முரசொலி கடிதங்கள் · 3373
அனைவர் அகமும் அன்பகம் ஆகிட...!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3373. அனைவர அகமும் அன்பகம் ஆகிட...!
உடன்பிறப்பே,
தூத்துக்குடி அனல் மின் நிலைய தொடக்க விழாவில் கலந்து கொண்ட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரும் - என் நீண்ட கால நண்பருமான மாண்புமிகு பிரணாப் முகர்ஜி அவர்கள், அந்த விழா மேடையிலேயே - என் உடல் நிலை விரைவில் குணமாகி நலம் பெற வேண்டும் என்று வாழ்த்துரைத்துள்ளார். அது கேட்டு எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை விட இரட்டிப்பான மகிழ்ச்சி எது தெரியுமா?
இதோ! அவர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தச் செய்திதான்! அது என்ன அவ்வளவு முக்கியமான செய்தி?
தூத்துக்குடி விழாவில் அந்தத் தூயவர் பேசியது வருமாறு :-
“விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்கு முன்வந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இலங்கை அரசும் போர் நிறுத்தம் செய்து மக்களை பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு வர வேண்டும். இதற்கு விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்பும் தேவை.
தமிழ் மக்களை போர் நடைபெறும் இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல விடுதலைப் புலிகள் உதவ வேண்டும். தொண்டு நிறுவனங்கள், செஞ்சிலுவை சங்கம் ஆகிய அமைப்புகள் அவர்களுக்கு மருத்துவ வசதிகளைச் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையின் வடக்குப் பகுதியில் இடம் பெயர்ந்து உள்ள மக்களுக்கு மருத்துவ உதவிகளை செய்வதற்காக இந்திய அரசு மருத்துவக் குழு மற்றும் மருந்துகளை அனுப்பவும் ஏற்பாடு செய்து வருகிறது.
அடுத்து அரசியல் தீர்வாக இலங்கையில் அனைத்து மாகாணங்களுக்கும் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் சம உரிமை கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அந்த அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும்.
குறிப்பாக தமிழ் மக்களுக்கு இலங்கையின் சட்டத்துக்கு உட்பட்டு இறையாண்மை பாதிக்காத அளவில் அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும். இலங்கையில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக இந்தியாவின் இந்த பொறுப்பான வேண்டுகோளை இலங்கை அரசும், மற்றவர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.”
உடன்பிறப்பே, பிரணாப் அவர்கள் இப்படிப் பேசியது மட்டுமல்ல; டெல்லியிலிருந்து அறிக்கையாகவும் இதை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வழிகாட்டும் தலைவி திருமதி சோனியா காந்தி அவர்களின் கருத்தும் - இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் கருத்தும் கலந்திருக்கின்றன என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ?
இலங்கைத் தமிழர்களை வாழ வைப்பதற்கும் -
அவர்களின் உரிமைகளை இலங்கையில் நிலைநாட்டுவதற்கும் -
தமிழகத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பிலும் - அரசு சார்பிலும் எடுத்த முயற்சிகளுக்கும் -
எரியுண்டு மாண்ட இனமான ஏந்தல்களின் தியாகத்துக்கும் -
தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் -
நேரில் சந்தித்து தமிழகத் தலைவர்கள் வலியுறுத்திய முறையீட்டுக்கும் -
பலன் கிடைத்தது என்பது போல; இந்தியப் பேரரசின் “போர் நிறுத்த” வலியுறுத்தல், எனக்கு மருத்துவ சிகிச்சை வெற்றியைப் போன்ற மன ஆறுதலை அளிக்கிறது. மத்திய அரசுடன்,
தீர்மானங்கள் மூலமாகவும் - சந்திப்புகள் மூலமாகவும் - மகஜர்கள் மூலமாகவும் - நேரடியாகவும் - ஒல்லும் வகையெல்லாம் தொடர்பு கொண்டு செய்த முயற்சிகளினால் இன்று;
அனல் மின் நிலைய விழா - பிரணாப் பேச்சு - அவரது அறிக்கை - இவை அனைத்தும் நம் நெஞ்சத்து அணலைத் தணித்து ஆறுதல் பூங்காற்றாய் வீசச் செய்திருக்கிறது.
ஆனால் இந்த நேரத்தில் தான் இலங்கைத் தமிழர் பிரச்சினையை மாசாக்கி - மண்ணாக்கி - காசாக்கி - அரசியலில் நாணயத்தை தூசாக்கி வாழும் சில வக்கிர மூளையினர்; தாங்கள் வகித்த பொறுப்புகளுக்கு தகுதியற்றோர் என்று காட்டிக் கொள்ள பிரணாப் வருகையை எதிர்த்து - மறியல் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு - நாகரிக கேடாக நடந்து கொண்டு நமது மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப்பின் படங்களுக்கும் தீயிட்டுப் பார்த்து திருப்தி அடைந்திருக்கின்றனர்.
யார் அவர்கள் - சிங்களத் தலைமையாளர், ராஜபக்சே தமிழர்கள் மீது நடத்தும் படுகொலைக்கு நியாய வாதம் எடுத்துரைத்த ஜெயலலிதாவின் பாதார விந்தங்களே; தமக்கு ஆதார அடி பீடங்கள் என அர்ச்சித்துக் கொண்டிருப்பவர்கள்; அந்த “அம்மா” ஜெயாவின் அத்யந்த சீடர்கள், இலங்கைப் பகைவர்களை விட்டு விட்டு; இந்தியத் தலைவர்களின் படங்களுக்குத் தீயிட்டுக் கொளுத்துகிறார்கள் என்றால்; தேசப் பாதுகாப்புக்கான சட்ட ரீதியான நடவடிக்கைகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா?
முடியாது, முடியாது, முடியவே முடியாது!
இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரமும் - அங்கே அமைதியும் கிடைத்து அவர்கள் வாழ்ந்திட நாம் தமிழ் உணர்வோடு பணி புரிகிறோம் - அதில் கிடைக்கும் வெற்றிக்காகக் காத்து நிற்கிறோம் - மத்திய அரசுடன் இணைந்து இலங்கையில் போர் நிறுத்தம் இப்போதே கேட்கிறோம் - ஆம்; இந்த உலகில் பெரிய தேசமாம் - இந்திய நாடு கேட்கிறது - பிரணாப் முகர்ஜி கேட்டுள்ளார் - இந்திய அரசு கேட்கிறது - நாமும் கேட்கிறோம்;
“போரை நிறுத்து போரை நிறுத்து” என்று!
மத்திய அரசிடமிருந்து புறப்பட்டுள்ளது அந்த வாசகம் -
அதுவும் மார்ச் முதல் நாள் - மருத்துவ மனையிலிருந்து நான் மட்டுமல்ல; என் பழைய நண்பர் வாஜ்பாய் அவர்களும் நலம் பெற்று வெளிவரும் நாள் -
சென்னையில் தம்பி மு.க. ஸ்டாலின், இளைஞர் அணியின் சார்பில், உருவாக்கிய “அன்பகம்” எனும் அழகு மாளிகையும் இந்த நாளில் திறக்கப்படுகிறது. நான் பொருளாளராக இருந்து, அண்ணா அவர்கள் திறந்துவைத்த அந்த அன்பகம், இன்று புதுப்பிக்கப்பட்டு, விரிவாக்கப்பட்டு பெரிய மாளிகையாக தம்பி ஸ்டாலின் பொருளாளராக இருக்கின்ற நேரத்தில் திறக்கப்படுகிறது.
இந்நாளில் -
அனைவர் அகமும் பகையும் புகையும் அகன்று; அன்பகங்களாக மாறட்டும்! அந்த ஆசையுடன்; வலி நீங்கிய ஆறுதலுடன் - வருகிறேன் உடன்பிறப்புகளே! உமை வாரியணைத்து மகிழ்ந்திட வருகிறேன்.
அன்புள்ள, மு.க. 2-3-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 70–73. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.