அடக்கம்

முரசொலி · தொகுதி 44 · கடிதம் 3486

முரசொலி கடிதங்கள் · 3486

தேன் துளிகள்; தேனருவியாகட்டும்!

நாள் 22.7.2010சுமார் 7 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3486. தேன் துளிகள்; தேனருவியாகட்டும்!

உடன்பிறப்பே,

சமூக நீதி எனப்படும் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் 1921ஆம் ஆண்டு நீதிக் கட்சி ஆட்சியில் தொடங்கிய போர்க்களத்தில் மாறி மாறி வரும் வெற்றித் தோல்விகளுக்கிடையே - திராவிட இயக்கத்தின் ஜீவாதார முழக்கமான சமுதாயத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னேறியுள்ளோர் தவிர்த்து மற்றும் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்புகள் பலவற்றைப் பெற்று மகிழ்ச்சியும் அடைந்திருக்கிறோம்; மனக்கலக்கமும் பெற்றிருக்கிறோம். மாநிலத்திலோ, மத்தியிலோ ஆட்சிப் பொறுப்பை ஏற்போர்களைப் பொறுத்து இந்தச் சமூக நீதிப் போராட்டத்தில் வெற்றி தோல்விகள் அமைந்திருக்கின்றன. அந்த வெற்றி தோல்விகளுக்கு சட்டங்கள் நிறைந்த ஆயுதச்சாலைகளில் இருந்து இரு தரப்பு வழக்கறிஞர்கள் எடுத்துப் பயன்படுத்திய போர்க்கருவிகளின் ஒரு புறம் - ஒவ்வொரு முறையும் அந்தப் போரினை முடித்து வைத்து வழங்கப்பட்ட தீர்ப்பு ஒரு புறம். இந்தச் சூழலில் முடிவடையாத இந்தச் சமூக நீதிப் போராட்டத்தில் இடையிடையே கிடைத்திடும் தேன் துளிகளில் ஒரு பகுதியாக தற்போது தமிழக அரசு எடுத்துள்ள தளரா முயற்சியின் விளைவாக; சமூக நீதி குற்றுயிரும் குலையுயிருமாக களத்திலே வீழ்த்தப்பட்டு விட்டது என்ற நிலைமைக்கு மாறாக; உயிர்த் துடிப்போடு உலவும் என்ற நம்பிக்கையை காலம் காலமாக ஒடுக்கப்பட்டு - கல்வி வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வரிசையில் இருப்போர் பெற்று, ஆறுதல் பெருமூச்சு விடக் கூடிய ஒரு நிலை நமது தமிழக அரசு தொடர்ந்து நீதிமன்றங்களில் நடத்திய சட்ட ரீதியான போராட்டத்தால் ஏற்பட்டிருக்கிறது.

மண்டல் கமிஷன் பரிந்துரைகள் தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் ஆதரவாகவும் எதிராகவும் தாக்கல் செய்யப்பட்ட

மனுக்களின் மீது 1992ஆம் ஆண்டு நவம்பர் 16-ந்தேதியன்று ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தீர்ப்பு அளித்தது. பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், மண்டல் கமிஷன் பரிந்துரைகளின்படி 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கி அன்றைய பிரதமர் வி.பி. சிங் பிறப்பித்த உத்தரவு செல்லும். இந்த ஒதுக்கீடுகள் அனைத்தும் 50 சதவிகிதத்திற்கு மேல் அதிகமாகப் போகக் கூடாது. ஏற்கெனவே பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து சமூக ரீதியில் முன்னேறியவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு கூடாது. எனவே பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை நிர்ணயம் செய்ய இன்னும் நான்கு மாதங்களில் மத்திய மாநில அரசு கமிஷன்களை நியமிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தீர்ப்பு குறித்து தி.மு. கழகத்தின் சார்பில் நான் தெரிவித்த கருத்து வருமாறு :-

பொருளாதார அடிப்படை; அரசியல் சட்டத்திற்கு உகந்ததல்ல என்று தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. இதை வரவேற்கிறோம். மத்திய அரசு உத்தியோகங்களில் 27 சதவிகிதம் பின் தங்கிய சமூகத்திற்கு ஒதுக்கிய தேசிய முன்னணியின் அரசு உத்தரவு செல்லுபடியாகும். இது தீர்ப்பின் இதயம் போன்ற பகுதியாகும். இதையும் வரவேற்கிறோம். ஆனால் 27 சதவிகித ஒதுக்கீடு உத்தரவை உடனடியாக அமல்படுத்த முடியாதபடி தடங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சமுதாயத்தில் “முன்னேறிய - பின்தங்கிய சமூகத்தோரை” (Creamy Layer) இந்த 27 சதவிகிதத்திலிருந்து நீக்கி விட வேண்டுமாம். எனவே இப்பிரச்சினை மீண்டும் “பண்டோராபெட்டி” யைத் திறந்து அநாவசிய சர்ச்சைகளைக் கிளப்பும். இது குறித்து மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டை அணுகி இதற்கான மாற்றத்தை மறு ஆய்வின் மூலம் பெற வேண்டும். இல்லாவிடில் இது மாநிலந்தோறும் ஒரு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். ஆகவே இந்தத் தீர்ப்பு பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைத்த பாதி வெற்றியே ஆகும்.”

என்னுடைய இந்தக் கருத்தைப் பற்றி 21-11-1992 தேதியிட்ட “எகனாமிக் டைம்ஸ்” இதழ் எழுதும்போது, “இந்தத் தீர்ப்பு குறித்து முக்கியமாக திரு.கருணாநிதி சகல விதத்திலும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஏனெனில் பின்தங்கிய சமூகத்தினருக்கு சமூக நீதி

கோரி அவரது கட்சி பெரும் பணி ஆற்றியிருக்கிறது. 1990ஆம் ஆண்டு மண்டல் எதிர்ப்பு அலையால் வி.பி. சிங் ஆட்சி என்ற படகு ஆடிக் கொண்டிருந்தபோது முதலமைச்சராக இருந்த திரு. மு. கருணாநிதி தனது முழு பலத்தையும் உபயோகித்து வி.பி. சிங்கை ஆதரித்தார். ஆனால் சமுதாய ரீதியாக - கல்விரீதியாக - பின்தங்கியோரிலிருந்து முன்னேறியோரைக் கண்டறிந்து அவர்களைப் பின்தங்கியோர் பட்டியலில் இருந்து நீக்கி விட வேண்டும் என்கிற உச்ச நீதிமன்ற தாக்கீது தி.மு.க. தலைவரை வருத்தமடையச் செய்திருக்கிறது” என்று எழுதியிருந்தது.

இட ஒதுக்கீட்டை 69 சதவிகிதம் என்பதற்கு மாறாக 50 சதவிகித அளவிற்கு மட்டுமே செல்லும் என்று உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின் விளைவாகத் தொழில் கல்விகளில் 69 சதவிகித அளவிற்கு இடங்களை ஒதுக்குவது குறித்த போராட்டம் மாணவர்கள் மத்தியில் பெரிதாக எழுந்தது. இட ஒதுக்கீடு பிரிவில் எத்தனை சதவிகிதம் என்பதை நிர்ணயிக்கும் உரிமையை அந்தந்த மாநில அரசுகளுக்கே வழங்கும் வண்ணம் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பது தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கையாக இருந்தது. இட ஒதுக்கீடு பிரச்சினையில் ஜெயலலிதா அரசு அப்போது இரட்டை வேடம் போடுவதைப் போல ஒரு கருத்து பத்திரிகையாளர்கள் மத்தியில் இருந்தது. அதற்குக் காரணம் 22-11-1993 அன்று உச்ச நீதி மன்றத்தில் அளித்த ஒப்புதல் பிரமாணப் பத்திரத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையேற்று தமிழ்நாட்டில் 93-94ஆம் ஆண்டுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க ஜெயலலிதா அரசின் சார்பில் சம்மதம் கொடுத்ததுதான். இதனால் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படும் நேரத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடுதான் என்று அறிவிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து உடனடியாக நான் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, தி.மு.க., பா.ம.க., இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், அகில இந்திய பார்வர்டு பிளாக், எம்.ஜி.ஆர். அ.தி.மு.க., இந்திய தேசிய லீக் மற்றும் சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சமூக அமைப்புகள் இணைந்து 69 சதவிகித இட ஒதுக்கீட்டை வற்புறுத்தி மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்தின.

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும் இதே பிரச்சினைக்காகக் குரல் கொடுத்ததோடு, இந்திய அரசமைப்புச் சட்டம் 31 சி.யின் அடிப்படையில் சமூக நீதியைக் காக்க சட்ட முன் வடிவு ஒன்றையே தயாரித்தளித்தார். அரசு வழிகாட்டு நெறிகளை அரசமைப்புச் சட்டத்தில் நான்காம் பிரிவு கூறுகிறது. அதில் உள்ள கொள்கைகளுக்கு ஏற்ப மாநில அரசு ஒரு சட்டம் செய்து, அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிருந்தால், அந்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் 14 ஆவது மற்றும் 19வது ஷரத்துகளுக்கு முரணானது என்ற முறையில் அது செல்லாதது ஆகாது என்று திரு.வீரமணி அவர்கள் எழுதினார்.

69 சதவிகித இட ஒதுக்கீட்டை நீட்டிக்கச் செய்வதற்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு திருத்தம் கொண்டு வருவதே சரியான தீர்வாகும் என்று நான் ஓர் அறிக்கை விடுத்தேன். இட ஒதுக்கீட்டின் அளவு எவ்வளவு என்பதை உள்ளூர் நிலைமைகளின் அடிப்படை யில் மாநில அரசே முடிவெடுக்க வழி செய்யும் வகையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் உடனடியாகக் கூட்டி, அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற ஆதரவளிக்கக் கோரியும் -

அவ்வாறு அரசியல் சட்டத்தைத் திருத்த ஆதரவு கேட்டும், பிரதமர் நரசிம்மராவ், முன்னாள் பிரதமர் வி.பி.சிங், தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் என்.டி. ராமராவ், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் இந்திரஜித் குப்தா, மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், பாரதிய ஜனதா தலைவர்கள் வாஜ்பய், எல்.கே. அத்வானி மற்றும் சந்திரசேகர், ஜார்ஜ் பெர்னாண்டஸ், பஸ்வான், ரபிராய், சிக்கந்தர் பக்த், சுப்பிரமணிய சுவாமி, இப்ராகிம் சுலைமான் சேட், பனத்வாலா, சித்த பாசு, உன்னிகிருஷ்ணன், பிரகாஷ் சிங் பாதல், கன்சிராம் போன்ற தலைவர்களுக்கு 27-6-1994 அன்று நான் கடிதம் எழுதினேன்.

அந்தக் கடிதத்தில் -

“மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உட்பட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாநில அரசு வழங்கி வந்த இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் காரணமாக 69 சதவிகிதத்திலிருந்து 50

சதவிகிதமாகக் குறைக்கப்பட்டு விட்டது. இது மக்கள் தொகையில் 85 சதவிகிதமாக இருக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பெருமளவில் வேதனையை உருவாக்கியுள்ளது. இத்தகைய சூழ்நிலைகளில் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளையும் உடனடியாகக் கூட்டி, அதில் இட ஒதுக்கீட்டுக்கான அளவை அந்தந்த மாநில தேவைகளுக்கேற்ப மாநில அரசே நிர்ணயிக்க வகை செய்யும், அரசியலமைப்புச் சட்டத்திற்கான அவசரத்திருத்தம் கொண்டு வருவதற்கு இணைந்து செயல்பட தங்கள் கட்சி முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 69 சதவிகித இட ஒதுக்கீடு நீடிப்பதற்கு தங்கள் கட்சி முழு ஆதரவைத் தெரிவித்திருப்பதால் தங்கள் ஆதரவு நிச்சயம் உண்டு என்று நம்புவதோடு, ஆதரிக்க வேண்டும் என்றும் கோரி, அந்த நோக்கத்தை அடைய தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் கேட்டுக் கொள்கிறேன். தங்களிடமிருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன்.”

என்று எழுதியிருந்தேன்.

இந்தக் கடிதத்திற்கு ஆதரவு தெரிவித்து வாஜ்பய், வி.பி. சிங், ரபிராய், இந்திரஜித் குப்தா, ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஹர்கிஷன் சிங் சுர்ஜித், சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் எழுதிய கடிதங்கள் 10-7-1994 தேதிய தினமணி இதழில் முழுவதுமாக வெளியிடப்பட்டிருந்தன. இதற்குப் பிறகு 18-7-1994 அன்று ஜெயலலிதாவும் இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் இட ஒதுக்கீடு பிரச்சினையில் ஆதரவு கோரி கடிதம் எழுதினார்.

29-6-1994 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, அவர்களிடமிருந்து பெற்ற அறிவுரைப்படி, இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் இதற்காக அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வர அனைத்துக் கட்சிகளின் ஆதரவைத் திரட்டுவதற்காக அப்போது கழக நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த திண்டிவனம் வெங்கட்ராமன், விடுதலை விரும்பி, மிசா கணேசன், முகமது சகி, ஜெ.எஸ். ராஜூ ஆகியோரை டெல்லிக்கு அனுப்பி வைத்தேன்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஜூலை 10-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வட்டத் தலைநகரங்களிலும், பேரூர்களிலும்

கூட்டங்களை நடத்துவதென்றும், ஜூலை 15-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை ஒன்றியங்களில் உள்ள எல்லா கிராமங்களிலும் அனைத்துக் கட்சிகளின் பேரணிகள் அல்லது நடைப் பேரணிகள் நடத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.

இட ஒதுக்கீடு பிரச்சினைக்காக 17-6-1994 அன்று தி.மு.கழகம் உட்பட்ட அனைத்து எதிர்க்கட்சிகள் மத்திய மாநில அரசு அலுவலகங்கள் முன் மறியல் நடத்தப் போவதாக அறிவித்த போது அதே நாளில் இட ஒதுக்கீடு பிரச்சினைக்காக “பந்த்” நடத்துவதற்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்தார். உடனே தி.மு.கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமது மறியல் போராட்டத்தை 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தோம். மறியல் போராட்டத்தால் வன்முறை ஏற்படும் என்று ஜெயலலிதா அரசு கூறி அனுமதி மறுத்ததோடு, 20-6-1994 அன்று காலையில் என்னையும், நல்லக்கண்ணு, டாக்டர் ராமதாஸ், எஸ். திருநாவுக்கரசர் ஆகியோரையும் கைது செய்துபின்னர் பெரும் விளைவுகள் ஏற்படக் கூடும் என்பதற்காக அன்று மாலையில் எங்களை விடுவித்தது. ஜெயலலிதாவின் அந்த மாறுபட்ட நிலையினை 15-7-1994 தேதிய “ப்ரண்ட் லைன்” ஏடு நீண்ட கட்டுரையாக “இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் ஜெயலலிதா இரட்டை வேடம்” என்ற தலைப்பிலேயே வெளியிட்டிருந்தது.

8-7-1994 தேதிய “தினமணி” நாளிதழோ, தனது தலையங்கத்தில், “இட ஒதுக்கீட்டை 69 சதவிகித அளவில் தொடர வேண்டும் என்பதில் தனக்கு ஆத்மார்த்த ஈடுபாடு உண்டு, இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணாமல் ஓய மாட்டேன்” என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா உறுதி அளித்திருக்கிறார். அவரது இந்த முடிவை வரவேற்கிறோம். முன்பு கச்சத்தீவை மீட்பேன் எனச் செய்த சபதத்தைப் போல இதுவும் வெறும் வாய்ச்சொல் வீரமாகப் போய் விடாமல் இந்த வாக்கை நிறைவேற்றிக் காட்டுவார் என்று நம்புகிறோம். அதே சமயம் சில கேள்விகள் மனதில் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. 69 சத இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று ஆத்மார்த்தமாக விரும்புகிற ஒருவரின் தலைமையில் இயங்கும் அரசு, 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மாட்டோம், 50 சதவிகிதத்தை அமல்படுத்துகிறோம் என்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு உறுதிமொழியை எழுத்து மூலமாக கொடுத்தது எப்படி? கல்வி நிலையங்களில் இடங்களின் எண்ணிக்கை போர்க்கால

அடிப்படையில் அதிகரிக்கப்படும் என்று அமைச்சரவையில் தீர்மானம், ஒரு சில நாட்களுக்குள் மாணவர் சேர்க்கை ஒத்திவைப்பு என்று அறிவிப்பு, கன்னியாகுமரியில் ஒரு நிலை, புதுடெல்லியில் ஒரு நிலை, நவம்பர் மாதம் ஒரு நிலை, டிசம்பர் மாதம் ஒரு நிலை, அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு நிலை, அரசு அறிவிப்பில் ஒரு நிலை என்று முதல்வர் (ஜெயலலிதா) வெவ்வேறு நிலைகளை மேற்கொள்வது இட ஒதுக்கீடு பிரச்சினையில் அவர் குழம்பிப் போயிருக்கிறார் என்பதைக் காட்டுவதாகவே இருக்கிறது.

“முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்திற்குக் கிடைத்திருக்கும் பதில்கள் அந்தக் கட்சிகளிடமிருந்து ஆதரவைப் பெற முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. கருணாநிதி எடுத்த முயற்சிதானே என்று அலட்சியமாகவோ, அல்லது அரசியல் போட்டி மனப்பான்மை காரணமாகவோ ஜெயலலிதா இந்த வாய்ப்பை ஒதுக்கித் தள்ளி விடாமல், ஆக்கபூர்வமாக பயன்படுத்திக் கொள்ள முன் வர வேண்டும். கருணாநிதி புகழ் பெற்று விடுவாரோ என்று எண்ணிக் தயங்குவதை விட, தமிழக மக்கள் நலம் பெற வேண்டும் என நினைத்துச் செயல்படுவது ஆரோக்கியமான முன்னுதாரணமாக இருக்கும். கருணாநிதியின் முயற்சியைத் தொடர்ந்து அவரோடு இணைந்து ஜெயலலிதா களத்தில் இறங்கட்டும்” என்று எழுதியிருந்தது.

இட ஒதுக்கீடு பிரச்சினை குறித்து இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக அப்போது இருந்த நண்பர் வாழப்பாடி ராமமூர்த்தி விடுத்த கண்டன அறிக்கையில் - “தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 69 சதவிகித இட ஒதுக்கீடு பிரச்சினையில் போதுமான ஈடுபாடோ அல்லது நம்பிக்கையோ இல்லாத காரணத்தால் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளை உதாசீனப்படுத்தி ஒதுக்கித் தள்ளிவிட்டார். கடந்த 1929ஆம் ஆண்டிலிருந்து தமிழகம் அனுபவித்து வந்த இந்த இட ஒதுக்கீடு, ஜெயலலிதாவின் பொறுப்பற்ற செயல் காரணமாக இப்போது இழக்க வேண்டி வந்துள்ளது. ஜெயலலிதா இட ஒதுக்கீடு பற்றி உதட்டளவில் பேசி வந்தாரே ஒழிய அதனைப் பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்துக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு வழங்க ஜெயலலிதா வழி செய்து கொடுத்து விட்டார்.

எனவே தமிழ் மக்களுக்குத் துரோகம் இழைத்து விட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வெளியேற வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இட ஒதுக்கீட்டிற்கான முயற்சிகளை நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மாத்திரமல்ல; அதன் பின்னர் முதலமைச்சராக பொறுப்பேற்றிருந்த நிலையிலும் சமூக நீதி பற்றிய இந்தச் சாராம்சங்களை வலியுறுத்தி, அதற்குத் துணை நிற்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்து, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களுக்கும் மற்றும் பிரதமர்களுக்கும், இந்திய தேசத்து மாநில முதல் அமைச்சர்கள் அனைவருக்கும் நான் கடிதங்கள் எழுதியிருக்கிறேன். அந்த விவரங்களை நாளை எழுதுகிறேன்.

(தொடரும்)

அன்புள்ள, மு.க. 22-7-2010

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 44 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065830_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_44.pdf; PDF பக்கம் 38–45. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 44-இல் மேலும் கடிதங்கள்