அடக்கம்

முரசொலி · தொகுதி 44 · கடிதம் 3488

முரசொலி கடிதங்கள் · 3488

இட ஒதுக்கீடும்; இரட்டை வேடமும்! (3)

நாள் 25.7.2010சுமார் 8 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3488. இட ஒதுக்கீடும்; இரட்டை வேடமும்! (3)

உடன்பிறப்பே,

இட ஒதுக்கீடு பிரச்சினை பற்றி உச்சநீதி மன்றம் கடந்த 13-7-2010 அன்று வெளியிட்ட தீர்ப்புகள் குறித்தும் அதன் விளைவுகள் என்ன என்பதை விவரித்தும், இந்தப் பிரச்சினையில் கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை யெல்லாம் விரிவாகத் தொகுத்தும் இரண்டு கடிதங்களை நான் முரசொலியில் எழுதியிருந்தேன். உச்சநீதிமன்ற வழக்கு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டம் தொடர்பானது என்றும், எனவே அந்தத் தீர்ப்பைப் பற்றி எழுதினால் ஜெயலலிதாவுக்கு புகழ் கிடைத்து விடுமோ என்பதற்காக நான் அதை இருட்டடிப்பு செய்யும் வகையில் மெளனமாக இருந்தேன் என்றும், தற்போது அவருக்கு ஏதோ பாராட்டு விழா நடத்த சில பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் முடிவு செய்த செய்தியை ஏடுகளிலே பார்த்துவிட்டு, நான் இந்த இரண்டு கட்டுரைகளில் நஞ்சைக் கக்கியிருப்பதாகவும் ஜெயலலிதா அவருக்கே உரிய பாணியில் உளறிக் கொட்டியிருக்கிறார்.

நஞ்சைக்கக்குவது - கபட நாடகம் என்று கூறுவது - எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவது - உதிர்ந்த ரோமம் என்பது - பதிபக்தி இல்லாதவர் என்று விமர்சிப்பது - ஏனைய அரசியல் கட்சித் தலைவர்களை எல்லாம் மரியாதை இல்லாமல் பேசுவது - ஆளுநர் கையைப் பிடித்து இழுத்தார் என்று வாய் கூசாமல் புளுகுவது - இவைகள் எல்லாம் ஜெயலலிதா என்ற தனிப்பட்ட ஒரு பெண்மணிக்கே உரிய வாசகங்கள் ஆகும்.

ஜெயலலிதா ஆட்சியில் இயற்றிய சட்டம் என்பதை நான் ஏதோ மறைத்து விட்டதாகச் சொல்லியிருக்கிறார். இது உண்மையா? நான் முரசொலியில் எழுதிய கடிதத்தில் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது பற்றியும்,

சட்டம் நிறைவேற்றப்பட்டது பற்றியும், அந்தத் தீர்மானத்தை வடிவமைத்துக் கொடுத்ததே திராவிடர் கழகப் பொதுச் செயலாளர், தமிழர் தலைவர் வீரமணி என்பதை நினைவூட்டியும், ஆனால் அதற்கு அந்த ஆட்சிக் காலத்தில் அவர்களுக்கு நன்றி சொல்லவில்லை என்றும், அந்தச் சட்ட முன் வடிவு அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு தமிழகச் சட்ட மன்றத்திலே நிறைவேற்றப்பட்டதையும் விரிவாகவே எழுதியிருக்கிறேன். எப்போதும் போல எதையும் ஒழுங்காகப் படிக்காமல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது என்பதை நான் இருட்டடிப்பு செய்து விட்டேன் என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்திருக்கிறார். நான் என்னுடைய கடிதத்தில் ”18-7-1994 அன்று ஜெயலலிதாவும்; இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் இட ஒதுக்கீடு பிரச்சினையில் ஆதரவு கோரி கடிதம் எழுதினார்” என்றும் அரசியல் நாகரிகத்தோடு வரலாற்றை மறைக்கக் கூடாது என்ற வகையில் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் அதைப் புரிந்து கொள்ளாமல் அவர் குதிக்கிறார் என்றால் அதற்கு நான் என்ன செய்வது?

இட ஒதுக்கீடு பிரச்சினையில் ஜெயலலிதா இரட்டை வேடம் போட்டதாக நான் எனது அறிக் கையிலே சொல்லியிருப்பதாகத் தெரிவித்து அதற்கு அவர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதிலும் அவர் நுனிப்புல்தான் மேய்ந்திருக்கிறார்..

“இட ஒதுக்கீடு பிரச்சினையில் ஜெயலலிதா அரசு அப்போது இரட்டை வேடம் போடுவதைப் போல ஒரு கருத்து பத்திரிகையாளர்கள் மத்தியில் இருந்தது. அதற்குக் காரணம் 22-11-1993 அன்று உச்ச நீதிமன்றத்தில் அளித்த ஒப்புதல் பிரமாணப் பத்திரத்தில், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பையேற்று தமிழ்நாட்டில் 93-94ஆம் ஆண்டுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க ஜெயலலிதா அரசின் சார்பில் சம்மதம் கொடுத்ததுதான்” என்றும்; 15-7-1994 தேதிய “ப்ரண்ட்லைன்” ஏடு நீண்ட கட்டுரையாக அதைப் பற்றி எழுதியிருந்தது என்றும் நான் தெரிவித்திருந்தேனே தவிர, அவர் இரட்டை வேடம் போட்டதாக நான் கூறவில்லை. “ப்ரண்ட் லைன்” ஏடு தான் அப்படிக் கூறியது.

“ப்ரண்ட் லைன்” இதழ் அப்படி எழுதியதாக நிரூபிக்க முடியுமா என்று ஒருவேளை அவர் கேட்கக் கூடும்.

“If the AIADMK Government in Tamil Nadu finds itself isolated today on the sensitive reservation issue it has to blame itself. This isolation is in sharp contrast to the support it received from all Opposition Parties on December 31, 1993 when the State Assembly unanimously passed a bill.........But today, Jayalalitha finds herself caught in a cleft. The Chief Minister’s attempts to extricate herself have only worsened her plight. All the Major Opposition Parties rejected her invitation to join her to meet Prime Minister on June 25 to press the Centre for Presidential assent for the State Bill. They increasingly view her as being “insincere” and playing a “double game” on this issue, which is the bed rock of the Dravidian Movement.”

(இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் தமிழகத்திலே உள்ள அ.இ.அ.தி.மு.க. அரசு தனிமைப்படுத்தப்பட்டிருப்பது போல உணருகிறது என்றால், அந்த நிலைக்கு அவர்கள் தான் காரணம் என்று தங்களுக்குத் தாங்களே குற்றஞ்சாட்டிக் கொள்ள வேண்டும். 31-12-1993 அன்று தமிழகச் சட்டமன்றம் ஒருமனதாக மசோதா ஒன்றினைக்கொண்டு வந்து நிறைவேற்றிக் கொண்ட நேரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் பெற்றிருந்த நிலை அடியோடு மாறி இன்றைக்கு ஜெயலலிதாதானே ஒரு பொறியில் சிக்கிக்கொண்டிருக்கிறார். அதிலிருந்து விடுவித்துக்கொள்ள அவர் மேற்கொண்ட முயற்சி நிலைமையை மேலும் மோசமாக்கிவிட்டது. அரசின் மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தரும்படி பிரதமர் அவர்களை வற்புறுத்துவதற்காக கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி டெல்லி சென்றபோது, தனது தலைமையிலான பிரதிநிதிகள் குழுவில் பங்கேற்க வருமாறு ஜெயலலிதா விடுத்த அழைப்பை அனைத்து முக்கிய எதிர்க்கட்சிகளும் நிராகரித்துவிட்டன. திராவிட இயக்கத்தின் அஸ்திவாரமான கொள்கைகளில் ஒன்றான இந்தப் பிரச்சினையில் ஜெயலலிதா உண்மையாக இல்லை, இரட்டை வேடம் போடுகிறார் என்றே அவர்கள் கருதுகிறார்கள்.)

இதிலிருந்து ஜெயலலிதா இரட்டை வேடம் போட்டதாக நான் கூறவில்லை என்பதும், ஏடுகள் தெரிவித்த கருத்தைத்தான் தெரிவித்தேன் என்பதும் தெளிவாகிறது அல்லவா? ஆனால் ஜெயலலிதா என் மீது கண்டனம் தெரிவித்திருக்கிறார் என்றால் அந்தக் “குணவதி” யைப் பற்றி மக்கள் புரிந்து கொண்டால் போதும்!

அடுத்து ஒரு இமாலயப் பொய்யை ஜெயலலிதா தனது அறிக்கையிலே சொல்லி யிருக்கிறார். தாழ்த்தப்பட்டோருக்கு 18 விழுக்காடு இட ஒதுக்கீடும், பழங்குடியினருக்கு 1 விழுக்காடு இட ஒதுக்கீடும் தமிழகத்தில் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வந்தது என்று கூறியிருக்கிறார். 1969ஆம் ஆண்டு நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின், திரு.ஏ.என். சட்டநாதன் அவர்கள் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நலக் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு அளித்த பரிந்துரையினை ஏற்று, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அதுவரை 16 சதவிகிதம் என்றிருந்த இட ஒதுக்கீட்டு அளவை 18 சதவிகிதம் என்று உயர்த்தி 7-6-1971 அன்று ஆணை பிறப்பிக்கச் செய்தேன். அதே ஆணையில்தான் அதுவரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 25 சதவிகிதம் என்றிருந்த இட ஒதுக்கீட்டை 31 சதவிகிதம் என்று உயர்த்தினேன்.

அதன் பின்னர், அ.தி.மு.க. ஆட்சியிலே இருந்தபோது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கான சலுகைகளைப் பெற அவர்களது ஆண்டு வருமானம் 9 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்டு இருக்கக் கூடாது என்று அ.தி.மு.க. ஆட்சி உச்ச வரம்பு விதித்து - அதன் காரணமாக அ.தி.மு.க. வின் நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு - 1-2-1980இல் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 31 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்தினார்கள். அதற்குப் பின் 28-3-1989இல் நான் முதல் அமைச்சராக இருந்தபோது டாக்டர் ராமதாஸ் அவர்களுடன் விவாதித்து, பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகிதம் தனி ஒதுக்கீடு செய்தேன். 22-6-1990இல் நான் முதல்வராக இருந்தபோதுதான், தாழ்த்தப்பட் டோருக்கும், பழங்குடியினருக்கும் சேர்த்து 18 சதவிகிதம் இட ஒதுக்கீடு என்பதில், தாழ்த்தப்பட்டோருக்கு மட்டும் 18 சதவிகிதம் என்றும் பழங்குடியினருக்கு தனியாக ஒரு சதவிகிதம் என்றும் ஆக்கினேன்.

ஆனால் ஜெயலலிதா இதையெல்லாம் மறைத்துவிட்டு,

அவருடைய மொழியிலே சொல்ல வேண்டுமானால் அப்படியே இருட்டடிப்பு செய்துவிட்டு, தமிழகத்தில் இந்த இட ஒதுக்கீடு காலம் காலமாக பின்பற்றப்பட்டு வந்தது என்று தனது பாணியில் புளுகியிருக்கிறார்.

ஜெயலலிதா அறிக்கையிலே மற்றொரு பொய்! மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு 13-8-1990 அன்று ஆணை வெளியிட்டதாகவும், 13-8-1990 முதல் 30-1-1991 வரை ஆட்சியிலே இருந்த நான் மண்டல் கமிஷன் பற்றி தீர்மானம் நிறைவேற்ற வில்லை என்றும், 30-9-1991 அன்றுதான் ஜெயலலிதாவின் தீர்மானம் கொண்டுவரப்பட்டது என்றும் ஜெயலலிதாவின் அறிக்கையிலே எழுதிவிட்டு, அவரே 21-8-1990 அன்று மண்டல் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் ஆணை பிறப்பித்ததற்காக பாராட்டுத் தீர்மானம் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டதென்று சொல்லியிருக்கிறார். மண்டல் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்றிட மத்திய அரசு முன்வர வேண்டுமென்று ஒரு சிறப்புத் தீர்மானத்தை 12-5-1989 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் முன்மொழிந்தவனே நான்தான். 5-2-1990 அன்று நான் டெல்லி சென்றிருந்தபோது, துணைப் பிரதமராக இருந்த தேவிலால் அவர்களைச் சந்தித்து மண்டல் கமிஷன் பரிந்துரைகளை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.

12-6-1990 அன்று பிரதமர் வி.பி. சிங் அனைத்து மாநில முதல் அமைச்சர்களுக்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் பற்றி கருத்துக்களைக்கேட்டு, அந்த மாத இறுதியிலேயே அதற்கு நான் பதில் எழுதி - அதைப் பற்றி பின்னர் பிரதமர் வி.பி.சிங் கூறும்போது, மத்திய அரசின் சார்பில் எழுதப்பட்ட கடிதத்திற்கு உடனடியாக பதில் எழுதிய மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான் என்று பாராட்டினார். 26-5-1990 அன்று தஞ்சை மாநகரில் சமூக நீதி மாநாடு ஒன்றே நடைபெற்றது. அதிலே இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் ஜெயில்சிங் அவர்களும், தமிழர் தலைவர் வீரமணி அவர்களும் கலந்து கொண்டார்கள். ஜெயில் சிங் அவர்கள் பேசும்போது, “தமிழ்நாட்டு மக்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள், கொடுத்து வைத்தவர்கள். ஏனென்றால் திறமைக்கும், வேகத்திற்கும், அன்புக்கும், அருளுக்கும் நல்ல நிர்வாகத் திறமைக்கும் பிரச்சினைகளை அணுகுவதற்கும் உரிய மகத்தான வரலாற்றுச்

சிறப்பு மிக்க ஒரு தலைவர் காலத்தில் நீங்கள் வாழ்கின்றீர்கள். அந்த அருந்தலைவருடைய பெயர்தான் கலைஞர் கருணாநிதி என்பது. அவரிடம் இப்போது நான் ஒரு விண்ணப்பத்தை வைக்கின்றேன். இன்றைக்கு கலைஞர் கருணாநிதியின் ஆட்சி டெல்லியிலே நடந்து கொண்டிருக்கிறது. தேசிய முன்னணியின் ஒரு அங்கம் கலைஞர் கருணாநிதி. இந்த நேரத்தில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அதை சட்டமாக ஏற்படுத்துவதற்கு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் தேசிய முன்னணியின் அங்கம் மட்டும் அல்ல. நீங்கள் இல்லாவிட்டால் தேசிய முன்னணி ஏது? எனவே தேசிய முன்னணியை உருவாக்கியவர் என்ற முறையில் விண்ணப்பிக்கிறேன். மண்டல் கமிஷன் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு முறையாக அறிவிக்கப்படும் நாளை நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது” என்றெல்லாம் குறிப்பிடப்பட்டது இன்றைக்கும் ஏடுகளிலே உள்ளது.

மண்டல் கமிஷன் பரிந்துரைகள் மீதான ஆணை மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட அடுத்த வாரமே 21-8-1990 அன்று அதனைப் பாராட்டி சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தையும் முன் மொழிந்தவன் நான் தான்.

இட ஒதுக்கீடு மசோதா சட்டப் பேரவையில் ஜெயலலிதாவினால் கொண்டு வரப்பட்டு நிறைவேறியதாகவும் - ஆனால் மாநிலங்களவையில் அந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றபோது - தி.மு.க. உறுப்பினர்கள் மூன்று பேர் ஓட்டுப் போடவில்லை என்றும் பங்கேற்கவில்லை என்றும் ஜெயலலிதா தனது அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். அவரோடு தோழமை கொண்டுள்ள ஒரு கட்சியின் “பிரகஸ்பதி”யும், ஜெயலலிதாவை முந்திக் கொண்டு கோவையிலே செய்தியாளர்களிடம் அதையே தெரிவித்திருக்கிறார். இட ஒதுக்கீட்டிற்கான தீர்மானம் 9-11-1993 அன்று ஜெயலலிதாவினால் கொண்டுவரப்பட்டது என்றும், 30-12-1993 அன்று சட்டமன்றத்தில் மசோதா ஜெயலலிதா அரசினால் நிறைவேற்றப்பட்டது என்றும் சொல்லியிருக்கிற அவர் யோக்கியராக இருந்தால், அந்தத் தீர்மானத்தை தி.மு.க. ஆதரித்ததா இல்லையா என்று சொல்லியிருக்க வேண்டும் அல்லவா? அது போலவே மாநிலங்களவையில் அந்தத் தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது, தி.மு. கழகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் அந்த

வாக்கெடுப்பில் ஆதரித்து வாக்களித்ததைச் சொல்லியிருக்க வேண்டுமல்லவா?

இட ஒதுக்கீட்டுக்காக தமிழ்நாட்டின் அரசியல் சட்டத் திருத்தம் நிறைவேற வாக்களிப்போம் என்று தி.மு. கழக மாநிலங்களவை உறுப்பினர் விடுதலை விரும்பி அவர்களும் கலந்து கொண்ட தேசிய முன்னணி - இடது சாரிக் கட்சிகள் கூட்டம் 11-8-1994 அன்று டெல்லியில் நடைபெற்றபோது முடிவெடுத்தது.

21-8-1994 அன்று நான் விடுத்த அறிக்கையில் மத்திய அரசு மேலும் காலம் தாழ்த்தினால், சமூக நீதிக்காக போராடுகிற அணியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஏற்கனவே எடுத்துள்ள முடிவின்படி மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவதைத்தவிர வேறு வழியில்லை என்று குறிப்பிட்டேன்.

22-8-1994 அன்று மாநிலங்களவையில் தி.மு. கழகத்தின் சார்பில் பேசிய விடுதலை விரும்பி, பிரச்சினை தாமதப்படுத்தப்படுமானால் போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை என்று எங்கள் தலைவர் கலைஞர் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான சட்டத்திருத்த மசோதா நடப்புக் கூட்டத் தொடரிலேயே கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும் என்பதற்கு அரசு தரப்பில் திட்டவட்டமான உறுதிமொழி அளிக்க வேண்டுமென்றார். தமிழக அரசின் சட்டம் என்றால், அது அ.தி.மு.க. அரசு நிறைவேற்றிய சட்டமாயிற்றே என்றெல்லாம் நினைக்காமல் பிரச்சினையின் முக்கியத்துவத்தை கருதி குரல் கொடுத்தார். அவரது பேச்சிலே அ.தி.மு.க. உறுப்பினர் குறுக்கிட்டு, “மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாகக் கூறக் கூடாது” என்றார்.

24-8-1994 அன்று தமிழக இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை 9வது அட்டவணையில் சேர்ப்பதற்கான அரசியல் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் விவாதம் இன்றியே நிறைவேறியது. அதற்கு ஆதரவாக 148 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் விழுந்தன. எதிராக வாக்களித்த இரண்டு பேர் யார் தெரியுமா? சிமன்பாய் மேத்தா, சத்தீஸ் பிரதான் ஆகியோராகும். கலந்து கொண்டு வாக்களித்த தி.மு.கழக மாநிலங்களவை உறுப்பினர்கள் எஸ். விடுதலை விரும்பி, மிசா ஆர்.கணேசன், பசும்பொன்

தா. கிருட்டிணன், முகமது சகி, நாமக்கல் கே.கே.வீரப்பன் ஆகியோராகும். அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திண்டிவனம் வெங்கட்ராமன் அவர்களது மகன் திருமணம் அதே நாளில் என் தலைமையிலே நடைபெற்றதால், அவர் டெல்லிக்கு. அன்று செல்லவில்லை. அதைப்பற்றிக் கூட அந்தத் திருமண விழாவிலே பேசிய நான், அந்த மசோதா நிறைவேற ஒரு வாக்கு. முக்கியம் என்ற நிலைமை இருந்தால், திருமணத்தை நாங்கள் நடத்திக் கொள்கிறோம் என்று வெங்கட்ராமனை டெல்லிக்கு அனுப்பியிருப்போம் என்று குறிப்பிட்டது இன்றைக்கும் பழைய முரசொலி ஏட்டில் உள்ளது. அதுபோலவே தனது உடல் நலக் குறைவு காரணமாக முரசொலி மாறன் டெல்லி செல்லவில்லை. ஜெ.எஸ். ராஜூ தனது மகனின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சற்றுத் தாமதமாகச் சென்று கலந்துகொண்டிருக்கிறார். இதையெல்லாம் அப்படியே மறைத்து விட்டு தி.மு.க உறுப்பினர்கள் மூவர் கலந்து கொள்ளவில்லை என்று களங்கம் சுமத்த நினைப்பது ஊரை ஏமாற்றுகின்ற செயலா அல்லவா? மக்களவையிலே 26-8-1994 அன்று இந்தத் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டபோது, அதற்கு எதிர்ப்பே இல்லை. 348 உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர்.

இறுதியாக ஒரு கேள்வி. சமூக நீதியைக் காப்பதில் அ.தி.மு.க. விற்கு நிகர் யாருமில்லை என்று ஜெயலலிதா அறிக்கையிலே சொல்லி யிருக்கிறார். 16-11-1993 அன்று தமிழகம் தழுவிய பொது வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது என்றும், 26-11-1993 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது என்றும் கூறியிருக்கின்ற ஜெயலலிதா இரண்டுக்கும் இடையில் 22-11-1993 அன்று உச்ச நீதி மன்றத்தில் ஜெயலலிதா அரசின் சார்பாக 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மாட்டோம், 50 சதவிகிதத்தையே அமல்படுத்துகிறோம் என்று உறுதி மொழி கொடுக்கப்பட்டதா இல்லையா?

இட ஒதுக்கீட்டில் சாதி அடிப்படை கூடாது என்றும், பொருளாதார அளவுகோலே வேண் டும் என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டிற்கு ஜெயலலிதா பேட்டி கொடுத்தது உண்டா இல்லையா? அந்தப் பேட்டியில், “பிற்படுத்தப்பட்ட வகுப்புகளிலும் சிலர், நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

அவர்கள் இட ஒதுக்கீட்டுச் சலுகையைப் பெறுவது என்பது இட ஒதுக்கீட்டுக் கொள்கையையே கேலிக் கூத்தாக்கி விடும். எனவே பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்குச் சலுகைகள் கிடைக்குமாறு செய்ய வேண்டும். அப்போதுதான் அதைச் சமூக நீதி என்று கூறலாம். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகிதம் என மத்திய அரசு முடிவெடுத்துள்ள நிலையில் முன்னேறிய வகுப்பினரில் கூட பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு 5 அல்லது 10 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்வது தவறில்லை” என்று கூறியது உண்டா? இல்லையா? இலங்கைப் பிரச்சினையில்தான் இரட்டை வேடம் போட்டீர்கள்; இட ஒதுக்கீட்டிலுமா?

இறுதியாக ஜெயலலிதா தனது அறிக்கையை முடிக்கும்போது “ஊரார் உடைமைக்கு பேயாய் பறப்பதாக” என்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். சமூக நீதிக் கொள்கை ஊரார் உடைமை அல்ல. திராவிட இயக்கத்தின் கொள்கை. ஆனால் ஊரார் உடைமைக்குப் பேயாய் பறப்பவர்கள் யார் என்பதைப் பற்றி நான் விளக்க வேண்டுமா என்ன? அது ஊரார் அறிந்த ரகசியமாயிற்றே! பேய், பூதம், பிசாசு இந்த மூன்றுக்கும் சொல்லப்படும் இலக்கணத்தின் மொத்த உருவமே! மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?

அன்புள்ள, மு.க. 25-7-2010

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 44 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065830_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_44.pdf; PDF பக்கம் 58–66. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 44-இல் மேலும் கடிதங்கள்