அடக்கம்

முரசொலி · தொகுதி 43 · கடிதம் 3431

முரசொலி கடிதங்கள் · 3431

இதில் எது கையாலாகாத்தனம்?

நாள் 10.11.2009சுமார் 4 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3431. இதில் எது கையாலாகாத்தனம்? உடன்பிறப்பே,

திருவள்ளூர் மாவட்டம், காவேரிராஜபுரம் கிராமத்தில், கர்நாடக மாநில தலைமை நீதிபதி பி.டி. தினகரன், சட்ட விரோதமாக அரசு புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி, அந்த நிலங்களை தாங்களே மீட்டு, தலித் மக்களுக்கு வழங்கப் போவதாக அறிவித்துக் கொண்டு - அதன் காரணமாக அந்த மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு, அமைதியைக் கெடுக்க முனைந்த போது - அதைத் தடுத்து - சட்டம் ஒழுங்கு அமைதியைப் பாதுகாக்கும் முயற்சியிலே அரசு ஈடுபட்டால் அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அதன் பொதுச் செயலாளர் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார்.

இப்பிரச்சினை குறித்து ஒரு அறிக்கை விடுத்துள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்டு, இரண்டு ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தின்கீழ் வழங்கிட அரசு தயக்கம் காட்டுவதாகச் சொல்லியிருக்கிறார். அது உண்மையல்ல; அரசு நிலங்களையும், புறம்போக்கு நிலங்களையும் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு, பெரும்பாலும் தலித் மக்களுக்கு இரண்டு ஏக்கர் அளவிற்கு வழங்கும் திட்டத்தையே தி.மு.கழக அரசுதான் 2006- 2007ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையிலே கொண்டு வந்தது என்பதும் - அந்தத் திட்டத்தை தந்தை பெரியாரின் பிறந்த நாளான 17-9-2006 அன்று இதே திருவள்ளூர் மாவட்டத்தில்தான் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தின்கீழ் இதுவரை 2 இலட்சத்து 10 ஆயிரத்து 747 ஏக்கர் நிலம், ஒரு இலட்சத்து 75 ஆயிரத்து 798 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு, குறிப்பாக தலித் மக்களுக்கு இலவசமாக இந்த அரசினால் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் அப்படியே முழு பூசனிக்காயை இலைச் சோற்றிலே மறைப்பது போல மறைத்துவிட்டு, இலவச நிலம் வழங்கும் திட்டத்தின்கீழ்

வழங்கிட நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயங்குவதாகவும் தயக்கம் காட்டுவதாகவும் அறிக்கை விடுத்திருக்கிறார்கள் என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள் மக்களை ஏமாற்றுவதற்கு எந்த அளவிற்கு போகாத வழியெல்லாம் போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

சமுதாய ஏற்றத் தாழ்வுகளைப் போக்க நில உடைமைகளுக்கு உச்சவரம்பு நிர்ணயித்து, மிகை நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கி, உழுபவனுக்கே நிலம் சொந்தமாக வேண்டும் என்ற நோக்கத்தோடு பாடுபட்டு வருவதுதான் தி.மு.கழக ஆட்சி. கழக ஆட்சியிலேதான் 1970ஆம் ஆண்டு உச்ச வரம்பு 15 ஸ்டாண்டர்ட் ஏக்கர் என்று திடீரென்று சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டத்தின் காரணமாக ஒரு இலட்சத்து 78 ஆயிரத்து 880 ஏக்கர் நிலம், உபரி நிலம் என்று கைப்பற்றப்பட்டு, தகுதியுள்ள நிலமற்ற ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 236 ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அதில் 61 ஆயிரத்து 985 பேர் தலித் மக்கள், 204 பேர் பழங்குடியினர். விவசாயிகள் சமூகப் பாதுகாப்பு நல உதவித் திட்டத்தின்கீழ் 1 கோடியே 70 லட்சத்து 38 ஆயிரத்து 112 உறுப்பினர்கள் இதுவரை சேர்க்கப்பட்டுள்ளதும், இதுவரை 3 லட்சத்து

75 ஆயிரத்து 390 விவசாயக் குடும்பங்களுக்கு 247 கோடியே 49 இலட்சத்து 360 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதும் விவசாயிகளுக்கும், பெரும்பாலும் தலித் மக்களுக்கும் உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணத்தோடுதான்.

1971ஆம் ஆண்டு கழக அரசில் இந்தியாவிலேயே முதன் முறையாக “குடியிருப்பு அனுபோகதாரர்கள் (உரிமை வழங்கல்) சட்டத்தை” கொண்டு வந்து, விவசாயத் தொழிலாளர்களுக்கு, பெரும்பாலும் தலித் மக்களுக்கு அவர்கள் குடியிருக்கும் வீட்டு மனைகள் அவர்களுக்கே சொந்தமாக்கப்பட்டன. அதற்காக திருத்துறைப்பூண்டியில் ஒரு பெரு விழாவே நடத்தப்பட்டது. அந்த விழாவிலே இந்தச் சட்டம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான மணலி கந்தசாமி அவர்கள் “பல ஆண்டுகளாக ரத்தம் சிந்தியும் சாதிக்க முடியாததை, ஒரு துளி மையினால் முதலமைச்சர் கலைஞர் சாதித்துக் காட்டியிருக்கிறார். இன்றிரவு ஒவ்வொரு விவசாயியும் தங்கள் தங்கள் சொந்த வீட்டிலே தூங்குகின்றோம் என்ற ஆனந்த உணர்வோடு

படுப்பார்கள்” என்று குறிப்பிட்டதை கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள் மறந்தாலும் நான் மறக்கவில்லை.

கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் பெரு மழை பெய்து மக்கள் எல்லாம் பெரும் அவதிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அமைச்சர்களும், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர் களும் மாவட்டங்களுக்குச் சென்று நிவாரணப் பணிகளிலே ஈடுபட்டிருக்கின்றார்கள். பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட நேரத்தில் இதற்கு முன்பெல்லாம் எப்போதும் நிவாரணப் பணிகளிலே, மக்கள் பணிகளிலே ஈடுபடக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் மழையையொட்டி ஆற்றிட வேண்டிய மக்கள் பணியை ஒத்தி வைத்து விட்டு, தனி மனிதர் ஒருவருக்கு எதிராக நில மீட்பு என்ற பெயரில் போராட்டம் நடத்த முற்பட்டு, அதிலே அக்கறை செலுத்துகிறார்கள் என்றால் இது அரசியலில் உச்ச கட்டம் என்பதைத் தவிர வேறல்ல.

இவர்கள் யாருக்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள்? அவரும் ஒரு தலித் தான். நீதிபதியாக இருக்கிறார். அவர் மீது இந்த நிலம் பற்றிய புகார் கூறப்பட்ட காரணத்தால், உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்று செல்ல வேண்டியது தடுக்கப்பட்டுள்ளதாக அவர் இன்று “டைம்ஸ் ஆப் இந்தியா” இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியுள்ளார். எந்த அரசாங்க நிலத்தையோ, பொது நிலத்தையோ தான் ஆக்கிரமிக்கவில்லை என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். ஆனால் நீதிபதி அங்கே ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மார்க்சிஸ்ட்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று ஒரு அரசாங்கம் செயல்பட முடியாது. அப்படி செயல்பட்டால், உடனடியாக ஒரு தலித் குடிமகனின் நிலத்தை கைப்பற்ற இந்த அரசு ஏன் இவ்வளவு துரிதமாக நடவடிக்கை எடுத்தது என்று இதே கட்சியினர் ஒரு போராட்டம் நடத்தக் கூடும். தனிப்பட்ட ஒருவர் நிலம் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் கூட அதை எதிர்த்து அரசாங்கம் தான் நடவடிக்கை எடுத்து, அந்த ஆக்கிரமிப்பு உண்மையாக இருந்தால், அந்த நிலங்களைக் கைப்பற்றி, அதன் பிறகுதான் மற்றவர்களுக்கு வழங்கலாமே தவிர, தனிப்பட்ட ஒரு கட்சியினர் தாங்களே நிலத்தை மீட்டு, தாங்களே வழங்கு வோம் என்றால் அது சட்டம், ஒழுங்கு, அமைதிக்கு முறையானது

தானா? ஒவ்வொரு கட்சியினரும் இவ்வாறு சட்டத்தை தங்கள் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு, தாங்களும் நிலங்களையோ, கட்டிடங்களையோ கைப்பற்றி தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்குகின்றோம் என்றால் இதென்ன தமிழ்நாடா? மேற்கு வங்கமா?

சட்டம், ஒழுங்கு, அமைதியைக் கெடுக்கும் வகையில் ஒரு கட்சியினர் நடக்க முற்படும் போது, தடையை மீறி நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று சொல்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க முனைந்தால், அது காவல் துறையினரின் “கையாலாகாத்தன”த்திற்கு எடுத்துக்காட்டு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் அறிக்கை விடுத் துள்ளார். எது கையாலாகாத்தனம்? சட்டத்தை மீறியவர்களை கைது செய்தது கையாலாகாத்தனம் என்றால்; அவர்களை உடனடியாக விடுதலை செய்து வீட்டிற்கு அனுப்பியது அதை விட பெரிய கையாலாகாத்தனம் அல்லவா? இதுதானே நண்பர் வரதராசனின் கணிப்பு?

நீதிபதி தினகரன் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார் என்று கூறி அதை மீட்டு தலித் மக்களுக்கு வழங்கப் போகிறேன் என்று போராட்டம் நடத்த அவசரம் காட்டுகின்ற இதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நண்பர்கள் சிறுதாவூரில் ஜெயலலிதா; தலித்களுக்காக வழங்கப்பட்ட அரசு நிலத்தை அபகரித்து, ஆக்கிரமித்து வைத்திருப்பதாக எத்தனையோ மாதங்களுக்கு முன்பு சொன்னார்களே, இத்தனை மாதங்களாக அதற்காக மீட்புப் போராட்டம் நடத்த ஏன் முன்வரவில்லை? இங்கே மட்டும் அவசரம் காட்டுவதற்கு என்ன உள்நோக்கம்?

இதிலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்களை கைது செய்ய வேண்டும் என்பது இந்த அரசின் நோக்கமல்ல. 1970ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இதைப் போலத்தான் நில மீட்பு இயக்கம் ஒன்றை நடத்தப் போவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டபோதே, தமிழகம் முழுவதும் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டார்கள். அப்போது திருச்சி சென்ற என்னை நிருபர்கள் சந்தித்து கேட்டபோது, “நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் தர வேண்டும் என்ற கொள்கை கம்யூனிஸ்ட்களுக்கு மாத்திரமல்ல; எல்லா முற்போக்குக் கட்சிகளுக்கும், தி.மு.கழகத்திற்கும் உடன்

பாடான கொள்கை. அதை நிறைவேற்றுவதற்கு சட்டப்படி தி.மு.க. ஆட்சி செயல்படுகிறது. எனினும் எந்தவிதமான கட்சிக் காழ்ப்பும் காட்டாமல் சட்டம் அமைதி காத்திட நடவடிக்கை எடுக்கும். இதில் கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள் கைது செய்யப்பட வேண்டிய தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டதற்காக மிகவும் வருந்துகிறேன். அவர்களுடைய உணர்ச்சியை வெளிப்படுத்த அவர்களுக்கு உரிமை உண்டு. அதே உணர்ச்சியை அமைதியான முறையில் சட்டப்பூர்வமாகச் செயல்படுத்த தயாராக இருக்கிற இந்த அரசின் வேண்டுகோளை அவர்கள் ஏற்றிருந்தால் எவ்வளவோ நலமாக இருந்திருக்கும்” என்று கூறியதைத்தான் இப்போதும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அன்புள்ள, மு.க. 10-11-2009

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 49–53. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 43-இல் மேலும் கடிதங்கள்