அடக்கம்

முரசொலி · தொகுதி 42 · கடிதம் 3399

முரசொலி கடிதங்கள் · 3399

“சேது” திட்டம் எதிர்ப்போரை அடையாளம் காண்க!

நாள் 25.4.2009சுமார் 7 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3399. “சேது” திட்டம் எதிர்ப்போரை அடையாளம் காண்க!

உடன்பிறப்பே,

2001 மற்றும் 2004 தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று காரசாரமாகக் குறிப்பிட்டிருந்த அ.தி.மு.க. தலைவி செல்வி ஜெயா தன்னுடைய தேர்தல் கூட்டங்களில் சேது சமுத்திர திட்டத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், ஆயிரக்கணக்கான மீனவர்கள் நிர்க்கதியான சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்றும், இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்ற பகுதிகளில், கடலோர சுற்றுச்சூழல் மோசமாகும் என்றும் கூறி இத்திட்டத்தை எதிர்ப்பதாகக் கூறிவருகிறார். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும், சேது சமுத்திரத் திட்டத்தால் லட்சக்கணக்கான மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பறிகொடுப்பார்கள் என்றும், இத்தேர்தலில் அவர் கூட்டணி வெற்றி பெற்றால், சேதுத் திட்டத்தை அ.தி.மு.க. ரத்து செய்யும் என்றும் அறிவித்திருக்கிறார்.

இதற்கான விளக்கம் பலமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற போதிலும், ஒவ்வொரு கூட்டத்திலும் ஜெயா இதையே கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்பப் பேசுவதால் மீண்டும் ஒருமுறை இதனைத் தெளிவாக்க விரும்புகிறேன். இத்திட்டமானது அரசு மற்றும் புகழ் பெற்ற தனியார் நிறுவனங்களைச் சார்ந்த அறிவியல் விஞ்ஞானிகள்/வல்லுநர்கள் உதாரணமாக எல்.அண்ட்.டி., ராம்போல், அல்லியான் ஹைட்ராலிக் கன்சல்டன்ஸ் நெதர்லாந்து, இந்தோமார் கடலோர ஹைட்ராலிக் பிரைவேட் லிமிடெட், தேசிய சுற்றுப்புற பொறியியல் ஆராய்ச்சி நிலையம் (NEERI), இந்திய தொழில்நுட்ப நிறுவனம் சென்னை, தேசிய கடலோர தொழில் நுட்ப நிலையம், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், மத்திய சுற்றுச் சூழல் கண்காணிப்புக் குழுவின் அதிகாரிகள் மற்றும் ஆழ்கடல் மேம்பாட்டுத் துறை கோவா,

தேசிய கப்பல் வடிவமைப்பு ஆராய்ச்சி மையம் விசாகப்பட்டினம், தேசிய நீர்வள அமைப்பு டேராடூன் போன்ற பிற நிறுவனங்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. மேலும், இந்திய மற்றும் உலகில் உள்ள 14 முன்னணி நிறுவனங்களின் கருத்துக்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவை தவிர, இராணுவம் மற்றும் கப்பற்படையின் ஆலோசனைகளும் கருத்தில் கொள்ளப்பட்டது.

அறிவியல் அறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வுகள் அளித்த உள்ளீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தேசிய சுற்றுப்புற பொறியியல் நிலையம் விரிவான தொழில்நுட்ப பொருளாதார சாத்தியக்கூறு மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த மதிப்பீட்டு ஆய்வுகளை இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்டு விரிவான திட்ட அறிக்கையினை சமர்ப்பித்தது.

இத்திட்டத்தின் சுற்றுச்சூழல் சார்ந்த விவரங்கள் பின்வருமாறு:-

● இத்திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாதையில், மொத்த கடலோரப் பரப்பினோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவான கடல் நுண்ணுயிரிகள் மற்றும் குறைவான ஆழ்கடல் உயிரினங்கள் மட்டுமே உள்ளன.

● 10,500 ச.கி.மீ. பரப்பளவுள்ள மன்னார் வளைகுடா உயிர்கோள மண்டலத்தில் 6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு மட்டும் பாதிக்கப்படலாம். இது, மொத்த பரப்பில் மிகக் குறைந்த பகுதியே ஆகும்.

● மன்னார் வளைகுடா உயிர்கோள மண்டலம் தேசிய கடற்பூங்கா பகுதியாகும். இதில் பவளப்பாறைகள் மற்றும் கடல் பொருட்கள் உள்ளன. இந்திய கடல் பகுதியில் கடற்புற்கள், வேதாரண்யத்தை ஒட்டிய சதுப்பு நிலப்பகுதி தவிர இப்பவளப் பாறைகள் சில வகையான மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு உகந்த பகுதியாக உள்ளது. மேலும் சேது சமுத்திர கால்வாய் அமைக்கப்படும் பகுதி இந்த இனப்பெருக்கப் பகுதிகளிலிருந்து

20 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்திட்டத்திற்காக கடற்பகுதியை ஆழப்படுத்துதல் மற்றும் கப்பல் இயக்க நடவடிக்கைகளினால் பவளப் பாறைகளுக்கோ அல்லது சதுப்பு நிலக் காடுகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.

● சதுப்பு நிலக் காடுகள், கடற்புற்கள், பவளப்பாறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய செழிப்பான கடல் வளம் கொண்ட இப்பகுதி எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் சேது சமுத்திர கால்வாய் அமைக்கும் பணி வடிவமைக்கப்பட்டதால் இப்பகுதியில் மீன் வளம் உறுதியாகப் பாதுகாக்கப்படுகிறது.

● மேலும் மன்னார் வளைகுடாவிலுள்ள பவளப்பாறைகள் மீன் இனப்பெருக்க மையங்களாக உள்ளதால் அப்பகுதி ஐக்கிய நாட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் மன்னார் வளைகுடா உயிர் கோள மண்டல அமைப்பினால் பராமரிக்கப்படுகிறது. மன்னார் வளைகுடா பகுதியில் கடல் வாழ் வளங்கள் மீனவ சமுதாயத்தின் வாழ்வாதாரத்திற்கு உயிர்நாடியாக உள்ளதால், கடலோரப் பகுதியில் வாழும் மீனவர்களுக்கு உயிரின கோளப் பகுதியை பாதுகாப்பதற்கு மேற்கண்ட அமைப்பு பயிற்சி அளிக்கிறது.

மணல் படிவங்கள் மற்றும் கடல் நீரோட்டம் குறித்து மேற்கொள்ளப்பட்ட மாதிரி ஆய்வுகள் இவ்வுயிர்க்கோள மண்டல பகுதி ஆழப்படுத்துதல் மற்றும் தோண்டிய மணலை வேறு இடத்தில் கொட்டுதல் ஆகிய பணிகளால் பாதிப்பு அடையாது என்று சேது சமுத்திரக் கால்வாய் அமைக்கும் பணி (பாதை எண்.6) தெரிவிக்கின்றன. ஆழப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஆதம் பாலத்தில் எந்தவித சதுப்பு நிலக்காடுகளும் இல்லை.

மேற்கூறப்பட்டுள்ள விவரங்கள் இத் திட்டத்தை செயல்படுத்துவதால் அப்பகுதியிலுள்ள கடல் சுற்றுச்சூழல் எந்தவகையிலும் பாதிப்படையாது என்பதை நிரூபிக்கின்றன.

இத்திட்டத்தின் வாழ்வாதாரம் சார்ந்த விவரங்கள்

மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் சேதுசமுத்திரக் கால்வாய் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தபோது திட்டம் செயல்படுத்துகின்ற பகுதியில் வாழ்வாதார வாய்ப்புகள் மற்றும் கடலோர மீனவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு திட்டத்தின் மொத்த செலவினத்தில் 2 சதவீதத் தொகை ஒதுக்கப்பட வேண்டுமென்று கூறியுள்ளது. சேது சமுத்திர திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையில் சமுதாய மேம்பாட்டுத் திட்டம், திட்டம் செயலாக்கப்படும் பகுதியிலுள்ள கிராம மக்களுக்கு குடிநீர் வழங்குதல் போன்ற வசதிகளை ஏற்படுத்துவதற்கு ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் மீனவர்கள் நேரடியாகப் பயன்பெறுவர். சேது சமுத்திர கால்வாய் திட்டத்தின் கீழ், பின்வரும் வசதிகள் ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

● 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இராமேசுவரத்தில் பல்நோக்கு துறைமுக வசதியை ஏற்படுத்துதல்.

● 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூக்கையூர், தொண்டி, சேதுபவாசத்திரம் மற்றும் முத்துப்பேட்டையில் மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்கு தளங்கள் ஏற்படுத்துவதற்கு நிதியுதவி அளித்தல்.

● 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீனவ மக்கள் தொகை அதிகமாக உள்ள இராமநாதபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் 5 இலட்ச ரூபாய் வீதம் சமூக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல்.

● 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்டங்களில் கடலோர சமுதாய மேம்பாட்டுத் திட்டம் கைத்தொழில் மற்றும் வாழ்வாதார பயிற்சிகள் அளித்தல்.

● 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதர செலவினங்கள்

கடலோர மீனவர்களுக்குப் பயன்படும் வகையில் பல்நோக்கு கடலோர சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கைத்தொழில் மற்றும் இதர அத்தியாவசிய பயிற்சிகள் கண்டறியப்பட்டன. இவை மீனவர்கள் தங்களது தினசரி வருவாயை ஈட்டுவதற்கு

உதவுகின்றன. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு இரண்டாம் கட்டத்தில் பல்வேறு அரசு சாரா நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மீனவர்களுக்காக இதுவரை என்னென்ன செய்யப்பட்டுள்ளன என்பதற்கு சில சான்றுகள் பின்வருமாறு :-

கடலோர சமுதாய மக்களுக்கு டீசல் இயந்திரம் பழுது பார்த்தல், பனையோலை கைவினைப் பொருட்கள் செய்தல், கடற்சிப்பியால் ஆபரணங்கள் செய்தல், நண்டு கொழுக்க வைத்தல், தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், கயிறு கைவினைப் பொருட்கள் செய்தல், கடல் தொழில் நுட்பப் பயிற்சி, வானொலிப் பெட்டி, தொலைக்காட்சி, கைபேசி பழுது பார்த்தல், குளிர் சாதன இயந்திரங்களைப் பழுது பார்த்தல், சணற் பைகள் தயாரித்தல், நைலான் வலை பின்னுதல், தையற் பயிற்சி, செவிலியர் பயிற்சி, பரிசோதனைக்கூட வல்லுநர் பயிற்சி போன்ற பல பயிற்சிகள் தூத்துக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த 9725 பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டன.

நுண்ணிய நிதியுதவித் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில், 12 கிராமங்களிலுள்ள பள்ளிகளுக்கு மரத்தினாலான அறையணிகள் அளித்தல், சுகாதார மையம், சூரிய ஒளியினால் இயங்கும் விளக்குகள், அங்கன்வாடி மற்றும் சமுதாயக்கூடம் கட்டுவதற்கு நிதியுதவி அளித்தல் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்துதல் ஆகிய பணிகளுக்கு 32 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கடலோர மாவட்டங்களிலுள்ள மாணவர்களுக்கு கல்வித் தொகையாக 4 இலட்சத்து 45 ஆயிரத்து 385 ரூபாய் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் 100 கணினிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட பயிற்சிகள் மற்றும் உதவிகள் மூலமாக கடலோர மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பட உறுதி செய்யப்பட்டது.

வளர்ச்சியடையும் உலகத்தில் கடல் வழிப் போக்குவரத்து, பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இக்கருத்தின் அடிப்படையில் பல்வேறு வல்லுநர்களின்

அறிவுரைகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகள் பெறப்பட்ட பின்னர் சேது சமுத்திர கால்வாய்த்திட்டம் உருவாக்கப்படுகிறது. இத்திட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

சேது சமுத்திரத் திட்டப் பகுதியில் உள்ள மீனவர்களுக்காக இத்தகைய சலுகைகள் அளிக்கப்படுவதைத் தவிர, ஒட்டுமொத்த மீனவர்களுக்காக கடந்த மூன்றாண்டு கால கழக ஆட்சியில் செய்யப்பட்டுள்ள சாதனைகள் வருமாறு :-

1) மீன்பிடி தடை காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 500 ரூபாய்.

2) மீனவர்களின் வருமானம் பெருக முட்டுக்காட்டில் உலகத்தரம் வாய்ந்த மீனவர் பயிற்சி நிலையம்.

3) சுனாமி பாதித்த 42 ஆயிரம் மீனவர்களுக்கு ரூ.110.36 கோடி செலவில் மீன்பிடி சாதனங்கள், வலைகள், உயிர்காப்பு கவச உடைகள், கை விளக்குகள், மிதிவண்டிகள், குளிர் சாதனப் பெட்டிகள்.

4) கடல்சார் கல்வி பயிலும் 100 மீனவ இளைஞர்களுக்கு ரூ.50 இலட்சம் செலவில் உதவித் தொகை.

5) மீனவள வேளாண்மை கூட்டுறவு இணையத்தின் மூலம் 5635 மீனவர்கள் பெற்ற கடன் ரூ. 19.56 கோடி தள்ளுபடி.

6) மானிய விலையில் 1550 மீனவர்களுக்கு 3 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் வெளி பொருத்தும் இயந்திரங்கள்.

7) புதிய துறைமுகங்கள்

அ) 27 கோடி ரூபாய் செலவில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் மீன்பிடி துறைமுகம்.

ஆ) கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தில் 40 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி துறைமுகம் அமைத்திட ஒப்புதல்.

இ) கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டம் மற்றும் ராஜாக்க மங்கலத்தில் மீன்பிடி துறைமுகங்கள்.

ஈ) பூம்புகாரில் மீன்பிடி துறைமுகம் அமைத்திட விரைவான நடவடிக்கை.

உ) தமிழக கடலோர மீனவர்கள் பயன் பெற 10 இடங்களில் தலா 5 கோடி ரூபாய் வீதம் 50 கோடி ரூபாய் செலவில் மீன் இறங்கு தளங்கள்.

ஊ) 5 கோடியே 4 இலட்ச ரூபாய் செலவில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்தப்பட்டுள்ளது.

எ) 6 கோடியே 38 இலட்ச ரூபாய் செலவில் சென்னை மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஏ) 1 கோடி ரூபாய் செலவில், நான்கு கடலோர மாவட்டங்களில் குளிர் தொடர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

8) 12ஆம் வகுப்பில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறும் மீனவர் சமுதாய மாணவ, மாணவியருக்கு 5000 ரூபாய்; மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியருக்கு 3000 ரூபாய்.

10ஆம் வகுப்பில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியருக்கு 3000 ரூபாய்; மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்கள் பெறும் மாணவ, மாணவியருக்கு முறையே 1000 ரூபாய், 500 ரூபாய், 300 ரூபாய்.

இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்ட நிவாரணத் தொகை 1 இலட்சம்

ரூபாயை 3 இலட்சம் ரூபாயாகவும், ஆதரவற்ற குடும்பங்களுக்கு இத் தொகையை 5 இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன், துப்பாக்கிச் சூட்டின்போது சிறு காயமடையும் மீனவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயாகவும், படுகாயம் அடையும் மீனவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயாகவும் வழங்கப்படுகிறது.

9) மீன்பிடிக்கும் போது காணாமல் போகும் மீனவர் குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக நாளொன்றுக்கு ரூ.50 வீதம் மாதத்திற்கு ரூ. 1500 உதவித் தொகை வழங்கப்படுகிறது.

10) 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் விசைப் படகுகளுக்கு மாதம் ஒன்றுக்கு 1000 லிட்டர் என்பதை 1500 லிட்டராக உயர்த்தி வழங்கப்படுகிறது.

இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு மாதம் ஒன்றுக்கு 250 லிட்டர் வழங்கப்படுகிறது.

11) தேசிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் மூலம் மூன்றாண்டுகளில் 4 இலட்சத்து 30 ஆயிரத்து 479 உறுப்பினர்களுக்கு 51 கோடியே 31 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது.

தேசிய கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் மூன்றாண்டுகளில் 3 இலட்சத்து 13 ஆயிரத்து 471 உறுப்பினர்களுக்கு 37 கோடியே 57 இலட்சத்து 41 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது.

12) மூன்றாண்டுகளில் 8298 மீனவர்களுக்கு டீசல் மானிய திட்டத்தின் மூலம் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 1.50 வீதம் மானியம் வழங்கியுள்ளது.

மீன்பிடி மற்றும் அதனைச் சார்ந்த தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் பயன்பெற மீன்வளத்துறை அமைச்சர் தலைமையில் மீனவர் நல வாரியம் அமைத்து 5 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது.

மீனவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு -

1) விபத்தில் இறப்பு, மீன்பிடிப்பின் போது நிகழும் இறப்பு, இயற்கை மரணம், ஈமச்சடங்கு செலவினம்,

கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு, கருச்சிதைவு மற்றும் ஓய்வூதியம் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

(அ) விபத்தில் மரணம் அடைந்தால் 1 இலட்சம் ரூபாய்

(ஆ) இரண்டு கைகளை இழக்க நேர்ந்தால் 1 இலட்சம் ரூபாய்

(இ) இரண்டு கால்களை இழக்க நேர்ந்தால் 1 இலட்சம் ரூபாய்

(ஈ) ஒரு கை மற்றும் ஒரு கால் இழக்க நேர்ந்தால் 1 இலட்சம் ரூபாய்

(உ) இரண்டு கண்களிலும் முற்றிலும் பார்வை இழந்தால் 1 இலட்சம் ரூபாய்

(ஊ) ஒரு கை அல்லது ஒரு கால் இழப்பு ஏற்பட்டால் 50 ஆயிரம் ரூபாய்

(எ) கடுமையான காயம் ஏற்பட்டு உடல் உறுப்பு இழப்பு ஏற்பட்டால் 20 ஆயிரம் ரூபாய்

-எனவும்,

2. மீன்பிடிக்கையில் இறத்தல் அல்லது அதற்குப்பின்பு உடனடியாக விபத்தின் காரணமாக அல்லாமல் இறந்து விட்டால் 1 இலட்ச ரூபாய்.

3. மீன்பிடிக்கையில் காணாமற்போன மீனவர்க்காக - குடும்பத்திற்கு 1 இலட்சம் ரூபாய்

4. இயற்கை மரணம் 10 ஆயிரம் ரூபாய்

5. ஈமச்சடங்கிற்கான உதவித் தொகை 2 ஆயிரத்து 500 ரூபாய்

மகப்பேறு / கருச்சிதைவு / கருக்கலைப்பு உதவித்தொகை

(i) மகப்பேறு உதவிக்காக 6,000 ரூபாய் (மாதம் ஒன்றுக்கு ரூ.1000/- வீதம் ஆறு மாதங்கள்)

(ii) கருச்சிதைவு நிகழ்ந்தால் 3,000 ரூபாய்

(iii) கருக்கலைப்பு செய்தால் 3,000 ரூபாய்

6. முதியோர் ஓய்வூதியம் (மாதம் ஒன்றுக்கு) 400 ரூபாய்

இவ்வாறு, அல்லும் பகலும் நல்ல பல திட்டங்களை வகுத்து, நடைமுறைப்படுத்தி மீனவர் சமுதாயம் முன்னேற பாடுபடுகிறது இந்த அரசு. ஆனால் ஜெயா ஊருக்கு ஊர் சென்று மீனவர்களின் நலன்கள் பாதிக்கப்படும் என்று உண்மைக்கு மாறாக பிரச்சாரம் செய்து வருகிறார். இதனை மீனவர்களுக்கு நினைவு படுத்த வேண்டிய கடமையை அந்த சமுதாய நண்பர்களே செய்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். “சேது” திட்டத்தினால் வளமான வாழ்வு பெறப்போகும் தமிழகத்தையும், தமிழக மீனவர்களையும் ஏமாற்ற தளுக்கு நடைப்பேச்சு நடத்தும் தந்திரக்காரர்களை தமிழ்ச் சாதியே; அடையாளம் கண்டு கொள்க!

அன்புள்ள, மு.க. 25-4-2009

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 242–251. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 42-இல் மேலும் கடிதங்கள்