அடக்கம்

முரசொலி · தொகுதி 42 · கடிதம் 3395

முரசொலி கடிதங்கள் · 3395

மூப்பனார் வழங்கிய புத்தகம்!

நாள் 14.4.2009சுமார் 4 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3395. மூப்பனார் வழங்கிய புத்தகம்!

உடன்பிறப்பே,

2000ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் முதல் நாள் கன்னியாகுமரியில் 133 அடி உயரமுள்ள வள்ளுவரின் சிலை திறப்பு விழா! ஆம், என்னுடைய நீண்ட நாள் கனவை சிற்பி பத்மஸ்ரீ கணபதி ஸ்தபதி அவர்களின் குழுவினரைக் கொண்டு நிறைவேற்றி மகிழ்ந்த நாள் - பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் மக்கள் தலைவர் மூப்பனார் அவர்களும் கலந்து கொண்டார்.

அப்போது 2001ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி தி.மு.க. வுடன் கூட்டணி சேருமா, சேராதா என்று தெரியாத நிலையில் - அந்த விழாவில் கலந்து கொண்ட மூப்பனார் அவர்கள் எனக்கு ஒரு புத்தகத்தைப் பரிசாக அளித்தார். அந்தப் புத்தகத்தின் பெயர் You Can Win - உம்மால் வெல்ல முடியும் - என்பதாகும். விழாவிலே நான் பேசும்போது - அந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பற்றி பேசினேன்.

அதாவது, “மூப்பனார் அவர்கள் இந்தப் பந்தலுக்கு வந்ததும் என்னிடத்திலே ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். புத்தகத்தின் தலைப்பு “உம்மால் வெல்ல முடியும்”. என்ன அர்த்தத்தில் கொடுத்தாரோ எனக்குத் தெரியாது. அது பலித்திடுவதற்கு ஆவன நான் செய்வேன். அந்த நூலினை வழங்கியவரின் மனதிலே என்ன இருக்கிறது என்பது எனக்குப் புரிகிறது. சுற்றுச் சார்பு சரியில்லை என்ற ஒன்றைத் தவிர அவருடைய உள்ளம் என்பால் ஈர்க்கப்பட்ட - இன்று நேற்றல்ல பல ஆண்டுக் காலமாக உள்ள உள்ளம் என்பதை நான் மிக நன்றாக அறிவேன்” என்று குறிப்பிட்டேன்.

அதன் பின்னர் பலமுறை அந்தப் புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம். கருத்துக்களின் சுரங்கம் அந்தப் புத்தகம் என்று சொன்னால் மிகையாகாது.

அந்தப் புத்தகத்தை மீண்டும் படிக்கும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. அதன் காரணமாக இன்றைய கடிதத்தில் அந்தப் புத்தகத்திலிருந்து எடுத்த சில பகுதிகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.

“ஒவ்வொரு இடத்திற்கும் - அது வீடாக இருந்தாலும் - நிறுவனமாக இருந்தாலும் - அல்லது ஒரு நாடாக இருந்தாலும் ஒரு கலாச்சாரம் இருக்கிறது. சில சமயங்களில், நீங்கள் ஒரு கடைக்குச் செல்லும்போது, அங்கே விற்பனையாளர் பண்பட்டவராகவும், ஏன் கண்காணிப்பாளரும், மேலாளரும், முதலாளியும் கூட பண்பட்டவர்களாக இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். அதே சமயம், நீங்கள் இன்னொரு கடைக்குச் செல்லும்போது, அங்கே உள்ள எல்லோருமே ஆணவத்துடனும், மரியாதையின்றியும் நடந்து கொள்வதைப் பார்க்கிறீர்கள். நீங்கள் ஒரு வீட்டிற்குச் செல்லும்போது, அங்கே குழந்தைகளும், பெற்றோர்களும் ஒழுங்காகவும், மரியாதையாகவும் விட்டுக் கொடுக்கும் பண்பு உடையவர்களாக இருப்பதைப் பார்க்கிறீர்கள். அதே சமயம், இன்னொரு வீட்டில் ஒவ்வொருவரும் கிறியும் பாம்புமாகச் சண்டை போட்டுக் கொள்வதைப் பார்க்கிறீர்கள்” (பக்கம் 10-11)

இந்த வரிகளுக்கு நான் விளக்கம் எழுதத் தேவையில்லை என்று கருதுகிறேன். உடன்பிறப்பே, உனக்குப் புரிந்திருக்கலாம்.

★★

“நீங்கள் வெற்றி பெற்றவர்களோடு சேர்ந்தால், நீங்களும் ஒரு வெற்றி வீரர் ஆவீர்கள். சிந்தனையாளர்களோடு சேர்ந்தால் நீங்களும் சிந்தனையாளர் ஆவீர்கள். கொடுப்பவர்களோடு சேர்ந்தால், நீங்களும் கொடுப்பவர்களாக ஆவீர்கள். குற்றம் குறை சொல்பவர்களோடு சேர்ந்தீர்கள் என்றால், நீங்களும் குற்றம் குறை சொல்லிக் கொண்டு உட்கார்ந்து விடுவீர்கள்.

யாராவது வாழ்க்கையில் வெற்றி பெற்றால், அப்போதெல்லாம் சின்ன புத்திக்காரர்கள் அவர்களிடம் குறைகளைக் கண்டு அவர்களின் தன்மதிப்பைக் குலைக்க முயற்சிப்பார்கள். இப்படிப்பட்ட அற்பப் புத்திக்கார்களை எதிர்க்க நினைக்காமல், விலகிச் சென்றீர்களானால் நீங்கள் ஜெயித்தவர்கள்

ஆவீர்கள். ஒருக்காலும் இப்படிப்பட்ட எதிர்மறை எண்ணமுடையவர்கள் உங்களைக் கால்வாரிவிட வாய்ப்பு கொடுக்காதீர்கள். ஒரு மனிதனின் குணத்தை அவன் யாருடன் சேர்ந்திருக்கிறான் என்பதை வைத்து மட்டுமல்லாமல், அவன் யார் யாருடன் சேர்வதைத் தவிர்க்கிறான் என்பதையும் வைத்தே முடிவெடுக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” (பக்கம் 42-43)

உடன்பிறப்பே, இந்த வரிகளுக்கான விளக்கத்தையும் நான் எழுதாமலே நீ புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன்!

★★

“ஒரு குறிக்கோளை அடைவதற்காக நமக்குள் கொழுந்து விட்டெரியும் ஆசையிலிருந்துதான் வெற்றி பெறுவதற்கான தூண்டுதல் வருகிறது. ஓர் இளைஞன் சாக்ரடஸிடம் வந்து வெற்றிக்கான ரகசியத்தைப் பற்றிக் கேட்டான். அதற்கு சாக்ரடஸ் அந்த இளைஞனிடம் அடுத்த நாள் காலையில் ஆற்றங்கரை அருகில் தன்னைச் சந்திக்கும்படி சொன்னார். அடுத்த நாள் அவர்கள் ஆற்றங்கரையில் சந்தித்தனர். சாக்ரடஸ் அந்த இளைஞரைத் தன்னுடன் ஆற்றை நோக்கி நடந்து வரும்படி கேட்டுக் கொண்டார்.

அவர்கள் கழுத்தளவிற்கு ஆற்று நீர் வந்தவுடன் சாக்ரடஸ் அந்த இளைஞனை திடீரென நீரினுள் பிடித்து அழுத்தினார். அந்த இளைஞன் வெளியே வரப் போராடினான். ஆனால் சாக்ரடஸ் மிகவும் வலுவானவர். ஆதலால், அப்படியே அவனை அழுக்கியவாறு; அவனது முகம் நீல நிறமாக மாறுகிற அளவுக்கு அழுக்கினார். சற்றுப் பொறுத்து சாக்ரடஸ் அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் செய்த முதல் வேலையே தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்ததுதான்.

சாக்ரடஸ் அவனிடம், “நீ நீருக்குள்ளே இருந்தபோது நீ எதை அதிகம் விரும்பினாய்?” என்று கேட்டார். அந்த இளைஞன், “காற்று” என்று பதில் அளித்தான்.

சாக்ரடஸ், “வெற்றியின் ரகசியமே அதுதான். நீ எவ்வளவு அதிகமாகக் காற்றை விரும்பினாயோ, அதுபோன்றே வெற்றியையும் விரும்பினால் உனக்கு அது கிட்டும்” என்று சொன்னார். இதைத் தவிர வேறு எந்த ரகசியமும் இல்லை. ஒரு சுட்டெரிக்கும் ஆசையே சாதனைகளின் தொடக்கமாகும். ஒரு சிறிய தீயால் எப்படி அதிக வெப்பத்தைத் தர முடியாதோ, அது போல ஒரு பலவீனமான ஆசையால் மிகப் பெரிய விளைவுகளை உருவாக்க முடியாது” (பக்கம் 70-71)

உடன்பிறப்பே, வரப் போகின்ற தேர்தலில் வெற்றியையே எதிர் நோக்கும் உனக்கு இந்தக் குறிப்பு முக்கியம் அல்லவா? வெற்றியை விரும்பு - அதற்காக உழைத்திட, உழைத்திட - நிச்சயம் வெற்றி கிட்டும்!

★★

“ஒரு நாள் ஒரு பத்து வயது சிறுவன் ஒரு ஐஸ் கிரீம் கடைக்குச் சென்றான். ஒரு இருக்கையில் உட்கார்ந்தான். “ஐஸ் கிரீம் கோன் எவ்வளவு?” என்று கடைப் பணிப்பெண்ணிடம் கேட்டான். அவள், “எழுபத்து ஐந்து சென்ட்டுகள்” என்றாள். அந்தச் சிறுவன் தனது கையில் இருந்த சில்லறைகளை எண்ணத் தொடங்கினான்.

பிறகு அவன், “ஒரு சிறிய அளவு ஐஸ் கிரீம் எவ்வளவு?” என்று கேட்டான். பணிப்பெண், பொறுமையிழந்து, “65 சென்ட்டுகள்” என்று பதில் அளித்தாள். அந்தச் சிறுவன், “எனக்கு சிறிய ஐஸ் கிரீம் கப் வேண்டும்” என்றான். அவனுக்கு ஐஸ் கிரீம் கிடைத்தது. பில் பணம் கொடுத்து விட்டு வெளியேறினான். அந்த வெற்றுக் கப்பை எடுக்க வந்த பணிப்பெண், மனமுருகிப் போனாள். அந்தக் கப்புக்கு அடியில் பத்து ஒரு சென்ட் சில்லறைகள் டிப்ஸாக வைக்கப்பட்டிருந்தது. அந்தச் சிறுவன் ஐஸ் கிரீமை வாங்குவதற்கு முன்னால் அந்தப் பெண்ணுக்கு ஏதாவது தர எண்ணி இருந்திருக்கிறான். அவன் தனது உணர்வையும், அக்கறையையும் காட்டி விட்டான். அவன் தன்னைப் பற்றி எண்ணுவதற்கு முன்னால், பிறரைப் பற்றி எண்ணியிருக்கிறான்.”

உடன்பிறப்பே, இந்தக் கதையை எதற்காக மேற்கோள் காட்டியிருக்கிறேன் என்பதையும் நீயே புரிந்து கொள்ள முயற்சி செய்; புரியும்.

★★

“வெற்றிக்கு எந்த மந்திரக் கோலும் இல்லை. இந்த உலகில் வெற்றி என்பது செயலாற்றுபவர்களுக்குத் தான் கிடைக்கும். வேடிக்கை பார்ப்பவர்களுக்கு அல்ல. வண்டி இழுக்கிற குதிரை, உதைக்க முடியாது. உதைக்கிற குதிரை வண்டி இழுக்காது. நாம் இழுக்கிற குதிரை போல இருப்போமாக. உதைக்கிற குதிரை போன்று இருப்பதை நிறுத்துவோமாக. கடின உழைப்பில்லாமல் வெற்றி என்பதே இல்லை” (பக்கம் 79)

உடன்பிறப்பே, வெற்றி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு உழைக்கப் புறப்பட்டுக் கொண்டிருக்கும் உனக்கு இறுதியாக சுட்டிக் காட்டியிருக்கும் இந்த வரிகளே போதுமானது என்று கருதுகிறேன். ஆமாம் - நீ இழுக்கிற குதிரை போல இருப்பாயாக - உதைக்கிற குதிரையாக உன் எதிரிகளே இருந்து விட்டுப் போகட்டும்.

அன்புள்ள, மு.க. 14-4-2009

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 222–226. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 42-இல் மேலும் கடிதங்கள்