முரசொலி கடிதங்கள் · 3430
கேளாக் காதினராய் கேரள அரசினர்; தேளாய்க் கொட்டுவதோ!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3430. கேளாக் காதினராய் கேரள அரசினர்; தேளாய்க் கொட்டுவதோ!
உடன்பிறப்பே,
முல்லைப் பெரியாறு பிரச்சினை தற்போது உச்ச நீதி மன்றத்தில் விசாரணையில் உள்ளது. தமிழக அரசின் சார்பிலும், கேரள அரசின் சார்பிலும், மத்திய அரசின் சார்பிலும் வழக்கறிஞர்கள் அங்கே வாதாடிக் கொண்டிருக்கின்றார்கள். கேரள அரசின் சார்பில் அங்கே அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக இருந்து தங்கள் கோரிக்கைகளை வெளியிடும் போது, பரிதாபத்திற்குரிய தமிழகத்தின் சார்பில் நாம் நம்முடைய வாதங்களை எடுத்து வைக்கும்போது - இங்கேயுள்ள தமிழர்கள் என்று சொல்லிக் கொண்டு தமிழக அரசைப் பற்றி எப்படியாவது குறை கூற வேண்டுமென்ற ஒரே அக்கறையோடு அறிக்கை விடுபவர் களுக்கும் பதில் கூற வேண்டிய நிலையிலே இருப்பதுதான் வேதனையானது. அவர்களுக்கு முல்லைப் பெரியாறு பற்றிக் கவலையில்லை, மாறாக நம்மை ஏதாவது குறை கூற வேண்டும் என்பதில்தான் அக்கறை. எப்படியிருந்த போதிலும் முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்த உண்மையான விவரத்தைத் தொகுத்து இங்கே வெளியிட விரும்புகிறேன்.
இந்தப் பிரச்சினை 1886ஆம் ஆண்டிலிருந்து அதாவது 29-10-1886 அன்று திருவாங்கூர் மகாராஜாவிற்கும் சென்னை ராஜதானிக்கும் இடையே பெரியாறு குத்தகை ஒப்பந்தம் போடப்பட்ட நாளிலிருந்தே தொடர்ந்து இருந்து வருவதாகும். முல்லைப் பெரியாறு அணையிலே நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதி மன்றத்திலே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் உச்ச நீதி மன்றம் 27-2-2006 அன்று தீர்ப்பினை வழங்கியது.
அந்தத் தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்றும்;
தமிழ்நாடு முதற்கட்டமாக தற்போதுள்ள 136 அடியிலிருந்து 142 அடி வரையிலே நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம் என்றும்;
மத்திய நீர்வளக் குழுமம் தெரிவித்த பரிந்துரைகளின்படி மீதமுள்ள பணிகளை கேரள அரசின் தொடர்ந்த தடங்கல்கள் காரணமாக தமிழ்நாடு இன்னமும் செய்து முடிக்க இயலாத நிலையில்; மத்திய நீர்வளக் குழுமத்திற்கு திருப்தி அளிக்கக் கூடிய வகையில் தமிழக அரசு செய்து முடித்தவுடன், அணையின் உச்ச நீர்மட்ட அளவான 152 அடிவரையில் நீரைத் தேக்கி வைக்க தனிப்பட்ட வல்லுநர்கள் குழு ஒன்று அணையினை ஆய்வு செய்ய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்தத் தீர்ப்பினை செயற்படுத்தாமல் தடைகளை ஏற்படுத்தக் கூடிய வழிகளை கேரள அரசு தொடர்ந்து உருவாக்கி வருகிறது. (The Kerala Government having adopted an obstructionist approach cannot now be permitted to take shelter under the plea that these are disputed questions of fact).
மத்திய நீர்வளக் குழுமம் பரிந்துரைத்தபடி, அணையை
வலுப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு மேற்கொள்வதற்கு தடையேதும் ஏற்படுத்தக் கூடாது என்று கேரளாவிற்கு உத்தரவிட வேண்டும் என்பதுடன்; கேரள அரசு தடை ஏதும் ஏற்படுத்த காரணம் எதுவுமில்லை என்றும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. (In this regard, at this stage the only prayer of the State of Tamil Nadu is that State of Kerala be directed not to obstruct it in carrying out the strengthening measures as suggested by Central Water Commission. We see no reason for the State of Kerala to cause any obstruction).
மேலும், கேரள மாநிலமும் மற்றும் அதன் அதிகாரிகளும் தடைகள் ஏதும் ஏற்படுத்தக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. (The State of Kerala and its Officers are restrained from causing any obstruction.)
உச்ச நீதிமன்றத்தின் 27.2.2006-ம் நாளிட்ட தீர்ப்பினை கேரள அரசு நிறைவேற்றாமல், அத்தீர்ப்புக்கு எதிராக - தீர்ப்பு வந்த 16 நாட்களுக்குள் - 18-3-2006 அன்று அவ்வரசு, அதன் நீர்ப்பாசன
மற்றும் நீர்ப்பாதுகாப்புச் சட்டம், 2003-க்கு திருத்தங்களைக்கொண்டு வந்து சட்டப்பேரவையில் நிறைவேற்றியது.
அதற்கு எதிராகத் தடையாணை கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா அரசு 13 நாட்களுக்குப் பிறகுதான் 31.3.2006 அன்று வழக்கு தொடுத்தது. ஜெயலலிதா அரசு இப்படி வழக்கு தொடுத்ததோடு சரி. உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை, சட்டவிதி முறைகளை அனுசரித்து முறையாகப் பதிவு செய்து, அதற்கான பதிவெண்ணைப் பெறுவது; வழக்கை விசாரணைக்குக் கொண்டுவருவது போன்ற முயற்சி எதையும் மேற்கொள்வதற்கு ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரையில் எந்தவிதமான கவனமும் செலுத்தவில்லை. மேலும், தடையாணை பெறுவதற்குக்கூட சட்டரீதியாக முறையான முயற்சி எதையும் ஜெயலலிதா ஆட்சியில் இருந்து இறங்கும்வரை மேற்கொள்ளவில்லை.
பிறகு, 2006, மே மாதம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, என் தலைமையில் ஆட்சி அமைந்ததற்குப் பிறகுதான்; அந்த வழக்கில் சட்டரீதியான முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன. வழக்கிற்கான ஆரம்பக் கட்டம் எனப்படும் பதிவெண்ணைப் பெற்றதே கழக ஆட்சிதான். அந்த வழக்கை விசாரணைக்குக் கொண்டு வந்ததும் கழக ஆட்சிதான். 25.9.2006 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் இரு மாநில அரசுகளும், மத்திய அரசு முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யவேண்டும் என்று அறிவுரை வழங்கியது.
அதன்படி, டெல்லியில் மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் முன்னிலையில் 29.11.2006 அன்று நானும், கேரள மாநில முதலமைச்சர் அச்சுதானந்தன் அவர்களும் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினோம். அந்த பேச்சுவார்த்தையின்போதுதான் முதன்முதலாக புதிய அணை பற்றிய கருத்து கேரள முதலமைச்சரால் முன்வைக்கப்பட்டது. அதனை தமிழக அரசு ஏற்றுக் கொள்ள வில்லை. அதனால் பேச்சுவார்த்தையில் முடிவேதும் ஏற்படவில்லை. இந்தப் பேச்சுவார்த்தை பற்றி உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென்று தமிழக
அரசு சார்பில் கோரிக்கை வைக்கப் பட்டு, அந்தக் கோரிக்கையினை ஏற்று; உச்சநீதிமன்றம் வழக்கினை விசாரிக்கத் தொடங்கியது. இதற்கிடையில், இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் வழங்கிய யோசனையின் அடிப்படையில், மீண்டும் கேரள அரசுடன் 19.12.2007 அன்று டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பேச்சு வார்த்தையிலும் முடிவேதும் எட்டப்படாததால், உச்சநீதிமன்றம் இப்பிரச்சினையை விசாரிக்கத் தனி அமர்வு ஒன்றை ஏற்படுத்தி, வழக்கு விசாரணையை 21.10.2009ஆம் தேதியிலிருந்து நடத்தி வருகிறது. முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்திற்கு பல வகைகளில் கேரள அரசு இடையூறுகளை தொடர்ந்து அளித்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை செயல்படுத்துவதற்கு சட்ட ரீதியான நடவடிக்கையை இவ்வரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்தப் பிரச்சினையில், கேரள அரசு மேற்கொண்டுவரும் இடையூறுகளில் முக்கியமானவைகள் பின்வருமாறு:- ➢ கேரள அரசின் வருவாய்க் கோட்டாட்சியரால் முல்லைப் பெரியாறில் 19.11.2006 அன்று நீர் அளவீடு கருவி அகற்றப்பட்டது. ➢ கேரள அரசு, பெரியாறு அணையை ஆய்வு செய்வதற்கு, 23.11.2006 அன்று கொச்சியிலுள்ள கடற்படை அதிகாரிகளை அழைத்தது. இது சட்டவிரோதமான செயல் என்று மத்திய அரசிற்கு சுட்டிக்காட்டப்பட்டு, நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்படுமென்றும் மற்றும் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு உடனடியாக எடுத்துச் செல்லப்படும் என்றும் இந்தியப் பிரதமர் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் காரணமாக கடற்படை அதிகாரிகள் பணியேதும் மேற்கொள்ளாமல் திரும்பினர்.
➢ 31.12.2006 அன்று இனம் தெரியாத ஒரு சிலர் அணையின் கைப்பிடிச் சுவற்றிற்கு சேதங்களை ஏற்படுத்தினர். இந்த நிகழ்வினை 2.1.2007 அன்று மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களுக்கு நான் அனுப்பிய கடிதத்தில், ஏற்கெனவே தமிழ்நாடு கோரியவாறு, முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்க மத்திய தொழில் பாதுகாப்புப் படையை (Central Industrial Security Force) அனுப்பி வைக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். உச்ச நீதிமன்றத்தில் 11.1.2007 அன்று தாக்கல் செய்யப்பட்ட துணை மனுவில் (Supplementary Affidavit) இந்த கோரிக்கையும் இணைக்கப்பட்டது.
➢ 7.2.2007 அன்று நீர் மாதிரிகளை (Water Samples) எடுப்பதற்காக மத்திய நீர் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தைச் (Central Water Development and Management) சார்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு ஒருசில இனம் தெரியாதவர்கள் அணைக்குள் அத்துமீறி சென்றனர்.
➢ 16.3.2007 அன்று வீடியோ புகைப்படம் எடுப்பதற்காக இடுக்கி மாவட்ட ஆட்சியரது முன் அனுமதி பெறாமல் இனம் கண்டறிய இயலாத சிலர் வீடியோ புகைப்படமெடுக்க அணைப் பகுதிக்கு செல்ல கேரள காவல்துறையினர் அனுமதித்தனர்.
➢ 25.3.2007 அன்று கேரள காவல் துறை ஒத்துழைப்பு அளிக்காதது குறித்தும், கேரளாவின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு தமிழ்நாட்டிற்கு முன் அறிவிப்பு இல்லாமலும், தமிழ்நாட்டின் முன் அனுமதியைப் பெறாமலும் அடிக்கடி அணையினைப் பார்வையிடுவது குறித்து இந்திய பிரதமர் அவர்களின் கவனத்திற்கு நான் கொண்டு சென்று, அணையைப் பாதுகாக்க மத்திய ரிசர்வ் போலீசோ அல்லது மத்திய தொழில் பாதுகாப்புப் படையையோ அனுப்பி வைக்கப்படவேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தினேன்.
➢ 4.5.2009 அன்று நீர்வள ஆதாரத் துறையின் உயர் அதிகாரி முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்றபோது கேரள காவலர்கள் அவரை அணைக்குள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர்.
➢ கேரள அரசின் வனத்துறை மற்றும் நீர்ப்பாசன அதிகாரிகள், தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் 2009-2010-ம் ஆண்டுக்கான வருடாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதைத் தடுத்து நிறுத்தினர் என்பதை அரசின் கவனத்திற்கு 27.7.2009 அன்று தேனி மாவட்ட ஆட்சியர் கொண்டு வந்தார். இந்த விவரம் 31.7.2009 அன்று மத்திய அரசு கூட்டிய கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டபோது இரு மாநிலங்களும் இப்பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்று தெரிவித்ததைத் தொடர்ந்து, 4.8.2009 அன்று கேரள அரசு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
➢ தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், பொருட்காட்சி ஒன்றினை நடத்த உத்தேசித்துள்ளது என்றும், அதன் பொருட்டு முல்லைப் பெரியாறு அணையை உள்ளடக்கிய பல்வேறு நீர்த்தேக்கங்களின் புகைப்படங்களை அப்பொருட்காட்சியில் இடம்பெற உத்தேசித்துள்ளது என்றும் இதன்பொருட்டு, 29.10.2009 அன்று நீர்வள ஆதாரத் துறையின் செயற் பொறியாளர், புகைப்படக்காரர்களுடன் அணைப் பகுதிக்கு செல்வதற்காக படகுக் குழாமிற்கு சென்றபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனினும், கேரள அரசின் புகைப்படக்காரர்கள் அணையில் புகைப்படங்கள் எடுப்பதற்காக, தமிழ்நாட்டுப் பொறியாளர்களுக்கு முன்னமே தெரிவிக்காமலும், முன்அனுமதி பெறாமலும், சென்று வருகின்றனர். இத்தகைய
சூழ்நிலையில், கேரள வனத்துறை அதிகாரிகள், தமிழ்நாட்டின் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தங்களது அலுவலகப் பணியினை செய்யவிடாமல் தடுப்பது ஆழ்ந்த கவலை அளிப்பதாக உள்ளது என்றும், எனவே பல்வேறு தருணங்களில், இவ்வரசின் பொறியாளர்கள் தங்களது பணியினை முறைப்படி செய்வதைத் தடை செய்யாமல் இருக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டி 2.11.2009 அன்று கேரள அரசை இவ்வரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இவ்வாறு இடையூறுகளை கேரள அரசு தொடர்ந்து அளித்து வருவதைத் தவிர்க்கும் பொருட்டு, தற்பொழுது அணையைப் பாதுகாத்து வரும் கேரள காவலர்களுக்குப் பதிலாக, மத்திய தொழில் பாதுகாப்புப் படை; அணையின் பாதுகாப்புப் பணியை மேற்கொள்வதே சிறந்ததாக அமையும்.
கேரள அரசு எந்த வகையில் எல்லாம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மதிக்காமல் தமிழகத்தின் செயல்பாடுகளுக்கு எப்படியெல்லாம் குந்தகங்களைத் தொடர்ந்து செய்து வருகிறது என்பதைப் பற்றி தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் தொடர்ந்து தெரிவித்து வருகிறோம்.
முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ள ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில், இந்தப் பிரச் சினைக்காக கேரள முதல்வர் பிரதமரைச் சந்தித்தபோதிலும், தமிழக முதல்வர் பிரதமரைச் சந்திக்கவும் இல்லை, ஒப்புக்கு ஒரு கடிதம் கூட எழுதவில்லை என்று அறிக்கையில் கூறியிருக்கிறார்.
முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து கேரள முதல் அமைச்சருக்கும், மத்தியில் அந்தத் துறையின் அமைச்சராக இருந்த வருக்கும், இந்தியப் பிரதமருக்கும் நான் எழுதிய பல கடிதங்களின் தேதிவாரியான பட்டியல் இதோ :-
14-9-2006 கேரள முதலமைச்சருக்குக் கடிதம்;
4-10-2006 கேரள முதலமைச்சருக்குக் கடிதம்.
26-10-2006 கேரள முதலமைச்சருக்குக் கடிதம்.
31-10-2006 மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சருக்குக் கடிதம். 15-11-2006 மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சருக்குக் கடிதம். 16-11-2006 மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சருக்குக் கடிதம். 23-11-2006 பிரதமருக்குக் கடிதம்.
23-11-2006 மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சருக்குக் கடிதம்.
23-11-2006 பாதுகாப்புத் துறை அமைச்சருக்குக் கடிதம்
27-11-2006 மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சருக்குக் கடிதம்.
2-1-2007 பிரதமருக்குக் கடிதம்.
25-3-2007 பிரதமருக்குக் கடிதம்.
19-5-2007 பிரதமருக்குக் கடிதம்.
18-12-2007 பிரதமரை நேரில் சந்தித்து முல்லைப் பெரியாறு குறித்துப் பேசினேன். அப்போதுதான் பிரதமர் என்னையும் கேரள முதல்வரையும் ஒருமுறை நேரில் சந்தித்துப் பேச வேண்டுமென்று கூறி, அவ்வாறே நாங்கள் சந்தித்துப் பேசினோம்.
20-12-2007 பிரதமருக்குக் கடிதம்.
4-2-2008 கேரள முதல் அமைச்சருக்குக் கடிதம்.
13-7-2009 கேரள முதல் அமைச்சருக்குக் கடிதம்.
8-10-2009 பிரதமருக்குக் கடிதம்.இந்தக் கடிதங்களில் பெரும்பாலானவை அவ்வப்போது ஏடுகளிலும் வெளிவந்துள்ளன. இத்தனையையும் மூடி
மறைத்து விட்டு - ஒப்புக்கு ஒரு கடிதம் கூட நான் எழுதவில்லை என்று அறிக்கை விடுகிறார்கள் என்றால், நெஞ்சறியப் பொய் கூறி அரசியல் நடத்தும் அம்மையாரின் கைப்பாவை ஆகிவிட்டார்களே என்று தான் நான் கவலைப்படவேண்டியுள்ளது; வேறென்ன செய்ய
முடியும், உடன்பிறப்பே! முல்லைப் பெரியாறு பிரச்சினையில் நாம் தொடர்ந்து எடுத்து வந்த நடவடிக்கைகளின் காரணமாகத்தான், நேற்றையதினம் கூட,
உச்ச நீதி மன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்காக வந்தபோது, முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்தினால், அணைக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி கேரள அரசு தாக்கல் செய்த புதிய மனுவை தள்ளுபடி செய்ததோடு, இந்தப் பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு புதிய சட்டம் நிறைவேற்றியதற்காகவும் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருப்பதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது. எனவே இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை, அக்கறை செலுத்தவில்லை என்றெல்லாம் கூறுவது ஊரை ஏமாற்றுகின்ற ஒன்றே தவிர வேறல்ல. இத்தனைக்கும் பிறகு; கேளாக் காதினராகி “கேரளத்தார்” தேளாய்க் கொட்டுதல் ஏனோ என்றுதான் திகைத்திட வேண்டியுள்ளது. அன்புள்ள, மு.க. 6-11-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 40–48. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.