருணாநிதிக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதை ஏன் எதிர்க்கவில்லை என்கிறார் ஜெயலலிதா! கச்சத் தீவை இலங்கைக்கு இந்தியா வழங்கப் போகின்ற தகவல், அதற்கு முன்பு பல ஆண்டுகளாக செய்தி அளவிலேதான் இருந்தது. இன்னும் ஆதாரத்தோடு சொல்ல வேண்டுமென்றால் தமிழகச் சட்டமன்றத்தில் 29-3-1972 அன்று கச்சத் தீவு பற்றிய ஒரு கேள்வியே இடம் பெற்று, அதற்கு நான் பதிலும் கூறியிருக்கிறேன். அந்தப் பதிலில் “நாம் கச்சத் தீவு குறித்து நியாயமான விவகாரங்களை மத்திய அரசிற்கு தெரிவித்திருக்கிறோம். கச்சத் தீவு பிரச்சினை இந்திய அரசு தலையிட்டு சுமுகமாக தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை” என்றும் தெரிவித்திருக்கிறேன்.

அதனைத் தொடர்ந்து மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் நான் பேசும்போது, “கச்சத் தீவு தமிழ்நாட்டிற்குச் சொந்தம், இந்தியாவிற்கே சொந்தம் என்ற ஆதாரங்களை எல்லாம் (அன்றைய) பிரதமருக்கு எடுத்து வைத்தேன். எதையும் லட்சியம் செய்யாமல் என்னை அழைத்து இதுபற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல், கச்சத் தீவை இலங்கைக்கு தானம் செய்திருக்கிறார் பிரதமர்” என்றும், தொடர்ந்து திருச்சியில் ஒரு நிகழ்ச்சியில் நான் பேசும்போது, “கச்சத் தீவு தமிழகத்தின் உரிமை. கச்சத் தீவு பிரச்சினையில் நாட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள். அதைக் கேளாமல் இலங்கைக்குத் தூக்கிக் கொடுத்துவிட்டு, ஒப்பந்தம் ஆக்கிவிட்ட செய்தியை உலகுக்கு அறிவிக்கிறார்கள். நாம் பத்திரிகையைப் பார்த்து தெரிந்து கொள்கிறோம்” என்றும் பேசியிருக்கிறேன்.

சட்டசபையில் கருணாநிதி ஏன் தீர்மானம் கொண்டு வரவில்லை என்று ஜெயலலிதா கேட்டிருக்கிறார். 21-8-

1974 அன்று சட்டசபையில் நானே முன்மொழிந்த தீர்மானம் - “இந்தியாவுக்கு சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத் தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி, இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து கச்சத் தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது” என்பதாகும். ஆனால் இப்படி தீர்மானம் நிறைவேற்றியதை தெரிந்து கொண்டு, மத்திய அரசு கச்சத் தீவை இலங்கைக்கு கொடுப்பதற்கு முன்பே ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை என்று இப்போது கேட்கிறார்.

அன்றைய தினம் கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்கான தீர்மானத்தை ஆளுங்கட்சியான தி.மு.க. கொண்டு வந்தபோது எதிர்க் கட்சியாக இருந்த அ.தி.மு.க. அதனை ஆதரிக்காமல் வெளிநடப்பு செய்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.

அதுமட்டுமல்ல; 1974ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி திடீரென்று மத்திய அரசினால் கச்சத் தீவு பற்றிய அறிவிப்பு வந்தது. உடனடியாக அதே ஆண்டு ஜூன் 29ஆம் தேதியன்றே சென்னை தலைமைச் செயலகத்திலே அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்து அவர்களோடு பேசி, அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், அன்றைய பிரதமருக்கு நான் எழுதிய கடிதம் வருமாறு :-

Dear Prime Minister,

On behalf of the Government of Tamil Nadu and on behalf of the people of Tamil Nadu, I am constrained to express our deep sense of disappointment over the recent Indo-Sri Lanka Agreement, according to which, Sri Lanka’s claim to Kachativu has been conceded by the Government of India. May I express the hope that you will take into consideration the unanimous decision contained in the Resolution and take appropriate action?

உடன்பிறப்பே, “நல்ல வகை மீன் கிடைக்கும் என்று எண்ணுகின்ற சில பேராசை கொண்ட மீனவ மக்களால், அவர்கள்

தங்களுடைய உயிரை இழக்க நேரிடுகிறது” என்று நான் பேரவையில் கூறியதை எடுத்துக்காட்டி, மீனவ மக்களை பேராசை கொண்டவர்கள் என்று நான் கூறிவிட்டேன் என்று ஜெயலலிதா தனது அறிக்கையிலே கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

நல்ல வகை மீன்கள் இந்திய பவுண்டரி லைனுக்கு அப்பால் தான் கிடைக்கும் என்றும், அதனால் மீனவர்கள் அந்த இடங்களுக்கு மீன் பிடிக்கச் செல்லுகிறார்கள் என்றும் அந்தக் கருத்தைப் பேசியதே 20-4-1992 அன்று இதே சட்டசபையில் ஜெயலலிதாதான். அவரே, அதைப் பேசிவிட்டு, அதை நான் எடுத்துக்காட்டியதற்காக எனக்கு கண்டனம் தெரிவிப்பேன் என்று அறிக்கை விட்டிருப்பது நல்ல கோமாளித்தனம். அதே நாள் பேச்சில்தான் ஜெயலலிதா “கச்சத் தீவை மீட்பது என்பது விரைவில் நடக்கக் கூடிய, நடைபெறக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை” என்றும் சட்டப் பேரவையில் கூறியிருக்கிறார்.

ஒரு முன்னாள் முதலமைச்சர், இந்நாள் முதலமைச்சரைப் பற்றி தன் அறிக்கையிலே அடுத்து கூறும்போது, “திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் ஏறி சென்னைக்கு வந்த கருணாநிதியின் குடும்பம்” என்று எழுதியிருக்கிறார் என்றால், அவருடைய தகுதியைப் பற்றி தமிழ் நாட்டு மக்கள் தான் எடை போட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அவரது இந்த தரத்திலான வார்த்தைகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றபோதிலும், திரும்பத் திரும்ப அவர் இந்தத் தொடரைப் பயன்படுத்தி வருவதால், இவர் எதை “மூலதனமாக” வைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார்? எப்படி இன்று கொட நாட்டில் தங்கியிருக்கிறார்? எங்கிருந்து வந்தது இந்தச் சொத்து என்றெல்லாம் திருப்பி கேள்வி எழுப்ப நமக்குத் தெரியாதா?

கச்சத் தீவில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் ஏடுகளிலே செய்தி வந்துள்ளதாக ஜெயலலிதா அறிக்கையிலே சுட்டிக் காட்டியிருக்கிறார். அந்தத் தகவலை இலங்கை தூதுவரகமே மறுத்து அப்படி எந்தக் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணிகளும் நடைபெறவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து, அது ஏடுகளில் வெளி வந்ததைக் கூடப் படிக்காமல் - ஜெயலலிதா

அறிக்கை விடுத்திருப்பது அவருடைய அறியாமையைத் தான் எடுத்துக் காட்டுகின்றது.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பிரதமருக்கு இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவு கெடக் கூடாது என்பதற்காகத்தான் கச்சத் தீவு இலங்கைக்கு மத்திய அரசினால் தாரப்பட்டுள்ளது என்று அவரே எழுதிய கடித வாசகங்களைச் சுட்டிக் காட்டியதற்கு எந்த விளக்கத்தையும் ஜெயலலிதாவினால் அவரது அறிக்கையிலே தர இயலவில்லை என்பதையும் மறந்துவிட முடியாது. அது மாத்திரமல்ல, 23-7-2003 அன்று ஜெயலலிதா அன்றைய பிரதமர் வாஜ்பய் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், இந்தியா இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையே நல்லுறவுப் பேணவும், தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக அனுபவித்து வரும் உரிமைகளைக் காப்பாற்றவும் உள்ள ஒரே வழி என்று குறிப்பிடப்பட்டு மேலும் எழுதியிருக்கிறார். “The best possible solution is to get the island of Katcha Theevu and adjacent seas on lease in perpetuity solely for fishing, drying of nets and pilgrimage. Sri Lanka’s Sovereignty over Katcha Theevu could be upheld at the same time.” (அதாவது கச்சத் தீவையும், அதற்கு அருகிலே உள்ள கடல் பகுதிகளையும் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும், வலைகளைக் காய வைப்பதற்கும், யாத்திரை செல்வதற்கும் நிரந்தர குத்தகைக்கு பெறலாம்; அதே நேரத்தில் கச்சத் தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம்.) இப்படி யெல்லாம் அன்றைக்கு எழுதியவர்தான் இன்றைக்கு நம்மைப் பார்த்து கேள்விக்கணை தொடுக்கிறார். நம்மைப் பார்த்து கேள்வி கேட்கும் ஜெயலலிதா நேற்றையதினம் நான் அவையிலே கச்சத் தீவு பிரச்சினைக்காக தமிழக அரசின் சார்பில் தீர்மானம் கொண்டு வந்தால், அதனை ஆதரிக்க அனைத்துக் எதிர்க்கட்சிகளும் தயாரா என்று கேட்டதற்கு அக்கட்சியினர் எந்தப் பதிலும் சொல்லவில்லை என்பதிலிருந்தே, அவருக்கு கச்சத் தீவு பிரச்சினை தீர வேண்டும் என்பதைவிட ஆளுங்கட்சியை எதிர்க்க வேண்டும் என்பதிலேதான் அக்கறை என்பது புரிகிறதல்லவா?

கச்சத் தீவை மீட்டே தீருவேன் என்று 15-8-1991 அன்று ஜெயலலிதா சூளுரைத்து - அதற்குப் பிறகு தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் திடீரென்று ராஜபக்சேவிற்கு எதிராக மாறி, தமிழ் ஈழத்தை மீட்டே தீருவேன் என்று

கர்ச்சனை செய்தது எல்லாமே வெறும் பிதற்றல், மாய்மாலம், மக்களை ஏமாற்ற ஜெயலலிதா ஆடிய கபட நாடகம் என்பதை “மனோகரா” கதையிலே வருவது போல அவரது மனச்சாட்சியே கேசரி வாமனாக மாறி, வசந்த சேனையை கழுத்தை நெரிப்பது போன்ற காட்சியாகவே தோன்றுகிறது.

தன்னை மறந்து ஜெயலலிதா தனது அறிக்கையிலே ஒன்றைச் சொல்லியிருக்கிறார். “கச்சத் தீவு பிரச்சினை என்பது மற்றொரு நாட்டுடனான பிரச்சினை. அதை மீட்கக் கூடிய அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருக்கிறது. மாநில முதலமைச்சருக்கு அந்த அதிகாரம் இருந்திருந்தால் அன்றைக்கே கச்சத் தீவு மீட்கப்பட்டிருக்கும்” என்று அவரே தனது அறிக்கையில் தன்னையும் மறந்து ஒரு உண்மையை வெளியிட்டிருக்கிறார். இப்படி தன்னை மறந்து பல நேரங்களில் உளறிக் கொடுப்பதும்; அந்த நேரங்களில் உண்மைகள் வெளிவந்து விடுவதும் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் வாடிக்கையாக நடைபெறுகின்ற ஒன்று. எனவே அவரது அறிக்கைக்கான பதிலை மேலும் வளர்த்தாமல், “திருட்டு ரயில்” போன்ற அவரது தரக்குறைவான வார்த்தைகளால் உடன்பிறப்பே, உனக்கும் மற்ற உடன்பிறப்புகளுக்கும் கொதிப்பு, கோபம் வருமேயானால், அதனை அடக்கிக் கொள்ள ஏற்கெனவே முன்னாள் பேரவைத் தலைவர், தம்பி காளிமுத்து தயாரித்து வெளியிட்டுள்ள அம்மையாரைப் பற்றிய “அகராதி பட்டியல்” ஒன்று இருக்கிறது. அதைப் படித்துப் பார்த்து ஆறுதல் கொள்ள வேண்டுகிறேன்.

அன்புள்ள, மு.க. 22-6-2009

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 289–294. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 42-இல் மேலும் கடிதங்கள்