முரசொலி கடிதங்கள் · 3382
நலிவும் நானும் - நாட்குறிப்பு (4)
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3382. நலிவும் நானும் - நாட்குறிப்பு (4)
(ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் அறுவை சிகிச்சை, அதைத் தொடர்ந்து தொடர் சிகிச்சைகள் இவற்றினூடே பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்கிறேன், இந்த தொடர் கட்டுரை மூலம்.)
★★
உடன்பிறப்பே,
11-2-2009
இன்றுதான் எனக்கு அறுவை சிகிச்சை. காலை 6 மணிக்கெல்லாம் அதற்குத் தயாராக இருக்க வேண்டுமென்று மருத்துவர்கள் முதல் நாளே சொல்லியிருந்தார்கள். காலை 5 மணிக்கெல்லாம் அன்றாடம் என்னிடம் வரக் கூடிய நாளேடுகள் அன்று வரவில்லை. எங்கே ஏடுகளைப் படித்து விட்டு, நான் உணர்ச்சி வயப்பட்டு விடுவேனோ என்பதற்காக ஏடுகளை எனக்குத் தரவில்லை போலும். 6 மணிக்கு என்னிடம் வந்து புறப்படலாமா என்ற போது, முதலில் நாளேடுகள் வரட்டும், ஒரு பார்வை பார்த்து விட்டு புறப்பட்டு விடலாம் என்று கூறி, அவ்வாறே படித்து விட்டுத்தான் அறுவை சிகிச்சை அரங்கிற்குப் புறப்பட்டேன்.
என் அறையிலிருந்து 7வது மாடியில் இருந்த அறுவை சிகிச்சை அரங்கிற்கு செல்லும் வரையில் - காலை 7 மணி அளவில் என் இரு புறமும் கலங்கிய கண்களோடு நெருங்கிய உறவினர்களும் கழக முன்னணியினரும் நின்று கொண்டிருந்தனர். அவர்களை யெல்லாம் பார்த்துக் கொண்டே அறுவை சிகிச்சை அரங்கிற்குள் நுழைந்தேன். முறைப்படி மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. அறுவை சிகிச்சையின் முடிவினை அறிந்து கொள்ள நூற்றுக்கு மேற்பட்ட செய்தியாளர்கள் மருத்துவ மனையிலே குவிந்து விட்டனர். அவர்களைத் தவிர மருத்துவமனை வாயிலிலே
கழகத் தோழர்களும், முன்னணியினரும் அறுவை சிகிச்சையின் முடிவினை அறிந்து கொள்ள ஆயிரக்கணக்கிலே காத்திருப்பதாக எனக்கு தகவல் தரப்பட்டது.
அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, டாக்டர் மார்த்தாண்டம் அவர்களும், டாக்டர் ஜெய்ஸ்வால் அவர்களும் செய்தியாளர்களைச் சந்தித்து என்னுடைய உடல் நிலை பற்றிய அனைத்து விவரங்களையும் அவர்களுக்கு எடுத்து விளக்கினர். அறுவை சிகிச்சைக்குப் பின் என்னை நேராக ஐ.சி.யு. அறைக்கு அழைத்துச் சென்று வைத்ததோடு, அங்கே 48 மணி நேரம் இருக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் தான் 7வது மாடியிலே உள்ள அறைக்குச் செல்ல வேண்டும் என்றும் கூறினார்கள்.
ஐ.சி.யு. அறையில் நான் 48 மணி நேரம் இருக்க வேண்டுமென்று தெரிவித்த போது, மருத்துவ மனையின் உரிமையாளர் தம்பி வெங்கடாசலம் மற்ற நோயாளிகள் எல்லாம் இருக்கக் கூடிய பொதுவான ஐ.சி.யு. அறையில் நான் தங்கக் கூடாது என்றும், நான் மட்டும் தங்கக் கூடிய அளவிற்கு ஒரு ஐ.சி.யு. அறையை ஆறாவது மாடியிலே இரவோடு இரவாக தயாரித்து விட்டார். அது ஒரு பெரிய அறை. அந்த அறையிலே நான் ஒருவன் மட்டுமே தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த ஐ.சி.யு. அறையில் இருந்த எனக்கு நினைவு வந்த போது, நேரம் பகல் 1 மணி. மிகவும் வரட்சியாக இருந்ததால் தண்ணீர் வேண்டுமென்று கேட்டேன். உதடு கூட நனையாத அளவிற்கு எனக்கு உதவியாக இருந்த செவிலியர் ஒருவர் தண்ணீர் கொடுத்தார். நான் அப்போது அவரிடம் உன் பெயர் காவேரியா? என்று கேட்டேன். இல்லையே அய்யா, எதற்காக கேட்கிறீர்கள் என்றார். கர்நாடகா கொடுக்கின்ற காவேரியைப் போலவே நீயும் கொடுக்கிறாயே என்றவுடன் அது ஐ.சி.யு. அறை என்பதை கூட மறந்து விட்டு, என்னைச் சூழ்ந்திருந்த மருத்துவர்கள் சிரித்தனர்.
செய்தியாளர்களை மருத்துவர்கள் சந்தித்து பேட்டியளித்த போது கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும் அதிலே கலந்து கொண்டு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கியவர்களுக்கும் கழகத்தின் சார்பிலும், தமிழக மக்களின் சார்பிலும் நன்றியும் பாராட்டும் கூறினார். பார்வையாளர்கள் தங்கள் வருகையைக் குறைத்து மேலும் சில நாட்களுக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோருடன் தொலைபேசியிலே தொடர்பு கொண்டு அறுவை சிகிச்சை பற்றியும், நான் எவ்வாறு இருக்கிறேன் என்பதையும் கேட்டறிந்ததோடு, விரைவிலே நலம் பெற வேண்டும் என்றும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.
பிற்பகலில் மருத்துவர்கள் என்னை வந்து பார்த்து விட்டு, அறுவை சிகிச்சைக்குப் பிறகு என் நரம்பு மண்டலம் சீராக உள்ளதா என்று சோதித்துப் பார்த்து விட்டு திருப்தியைத் தெரிவித்தனர்.
மாலை 5 மணி வரையில் மாலை நாளேடுகளைக் கொடுக்கவில்லை. பின்னர் நானே டாக்டரை அழைத்து மாலை ஏடுகளைக் கொண்டு வரச் சொல்லி வாங்கிப் படித்தேன்.
12-2-2009
இன்றைக்கும் நான் ஐ.சி.யு. அறையிலே தான் இருந்தேன். அங்கே மிகவும் கட்டுப்பாடு. பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. என் துணைவியர், மகள்கள், மகன்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். நல்ல வேளையாக தொலைக்காட்சி பெட்டி அங்கே வைக்கப்பட்டிருந்தது. நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் ஆற்றிய உரையை கேட்டேன். அவரது உரையில் இலங்கைத் தமிழர் பிரச்சினை இடம் பெற்றதைக் கேட்ட போது மகிழ்ச்சியாக இருந்தது. உடனடியாக உதவியாளரை அழைத்து, நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியக் குடியரசுத் தலைவர், தனது உரையிலே இலங்கையிலே உடனடியாகப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும், பிரச்சினைக்கு அமைதியான முறையில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் குறிப்பிட்டிருப்பது, மருத்துவ மனையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வரும் எனக்கு மிகுந்த ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தருவதாக அமைந்துள்ளது என்று “டிக்டேட்” செய்து ஏடுகளுக்கு அறிவிக்கச் செய்தேன்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு இன்று எனக்கு திட உணவு அளவோடு தரப்பட்டது. எக்கோ-கார்டியோ கிராம் எடுக்கப்பட்டு, அதுவும் சரியாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. மாலை 5
மணியளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முதுகுப்புறம் சுத்தம் செய்யப்பட்டு புதிதாக மருந்துகள் போடப்பட்டன.
13-2-2009
அறுவை சிகிச்சை முடிந்து 48 மணி நேரத்திற்குப் பிறகு (டி.7) வார்டுக்கு நான் மாற்றப்பட்டேன். மருத்துவக் குழு தலைவர் டாக்டர் மார்த்தாண்டம் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் அறுவை சிகிச்சை பற்றியும் - அதன் பின்னர் உடல் நலம் பெற்று வருவது பற்றியும் விளக்கினார். டெல்லி டாக்டர் ஜெய்ஸ்வால் அன்றையதினம் டெல்லி திரும்பியதோடு, மீண்டும் 21ஆம் தேதி சென்னை வருவதாகவும் கூறிச் சென்றார்.
தொடர்ந்து படுத்துக் கொண்டே இருப்பதால் முதுகுப் பக்கம் புண்கள் வந்து விடாமல் இருப்பதற்காக இரண்டு பக்கங்களிலும் மாறி மாறி என்னை படுக்க வைத்துப் பார்த்துக் கொண்டனர். மாறி மாறி நான் படுக்க உதவி செய்த சிப்பந்தியின் பெயரே “மாரி” தான்! அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போது என் உடலில் பொருத்தப்பட்டிருந்த குழாய்கள் எல்லாம் இன்று தான் அகற்றப்பட்டன.
14-2-2009
நிதித் துறை செயலாளரை வரவழைத்து நிதி நிலை அறிக்கை 17ஆம் தேதி தாக்கல் செய்யப்படுவது குறித்துப் பேசினேன்.
அறுவை சிகிச்சை செய்வதற்கான முயற்சியில் மூத்த மருத்துவர்கள் அடிக்கடி வந்து என்னைப் பார்த்துக் கொண்ட போதிலும், நான் மருத்துவமனையிலே இருந்த காலத்திலும் சரி, பின்னர் வீட்டிற்குத் திரும்பிய பின்னரும் டாக்டர் ஜம்பு, டாக்டர் சமீர், மற்றும் டாக்டர் பூவேஷ் கார்த்திக் ஆகியோர் எனக்கு மாறி மாறியும், ஒன்றாகவும் இருந்து ஆற்றிய பணியினைப் பற்றி நான் குறிப்பிட்டாக வேண்டும். நான் புரண்டு படுக்க வேண்டுமென்றால் கூட அவர்கள் ஒவ்வொரு முறையும் என் அருகிலே வந்து, நான் எந்தவிதத்திலும் சிரமப்படக் கூடாது என்ற அக்கறையோடு கவனித்து வருகிறார்கள். அப்போது ஒரு முறை டாக்டர் ஜம்பு என் பக்கத்தில் நின்று கொண்டு, அவர் பக்கம் என்னைத் திரும்பிப் படுக்குமாறு கூறினார். அவரிடம் நான், மற்றவர்களை எல்லாம் என் பக்கம் திரும்பிட நான் முயற்சிகளை மேற்கொள்கிறேன், ஆனால் நீயோ என்னை உன் பக்கம் திரும்பச் சொல்கிறாயே
என்று சிரித்துக் கொண்டே கூறினேன். செவிலியர்கள் என்று எடுத்துக் கொண்டால், குறிப்பாக செந்தாமரை, ஜாக்குலின், புளோரா, சித்ரா, சாந்தி, அமீனா ஆகியோர் 24 மணி நேரமும் மாறி மாறி என்னுடனே இருந்து தங்களுக்கு வேண்டிய நெருங்கிய உறவினரைக் கவனிப்பது போல, எனக்கு வேளை தவறாமல் மாத்திரைகள் கொடுக்கவும், தேவையான உதவிகளை அளிக்கவும் உதவி புரிந்தனர். அதைப் போலவே வார்டு பாய் மாரிமுத்துவும், என்னுடைய தனி உதவியாளர் நித்யாவும் கடந்த ஒரு மாத காலமாக என்னை விட்டு அங்கும் இங்கும் அகலாமல் ஆற்றிய பணிகளை நான் இந்தத் தொடரிலே குறிப்பிட்டே ஆக வேண்டும்.
எனது வலி தாங்காமல் நான் ஏதாவது கோபித்துக் கொண்டால் கூட, இங்கே குறிப்பிட்ட மருத்துவர்களிலிருந்து யாருமே முகம் சுளிக்காமல் பணியாற்றுபவர்கள். குறிப்பாக என் குடும்ப மருத்துவர் கோபால், அவரே இதய நோயாளி என்ற போதிலும் அனைத்து மருத்துவர்களையும் ஒருங்கிணைத்து அவர்களை யெல்லாம் கலந்து கொண்டு என்னைப் பார்த்துக் கொண்டதை நன்றியுடன் குறிப்பிட்டாக வேண்டும்.
15-2-2009
அறுவை சிகிச்சைக்குப் பிறகு இன்று தான் திடீரென்று என் கால்களில் ஒரு எரிச்சலான வலி ஏற்பட்டது. மருத்துவர்களிடம் கூறினேன். வலி நிவாரணத்திற்கான ஊசி உடனே போடப்பட்டது. ஊசி போட்டவுடன் வலி சற்று குறைந்த போதிலும் இரவு 8 மணி அளவில் உடம்பெல்லாம் அதிக வியர்வையும், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. உடலின் வெப்ப நிலையும் குறைந்தது. மூத்த மருத்துவர்கள் எல்லாம் உடனடியாக விரைந்து வந்தனர். என்னவோ தெரியவில்லை, பேராசிரியர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களையும் கழக முன்னோடிகளையும் பார்க்க வேண்டும் போல் எனக்கு எண்ணம் ஏற்பட்டது. உதவியாளரை அழைத்து அவர்களை தொலை பேசியில் தொடர்பு கொண்டு மருத்துவ மனைக்கு வருமாறு கூறினேன். மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த பொன்முடி, வேலு போன்றவர்களும் பதற்றமடைந்தனர். ஸ்டாலினை அழைத்து, என்னமோ என்னை செய்கிறது, எனக்குச் சொல்லத் தெரியவில்லை. நிதி நிலை அறிக்கை பற்றியே எண்ணம் வருகிறது. தமிழக மக்களுக்கு இன்னும் உழைக்க வேண்டுமென்று நினைத்து நடக்காது
போல் இருக்கிறது. நிதி நிலை அறிக்கை ஒவ்வொரு பத்தியும் நான் எண்ணி எண்ணி எழுதியது. அதையே நான் எழுதிய இறுதி சாசனமாக வைத்துக் கொள். என் ரெலலாம் கூறினேன். “அப்பா, அப்பா” என்று கதறிவிட்டான். “இப்படி யெல்லாம் பேசாதீர்கள் அப்பா, ஒன்றும் ஆகாது” என்றான்.
உடனடியாக “ஆக்சிஜன்” செலுத்தப்பட்டது. “ஈ.சி.ஜி.” யும் எடுக்கப்பட்டது. மருத்துவர்கள் அனைவரும் என்னை தீவிரக் கண்காணிப்பில் வைத்துக் கொண்டனர். Forced Air Warmer என அழைக்கப்படும் - உடலை சூடாக வைத்துக் கொள்ள உதவிடும் போர்வையைக் கொண்டு வந்து எனக்கு போர்த்தி விட்டார்கள். என்ன செய்கிறது என்றே எனக்குச் சொல்லத் தெரியாத நிலை. என் மகள் செல்வி தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்தது. அருகிலே அழைத்தேன். கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. மருத்துவ மனையிலே இருந்த நாட்களிலேயே இன்று தான் நான் சற்று உணர்ச்சி வயப்பட்ட நாள் என்று சொல்ல வேண்டும். ஆனால் மருத்துவர்கள் மாற்றி மாற்றி பல முயற்சிகளைச் செய்து என்னை சாதாரண நிலைக்குக் கொண்டுவர முயற்சித்தார்கள். டாக்டர் மார்த்தாண்டம், டாக்டர் தனிகாசலம், டாக்டர் மகேஷ் போன்றவர்கள் யாரும் வீட்டிற்குச் செல்லவே இல்லை. என் அறையிலேயே அன்று இரவு முழுவதும் தூங்காமல் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். என் தலையைப் பிடித்துக் கொண்டே நின்ற தயாளுவிற்கு சில நிமிடங்கள் கூட நிற்க முடியாது, ஆனால் அப்போது இரண்டரை மணி நேரம் தொடர்ந்து நின்று கொண்டே இருந்தது. தொலைபேசியில் செய்தியை கேட்டு ராஜி அழுது கொண்டே உள்ளே நுழைந்தது. எனக்கு ஆறுதல் கூறுவதற்குப் பதிலாக அதற்கு நான் ஆறுதல் கூற வேண்டியதாயிற்று.
4.30 மணிக்குப் பின்னர் நான் உறங்கி விட்டேன். சில மணி நேரங்கள் உறங்கி எழுந்த போது நான் சாதாரண நிலைக்கு திரும்ப வந்ததை உணர்ந்தேன். அப்போதுதான் எல்லோருக்கும் ஒரு நிம்மதி பிறந்தது. எனக்கும் “மறு பிறவி” எடுத்தது போன்ற ஒரு உணர்வு தோன்றியது. மருத்துவர்களும் அதன் பின்னர் தான் பெருமூச்சு விட்டனர். அன்றைக்கே எனக்கு ஏதாவது ஆகியிருந்தால் இன்றைக்கு சில பேருக்கு வசை பாடுவதற்கு ஆள் கிடைக்காமல் போய் இருக்கும்!
16-2-2009
இன்று எனக்கு ரத்த பரிசோதனை மற்றும் இதய எக்ஸ்ரே போன்றவை எடுக்கப்பட்டு, அனைத்தும் சரியாக இருப்பதாக தெரிய வந்தது.
மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பில் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் இன்று நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்து உரையாற்றினார். தொலைக்காட்சியில் முழு உரையையும் கேட்டேன். நிதி நிலை அறிக்கை குறித்து எனது கருத்துகளை வெளியிட்டேன். மத்திய நிதி அமைச்சருக்கு என் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டேன்.
கழகப் பொருளாளரும், இளைஞர் அணிச் செயலாளருமான தம்பி மு.க. ஸ்டாலின் பிப்ரவரி 21ஆம் தேதியன்று சென்னை மற்றும் மாவட்ட தலை நகரங்களில் இளைஞர் அணியின் சார்பில் “இளைஞர் சங்கிலி” ஒன்றினை நடத்த என்னிடமும் பொதுச் செயலாளரிடமும் இன்று அனுமதி கேட்டார். அவ்வாறே நடத்துமாறு அனுமதியும் வழங்கினோம்.
கழகத் துணைப் பொதுச் செயலாளர் தம்பி துரைமுருகன் என்னையும், பொதுச் செயலாளரையும் சந்தித்து, இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை துணைக் குழுவின் சார்பில் டெல்லி சென்று குடியரசு தலைவர் அவர்களையும், சோனியா காந்தி அவர்களையும் சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு உடனடியாக நிரந்தர தீர்வு காண உதவிட வேண்டுமென்று 17ஆம் தேதியன்று கோரிக்கை வைக்க அனுமதி கேட்டனர். அதற்கும் அனுமதி வழங்கினோம்.
அது போலவே அரசு தலைமைக் கொறடா தம்பி அர. சக்கரபாணி எங்களைச் சந்தித்து, 17ஆம் தேதி மாலையில் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டுவதற்கான அனுமதியைக் கோரினார். அதற்கும் அனுமதி வழங்கினோம்.
17-2-2009
அறுவை சிகிச்சை முடிந்து இன்றோடு ஆறு நாள். இருமல் காரணமாக என்னால் தொடர்ந்து தூங்க முடியவில்லை. நுரையீரல் பயிற்சி அளிக்கப்பட்டது. கால் வலி மீண்டும் இன்று தலை காட்டியது. உடனடியாக வலி நிவாரணத்திற்கான ஊசி
போட்டு வலியைக் குறைத்தனர். கால் பகுதியில் “ஸ்கேன்” எடுக்கப்பட்டு, ரத்த ஓட்டம் சீராக இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து விட்டனர்.
இன்று தான் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை. ஒவ்வொரு ஆண்டும் நிதி நிலை அறிக்கை ஆனாலும், ஆளுநர் உரை ஆனாலும் தி.மு. கழக ஆட்சி நடைபெற்ற போதெல்லாம் இவைகளுக்காக சுமார் பதினைந்து நாட்களாவது அந்தந்த துறையின் அதிகாரிகளோடு அமர்ந்து நீண்ட நேரம் விவாதித்து ஒவ்வொரு திட்டத்தையும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்காக பாடுபடுவது என் பழக்கம்.
அதிகாரிகள் தயாரித்து அனுப்பும் அறிக்கைகளில் வெறும் கையெழுத்தை மட்டுமே போட்டு, ஒப்புதல் அளித்துப் பழக்கப்பட்டவன் நானல்ல என்பதை அந்தந்த துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளே அறிவார்கள். திரும்பத் திரும்ப அவைகளைப் படிக்கச் செய்து, அவற்றிலே எப்படியெல்லாம் மாற்றம் செய்யலாம் என்று யோசித்து - செய்வதைத் திருந்தச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு - இன்னும் சொல்ல வேண்டுமேயானால் - நாளைய தினம் நிதி நிலை அறிக்கை வருகிறது என்றால், அதற்கு முதல் நாள் நள்ளிரவில் கூட தலைமைச் செயலகம் சென்று, “ப்ரூப்” சரிபார்த்து விட்டு வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மருத்துவ மனையிலே நான் இருந்த காரணத்தால், நிதி நிலை அறிக்கைக்கு முதல் நாள் தலைமைச் செயலகம் செல்லவில்லை.
ஆனால் நேரில் செல்லவில்லையே தவிர, பல முறை நிதித் துறை செயலாளரோடு தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு அப்படி மாற்றுங்கள், இப்படி மாற்றுங்கள் என்று சொல்லிக் கொண்டு தான் இருந்தேன். ஆனால் அந்தத் துறையின் அதிகாரிகளும் அலுப்பு படாமல், என் விருப்பத்திற்கேற்ப ஒத்துழைப்பு கொடுத்ததைப் பாராட்டத்தான் வேண்டும்.
காலை 7 மணிக்கெல்லாம் நிதியமைச்சர், அவை முன்னவர் பேராசிரியர் அவர்களும், அமைச்சர்கள் மு.க. ஸ்டாலின், ஆர்க்காடு வீராசாமி ஆகியோரும் நிதித் துறை செயலாளரும் மருத்துவ மனைக்கே வந்து என் கையினால் நிதி நிலை அறிக்கையைப் பெற்றுச் சென்றார்கள். பேராசிரியர் அவர்கள் எனக்கு அணிவித்த
பொன்னாடையை திரும்ப நான் அவருக்கே அணிவித்து, நிதி நிலை அறிக்கையையும் அவரது கையில் கொடுத்து அனுப்பினேன்.
நிதி நிலை அறிக்கை தயாரிக்க மருத்துவ மனையில் இருந்த நிலையில எடுத்துக் கொண்ட சிரமத்திற்கான பயனை இன்று கண்டேன். நிதி நிலை அறிக்கை அவையிலே படிக்கப்பட்டதை தொலைக்காட்சியிலே நேரடியாக ஒலி-ஒளிபரப்பினார்கள். எனவே நிதி நிலை அறிக்கை அவையிலே படிக்கப்பட்ட போதும், அதனை அவையின் உறுப்பினர்கள் எந்த அளவிற்கு மன மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள் என்பதையும் நான் காண நேரிட்டது.
நிதி நிலை அறிக்கையை அவையில் அழகாகவும், ஆணித் தரமாகவும், அவருக்கே உரிய கம்பீரத்தோடும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் படித்த நிதியமைச்சர் பேராசிரியர் அவர்கள் தொடக்கத்திலேயே முதுகு வலியினால் பாதிக்கப்பட்டு, மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை பெற்று வந்த நிலையிலும், நிதி நிலை அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் நான் சிரமங்களை ஏற்றுக் கொண்டமைக்காக தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, விரைவில் நான் நலம் பெற்று பணிக்குத் திரும்ப வேண்டுமென்ற விழைவினையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு விவசாயிகளுக்குத் தள்ளுபடும் கூட்டுறவு கடன்களுக்கு இனிமேல் வட்டியே கிடையாது என்ற அறிவிப்பு - யாருமே எதிர்பார்க்காதது - பொதுவாக இது போன்ற பெரிய அறிவிப்புகள் அரசின் சார்பில் வருகிறது என்றால் - அதைப்பற்றி பரவலாக வெளியிலே செய்தி கசிந்திடும். ஆனால் விவசாயிகளின் கடன்களுக்கு வட்டி கிடையாது என்பது அமைச்சர்களுக்கே புதிய செய்தி.
அது போலவே, விவசாயிகளுக்கு 2000 கோடி ரூபாய் புதிய பயிர்க் கடன், பெயருக்கு மட்டுமே நிலவரி என்ற அளவிற்கு குறைப்பு, வெள்ளம் பாதித்த 12 மாவட்டங்களில் அதுவும் ரத்து, ஒரு கோடிக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞரின் காப்பீட்டுத் திட்டம், 14,600 கோடி ரூபாயில் மெட்ரோ ரெயில் திட்டம், ஏழையெளிய மக்களுக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் காங்கிரீட் வீடுகள், ஒரு லட்சம் புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள், அடுக்கடுக்கான வரிச் சலுகைகள் என்பன
போன்ற எண்ணிலடங்கா சாதனைகள், சாதனைகள் கொண்ட நிதி நிலை அறிக்கை.
நிதி நிலை அறிக்கை படிக்கப்பட்டதும், மூத்த அமைச்சர்கள் எல்லாம் மருத்துவ மனைக்கு வந்து பாராட்டினையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்கள். என்னுடைய வாழ்க்கையில் நான் எப்போதும் தொடர்ந்து மகிழ்ச்சியாக இருப்பதில்லை. மகிழ்ச்சியாக சில மணி நேரங்களை கழித்தேன் என்றால் உடனே ஏதோவொரு பிரச்சினை வராமல் இருக்காது. அதைப் போலத் தான் நிதி நிலை அறிக்கை குறித்து மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கும்போதே, சென்னை உயர் நீதி மன்றத்திற்கு, சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்சினையில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மேல் முறையீட்டு வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்வதற்காக சென்றார் என்றும் - அவர் அதற்கு சில நாட்களுக்கு முன்பு இலங்கைத் தமிழர் பாதுகாப்புக்காக வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டம் குறித்து கண்டித்துப் பேசியதற்காக - சில வழக்கறிஞர்கள் சுப்பிரமணியம் சுவாமி அமர்ந்திருந்த நீதி மன்றத்திற்குள் சென்று, அழுகிய முட்டையால் அவரைத் தாக்கினார்கள் என்றும் மருத்துவ மனைக்கு எனக்கு செய்தி வந்தது. அதற்குப் பிறகு அன்று முழுவதும் நான் தூங்கவில்லை.
இந்த நாட்குறிப்பை தொடர்ந்து நாளையும் எழுதுகிறேன்.
அன்புள்ள, மு.க. 13-3-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 131–140. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.