அடக்கம்

முரசொலி · தொகுதி 44 · கடிதம் 3489

முரசொலி கடிதங்கள் · 3489

வாய்மையை எதிர்த்து வஞ்சகம் ஜெயிக்காது!

நாள் 26.7.2010சுமார் 6 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3489. வாய்மையை எதிர்த்து வஞ்சகம் ஜெயிக்காது!

உடன்பிறப்பே,

பார்த்தாயா உடன்பிறப்பே! இந்தப் பரிதாபத்திற்குரிய காட்சிகளை!

பரிவு பாசம் இவை மட்டுமல்ல; பண்பாடும் உள்ள எந்த மனிதரானாலும், கண் கலங்கி, கசிந்துருகி, “கடவுளே! நீ தான் இவர்களைக் காப்பாற்ற வேண்டும்“ என்று பாரத்தைப் பகவான் மீது போட்டுவிட்டுச் செல்கின்றவர்களைப் பார்த்துப் பார்த்து பழக்கப்பட்டவர்கள் மாத்திரமல்ல; அந்தப் பழக்கத்தைச் சிறிது மாற்றி இந்தக் கொடுமைகளுக்குப் பரிகாரம் தான் என்ன என்று பகுத்தறிவைப் பயன்படுத்திச் சிந்திப்போரில் - பரிகாரம் காண்போர், ஒருவர் இருவரல்ல; ஒரு அரசே அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கிறது என்பதை உணரும்போது, அதற்காகச் செலவழிக்கப்படுகின்ற நேரம், நினைப்பு, உழைப்பு, பணம் இவைகளையெல்லாம் பற்றி மனித நேயம் படைத்தோர் மனக்கவலை கொள்ள மாட்டார்! எள் என்றால் மக்கள் கவலையை மாற்ற வேண்டும் என்ற மனமுடையோர் அவர்கள். அவர்களால் நடத்தப்படும் ஓர் இயக்கத்தின் பிரதிநிதிகளாகக் கோட்டையில் அமர்ந்து ஆட்சி நடத்துவோர், குடி மக்களுக்கு உற்ற கேட்டையும் களைந்திட முன்வருவர் - முன்வர வேண்டும்! அதற்குப் பெயரே மக்கள் நல அரசு.

அத்தகைய மக்கள் நல அரசாக விளங்குவோம் என்றும் - எங்கள் சிந்தை அணு ஒவ்வொன்றும் உங்களுக்கே - உங்கள் நன்மைக்கே - உங்கள் எதிர்கால நல்வாழ்வுக்கே - என்று தமிழ் மக்களுக்கு அளித்த உறுதி நீர் மேல் குமிழியாகாமல் - தேர் மீதுள்ள கலசம் போல திசையனைத்தும் தெரிகின்ற காட்சிதான் -

இதோ; மரணத்தின் விளிம்பிலிருந்து மீட்சியுற்ற மனித ஜீவன்கள் நம் முன் காட்சியாகி அளிக்கின்ற சாட்சிகளாம்!

எதற்கு இந்தப் பீடிகை? என்று கேட்கத் தோன்றும்!

கடந்த ஆண்டு இதே நாளில் - 23-7-2009 அன்று “உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்“ தமிழக அரசின் சார்பில் தொடங்கப்பட்டது.

இன்று ஓராண்டு நிறைவுற்று - இந்த ஓராண்டில் இந்தத் திட்டத்தால் கிடைத்த பயன்கள் என்ன?

நோய் நீங்கி நடமாடுவோர் எத்தனை பேர்? ஒருவரல்ல, இருவரல்ல! ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோர் - சரியாகச் சொல்ல வேண்டுமேயானால் - ஒரு இலட்சத்து 53 ஆயிரத்து 257 நோயாளிகள் நலம் பெற்றனர் என்று புள்ளி விவரம் கூறுகிறது. இதற்காக காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் மருத்துவமனைகளுக்கு 415 கோடியே 43 இலட்சம் ரூபாய் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. ஒரு கோடியே 44 இலட்சத்து 45 ஆயிரத்து 117 குடும்பங்கள் இத்திட்டத்தில் உறுப்பினர்களாகக் கடந்த ஓராண்டு காலத்தில் சேர்ந்து - 1 கோடியே 33 இலட்சத்து 60 ஆயிரத்து 439 குடும்பங்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

தொடங்கும் பொழுது இந்தத் திட்டம்

நிறைவேறுமா?

ஆண்டு தோறும் முழுமை பெறுமா?

என்றெல்லாம்

ஐயம் எழுப்பியோர் -

ஏகடியம் செய்தோர் -

எரிச்சல் கொட்டியோர் -

ஏன் இந்த வீண் வேலையென்று ஏளனம் புரிந்தோர் -

இவர்களின் எண்ணிக்கையும் நமக்குத் தெரியும்.

ஆனால்;

இந்த அரசின் மக்கள் நலத் திட்டங்களைப் பழித்தே பழகிவிட்ட, பித்து மனங்களுக்கு இந்தத் திட்டம் - இப்போது ஓராண்டு நிறைந்து அடுத்த ஆண்டில் அடியெடுத்து வைக்கும் போது - கடந்த ஆண்டில் பாதிக்கப்பட்டு பரிகாரம் பெற்றோர் -

மரணத்தை எட்டிப் பார்த்து மறுவாழ்வு பெற்றோர் - எத்தனை பேர் என்ற கணக்கு நம்மைக் களிப்பில் அல்லவா ஆழ்த்துகிறது!

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல ஒன்றிரண்டை மாத்திரம் விளக்கிச் சொல்கிறேன்.

❖ செங்கல்பட்டு, மண்ணிவாக்கம் பகுதியை சார்ந்த 55 வயது ராமதாஸ் என்பவருக்கு திடீரென 24.01.2010 அன்று காலை தலை சுற்றல் ஏற்பட்டது. அன்று மாலை மயக்கம் ஏற்பட்டு, சுயநினைவற்ற நிலைக்கு சென்றார். அவரது உறவினர்கள், அவரை உடனடியாகச் சென்னையில் உள்ள பில்ராத் மருத்துவமனை ”யில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு CT ஸ்கேன் எடுத்து பார்த்ததில் மூளையில் இரத்தக் கட்டி உறைவு ஏற்பட்டது தெரிய வந்தது. அவருக்கு 29.01.2010 அன்று மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு, உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ. 60,000 அளிக்கப்பட்டது. தற்போது அவர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி நலமாக உள்ளார்

❖ திண்டுக்கல் மாவட்டம். வேடசந்தூர், படியை சார்ந்த திரு.வீரப்பன் என்பவருக்கு நாவில் புற்று நோய் வந்ததின் காரணமாக மிகவும் அவதியுற்று வந்தார். இந்நோயினால் உண்ணவும் முடியாமல் சிரமப்பட்ட இவரை அவரது குடும்பத்தினர் ஈரோடு நோய் மையத்தில் 01.02.2010 அன்று அனுமதித்தனர் சிகிச்சைக்காக ரூ. 36,000 கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக வழங்க உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 24.02.2010 அன்று பூரண நலத்துடன் திரும்பினார்.

❖ சென்னை, தாம்பரம் லெட்சுமி நகரைச் சேர்ந்த, 45 வயதான திரு.சரவண ஐயர் என்பவர் இரண்டு மாதங்களுக்கு மேலாக கடுமையான

வயிற்றுவலியால் துடித்து வந்தார். அவருடைய வயிறும் வீங்கி வாந்தியும் எடுத்து அவதியுற்றதால் உணவும் அருந்தாமல். சிரமப்பட்டார். திரு.சரவண ஐயர் இரண்டு மாதங்களுக்கு மேலாக மஞ்சள் காமாலை நோய் தாக்கியும் ஆபத்தான நிலைக்கு ஆளானார். ஏழ்மையான இவரைச் சார்ந்துதான் அவரின் குடும்பம் இருந்தது. நோயினால் அவரின் மொத்த குடும்பமும் செய்வதறியாமல் திகைத்தபோது, உடனே அவரை அழைத்து வந்து “லைப்ஃலைன் மல்டி ஸ்பெஷாலிடி “ மருத்துவமனையில் கடந்த 10.05.2010 அன்று சேர்த்தனர். உடனடியாக இவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து, பித்தப்பை சம்பந்தமான புற்றுநோய் வந்திருப்பது தெரிய வந்ததால் உடனடியாக 10 பாட்டில் இரத்தம் ஏற்றப்பட்டு அவருக்கு 14.05.2010 அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் இப்போது நலமுடன் உள்ளார். இவருக்குக் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சைக்கான செலவையும் ஏற்று ரூ. 1 இலட்சம் காப்பீடு தொகையாக வழங்கப்பட்டது.

❖ தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் நல வாரிய உறுப்பினரான உடுமலைப்பேட்டை, கே. வல்லக்குண்டாபுரத்தைச் சேர்ந்த திரு. டி. தங்கவேலு என்பவரின் மகள் செல்வி சரண்யா. இவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு பொள்ளாச்சி அருண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பீட்டு நிறுவனத்திடம் ரூ. 17,500/-அனுமதி பெற்று 21.10.2009 அன்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற இவர் தற்போது நலமுடன் இருக்கிறார்.

❖ தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, ஒக்கரைப் பட்டியை சார்ந்த திரு. பாண்டியன் என்பவரின் மகன் பள்ளி செல்லும் முனியாண்டிக்கு இதய

நோய் காரணமாகப் பள்ளி செல்ல இயலாத நிலை ஏற்பட்டு, வளர்ச்சியும் குன்றி அவதிப்பட்டார். ஏழ்மை நிலையில் இருக்கும் அவரது தந்தை கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பற்றி அறிந்து, மிகவும் நலம் குன்றிய நிலையில் முனியாண்டியை மதுரை மாவட்டத்திலுள்ள சரவணா மருத்துவமனையில் 23.11.2009 அன்று சேர்த்தார். மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்து, உடனடியாக அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்தனர். அவரது அறுவை சிகிச்சைக்கான முழு செலவான ரூ. 60,000 கலைஞர் காப்பீட்டு திட்டம் மூலம் செலுத்தப்பட்டு அவர் நலமுடன் வீடு திரும்பினார்.

❖ சேலம் மகுடஞ்சாவடி, திருமதி தனலட்சுமி அம்மாள் 15-1-2010 அன்று பொங்கல் விழாவினைக் கொண்டாடிவிட்டு, ஒரு மினி ஆட்டோவில் வீட்டிற்குத் திரும்பும் போது, சேலத்திற்கு அருகில் உள்ள மகுடஞ்சாவடியில் வளைவில் ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்து விடுகிறது. அதில் தனலட்சுமியின் முன் கை துண்டாகிவிடுகிறது. துண்டான முன்னங்கை ஐஸ்கட்டிகளில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது. விபத்து நடந்த 6 மணி நேரத்திற்குள் கோவையில் உள்ள கங்கா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு - மைக்ரோ சர்ஜரி அறுவை சிகிச்சையின்

மூலம் துண்டான கை ஒன்று சேர்த்து வைக்கப்பட்டது. இரண்டு வார தொடர் கண்காணிப்பிற்குப் பின்னர் இணைக்கப்பட்ட கையுடன் இல்லம் திரும்பினார்

❖ திரு.சுந்தரசேகர் திண்டுக்கல்லைச் சேர்ந்தவர். 52 வயது. இவருக்கு இரண்டு மாத காலமாக சிறுநீரோடு சேர்ந்து ரத்தமும் கசிந்து, பல மருத்துவர்களிடம் காட்டி குணமாகவில்லை. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்த பின்னர் - ஸ்கேன் எடுக்கப்பட்டு - நோயின் காரணமறிந்து - 23-5-2010 அன்று அறுவை சிகிச்சை ஆறு மணி நேரம் நடைபெற்று தற்போது முழுவதும் குணமாகியுள்ளார்.

❖ திருமதி மதினா - வயது 28 - திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பென்னாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். குறவர் வகுப்பைச் சேர்ந்த பெண்மணி. பல ஆண்டுகளாக இருதயத்தில் கோளாறு. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின்படி செட்டிநாடு மருத்துவ மனையிலே சேர்ந்து இருதய சிகிச்சை செய்துகொண்டு தற்போது நலமாக இருக்கிறார்.

❖ செல்வன் முருகன் - வயது 9 - வந்தவாசி, குலாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன். இதய நோயினால் பிறந்தது முதல் அவதிப்பட்டு வந்தான். இவனுக்கு சிகிச்சை செய்ய வசதி இல்லாத ஏழைப் பெற்றோர், அவனுடைய ஆயுள் அவ்வளவுதான் என்று கை விட்டு விட்டனர். கலைஞர் காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு அந்தத் திட்டத்தின்படி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நல்ல உடல் நலத்தோடு இருக்கிறான்.

❖ திரு. மோசஸ் - வயது 60 - தர்மபுரிமாவட்டம் - இலங்கைத் தமிழர் இவர் - அகதியாக தங்கியிருக்கிறார். இவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு ஓராண்டு காலமாக அவதிப்பட்டு வந்தார். கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து அதன் கீழ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது நலமாக உள்ளார்.

❖ திரு.விக்னேஸ்வரன் - வயது 32 - கும்முடிப் பூண்டியில் உள்ள அகதிகள் முகாமில் இருப்பவர். சாலை விபத்து ஒன்றில் சிக்கி, எலும்பு முறிவு முகத்தாடையில் ஏற்பட்டு மிகுந்த சிரமத்தோடு இருந்தார். இவர் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின்படி மருத்துவமனையிலே சேர்ந்து அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது முழு நலத்தோடு உள்ளார்.

இன்னும் எழுதிக்கொண்டே போகலாம். இத்திட்டத்தினால் பயன் பெற்றவர்கள் எல்லாம் இத்திட்டம் ஓராண்டு நிறைவு பெற்றதை யொட்டி, கடந்த 23ஆம் தேதி என்னை தலைமைச் செயலகத்திலே சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்கள். அப்போது அவர்கள் என்னைப் பார்த்து என்றும், “இந்தத் திட்டம் இல்லாவிட்டால் நாங்கள் உயிரோடு இருந்திருக்கவே மாட்டோம்” என்று, நெஞ்சு நெக்குருகச் சொல்லியபோது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா? ஆனால் அவர்கள் நோயினால் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டிருந்தோம் என்பதையும், இந்த அளவுக்கு ரூபாய் செலவழித்து தங்களால் சிகிச்சை செய்து

கொண்டிருக்கவே முடியாது என்பதையும் கண்களில் நீர் மல்க சொன்னபோது எனக்குப் பெருமிதமாகவும் இருந்தது.

இந்த ஒரு திட்டம் மாத்திரமல்ல; 108 என்ற திட்டத்தைப் பற்றி நீ அறிவாய். அந்தத் திட்டத்தைப் பற்றி நாள்தோறும் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. கிராமப்புற மக்கள் எல்லாம் அந்தத் திட்டத்தினால் தாங்கள் உயிர் பிழைத்த செய்தியை தொடர்ந்து சொல்லி, இந்த அரசைப் பாராட்டுகிறார்கள். மக்கள் நல்வாழ்வுத் துறை மூலமாக அரசு அலுவலர் களுக்கான காப்பீட்டுத் திட்டம் ஒன்றும் இந்த அரசால் தொடங்கப்பட்டு பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. அதுபோலவே இளஞ்சிறார்களுக்கான இதயப் பாதுகாப்பு திட்டம் ஒன்று தொடங்கப்பட்டு ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர் உயிர்பிழைத்து அவர்கள் என்னைச் சந்தித்து தாங்கள் உயிரோடு இருப்பதற்குக் காரணம் நீங்கள்தான் என்று சொல்லும்போது நான் என்னையே மறக்கிறேன். இந்தத் துறையின் மூலமாக - அமைச்சர் தம்பி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செயலாளர் சுப்பராஜ், ஐ.ஏ.எஸ்., மற்றும் அதிகாரிகள், மனித நேயமுள்ள மருத்துவர்கள் ஒத்துழைப்போடு செய்யப்படுகின்ற முக்கிய திட்டங்களை மட்டும் இங்கே நினைவுபடுத்தியிருக்கிறேன்.

மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டமும் அப்படித்தான். மாற்றுத் திறனாளிகள் கைகால் ஊனமுற்றோர், கண் தெரியாதோர், காது கேளாதோர் சிலர் சென்னை பொது மருத்துவமனையில் உண்ணா விரதம் இருக்கிறார்கள் என்ற செய்தியை காலையிலே ஏடுகளிலே கண்டதும், உடனடியாக நானே நேரடியாக பொது மருத்துவமனைக்கு விரைந்து சென்று அந்த மாற்றுத் திறனாளிகளைச் சந்தித்தேன். கோரிக்கைகளை முன் வைத்து உண்ணா விரதம் இருந்த அவர்கள், தங்கள் கோரிக்கைகளையே மறந்து விட்டார்கள். உங்களைச் சந்தித்ததே போதும், கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது, உண்ணா விரதத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறோம் என்று அங்கிருந்து எழுந்துச் சென்றார்கள்.

எனவே இயலாதோர்க்கு உதவிட வேண்டுமென்ற எண்ணம் வேண்டும். அந்த எண்ணம் எங்களுக்கு இருக்கின்ற காரணத்தால் அந்த வழியிலே செயல்படுகிறோம்.

இதை ஊழல்திட்டம் என்றும், கோடிக் கோடியாகக் கொள்ளைப் போய்விட்டது என்றும் சிலர் பேசுகிறார்கள் என்றால்; நான் அவர்களைப் பொருட்படுத்தாததற்குக் காரணம் - உண்மை ஒரு நாளும் தோற்காது - வாய்மையை எதிர்த்து வஞ்சகம் ஜெயிக்காது - துரோகத்தையே தங்கள் வாழ்வின் தொடர் நிகழ்ச்சிகளாக ஆக்கிக் கொண்டவர்களால் இதுபோன்ற தூய்மையான திட்டங்களின் மீது தூசி படவும் செய்திட இயலாது என்பதை தமிழகத்தின் பட்டிதொட்டி முதல் பட்டினக்கரை வரையில் நமது திட்டங்களால் பயன்பெறும் ஏழையெளிய சாதாரண மக்கள் பெறுகின்ற வாழ்வு வஞ்சகத்தின் வாயை அடைத்து அதன் இடுப்பை ஒடித்தே தீரும் என்ற நம்பிக்கையோடு நாம் நடை போடுவோம்! அதற்கு நம்மை ஊக்குவிக்கும் ஓராயிரம் பேர், ஒரு லட்சம் பேர் என்று உடல் நலம் பெற்றோரின் உருவப் படங்களை இணைத்து வழங்கிட இந்தக் கடிதத்தில் இடம் இல்லாத காரணத்தால் - அன்று நலிவடைந்து - இன்று நலம் பெற்றோர் அனைவரின் சார்பாகவும் ஒத்துழைப்போர் எல்லோருக்கும் உளமார்ந்த நன்றி கூறுகிறேன். தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டுமென்றும் அவர்களுக்கும், அவர் போன்றோருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அன்புள்ள, மு.க. 26-07-2010

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 44 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065830_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_44.pdf; PDF பக்கம் 67–74. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 44-இல் மேலும் கடிதங்கள்