அடக்கம்

முரசொலி · தொகுதி 43 · கடிதம் 3429

முரசொலி கடிதங்கள் · 3429

இங்கு வந்துள்ள தமிழர்க்கும் இடர் களைவோம்!

நாள் 4.11.2009சுமார் 6 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3429. இங்கு வந்துள்ள தமிழர்க்கும் இடர் களைவோம்!

உடன்பிறப்பே,

1-11-2009-ந்தேதி மாலையில் நான் காரில் வந்து கொண்டிருந்தேன். காரில் என் அருகில் அந்த வார இதழ்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் 11-11-2009 தேதியிட்ட “இந்தியா டுடே” தமிழ் பதிப்பு இதழும் இருந்தது. அந்த ஏட்டினைப் புரட்டினேன். பக்கம் 40இல், “இருள் படிந்த கூடாரங்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாட்டிலே உள்ள இலங்கைத் தமிழர் அகதி முகாம்களில் அவர்கள் அடிப்படை வசதிகளின்றி தவிப்பதாகவும், மற்ற நாட்டு அகதிகளைப் போல அவர்களுக்கும் கூடுதல் சுதந்திரம் கிடைக்குமா என்றும் கேள்வி கேட்டு, அந்தக் கட்டுரை முழுவதும் அவர்களின் துயரங்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. அதைப் படித்த போது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடனே எனது செயலாளர்களை அழைத்து 2-11-2009 காலையில் தலைமைச் செயலகத்தில் இந்தப் பொருள் பற்றி விவாதித்திடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திடுமாறும், இதற்கு பொறுப்பாக உள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் அதிலே கலந்து கொள்ள வேண்டுமென்றும் கூறினேன். தொலைபேசியில் நிதித்துறைச் செயலாளரையும் அழைத்து, இந்தப் பொருள் பற்றிய அனைத்துக் குறிப்புகளையும் தயாரிக்கவும் செய்தேன். அதற்குப் பிறகும் என் மனம் நிம்மதி பெறவில்லை. உடனடியாக உதவியாளரை அழைத்து ஒரு நீண்ட அறிக்கையினை நானே “டிக்டேட்” செய்து, பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தேன். அதற்குப் பிறகும் சும்மாயிராமல், இலங்கைத் தமிழரும், சிறந்த எழுத்தாளரும், “இந்தியா டுடே” இதழில் பேட்டி அளித்தவர்களில் ஒருவருமான மறவன்புலவு திரு. கே.சச்சிதானந்தன் அவர்களை தொலைபேசியில் அழைத்து, அந்த இலங்கைத் தமிழ் அகதிகளின் அவசர அவசியமான தேவைகள் என்ன என்பது பற்றி நாளைக் காலை 8

மணிக்குள் எனக்கொரு குறிப்பினைத் தந்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். இத்தனைக்கும் பிறகுதான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான குழுக்களை அமைப்பது பற்றிய விவாதத்திலே கலந்து கொள்ளச் சென்றேன்.

இரவு முழுவதும் என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் “இந்தியா டுடே” இதழின் கட்டுரை வரிகள் என் நினைவுப் பாதையில் வலம் வந்தன. ஏனென்றால் ஒரு சில நாட்களுக்கு முன்புதான் 24-10-2009 அன்று “இந்து” நாளிதழில்

“Facilities at Refugee Camps good : U.S. Consul-General” என்ற தலைப்பில் -

“U.S. Consul-General Andres T. Simkin, on Friday expressed satisfaction with the facilities provided to refugees living in camps in Tamil Nadu” என்ற வரிகளோடு தொடர்ந்து வெளி வந்திருந்த தகவல்களுக்கு முரணாக இந்தியா டுடே கட்டுரை அமைந்திருந்தது.

நேற்று (2-11-2009) பொழுது விடிந்ததே துக்க செய்தியோடுதான். வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் தம்பி ஜெயராமன் மறைந்து விட்டார் என்ற அந்தச் செய்தியைக் கேட்டுவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டுத் திரும்பினேன். மறவன்புலவு சச்சிதானந்தம்; அவர் சொன்னபடி காலை 8 மணிக்கே வந்து விட்டார். அவரும் நேற்றிரவே இந்தியா டுடே இதழை வாங்கிப் படித்துவிட்டு, என்னைப் பார்த்ததும் அவருடைய பேட்டியில் அவர் சொல்லாத செய்தியெல்லாம் வந்திருப்பதாகக் கூறி மிகவும் வருத்தப்பட்டார். இருந்தாலும் அவருடைய குறிப்புகளையும் பெற்றுக் கொண்டு தலைமைச் செயலகக் கூட்டத்திற்கு விரைந்தேன். அங்கே நடைபெற்ற கூட்ட முடிவுகளைப் பற்றி, அந்தத் துறையின் அமைச்சர் தம்பி கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியினை நீ இதற்குள் படித்திருப்பாய்.

பின் எதற்காக இந்தக் கடிதம் என்றுதானே கேட்க நினைக்கிறாய். நான் அந்தக் கூட்டத்தில் இங்குள்ள அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்காக நமது கழக அரசின் சார்பில் என்னென்ன செய்திருக்கிறோம் என்பதை

நீயும், மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத் தான் இந்தக் கடிதம். இதோ அந்த நீண்ட பட்டியல் :-

தமிழ்நாட்டில், 26 மாவட்டங்களில் 115 முகாம்களில் (2 சிறப்பு முகாம்கள் உள்பட) இலங்கைத் தமிழர்கள் குடியமர்த்தப் பட்டுள்ளனர். இதுநாள் வரை 19,340 குடும்பங்களைச் சார்ந்த 73,241 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சுமார் 11,288 குடும்பங்களைச் சார்ந்த 31,802 பேர் முகாம்களுக்கு வெளியில் தங்கி உள்ளனர்.

2006-ஆம் ஆண்டில் ரூ. 2 கோடியே 80 லட்சம் செலவில், 9562 வீடுகளின் மேற்கூரைகள் சீர் செய்யப்பட்டன. ரூ. 3 கோடி செலவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 2006ஆம் ஆண்டில் 86 முகாம்களில் அடிப்படை வசதிகளான கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் ரூ.9 கோடியே 12 லட்சம் செலவில் செய்து கொடுக்கப்பட்டன. 2007-2008-ம் ஆண்டில் 50 முகாம்களில் புதியதாக கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் ரூ.5 கோடியே 24 லட்சம் செலவில் செய்து முடிக்கப்பட்டன. 2008-ம் ஆண்டில் 72 முகாம்களில் வீடுகள் புதுப்பிக்கவும், மற்றும் கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கவும் ரூ.3 கோடியே 12 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. 2009-10-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு இத்தகைய பராமரிப்புப் பணிகளைச் செய்வதற்காக செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், கங்கை கொண்டான் என்னுமிடத்தில் 96 வீடுகள் ரூ.1.20 கோடி செலவிலும், நாட்டரசன்கோட்டை, சென்னல்குடியில் 90 வீடுகள் ரூ.30.80 இலட்சம் செலவிலும், வேலூர் மாவட்டம் குடியாத்தம் முகாமில் 62 வீடுகள் ரூ.21.08 இலட்சம் செலவிலும், ஈரோடு மாவட்டம் காங்கேயத்தில் 63 வீடுகள் ரூ.22.68 இலட்சத்திலும், திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் 26 வீடுகள் ரூ.8.84 இலட்சத்திலும் கட்டி முடிக்கப்பட்டு இலங்கைத் தமிழர்கள் குடியமர்த்தப்பட்டு உள்ளனர்.

கரூர் மாவட்டம், ஆச்சிமங்கலம் என்ற இடத்தில் ரூ.1.16 கோடி செலவில் 450 வீடுகள் கட்ட அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டம், வேடர் காலனி

முகாமில் புதியதாக 150 வீடுகள் ரூ.86 இலட்சம் செலவிலும், திருமூர்த்திநகர் முகாமில் புதியதாக 115 வீடுகள் ரூ.98 இலட்சம் செலவிலும், வேலூர் மாவட்டம் சின்னப்பள்ளிக் குப்பம் முகாமில் புதியதாக 87 வீடுகள் ரூ.68.80 இலட்சம் செலவிலும், திருநெல்வேலி மாவட்டம் நாராணம்மாள்புரத்தில் புதியதாக 9 வீடுகள் ரூ.7.74 இலட்சம் செலவிலும், ஆலடியூர் முகாமில் 46 வீடுகள் ரூ 39.56 இலட்சம் செலவிலும், அத்தியடிப்பிள்ளையார்கோவில் அகதிகள் முகாமில் 60 வீடுகள், ரூ. 51.60 இலட்சம் செலவிலும் புதியதாக கட்ட அனுமதி வழங்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

● 1.8.2006 முதல் மத்திய - மாநில அரசுகள் வழங்கும் பணக்கொடை குடும்பத் தலைவர்களுக்கு ரூபாய் 200 என்பதிலிருந்து 400 ரூபாயாகவும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு வயது வந்தோருக்கும் ரூபாய் 144 என்பதிலிருந்து ரூபாய் 288 ரூபாயாகவும், குடும்பத்தில் உள்ள முதல் குழந்தைக்கு ரூபாய் 90 என்பதிலிருந்து 180 ரூபாயாகவும், குடும்பத்தில் உள்ள மற்ற குழந்தைகளுக்கு ரூபாய் 45 என்பதிலிருந்து 90 ரூபாயாகவும் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.

● ஒரு கிலோ அரிசி 57 பைசா என்ற அளவில் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

● கர்ப்பிணிப் பெண்களுக்கான ; டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறுக்கான ஆறாயிரம் ரூபாய் நிதியுதவித் திட்டம் 2007 முதல் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, சுமார் 1000 பேருக்கு

2007-08-ம் ஆண்டிலும், 2242 நபர்களுக்கு 2008-09-ம் ஆண்டிலும் வழங்கப்பட்டுள்ளது,

முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் இல்லத்து மாணவ மாணவியர்களுக்கு 12-ம் வகுப்பு வரை இலவச கல்வியும், இலவச புத்தகம், நோட்டுப்புத்தகம், சீருடை, மதிய உணவு மற்றும் +1 மாணவ மாணவியருக்கு இலவச மிதிவண்டியும்

வழங்கப்படுகின்றது. கடந்த 2008-09-ம் ஆண்டில் 20,106 மாணவ மாணவியர்களும், 2009-10-ல் 19,737 மாணவ மாணவியர்களும் பயன் பெற்று உள்ளனர்.

இலங்கைத் தமிழ் மாணவ மாணவியர்களுக்கு 2008-09 மற்றும் 2009-10-ம் ஆண்டுகளில் கலைக்கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட பிறகு நிரப்பப்படாத இடங்களில் இலங்கை மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள உரிய அனுமதி மற்றும் ஆணைகள் வழங்கப்பட்டு 2008-09-ம் ஆண்டில் 917 மாணவ மாணவியர்களும்,

2009-10-ல் 1084 மாணவ மாணவியர்களும் பயின்று வருகின்றனர்.

முகாம்வாழ் மாணவ மாணவியர்கள் வெளிமாவட்டங்களில் தங்கி உயர்கல்வி மேற்கொள்ள அனுமதிகள் வழங்கப்பட்டு அவர் களுக்குரிய பணக்கொடையை அவர்களின் பெற்றோர்களிடம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

2009-10-ம் ஆண்டில் இலங்கைத் தமிழ் மாணவ மாணவியர்களை சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவில் ஏற்படும் காலியிடங்களில் சேர்க்க அரசின் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

அனைத்து முகாம்களிலும் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு பொது சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. முகாம்களுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் மாதம் இரண்டு முறை மருத்துவக் குழுக்கள் முகாம்களுக்குச் சென்று தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டும் வருகின்றன. சிறப்பு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் இடங்களில் அந்தந்த மாவட்ட மற்றும் நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளின் வாயிலாக உயர் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் இலங்கைத் தமிழர் சிறப்பு நிவாரண நிதியில் இருந்து ரூ.15,000/- விபத்து மற்றும் உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சைகளுக்காக வழங்கப்படுகின்றது.

2006-ம் ஆண்டிற்கு முன் வரை இரவு 6 மணியில் இருந்து காலை 6 மணி வரை மட்டுமே மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.

2006-ம் ஆண்டிற்குப் பிறகு 24 மணிநேரமும் தொடர்ந்து மின்சாரம் வழங்க ஆணையிடப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.

முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை பெருக்கிக் கொள்ளும் பொருட்டு காலை 6 மணி முதல் மாலை 6 வரை வேறு இடங்களுக்கு சென்று வேலை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இது தவிர வெளியூர்களில் சென்று தங்கி வேலை செய்ய விரும்புபவர்களுக்கு சிறப்பு அனுமதிகள் வழங்கப்பட்டு பணக்கொடை வழங்கப்படும் நாளில் மட்டும் வந்து பணக்கொடைகள் பெற்றுச் செல்ல ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழர்களுக்கு முகாமில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்புகள், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களால் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்குரிய அனைத்து நிவாரண உதவிகளும் உடன் வழங்கப்படுகின்றன. இவர்களுக்கு உரிய இலங்கை பிறப்புச் சான்று சம்பந்தப்பட்ட இலங்கைத் தூதரகத்தில் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசினால் மேற்கண்ட அனைத்து உதவிகளும் தொடர்ந்து முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.

இத்துடன் நம்முடைய கடமை முடிந்து விட்டதாக நான் கருதவில்லை. எனவேதான் நான் தொடக்கத்தில் எழுதியவாறு அவசர அவசரமாக இந்தக் கூட்டத்தைக் கூட்டினேன். அந்த முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நிரந்தரமான விடிவு காலம் பிறக்க வேண்டும் என்பதற்காக கடந்த 26-9-2009 அன்று காஞ்சியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில் இறுதித் தீர்மானமாக துணை முதல்வர் தம்பி மு.க. ஸ்டாலின் படித்தபோது, “இவற்றிற்கெல்லாம் மேலாக; இவர்களை இந்தியக் குடியுரிமைச் சட்டம், மற்றும் தொடர்புடைய ஏனைய சட்டங்களின்கீழ், மறு குடியமர்த்தும் முயற்சியாக மத்திய அரசோடு கலந்து பேசி; அவர்கள் தமிழகத்திலே நிரந்தரமாக குடியிருக்க வழிவகை செய்து தர வேண்டுமென்றும், அவர்கள் தங்குவதற்கும் அவர்களின் வாழ்வாதாரத்திற்குமான ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டுமென்றும்” கேட்டுக் கொண்டதோடு மட்டுமல்லாமல், அதற்கடுத்த மறுநாளே

27-9-2009 அன்று நான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், “I request your kind intervention on humanitarian grounds and use of your esteemed offices to resolve this larger issue occupying the centre stage of attention of the Tamil people enabling the permanent settlement of Sri Lankan Tamil Refugees in Tamil Nadu. Once their stay is legally regularised, the Government of Tamil Nadu will be able to take up necessary steps for the betterment of their livelihood, economically and socially” என்று எழுதியிருந்தேன். எனவே இந்த அரசைப் பொறுத்தவரையில் - அவர்கள் இலங்கைத் தமிழ் அகதிகள் அல்ல; அவர்களும் தமிழர்கள்தான் - நம்மோடு தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள்தான் - அவர்களை வாழ்விக்கச் செய்யும் அனைத்து முயற்சிகளும் நம்மை நாமே வாழ்வித்துக் கொள்ளச் செய்யும் முயற்சிகள் தான் என்ற நோக்கோடு செயல்படுகின்றது. “வார ஏடு” ஒன்று சுட்டிக் காட்டியதால் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்ற குறைகளையும் கண்டறிந்து நிவாரணப் பணிகளை மேற் கொள்ளத்தான் இந்த அரசின் சார்பில் 12 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் உதவிகளும் தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையிருக்கிறது. நமது அமைச்சர்கள் மட்டுமல்லாது; உன் போன்ற உடன்பிறப்புகளும் இங்குள்ள இலங்கைத் தமிழர்களின் இடர் களைந்திட ஒல்லும் வகையெல்லாம் அவர்களுக்கும், இந்த அரசுக்கும் ஒத்துழைப்பு தர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். அன்புள்ள, மு.க. 4-11-2009

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 33–39. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 43-இல் மேலும் கடிதங்கள்