முரசொலி கடிதங்கள் · 3375
அமைக்கிறது மீண்டும் வெற்றிக் கூட்டணி!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3375. அமைக்கிறது மீண்டும் வெற்றிக் கூட்டணி!
உடன்பிறப்பே,
2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளு மன்றப் பொதுத் தேர்தலின் போது - இந்தியாவிலே வேறு எந்த மாநிலத்திலும் யாரும் சொல்லாததற்கு முன்பு - தமிழ்நாட்டிற்கு திருமதி சோனியா காந்தி அவர்களை அழைத்து - “இந்திராவின் மருமகளே வருக! இந்தியாவின் திருமகளே வெல்க!!” என்று வரவேற்பு கூறி வாழ்த்தி - அந்தத் தேர்தல் முடிவுகளும் அவ்வாறே அமைந்து - பிரதமராக அவர் தான் வர வேண்டுமென்றும் வருவார் என்றும் எதிர்பார்த்திருந்த போது அதற்கு மாறாக சோனியா காந்தி அவர்கள் தியாகத் திருவிளக்காக உயர்ந்து, தான் பிரதமர் பதவிக்கு வர விரும்ப வில்லை என்றும், டாக்டர் மன்மோகன் சிங் பிரதமர் பொறுப்பையேற்பார் என்றும் கூறி - கடந்த ஐந்தாண்டு காலமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வழி காட்டும் தலைவியாக செயல்பட்டு - சாதனைச் செல்வியாக திகழ்ந்து, சாதனைக்கு மேல் சாதனை என்று சாதித்து வருகிறார்.
அத்தகைய ஆட்சிக்கும், தலைவிக்கும் தக்கதோர் துணையாக - தோழமைக் கட்சி என்றால் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கான இலக்கணமாக - ஒருவருக் கொருவர் எப்படி விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள வேண்டுமென்பதற்கு சான்றாக தி.மு.க., காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. மத்தியிலே உள்ள அரசுக்கு தி.மு.க. எந்த அளவிற்கு தோழமையாகச் செயல்பட்டு வருகிறதோ, அது போலவே மாநிலத்தில் நடைபெறும் தி.மு. கழக அரசுக்கு, காங்கிரஸ் கட்சியும் ஒத்துழைப்பு நல்கி வருகிறது. இந்த ஒற்றுமையும், செயல்படும் தன்மையும் ஒரு சிலருக்கு தொடக்கம் முதலே பிடிக்கவில்லை. குறிப்பாக ஒரு சில பத்திரிகைகளுக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் இந்தக் கூட்டணி செழித்தோங்கி வளர்ந்து வருகிறது.
இந்தக் கூட்டணியைக் குலைக்கவும் - காங்கிரஸ் கட்சியை தங்கள் அணிக்கு இழுக்கவும் மறைமுகமாக முயற்சித்துப் பார்த்து, நடக்காத நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரடியாகவே வரவேண்டும் எங்கள் அணிக்கு - நான் இது வரை உத்தரவாதம் அளித்திருந்த இடது சாரி கட்சிகளை யெல்லாம் வஞ்சித்து விட்டு வரவேற்கத் தயார் - வாருங்கள், வாருங்கள் என்று அழைத்துப் பார்த்தார்கள். 1998-99ஆம் ஆண்டுகளில் அ.தி.மு.க. கூட்டணியோடு மத்தியிலே ஆட்சி நடத்திய வாஜ்பாய் பட்ட பாட்டினையெல்லாம் நன்குணர்ந்தவர்கள் யாராவது அங்கே திரும்பிப் பார்ப்பார்களா? அருமை நண்பர் வீரப்ப மொய்லி அவர்கள், அடுத்த நாளே கொடுத்த பேட்டியில், காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது என்று பதிலளித்து விட்டார்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் இந்தக் கூட்டணியில் எந்தவிதமான தொய்வும் ஏற்படவில்லை. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பிரச்சினையிலே கூட இரு தரப்பினருக்கும் இடையே அதன் காரணமாக ஏதாவது ஏற்பட்டதா? அதிலே குளிர் காய முடியாதா என்று நினைத்தார்கள். அந்தப் பிரச்சினையிலும், மத்திய வெளி உறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு பிரணாப் முகர்ஜி அவர்கள் திட்டவட்டமாக இலங்கையிலே போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்று வெளியிட்ட சில அறிவிப்புகளுக்குப் பிறகு இலங்கைத் தமிழர் பிரச்சினையைச் சொல்லியும் கூட்டணிக்குள் குழப்பம் விளைத்திட முடியாமல் தோற்றார்கள். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பிரச்சினையிலும் இரண்டு கட்சிகளும் கொண்டுள்ள கருத்துகள் ஒன்றுக்கொன்று முரண்பாடானதல்ல, இருவருக்குள் குறிக்கோள் ஒன்றுதான், அதனை வெளிப்படுத்துகின்ற முறைகளிலே வேண்டுமானால் வேறுபாடுகள் இருக்கலாம், இலங்கையிலே உள்ள தமிழர்கள் காப்பாற்றப் பட்டே ஆக வேண்டுமென்ற குறிக்கோளில் ஒரு குன்றிமணி அளவுக்குக்கூட என்றைக்கும் காங்கிரசுக்கும், தி.மு.க.விற்கும் இடையே வேறுபாடோ, மாறுபாடோ இருந்ததில்லை.
கடந்த காலத்தில் வேண்டுமானால், திராவிட முன்னேற்றக் கழகம் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து எடுத்த நடவடிக்கைகளை வேண்டுமென்றே திட்டமிட்டு - தமிழகத்திலே உள்ள தி.மு.க.வைப் பற்றி மத்தியில் இருந்த இந்திரா காந்தி அரசுக்கும் மற்ற அரசுகளுக்கும் திரித்துச் சொல்லி - கடுகை
மலையாக்கி - மலையை சுனாமி அலையாக்கி - அதன் காரணமாக தி.மு. கழக ஆட்சியைக் கவிழ்க்க முனைந்தார்கள். இருந்த போதிலும் அதன் பின்னர் உண்மையை உணர்ந்த இந்திரா காந்தி அம்மையார் அவர்கள், சென்னை கடற்கரை கூட்டத்தில் பேசும்போது - “ஆதரித்த போதும், எதிர்த்த போதும் இரண்டு நிலையிலும் கொள்கை உறுதியோடு இருப்பவர் கலைஞர்” என்று புகழ் மாலை சூட்டினார்.
தற்போது குலாம் நபி ஆசாத் அவர்கள் நேற்றையதினம் என்னைச் சந்தித்து - என் உடல் நலம் விசாரித்தோடு - நாட்டு நலம் எந்த வகையிலும் தொய்வடையாமல் இருப்பதற்காக - நம்முடைய கடந்த கால வெற்றிக் கூட்டணியே தொடர்ந்து நீடிக்கும் என்று அறிவித்திருக்கிறார். ஜனநாயகத்திலும், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதிலும் அக்கறை கொண்ட இன்றைய மத்திய மாநில அரசுகளை வாழ்த்தி வரவேற்கின்ற - புகழ்ந்துரைக்கின்ற இந்திய நாட்டு மக்களின் எண்ணத்தை உணர்ந்து கொண்டு - அதை எப்படியும் உடைத்தாக வேண்டுமென்று கருதிக் கொண்டு கோள் மூட்டி எதையாவது செய்ய வேண்டும், அது இம்மியளவு ஆனாலும் அது மத வாத கட்சிகளுக்கு ஆதரவாக அமைய வேண்டுமென்று கருதுகிறவர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அவர்களில் ஓரிருவரை எல்லோரும் அறிந்திடுவர். அந்தச் சிலருக்கு உடல் எல்லாம் மூளை - மூளை எல்லாம் சிந்தனை - சிந்தனை எல்லாம் வஞ்சனை.
இதற்கு எடுத்துக்காட்டு கூற வேண்டுமேயானால் - திரு. குலாம் நபி ஆசாத் அவர்கள் நேற்றையதினம் என்னைச் சந்தித்து விட்டு - காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி தொடரும் என்று நிருபர்களிடையே சொன்ன பிறகும் - மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருக்கின்ற மக்களை எப்படியாவது திசை திருப்ப வேண்டுமென்று கடும் முயற்சி செய்து, “தின மணி” மூலம் முதல் பக்கத்திலேயே ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். குலாம் நபி ஆசாத் அவர்கள் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களை, குறிப்பாகவும் சிறப்பாகவும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களை யெல்லாம் சந்தித்த பிறகுதான் திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் ஆகியவற்றின் வெற்றிக் கூட்டணி தொடரும் என்பதை அறிவித்தார்கள் - அது கேட்டு வாழ்த்தி
மகிழ்ந்தவர்கள் திடுக்கிடும் வண்ணம் “தினமணி” வெளியிட்டுள்ள செய்தி என்ன தெரியுமா? இதோ அது:-
“அ.தி.மு.க. வுடன் கூட்டணி : தி.மு.க. வை விட அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்வதே காங்கிரஸ் கட்சிக்கு இயல்பான கூட்டணியாகவும், வெற்றிக் கூட்டணியாகவும் அமையும். எனவே அ.தி.மு.க. வுடன் கூட்டணி சேர்வது பற்றி கட்சி மேலிடம் பரிசீலிக்க வேண்டும் என சில மாவட்டத் தலைவர்களும், சில மாநில நிர்வாகிகளும் குலாம் நபி ஆசாத்திடம் வற்புறுத்தினர் எனக் கூறப்படுகிறது.”
எந்த காங்கிரஸ் நண்பர்கள், எந்த மாவட்டத்தலைவர்கள், எந்த மாநில நிர்வாகிகள் இப்படி வலியுறுத்தினார்கள் என்று நமக்குத் தெரியவில்லை. தி.மு.க. கூட்டணி பிடிக்க வில்லை என்று யாரோ சிலர் வற்புறுத்தினர் என்று கூறப்படுகிறது என்று “தினமணி” அக்கறையோடு எழுதிக் காட்டுகின்றது.
மத்திய அரசு மீது வீசப்படும் எதிர்க்கட்சிகளின் கணைகளை - அம்புகளை தாங்கிக் கொண்டு சோனியா காந்தியின் வழிகாட்டு தலோடு நடைபெறுகின்ற மத்திய ஆட்சியும் - மாநில தி.மு.கழக ஆட்சியும் நிலைத்திட - நீடித்திட கடந்த ஐந்தாண்டு காலமாக - மாற்றார் மனம் போனபோக்கில் பேசியதை யெல்லாம் அலட்சியம் செய்து - மதச் சார்பற்ற மத்திய அரசு - மனித நேயம் மிக்க மத்திய அரசு - வலுப்பெற்று, வளம் பெற்றுத் திகழ - ஒல்லும் வகையெல்லாம் ஒத்துழைத்து வரும் மாநில தி.மு. கழகத்துடன் அணி சேர வேண்டாம் என்றும், அதற்கு மாறாக அ.தி.மு.க.வுடன் சேர்ந்தால்தான் அமோக வெற்றி பெறலாம் என்றும் சில காங்கிரஸ் நிர்வாகிகள், குலாம் நபி ஆசாத் நடத்திய கருத்துக் கேட்பு கூட்டத்திலேயே சொன்னார்கள் என்று “தின மணி” செய்தி வெளியிடுகிறது. அந்தச் செய்தியை நம்புவதற்கு ஒரு வேளை அப்படி ஒரு சில காங்கிரஸ் நண்பர்கள் கிசுகிசுத்திருப்பார்களேயானால் - அவர்கள் கடந்த கால நிகழ்வுகளை, இந்த ஐந்தாண்டு காலத்தில் நடந்தவைகளை அவ்வளவு விரைவாகவா மறந்திருக்க முடியும்?
“யார் இந்தச் சோனியா காந்தி? வெளிநாட்டுக்காரிக்கு இந்தியாவிலே அரசியல் தலைவியா?”
என்று கேட்டவர் யார்? ஜெயலலிதா அல்லவா? அதைவிட, அந்தச் சொக்கத் தங்கம் சோனியா காந்தியைப் பார்த்து “பதி பக்தி இல்லாதவர்” என்று அழைத்த குரூர புத்திக்குச் சொந்தக்காரர் யார்?
இந்த வாசகங்களையெல்லாம் “தினமணி” யாரிடம் கருத்து சொன்ன காங்கிரஸ் நிர்வாகிகள் மறந்தா விட்டார்கள்?
“தீயினால் சுட்ட புண் உள்ளாறும்; ஆறாதே நாவினால் சுட்ட வடு” என்ற திருக்குறளை எந்தக் காங்கிரசாரும் மறந்திருக்க நியாயமில்லை.
அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் விவாதங்கள், வாதங்கள், போராட்டங்கள் இவற்றுக்கிடையிலேகூட - பிற கட்சித் தலைவர்களை இது போன்ற வார்த்தைகளால் தாக்கக் கூடாதென்றும், அப்படி தவறுதலாக ஒரு வேளை யாராவது தாக்கிப் பேசினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் - அவர்களையே மன்னிப்பு கேட்கச் சொல்லியும் - அரசியலில் அன்று தொட்டு இன்று வரை - அய்யா பெரியாரும், அறிஞர் அண்ணாவும் நடத்திக் காட்டிய வழியிலேயே இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கிற கழகத்தின் தலைமை - மற்றக் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரையும் - மற்ற கட்சிகளின் தியாகிகள் அனைவரையும் எந்த அளவிற்கு மனதில் நிறுத்தி மக்களிடையே நினைவுச் சின்னங்களாக அமைத்து - இந்த இயக்கம் வளர்க்கப்பட்ட விதத்தையும், வளர்ந்து வருகிற விதத்தையும் விரிவான வரலாறாக ஆக்கியிருக்கிறது என்பதையும் இனியும் அந்த அரசியல் நாகரிகம் இந்த இயக்கத்தால் கடைப்பிடிக்கப்படும் என்பதையும் ஏனோ, தினமணி மறந்து விட்டு - தேவையற்ற திசை திருப்பங்களைச் செய்ய முயற்சிகளை மேற்கொள்கிறது.
இந்த உண்மையை தினமணியாரே குறிப்பிட்டிருக்கின்ற ஒரு சில மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்; அவர்கள் உண்மையிலேயே அப்படிப்பட்ட கருத்து சொல்லியிருப்பார்களேயானால் - அல்லது அத்தகைய கருத்தைக் கொண்டிருப்பார்களேயானால் - சிந்தனை செய்து, அதற்காக தினமணியார் போன்றவர்களை நிந்தனை செய்ய வேண்டாம் - வஞ்சகர்களை வந்தனை செய்து வாழ்விழந்த நாடு என்ற நிலைமை ஏற்படாமல் இருக்க இன்றைக்கே
எடுத்துரைபோம் சூளுரை!
ஆமாம், அமைக்கிறது அன்று போல் இன்றும் தி.மு.க. - காங்கிரஸ் வெற்றிக் கூட்டணி. அந்தக் கூட்டணி மேலும் பல வெற்றிகளைப் பெற உழைப்போம்! உழைப்போம்! உண்மைகளுக்கு மாறான செய்திகளை தவிர்ப்போம்! தவிர்ப்போம்! நம்மைப் பிரிக்க நினைப்போர் முயற்சிகளை தகர்ப்போம்! தகர்ப்போம்!
அன்புள்ள, மு.க. 4-3-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 79–84. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.