அடக்கம்

முரசொலி · தொகுதி 42 · கடிதம் 3383

முரசொலி கடிதங்கள் · 3383

நலிவும் நானும் - நாட்குறிப்பு (5)

நாள் 14.3.2009சுமார் 8 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3383. நலிவும் நானும் - நாட்குறிப்பு (5)

(ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் அறுவை சிகிச்சை, அதைத் தொடர்ந்து தொடர் சிகிச்சைகள் இவற்றினூடே பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்கிறேன், இந்த தொடர் கட்டுரை மூலம்)

★★

உடன்பிறப்பே,

18-2-2009

அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து பல்வேறு ஏடுகளில் ஏராளமான பாராட்டுகள் வந்திருந்தன. எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை - ஏதாவது குறை சொல்ல வேண்டுமே என்பதற்காக ஒன்றிரண்டை மிகவும் சிரமப்பட்டுத் தேடி அறிக்கையாக கொடுத்திருந்தார்கள். ஒரு சில பேர் குறை கூற முடியாமல், விரைவில் தேர்தல் வருகிறதல்லவா, அதற்காக தயாரிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை என்று கூறி - மறைமுகமாக அது நல்லதோர் நிதி நிலை அறிக்கை தான் என்பதை ஒப்புக்கொண்டார்கள். பிரதான எதிர்க்கட்சியின் சார்பில் நிதி நிலை அறிக்கை குறித்து ஜெயலலிதா நீண்டதோர் அறிக்கை விடுத்திருந்தார். அவரும் தேர்தலை மனதிலே கொண்டு தயாரிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை என்று கூறியிருந்தார். “திருமணத்திற்காக எடுத்த பட்டுப் புடவை தான்” என்ற தலைப்பில், நிதி நிலை அறிக்கை குறித்து எதிர்க்கட்சியினர் தெரிவித்திருந்த குறைபாடுகளுக்கெல்லாம் விளக்கங்களை உடன்பிறப்பு மடலாக எழுதினேன்.

டெல்லிக்கு தம்பி துரைமுருகன் தலைமையில் சென்ற இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை துணைக் குழுவினர் சோனியா காந்தி அவர்களைச் சந்தித்து இலங்கைத் தமிழர்களுக்கான மனுவினைக் கொடுத்து விட்டு, அங்கிருந்து

தொலைபேசி மூலமாக எனக்கு தகவல் கூறினர். அந்தக் குழுவில் தமிழர் தலைவர் கி. வீரமணி, மத்திய அமைச்சர் ஆ. இராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கம்பம் செல்வேந்திரன், ஓய்வு பெற்ற நீதியரசர்களான மோகன், பி.ஆர். கோகுலகிருஷ்ணன், ஜனார்த்தனம், ஏ.கே. ராஜன், பாஸ்கரன், சாமிதுரை, சண்முகம் மற்றும் பேராசிரியர் தனபாலன் ஆகியோர் சோனியா காந்தியைச் சந்திக்கச் சென்றனர்.

இன்று மக்களவையில் கேள்வி நேரம் முடிந்ததும், மத்திய வெளி உறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் ஒரு அறிக்கை தாக்கல் செய்திருப்பதாகவும், அப்போது இலங்கையில் சண்டை நடைபெறும் முல்லைத்தீவு பகுதியில் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ள தாகவும் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல அந்நாட்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதாகவும், அதற்கான உதவிகளை செய்ய இந்தியா தயாராக இருப்பதாக கூறியதாகவும் எனக்கு தகவல் கூறினார்கள்.

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, நீதி மன்றத்தில் தாக்கப்பட்டது குறித்து - காவல்துறை தலைமை இயக்குநர் திரு. கே.பி. ஜெயின் அவர்களையே உயர்நீதி மன்றத்திற்குச் சென்று தலைமை நீதிபதி பொறுப்பிலே இருந்த எஸ்.ஜே. முகோபாத்யாயா அவர்களைச் சந்தித்து நீதிமன்றத்தில் நடைபெற்ற சம்பவத்திற்காக வருத்தம் தெரிவிக்கக் கூறினேன். அந்தச் சம்பவம் குறித்து நான் காவல்துறை அதிகாரிகளை அழைத்துக் கேட்டபோது, அந்தச் சம்பவம் தொடர்பாக சட்டக் கல்லூரி போலீசார் 20 வழக்கறிஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும், வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மீது கைது நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டிருப்பதாகவும், இரவு 10.30 மணி அளவில் வழக்கறிஞர் கினிலியோ இம்மானுவேல் என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்கள். புலனாய்வுத் துறை ஐ.ஜி. அவர்களை அழைத்து, சுப்பிரமணியன் சுவாமி அவர்களோடு தொடர்பு கொண்டு, உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற சம்பவத்திற்காக நான் வருத்தம் தெரிவித்ததாகவும்,

உரிய நடவடிக்கை காவல் துறையினரால் எடுக்கப்படும் என்றும் கூறச் செய்தேன். மதுரையில் இருந்த சுப்பிரமணியன் சுவாமியோடு புலனாய்வுத் துறை சார்பில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் தெரிவித்த செய்தியைத் தெரிவித்தபோது, அவர் அதற்காக நன்றி கூறியதாகவும் நான் அறிந்தேன்.

கடந்த சில நாட்களாக உறக்கம் சரியாக இல்லாததாலும், வலது காலில் எரிச்சல் போன்ற ஒரு உணர்வு இருந்ததாலும், நரம்பியல் நிபுணர் டாக்டர் ஏ.வி. சீனிவாசன் வரவழைக்கப்பட்டு அவரது ஆலோசனையின் பேரில் பழைய மருந்துகள் சிலவற்றை மாற்றி விட்டு புதிய மருந்துகள் கொடுத்தார்கள். டாக்டர் மார்த்தாண்டம் குழுவினர் அறுவை சிகிச்சை புண்ணைப் பரிசோதித்துப் பார்த்து விட்டு நன்றாக ஆறி வருவதாகக் கூறினார்.

19-2-2009

இன்று காலையிலிருந்து உடல் நிலை நன்றாக இருந்தது. டெல்லியிலிருந்து வரவழைக்கப்பட்ட முதுகுத்தண்டு கவசம் ஒன்றை எனது உடம்பில் பொருத்தி சரி பார்த்தார்கள். அதைப் பொருத்திப் பார்ப்பதற்காக நான் இன்று முதன் முதலாக உட்கார வைக்கப்பட்டேன்.

பிற்பகலில் மருத்துவமனைக்கு வந்த செய்திகள் சரியாக இல்லை. ஆம், அன்று தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறையினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல். தொலைபேசி வாயிலாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருந்தன.

சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கான வழக்கில் சம்பந்தப்பட்ட 20 வழக்கறிஞர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தவிர - மீதமுள்ள வழக்கறிஞர்கள் காவல் துறையினரிடம் சரண் அடைவதாகக் கூறி, காவல் நிலையத்திற்கு வந்த பிறகு கைதுக்கு ஆளாக வேண்டிய வழக்கறிஞர்கள் போலீசாரிடம் நாங்கள் கைதாக தயாராக இருக்கிறோம், ஆனால் அதே நேரத்தில் வழக்கறிஞர்களைப் பற்றி தரமற்றதாக பேசிய சுப்பிரமணியன் சுவாமி மீதும், அவருடன் வந்த ராதாராஜன் மீதும் நாங்கள்

கொடுக்கின்ற புகார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். காவல் துறையினர் அதற்கு ஒப்புக் கொள்ளவே, வழக்கறிஞர் ரஜினி காந்த் என்பவர் அதற்கான புகார் மனுவினைக் கொடுத்துள்ளார். போலீசார் அதனைப் பெற்று வழக்கையும் பதிவு செய்துள்ளார்கள். அது தொடர்பான நகல் வேண்டும் என்று வழக்கறிஞர்கள் அடுத்த கோரிக்கை வைக்க, அதுவும் ஏற்கப்பட்டு கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து காவல் துறையினர், உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டோம். தற்போது கைதாக வேண்டியவர்கள் ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டபோது, சுப்பிரமணியன் சுவாமியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நாங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்தால் தான் எங்களை கைது செய்ய அனுமதிப்போம் என்று ஒரு புதிய கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதையொட்டித்தான் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதத்தில் தொடங்கி மோதலில் முடிவடைந்தது. இதிலே எந்தத் தரப்பு மீது தவறு என்றெல்லாம் வழக்குகள் நடைபெற்று கொண்டிருப்பதால் நான் எதையும் சொல்ல விரும்பவில்லை.

இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தச் சென்ற ஒரு நீதிபதி காயமடைந்ததாக செய்தி வந்ததும், காவல் துறையோடு தொடர்பு கொண்டு அனைத்து நீதிபதிகளையும் பத்திரமாக வீட்டிற்கு கொண்டு சேர்க்க ஏற்பாடுகளைச் செய்யும்படி கூறினேன். மோதல் காரணமாக நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்த காவல் நிலையம் கொளுத்தப்பட்டதாகவும், வாகனங்களுக்கு தீ வைப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வந்தன.

நிலைமை மோசமாவதை அறிந்த நேரடியாக நானே உயர்நீதி மன்றத்திற்குப் புறப்பட்டு செல்லலாமா என்று யோசித்தேன். மருத்துவர்கள் கண்டிப்பாக அந்த நிலையில் செல்லக் கூடாது என்றார்கள். உடனே தலைமைச் செயலாளர், மற்றும் உள்துறை செயலாளருடன் தொடர்புகொண்டு, அவர்களை உடனடியாக நீதிமன்றத்திற்குச் சென்று தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்த நீதிபதியைச் சந்தித்து நிலைமைகளை பற்றி பேசும்படி கூறினேன். அவர்களும் அவ்வாறே புறப்பட்டுச் சென்றார்கள். அது போலவே

காவல் துறையைச் சேர்ந்த டி.ஜி.பி., கமிஷனர் ஆகியோரையும் நீதி மன்றத்திற்குச் செல்லும்படி கூறினேன். காவல் துறை கமிஷனர் அங்கே தான் இருப்பதாக தகவல் கிடைத்தது.

தலைமை நீதிபதியுடன் தொலைபேசியில் பேசுவதற்கான முயற்சியில் ஈடுபட்டேன் போன் கிடைக்கவில்லை. எனவே, நானே பொறுப்பில் இருந்த தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில் “எதிர்பாராத சம்பவம் நடைபெற்றுவிட்டது. இந்தச் சம்பவம் பற்றி உங்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறுவதற்கு தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் தமிழக டி.ஜி.பி. ஆகியோரை அனுப்பியுள்ளேன்.

இந்தப் பிரச்சினையில் வக்கீல்கள் மீது தவறு உள்ளதா அல்லது போலீசார் மீது தவறு உள்ளதா என்பதை கண்டறிவதற்கும் இந்தப் பிரச்சினைக்கு அடிப்படை காரணம் என்ன என்பதை உறுதி செய்வதற்கும் உங்களது ஒத்துழைப்பு மிகவும் அவசியம். இந்தப் பிரச்சினையில் நீதி நிலை நாட்டப்படவும், தங்களது மதிப்பு மிக்க கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். நான் மருத்துவமனையில் இருந்தாலும், தாங்கள் என்னைப் பார்க்க விரும்பினால் ஆம்புலன்சில் வந்து உங்களைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்” என்று எழுதி, பேக்ஸ் மூலமாக தலைமை நீதிபதிக்கு அனுப்பச் செய்தேன்.

தலைமைச் செயலாளரும், உள்துறை செயலாளரும் நீதி மன்றத்திலிருந்து மருத்துவ மனைக்கு எனக்கு போன் செய்து, தலைமை நீதிபதி இதுபற்றிய வழக்கினை சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்ப வேண்டுமென்று எண்ணுவதாகவும், அதற்கு ஒப்புதல் தரலாமா என்றும் கேட்டனர். உடனடியாக அதற்கு ஒப்புக் கொள்ளக் கூறினேன். அவர்களும் அதை நீதிபதியிடம் தெரிவித்தவுடன் உயர் நீதி மன்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

இதற்கே இரவு 10 மணியாகிவிட்டது. அதன் பின்னர் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி., மாநகர காவல் துறை கமிஷனர், புலனாய்வுத் துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து நீதிமன்ற நிகழ்ச்சிகளைப் பற்றியும், நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்களையும் என்னிடம் விளக்கினார்கள்.

அடுத்த நாள் சட்டமன்றத்திலே நிலைமைகளை யெல்லாம் விளக்கி அரசின் சார்பில் 110வது விதியின்கீழ் அறிக்கை வைக்க முடிவு செய்து, இரவே மருத்துவமனையிலேயே அறிக்கை தயாரிக்கப்பட்டது. பேரவையில் சட்டத்துறை அமைச்சர் என்ற முறையில் தம்பி துரைமுருகன் அதனைப் படிக்கலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

20-2-2009

இன்றைய ஏடுகளில் எல்லாம் நீதிமன்ற நிகழ்ச்சிகள் அதிக இடத்தை எடுத்துக் கொண்டிருந்தன. உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி அவர்களும் சென்னை உயர்நீதி மன்ற தற்காலிக தலைமை நீதிபதிக்கு போன் செய்து, நடைபெற்ற சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார் என்றும் ஏடுகள் செய்தி வெளியிட்டிருந்தன. எதிர்க் கட்சித் தலைவர்கள் எல்லாம் சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை கொடுத்திருந்தார்கள். குறிப்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் 356வது பிரிவைப் பயன்படுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு நடவடிக்கை எடுத்து ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றும் அறிக்கை விடுத்திருந்தார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர்; சம்பவத்திற்கு என்னைப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தார்.

சட்டப் பேரவையிலும் நீதி மன்றச் சம்பவங்கள் தான் எதிர்க்கட்சியினரால் பெரிதாக எழுப்பப்பட்டது. முதலில் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு, நீதி மன்றப் பிரச்சினையை விவாதிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். கேள்வி நேரத்தினை ஒத்தி வைக்க விதி இடம் கொடுக்காது என்று கூறிய போதும் கேட்கவில்லை. அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். பா.ம.க. தொடர்ந்து குரல் எழுப்பிய காரணத்தால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். கேள்வி நேரம் முடிந்த பிறகு அரசின் சார்பில் 110வது விதியின்கீழ் சட்டத் துறை அமைச்சர் நீதிமன்ற சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கை படித்த போதிலும், அதனை ஏற்காமல் அனைத்து எதிர்க்கட்சிகளும் கூச்சல், குழப்பம் ஏற்படுத்த முயற்சித்ததால் அவர்கள் பேரவைத் தலைவரால் வெளியேற்றப்பட்டனர்.

20ஆம் தேதிய அனைத்து ஏடுகளில் ஒரு பெரிய கொட்டை எழுத்து செய்தி வெளி வந்திருந்தது. அதாவது ஜெயலலிதா ஒரு திருமண விழாவில் பேசிய பேச்சுதான். அனைத்து ஏடுகளுமே அதே தலைப்பைத்தான் வெளியிட்டிருந்தன. “காங்கிரஸ் கட்சிக்கு ஜெயலலிதா அழைப்பு” என்பதுதான் அந்தத் தலைப்பு. ஜெயலலிதா இந்த நாள் வரை காங்கிரஸ் கட்சியுடனோ, அந்த அணியிலோ இல்லை. காங்கிரஸ் கட்சியைப் பிடிக்காமல் தான் இடது சாரி கட்சிகளான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தி.மு.க. அணியிலிருந்து பிரிந்து அ.தி.மு.க. அணிக்குச் செல்வதாகக் கூறி விட்டு, ஜெயலலிதாவின் வீட்டிற்கே சென்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி யிருக்கிறார்கள். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்த நிலையில், ஜெயலலிதா திடீரென்று அவர்களுக்கு துரோகம் செய்வதைப் போல - காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு என்ற பெயரில் - அ.தி.மு.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நீண்ட கால தொடர்பு என்றும், அ.தி.மு.க. தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற போகிறது என்றும், எந்தக் கட்சி அ.தி.மு.க.வோடு சேருகிறதோ அவர்களுக்குத்தான் இலாபம் என்றும் அந்தத் திருமண விழாவில் பேசியிருந்தார். அந்தப் பேச்சுதான் அனைத்து ஏடுகளிலும் வெளி வந்தது. இதைவிடப் பச்சைத் துரோகம் என்ன இருக்க முடியும் என்று சிலர் கருதினார்கள். சைவப் பெருமாட்டி உப்புக் கண்டத்தை பறி கொடுத்ததைப் போல இரண்டு கம்யூனிஸ்ட் காரர்களாலும் என்ன நடக்கிறது என்றே புரிந்து கொள்ள முடியாத நிலை.

20ஆம் தேதிய காலை ஏடுகள் இந்தச் செய்தியை பெரிதாக வெளியிட்ட பிறகு, அன்று நான் எழுதிய கடிதத்தில் என் உடல் நிலை குறித்து பேராசிரியர் வெளியிட்ட அறிக்கை பற்றியும், இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்தும், சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து எழுதி முடித்த பிறகு ஜெயலலிதா காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்து பேசிய பேச்சு ஏடுகளிலே வெளி வந்ததை குறிப்பிட்டு - காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவர் சோனியா காந்தியையும் எப்படியெல்லாம் ஜெயலலிதா இழிவுபடுத்தி பேசினார் என்பதை நினைவுபடுத்தி, காங்கிரஸ்காரர்கள் அதையெல்லாம்

நினைவுபடுத்திப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று எழுதியிருந்தேன். அந்தக் கடிதத்தை முடிக்கவே நீண்ட நேரம் ஆகிவிட்டது.

ஜெயலலிதாவின் அழைப்பைப் படித்துப் பார்த்து விட்டு, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், எனது அருமை நண்பருமான வீரப்ப மொய்லி அவர்கள் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி மிகவும் உறுதியாக இருக்கிறது. ஜெயலலிதா கூறியிருப்பதைப் போன்று காங்கிரஸ் கட்சியில் எந்தத் திட்டமும் தங்களிடம் இல்லை என்று ஏடுகளுக்கு பதிலளித்தார்.

மாலையில் மருத்துவமனையில் படுக்கையில் இருக்கின்ற நிலையிலே - தொலை ஒளி பரப்பு (வீடியோ கான்பரன்ஸ்) மூலமாக - சென்னை பாடி சந்திப்பில் கட்டப்பட்டுள்ள புதிய உயர் மட்ட சுற்று வட்ட மேம்பாலத்தினை திறந்து வைத்தேன். நான் போரூர் மருத்துவமனையில் இருந்து தொலை ஒளிபரப்பு மூலமாக பாலத்தை திறந்து வைக்க - நிதி அமைச்சர் பேராசிரியர், மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, கே.பி.பி. சாமி, செ. குப்புசாமி எம்.பி., மேயர் சுப்பிரமணியம், சட்டமன்ற உறுப்பினர்கள் சிவாஜி, ப.ரங்கநாதன் ஆகியோர் பாடியிலே நடைபெற்ற நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு உரையாற்றினார்கள். தொலை ஒளி பரப்பில் நான் பேசும்போது - நல்ல பரிபாலனம் செய்கின்ற அரசுக்கு தொல்லைகள் தர சிலர் நினைப்பது சரியல்ல, கழக அரசைக் கவிழ்க்க நினைக்கும் சில சதிகாரர்களின் திட்டத்திற்கு பயப்படாமல் நம்முடைய நேர்மையான பயணத்தைத் தொடர்ந்து நடத்துவோம் என்று கூறினேன்.

அறுவை சிகிச்சை முடிந்து ஒன்பது நாட்கள் ஆகிவிட்டது. முதுகு தண்டு கவசம் பொருத்தப்பட்டு, சக்கர நாற்காலியில் அமர்த்தப்பட்டு, அறையின் உள்ளேயே சிறிது நேரமும், பின்பு தங்கியிருந்த அந்த ஏழாவது தளத்தையும் சுற்றி வந்தேன். அங்கே எனக்காக காத்திருக்கும் பார்வையாளர்களில் ஒரு சிலரை நாற்காலியிலே அமர்ந்தவாறே சந்தித்தேன்.

காவல் துறை அதிகாரிகளை அழைத்து உயர் நீதிமன்றத்தின் அன்று என்ன நிலைமை என்று கேட்டேன். பதற்றம் தொடர்ந்து

நீடிப்பதாகவும், நீதிபதியின் உத்தரவின் பேரில் போலீசார் யாரும் அங்கே வரவில்லை என்றும், சேத நிலைமைகளையெல்லாம் நான்கு நீதிபதிகள் ஆய்வு செய்ததாகவும், வழக்கறிஞர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், என்னுடைய உருவப்படத்தையும் சில வழக்கறிஞர்கள் எரித்தார்கள் என்றும், பத்திரிகையாளர்கள் செய்திகளை சரியாக வெளியிடவில்லை என்று கூறி, அந்தப் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டார்கள் என்றும் காவல் துறையினர் என்னிடம் விளக்கினார்கள். என் உருவப்படத்தையே எரிக்கிற அளவுக்கு நான் வழக்கறிஞர்களுக்கு என்ன வஞ்சனை செய்தேன் என்று யோசிப்பதிலேயே அந்த இரவு முழுதும் கழிந்தது; வலி நோயும் வாட்டத் தொடங்கியது - மறு நாள் விடிந்து; காலை ஏடுகளில் ‘வழக்கறிஞர்கள்’ என் உருவப் படத்தைக் கொளுத்தியதாக வந்த செய்தி கண்டதும் “வாழ்க வசவாளர்கள்” என்று அண்ணா சொல்வாரே; அதே பாணியில்; “வாழ்க வழக்கறிஞர்கள்” என்று எனக்கு நானே கூறிக் கொண்டேன்.

நாளையும் இந்த “டைரி” தொடரும்.

அன்புள்ள, மு.க. 14-3-2009

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 141–149. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 42-இல் மேலும் கடிதங்கள்