அடக்கம்

முரசொலி · தொகுதி 42 · கடிதம் 3401

முரசொலி கடிதங்கள் · 3401

வருக நீ - வெற்றி பெற்றுத் தருக நீ

நாள் 1.5.2009சுமார் 1 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3401. வருக நீ - வெற்றி பெற்றுத் தருக நீ

கழக உடன்பிறப்பே,

தலைவர்கள் வரும்போது அவர்கள் கண் முன்னே காட்சி அளித்து - கனிவுடன் வரவேற்றால் மட்டும் போதாது. அவர்களும் நானும் எதிர்பார்ப்பது உன்னுடைய கடின உழைப்பே! நீ எறும்பு போல் சுறுசுறுப்பு காட்டி உழைப்பாய் என்று எனக்குத் தெரியும். உழைத்த களைப்பில் உறங்கி விடக் கூடாது அல்லவா? அதனை உள்ளத்தில் நிறுத்தி உழைத்திடுக! உழைத்திடுக! உழைத்திடுக!

உன்னோடு சேர்ந்து நானும் ஓயாது உழைக்க வேண்டும் என்றுதான் துடிக்கிறேன். என் செய்வது? வயது தடுக்கிறதே? அதை விட வந்த நோய் மேலும் தடுக்கிறதே! அந்தத் தடைகளை யெல்லாம் மீறிக்கொண்டுதான், தங்கமே உன்னைத் தரிசிக்க வருகிறேன். அந்தத் தரிசனத்தில் எனக்குள்ள கரிசனம், உனக்குப் புரியுமே! திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலே உள்ள காங்கிரஸ் அணியின் வேட்பாளர்களும், விடுதலை சிறுத்தைகள் அணியின் வேட்பாளர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அணியின் வேட்பாளரும் அபரிமிதமான வெற்றிகளைப் பெற்றுக் குவிக்க வேண்டும் என்பதுதான் என் கரிசனம் ஆகும் என்பதை நீ அறிவாய். என்றைக்காவது இந்த அண்ணனின் வேண்டுகோளை தம்பி நீ தட்டிக் கழித்திருக்கிறாயா?

எனவேதான் உன்னை நம்பிக் கொண்டிருக்கிறேன் - நீ இருக்கும்போது - உன் நெஞ்சில் நான் இருக்கும்போது - நான் ஏன் கவலைப்பட வேண்டும்? இந்த ஜனநாயக புனிதப் போரில் நாடாளுமன்றத்தில் நமது கூட்டணியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்று சென்று அமர்ந்திடவும் - செந்தமிழ் நாட்டிற்கு இதுவரையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பாக பெற்ற நன்மைகளையும், திட்டங்களையும் மேலும் மேலும் குவித்திடவும்

உன் கூர்மையான உழைப்பு

உன் நேர்மையான பணி வெல்லட்டும்.

“தம்பி உடையான படைக்கஞ்சான்” என்று என்னைப் பற்றி இந்த உலகம் சொல்லட்டும்!

அதற்கு எனக்கொரு வாய்ப்பு தந்திடு!

வருக நீ - வெற்றி பெற்றுத் தருக நீ.

அன்புள்ள, மு.க. 1-5-2009

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 258–259. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 42-இல் மேலும் கடிதங்கள்