முரசொலி கடிதங்கள் · 3385
ஆயத்தமாகுக; அறப்போர் முனைக்கு!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3385. ஆயத்தமாகுக; அறப்போர் முனைக்கு!
உடன்பிறப்பே,
தற்போது நடைபெற்று வரும் 14வது பாராளுமன்றத்தின் பதவிக் காலம் ஜூன் திங்கள் 1ஆம் தேதியுடன் முடிந்து, ஜூன் 2ஆம் தேதி 15வது பாராளுமன்றம் அமையப் பெற வேண்டும். அதுபோலவே மத்திய அரசின் பதவிக் காலம் மே திங்கள் 22ஆம் தேதியுடன் முடிகிறது. எனவே புதிய அரசு மே திங்கள் 23ஆம் தேதிக்குள் பதவியேற்க வேண்டும். இதற்கான நாடாளுமன்றத் தேர்தல் முறையாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு விட்டது.
மொத்தமுள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 16ஆம் தேதியன்று முதல் கட்டமாக 124 தொகுதிகளுக்கும் - ஏப்ரல் 23ஆம் தேதி இரண்டாவது கட்டமாக 141 தொகுதிகளுக்கும் - ஏப்ரல் 30ஆம் தேதி மூன்றாவது கட்டமாக 107 தொகுதிகளுக்கும் - மே 7ஆம் தேதி நான்காவது கட்டமாக 85 தொகுதிகளுக்கும், மே 13ஆம் தேதி ஐந்தாவது கட்டமாக 86 தொகுதிகளுக்கும் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் மே 13ஆம் தேதிதான் கடைசி கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
உத்தரப் பிரதேசம், காஷ்மீர் ஆகிய இரண்டு மாநிலங்களில் ஐந்து கட்டங்களாகவும் - பீகாரில் நான்கு கட்டங்களாகவும் - மராட்டியம் மற்றும் மேற்கு வங்காளத்தில் மூன்று கட்டங்களாகவும் - ஆந்திரா, அஸ்ஸாம், மணிப்பூர், ஜார்கண்ட், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ஒரிசா, பஞ்சாப் மாநிலங்களில் இரண்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற இருந்த போதிலும், தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 7 யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாக ஒரே நாளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
வாக்குப் பதிவு பல கட்டங்களாக நடைபெற்றாலும், வாக்குகள் மே 16-ந் தேதியன்று எண்ணப்படவுள்ளன.
மே 13ஆம் தேதிக்கும் நமக்கும் ஒரு பொருத்தம் உண்டு. 1996ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிந்து மே 13ஆம் தேதி தான் ஆளுநர் மாளிகையில் நான் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டேன். 2004ஆம் ஆண்டு மே திங்களில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு நம்முடைய கூட்டணி நாற்பது இடங்களிலும் அமோக வெற்றி பெற்றது 13ஆம் தேதியன்றுதான். 2006ஆம் ஆண்டும் சட்டமன்றத் தேர்தல் முடிந்து மே 13ஆம் தேதி தான் நான் ஐந்தாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன். என் தற்போதைய உடல் நலம் பெற்று 45 நாட்களுக்குப் பிறகு அரசின் தலைமைக் செயலகம் சென்று கூட 13ஆம் தேதியன்றுதான். பெரியார், அண்ணா வழி பகுத்தறிவுவாதியாகிய எனக்கு நல்ல நாள், கெட்ட நாள் என்றெல்லாம் எழுதுவதிலும், பேசுவதிலும், நம்புவதிலும் ஆர்வமும் இல்லை, அக்கறையும் இல்லை. இருந்தாலும் ஆங்கிலேயர்களுக்கு 13ஆம் தேதி என்பது பிடிக்காத ஒன்று. தீய நாள் என்பதற்காக அந்த நாளில் எச்செயல்களிலும் ஈடுபடமாட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அதே 13ஆம் தேதிதான் எப்படியோ நமக்குப் பொருந்தி வந்து விட்டது. இதில் சாஸ்திர சம்பிரதாயம் ஒன்றுமில்லை.
நம்முடைய பெரியோர்கள் திருமணம் போன்ற நல்ல காரியங்களுக்கு நாள் குறிக்கும் போது, செவ்வாய்க்கிழமை என்று வந்தால் - “செவ்வாயோ, வெறுவாயோ” என்று கூறி, அந்த நாளை ஒதுக்கி விடுவார்கள். பெண்ணின் அழகுகளில் செவ்வாயும் ஒன்று எனக் கவிதை பாடுகிறோம். ஆனால் நல்ல நாள் வரிசையிலே அந்தச் செவ்வாயை வைக்காமல் அதை ஒதுக்கி விடுகிறோமே, அது சரிதானா என்று ஒரு மண விழாவிலே நான் பேசியது நினைவுக்கு வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் இன்னொரு திருமண விழாவிற்கு மாலை நேரத்தில் நாள் பார்த்திருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமை மாலை - 4.30 மணி முதல் 6.00 மணிக்குள் திருமணம் என்று அந்த மணமகன் அழைப்பிதழில் அச்சிட்டிருந்தார். நான் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு சரியாக 6.15 மணிக்குத் தான் அந்தத் திருமண விழாவுக்குச் சென்றேன். அப்போது நான்
ராகு காலத்திற்குள் வரவில்லை என்று கோபித்துக் கொண்டு - தீவிர சுயமரியாதைக் காரரான மணமகன் மணப்பந்தலை விட்டு வெளியே போய் - இன்னொரு வீட்டுத் திண்ணையில் அழுது கொண்டிருந்தார். என்ன காரணம் என்று கேட்ட போது - நான் 4.30 மணி முதல் 6 மணி வரை கொழுத்த ராகுகாலத்தில் நேரம் பார்த்து மண விழா வைத்திருந்தேன், ஆனால் அந்த எண்ணம் எனக்கு ஈடேறாமல் போய் விட்டது, நீங்கள் தாமதமாக வந்ததுதான் அதற்குக் காரணம் என்று கூறினார்.
நான் அவரை சமாதானப்படுத்தி, எல்லாவற்றிலும் தீவிரம் கூடாது, எது எதற்கு கொள்கையில் உறுதி வேண்டுமோ அதில் உறுதியாக இருந்தால் போதுமானது. ஞாயிற்றுக் கிழமை 4.30 முதல் ராகுகாலம் என்று நீ நம்புகிறாயா? நம்புவதால்தானே அந்தக் காலக் கட்டத்திற்குள் திருமணத்தை வைத்திருக்கிறாய்! இதுவும் ஒரு மூட நம்பிக்கைத்தான் என்று அறிவுரை கூறினேன். அதற்குப் பிறகுதான் மணமகன் சமாதானம் அடைந்து மணப்பந்தலுக்கே வந்தார்.
தேதி பொருத்தம் பற்றி சில சேதிகளை எழுதுவதற்கும் இந்த 13ஆம் தேதி இப்போது பயன்பட்டிருக்கிறது அல்லவா? நிற்க.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைக்கும் பணியிலே ஈடுபட்டுள்ளன. கழகத்தின் சார்பிலும் தோழமைக் கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசுவதற்கான குழு ஒன்று கழகப் பொருளாளர் மு.க. ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் வீரபாண்டி ஆறுமுகம், க. பொன்முடி ஆகியோர் நியமிக்கப்பட்டு - அந்தக் குழுவினர் - நம்முடைய பிரதான கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் குழுவான திரு. கே.வி. தங்கபாலு, திரு. ப. சிதம்பரம், திரு. ஜி.கே. வாசன், திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திரு. டி. சுதர்சனம் ஆகியோருடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளைப் பேசியிருக்கின்றார்கள். இறுதியாக எந்தெந்த கட்சிகள் நம்முடைய அணியிலே இடம் பெறவுள்ளன, எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள், எந்தெந்த தொகுதிகள் என்பன பற்றியெல்லாம் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.
பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிந்து வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கி - ஏப்ரல் 24ஆம் தேதி வரையில்
என்று தேர்தல் ஆணையம் தேதி நிர்ணயம் செய்திருக்கின்றது. நமது அணியின் மேல் மட்ட அளவில் இத்தகைய பணிகள் நடைபெறத் தொடங்கிய போதிலும், கழக உடன்பிறப்புகளாகிய உங்கள் பணிதான் மகத்தான பணி என்பதை நான் நன்றாகவே அறிவேன்.
கழகத்தின் சார்பில் சுமார் 1500 பேர் - 40 தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பம் செய்துள்ளார்கள். 40 இடங்களில் தி.மு.கழகம் எத்தனை இடங்களிலே போட்டியிடப் போகிறது - அது எந்தெந்த இடங்கள் என்பதெல்லாம் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படவுள்ளன. தோழமைக் கட்சிகளோடு பகிர்ந்து கொள்ளும் இடங்களுக்கு விண்ணப்பம் செய்துள்ள உடன்பிறப்புகள் செலுத்தியுள்ள கேட்புத் தொகை திரும்ப வழங்கப்பட்டு விடும். அதன் பிறகு நமக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கவுள்ளது.
அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க இயலாது. கூடுமான வரை புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென்ற எண்ணம் பரவலாக உள்ளது. செய்தியாளர்கள் கூட அதுபற்றி என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அதற்காக அனைவரையுமே புதியவர்களாக நிறுத்தவும் இயலாது.
கடந்த தேர்தலுக்கும் இந்தத் தேர்தலுக்கும் இடையே தொகுதிகள் பிரிப்பதில் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. அதிலே சில குழப்பங்களும் உள்ளன. உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் கடந்த தேர்தலில் புதுக் கோட்டை நாடாளுமன்றத் தொகுதி என்று ஒன்று இருந்தது. இப்போதுள்ள பட்டியலில் புதுக் கோட்டை நாடாளுமன்றத் தொகுதியே இல்லாமல் போய் விட்டது.
புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியிலே இடம் பெற்றிருந்த புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியே திருச்சி நாடாளுமன்றத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது. பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டமன்றத் தொகுதிகள் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு மாற்றப்பட்டுவிட்டன. ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கு மாற்றப்பட்டு விட்டது. அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு மாற்றப்பட்டு விட்டது. கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியே இல்லாமல் போய்விட்டது.
வட சென்னையிலேயிருந்த வில்லிவாக்கமும், துறைமுகமும் மத்திய சென்னைக்கும் - தென் சென்னையிலே யிருந்த திருவல்லிக்கேணி மத்திய சென்னைக்கும் - தென் சென்னையிலே இருந்த ஆலந்தூர், தாம்பரம் ஆகிய தொகுதிகள் தற்போது திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கும் மாறிவிட்டன.
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்த அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிகள் தற்போது சிதம்பரம் நாடாளுமன்றத்திற்குப் போய்விட்டன. பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்த வரகூர் மற்றும் ஆண்டி மடம் சட்டமன்றத் தொகுதிகள் இரண்டும் பெயர் மாறி அதுவும் அந்தத் தொகுதியோடு இல்லாமல் போய் விட்டன.
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியிலே இருந்த லால்குடி, முசிறி, மண்ணச்ச நல்லூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும் - கரூர் நாடாளுமன்றத் தொகுதியிலே இருந்த குளித்தலையும் சேர்க்கப்பட்டு - பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி என்று பெயர் பெற்றுள்ளது.
இந்த மாறுதல்களை யெல்லாம் புரிந்து கொண்டு தேர்தல் பணியாற்றும் முன்னோடிகளுக்கு, இவற்றை தெளிவுபடுத்தி தேர்தலுக்கான ஆக்கப் பணிகளை ஆற்றுவதற்கு உன் போன்றோர் பயிற்சி முகாம்களை அமைத்து - அவற்றின் மூலம் நமது அணியின் செயல் வீரர்கள் ஒவ்வொருவரையும் உழைப்பை வழங்கியும் - உறுதியும் நம்பிக்கையும் கொண்ட செயல் புரிந்தும் - ஓங்கு புகழ் வெற்றியினை தமிழகத்தில் எல்லா தொகுதிகளிலும் பெற்று - இந்தியத் திருநாட்டில் மதச் சார்பற்றதும், மனிதநேயமிக்கதும், ஒருமைப்பாடு, இறையாண்மை இவற்றைக் கட்டிக் காக்க வல்லதுமான திட்டங்கள் பல தீட்டி - தமிழகம் உள்ளிட்ட தாய்த்திருநாடாம் இந்தியத் திருநாட்டில் - கடந்த ஐந்தாண்டு காலம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியின் மாட்சி மீண்டும் தொடரவும் - மூட நம்பிக்கைகளை வலியுறுத்தி - முத்தான திட்டங்களை முழுமை பெறவிடாமல் தடுக்கின்ற குருத்தாகும் சூழ்ச்சி தவிடு பொடியாகவும் - புறப்படுவோம் - பொதுத் தேர்தல் எனும் ஜனநாயக அறப்போர் முனைக்கு என அழைக்கின்றேன் - உன்னையும், உன் போன்ற நமது கூட்டணியின் உடன் பிறப்புகளாம் செயல் வீரர்களையும்!
வாக்காளர்கள் சேர்ப்பு பணிகள் எல்லாம் முறையாக நடைபெற்று - அதிலே உன் போன்றோர் பணிகள் சிறப்பாக நடைபெற்றிருந்த போதிலும் - கடைசி நேரத்தில் விடப்பட்ட வாக்குகளை சரிபார்க்கும் வேலைகளில் நீ அக்கறை செலுத்திடுவாய் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இருந்தாலும் ஞாபகப்படுத்த வேண்டிய கடமை உணர்வு எனக்குள்ளது அல்லவா? அதற்காகத்தான் இந்தக் கடிதம்.
இந்தத் தொகுதியில் நமது வேட்பாளர்தான் நிற்பார் என்று எதிர்பார்த்திருந்திருக்கலாம், அந்தத் தொகுதி தவிர்க்க முடியாத காரணத்தால் பேச்சுவார்த்தையின் போது தோழமைக் கட்சிக்குச் சென்றிருக்கலாம். எந்த தொகுதியாக இருந்தாலும், அங்கே நமது கூட்டணியின் சார்பில் யார் நின்றாலும் அது நம்முடைய தொகுதி, நம்முடைய வேட்பாளர் என்ற எண்ணத்தோடு நீ பாடுபடுவாய் என்பதும் எனக்குத் தெரியும்.
அதைப்போலவே நமது கட்சிக்குள்ளேயே இவர்தான் வேட்பாளராக வர வேண்டுமென்று சிலருக்கு எண்ணம் இருந்திருக்கலாம். அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல், வேறொருவருக்கு தலைமைக் கழகம் அந்த இடத்தை அளித்திருக்கலாம். நாம் நினைத்தவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லையே என்று நினைக்கும் பழக்கம் எப்போதும் உனக்குக் கிடையாது. வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் வரை விருப்பங்கள் வேறு வேறாக இருந்திருக்கலாம். ஆனால் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட பிறகு, அவரது வெற்றிக்காக உழைத்திடுவதுதான் உன்னுடைய கடமை. அதனை நிறைவேற்றுவது என்னுடைய கடமை.
உடன்பிறப்பே, வாக்கு கேட்டு நீ மக்களிடம் செல்லும்போது - கடந்த ஐந்தாண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும் - கடந்த மூன்றாண்டு காலத்தில் தமிழகத்தில் கழக ஆட்சியிலும் என்னென்ன சாதனைகளைச் செய்தோம் என்பதை பலமுறை நான் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறேன். மத்திய, மாநில அரசுகள் மக்களுக்காக நிறைவேற்றியுள்ள சாதனைகளைச் சொல்லி தைரியத்தோடு நாம் வாக்கு கேட்கலாம்.
கடந்த 2004ஆம் ஆண்டு தேர்தலில் நம்முடைய அணியிலே இருந்த ம.தி.மு.கவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் இப்போது
ஜெயலலிதாவின் அணியிலே இடம் பெற்றுள்ளன. அந்த இரண்டு கட்சிகளைப்பற்றி 2004ஆம் ஆண்டு தேர்தலின் போது, வாஜ்பாய் முன்னிலையில் ஜெயலலிதா கூறும்போது - தண்டமாக தமிழகத்தில் ம.தி.மு.க. என்ற பெயரில் கட்சியை நடத்திக் கொண்டிருக்கும் வாய்ச் சவடால் வைகோ என்றும்; - தடம் புரண்டு பேசும் தத்துவ பச்சோந்திகளாகிய கம்யூனிஸ்டுகள் என்றும் விமர்சித்தார். அவர் விமர்சித்ததை அந்தக் கட்சித் தலைவர்கள் மறந்து விட்டாலும் நாம் மறக்கவில்லை.
1999ஆம் ஆண்டு மத்தியில் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது - அந்த ஆட்சிக்கு ஜெயலலிதா எந்த அளவிற்கு சிரமங்களைக் கொடுத்தார் என்பதையும் - ஆட்சி அமைப்பதற்கான பரிந்துரை கடிதத்தைக்கூட எவ்வளவு தாமதப்படுத்தினார் என்பதையும் நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள். அது போலவே வாஜ்பாய் அரசு, தமிழக தி.மு.க. அரசைக் கலைக்க முன் வரவில்லை என்ற காரணத்தினால், மத்திய அரசுக்கு ஜெயலலிதா கொடுத்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டு ஆட்சியையே கலைத்த வரலாற்றையும் தமிழகம் நன்கறியும். கடந்த ஐந்தாண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு தி.மு.கழகம் தோழமைக் கட்சியாக இருந்து துணை புரிந்து வருவதையும் தமிழகம் நன்கறியும்.
ஜெயலலிதா இன்றைய பேட்டியில் மூன்றாவது அணி பற்றி என்னிடம் செய்தியாளர் கேட்டதற்கு, அதை மூன்றாவது கண் என்று நான் கூறியதற்குப் பதில் கூறியிருக்கிறார். மூன்றாவது கண் என்பது பொதுவாக மனிதர்களுக்கு இல்லாத ஒன்றாகும். என்றாலும்கூட மூன்றாவது அணி பற்றி நான் சொன்னதும் சிவபெருமான் நெற்றியிலே உள்ள மூன்றாவது கண் பற்றி ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்தால் தவறு செய்பவர்கள் சாம்பலாக்கப்படுவார்கள் என்கிறார் ஜெயலலிதா. உண்மையிலேயே பெரியார், அண்ணா வழி வந்த பகுத்தறிவு வாதிகள்; “முக்கண்ணனை” நம்புவதில்லை - ஆனால் ஜெயலலிதா; முக்கண்ணனை நம்பி; தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறார்! பாவம் பகுத்தறிவு!
உடன்பிறப்பே, இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், வாக்காளர் பெருமக்களைச் சந்தித்து உண்மை நிலவரங்களை எடுத்துக் கூறி - மத்திய மாநில அரசுகளின் சார்பில் என்னென்ன
சாதனைகள் என்பதை யெல்லாம் எடுத்துச் விளக்கிட வேண்டும். குறிப்பாக சேது சமுத்திரத் திட்டத்தினை வரவிடாமல் செய்தவர்கள் யார், அவர்கள் மட்டும் தடுத்திராவிட்டால் 100 ஆண்டு களுக்கு மேலாக நாம் கனவு கண்டதும், அறிஞர் அண்ணாவும், பெருந்தலைவர் காமராசரும் வலியுறுத்தியதுமான அத்திட்டம் நிறைவேறியிருக்குமே, அதற்கு இடைஞ்சல் செய்தவர்கள் யார் என்பதையெல்லாம் மக்களுக்கு விளக்கிட வேண்டும். இப்படிப் பல - பல - பயனுள்ள திட்டங்களை - பாமரரும் அறியும் வண்ணம் எடுத்துரைக்க வேண்டும் - தொகுத்துரைக்க வேண்டும்! நானும் தொடர்ந்து எழுதுவேன்!
அன்புள்ள, மு.க. 18-3-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 161–168. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.